பக்கம் எண் :

முதற் காண்டம்277

முனிய அளி மொய்த்த துணர் குனிய உமிழ் தேறலினும்
கனிய இவை ஓதுதலின் இனிய இரு போதும் உறி
நனை வரும் இரண்டு பெயர் வனைவு அரும் மணம்
                                      பெறலால்
புனைவு அரும் அனந்தம் உறி, அனைவரும் மகிழ்ந்தனரே.

     சினந்த வண்டுகள் மொய்த்த மலர்க்கொத்து குனிந்து பொழிந்த
தேனைக்காட்டிலும் இனிமையாக இவற்றையெல்லாம் மக்கள்
சொல்லியவண்ணமாய்ப் பகல் இரவென்ற இரு காலமும் இனிதே கழிய,
அரும்புபோன்ற இவ்விரண்டு பேரும் அமைவதற்கரிய திருமணம் அமையப்
பெற்றமையால், புனைந்துரைப்பதற்கு அரிய ஆனந்தம் அடைந்து
அனைவரும் மகிழ்ந்தனர்.

     அனந்தம் - 'ஆனந்தம்' என்பதன் குறுக்கல் விகாரம்.
 
                 160
தேங்கொடியை யேந்தினனும் பூங்கொடியை
                              வென்றவளுந்
தாங்குடியி ருந்துமறை யாங்கொடிப டர்ந்துவளர்
அரியகொழு கொம்பனையர் புரியவரி தீரறமு
முரியமுறை யோடணையல் விரியவறை வாமினியே
 
தேன் கொடியை ஏந்தினனும் பூங் கொடியை வென்றவளும்
தாம் குடியிருந்து, மறை ஆம் கொடி படர்ந்து வளர்
அரிய கொழுகொம்பு அனையர், புரிய அரிது ஈர் அறமும்
உரிய முறையோடு அணையல் விரிய அறைவாம் இனியே.

     தேனுள்ள மலர்க்கொடியை ஏந்திய சூசையும் மலர்க் கொடியை
வென்றவளாகிய மரியாளும் அச்சிசிறுமனையில் தாம் குடியிருந்து, வேதம்
என்னும் கொடி படர்ந்து வளர்வதற்குரிய அரிய கொழுகொம்பு
போன்றவராய், செய்வதற்கரிய இல்லற துறவறமாகிய இரண்டு அறங்களையும்
ஒரே அறமாய் உரியமுறையோடு தாங்கிய திறத்தை இனி விரித்துச் சொல்வோம்.

               திருமணப் படலம் முற்றும்

             ஆகப் படலம் 5க்குப் பாடல்கள் 453