பக்கம் எண் :

முதற் காண்டம்279

தேன் வழங்கும் பூந் துறை ஆம் செழு வாகை ஏந்து தவன்,
வான் வழங்கும் இறையோன் தான் மனம் எழ முன்
                             உணர்த்தமையால்,
மீன் வழங்கும் முடியாள் தன் விளம்பு அரிய மாட்சியொடு,
கான் வழங்கும் தவப் புங்கம் கணித்து, அவளை
                               வணங்குவன்ஆல்.

     தேனைச் சொரியும் பூக்களுக்குத் தங்குமிடமாகிய செழுமையான
மலர்க் கொடியை ஏந்திய தவத்தோனாகிய சூசை, வானுலகில் வாழும்
ஆண்டவன் தானே தன் மனம் எழுச்சி கொள்ளுமாறு அவளைப் பற்றி முன்
உணர்த்தியிருந்தமையால், விண்மீன்கள் சூழும் முடியை உடைய மரியாளின்
சொல்லுதற்கு அரிய மாண்புகளோடு, காட்டில் நிலை பெறுவதற்குரிய தவ
மேன்மையையும் கண்டு கணித்து, அவளை மனத்தால் வணங்குவான்.

     'ஆல்' அசைநிலை. உணர்த்தமை-உணர்த்தியமை. புணர்த்தமை -
புணர்த்தியமை என்பது போல.
 
                      3
இருணீக்குந் துறவாக விதயநசை தூண்டெனினு
மருணீக்குங் கோற்றொடிதன் வாண்முகத்தா லெஞ்ஞான்றுங்
கருணீக்குங் கதிருயிர்த்த காட்சியினா லுளம் வெருவி
யருணீக்கும் பொறிசெறித்தோ னஞ்சியுணர்ந் தவை
                                    சொல்லான்.
 
இருள் நீக்கும் துறவு ஆக இதய நசை தூண்டு எனினும்,
மருள் நீக்கும் கோல் தொடி தன் வாள் முகத்தால் எஞ்ஞான்றும்
கருள் நீக்கும் கதிர் உயிர்த்த காட்சியினால் உளம் வெருவி,
அருள் நீக்கும் பொறி செறித்தோன் அஞ்சி, உணர்ந்தவை
                                        சொல்லான்.

     அருள் நெறியை விட்டு விலகக் காரணமாய் இருக்கும் தன்
ஐம்பொறிகளை அடக்கி ஆண்டவனாகிய சூசை தனக்குள் அஞ்சி, மன
இருளை நீக்கும் துறவையே மேற்கொண்டு ஒழுக இதயத்தின் ஆசை
தன்னைத் தூண்டுமெனினும், மயக்கத்தை நீக்கும் ஒளி பொருந்திய வளையல்
அணிந்த மரியாள் தன் ஒளியுள்ள முகத்தால் எந்நாளும் காரிருளை நீக்கும்
கதிர்களைப் பொழிந்த தோற்றத்தைக் கண்டு உள்ளம் நடுங்கி, தான்
உள்ளத்தில் உணர்ந்தவற்றை உரையால் அவளுக்குச் சொல்லமாட்டாதவன்
ஆயினான்.