பக்கம் எண் :

முதற் காண்டம்645

அம்பு போன்ற கண்களைத் தாங்கிய அவ்விடைச்சியர், அன்பினால் தம்
நாவில் பொருந்திய நல்ல புகழுரைகளைப் பொழிந்து நிற்பர்.
 
              18
ஏந்தி யோங்குளத் தின்பநெ டுங்கடல்
நீந்தி நீந்திநி லைக்கரை காண்கிலா
காந்தி வேய்ந்தன ளைக்கனிந் தோதுவாள்
சாந்தி நாமந்த ரித்தகு டத்தியே.
 
ஏந்தி ஓங்கு உளத்து இன்ப நெடுங்கடல்
நீந்தி நீந்தி, நிலைக் கரை காண்கு இலா,
காந்தி வேய்ந்தனளைக் கனிந்து ஓதுவாள்,
சாந்தி நாமம் தரித்த குடத்தியே:

     சாந்தி என்னும் பெயர் தாங்கிய ஓர் இடைச்சி, உயர்ந்து ஓங்கிய
தன் உள்ளத்தில் கொண்ட இன்பம் என்னும் நெடிய கடலை நீந்தி நீந்தி,
நிலைகொள்வதற்கான கரையைக் காண இயலாமல், ஆதவனின் ஒளியை
ஆடையாக அணிந்துள்ள மரியாளை நோக்கிக் கனிவோடு பின்வருமாறு
கூறுவாள்:
 
               19
குடத்தி வாய்மொழிக் கோதெனக் கோதையா
யுடத்தி நீயொரு வாதரு ளோர்ந்துகேள்
மடத்தி யாதெனுங் கிள்ளைவ குத்தன
விடத்தி யாவருங் கேட்பதி லாவதோ.
 
"குடத்தி வாய் மொழி கோது என, கோதையாய்,
உடத்தி நீ ஒருவாது, அருள் ஓர்ந்து கேள்;
மடத்து யாது எனும் கிள்ளை வகுத்தன,
இடத்து யாவரும் கேட்பது இல் ஆவதோ?

     "மாலை போன்றவளே, இடைச்சியின் வாய்ச் சொல் பழுதுள்ள தென்று
நீ சினந்து விலக்காமல், அருளே கருதிக்கேள்; கிளி அறியாமையால் கூறிய
எதையேனும், இவ்வுலகத்தில் எவரேனும் கேட்பது இல்லை என்பது
உண்டோ?

     'உடற்றி' என்பது எதுகை இன்னோசைப் பொருட்டு 'உடத்தி' என
மாறி நின்றது. 'ஏனும்' என்பது 'எனும்' எனக் குறுகி நின்றது. மடத்து யாது,