14 |
மீனிகர்
வயிரத் தூண்கள் விண்புக நிரைத்து வாய்ந்த
யாநிக ரனைத்து நீக்கு மெரிமணிக் கோபு ரத்தின்
வானிகர் நிறுவுஞ் சென்னி வைத்தபொற் றசும்பின் றோற்றங்
கோனிகர் நகரஞ் சூடுங் குளுஞ்சுடர் மகுடம் போன்றே. |
|
மீன்
நிகர் வயிரத் தூண்கள் விண் புக நிரைத்து, வாய்ந்த
யா நிகர் அனைத்தும் நீக்கும் எரி மணிக் கோபுரத்தின்,
வான் நிகர் நிறுவும் சென்னி வைத்த பொன் தசும்பின் தோற்றம்,
கோன் நிகர் நகரம் சூடும் குளுஞ் சுடர் மகுடம் போன்றே. |
விண்மீன்
போன்ற வைரத் தூண்களை வானளவு எட்ட வரிசையாக
நிறுத்தி, நிகராகப் பொருந்தக் கூடிய யாவற்றையும் நிகர் ஆகாவென்று
நீக்கும் ஒளி பொருந்திய மணிகள் பதித்த கோபுரத்தின் மீது, வானத்திற்கு
நிகராக உயர்ந்து நிமிர்ந்த அதன் சிகரத்தில் ஏற்றி வைத்த பொற்குடத்தின்
தோற்றம், பிற நகரங்களுக்கெல்லாம் அரசன் போல் விளங்கும் எருசலேம்
மாநகரம் தன் தலையில் சூடிக் கொள்ளும் குளிர்ந்த ஒளியுள்ள முடி
போன்று விளங்கியது.
15 |
இட்டநூல்
வழாமை யோடி யெல்லையி லோடும் வீதி
சுட்டநூ லறிஞர் கல்வித் துணிவொடு வளர்ந்த மாடஞ்
சட்டநூல் வீரர் கற்பின் றகை நலார் முறையு மற்ற
வட்டநூல் வழாமை யோடு மலி நலங் கிளக்கலுற்றேன். |
|
இட்டநூல்
வழாமை ஓடி எல்லை இல் ஓடும் வீதி,
சுட்ட நூல் அறிஞர் கல்வித் துணிவொடு வளர்த்த மாடம்,
சட்ட நூல் உடைய வீரர், கற்பின் தகை நலார் முறையும், மற்ற
வட்ட நூல் வழா மையோடு மலி நலம் கிளக்கல் உற்றேன். |
கொத்தர்
இட்ட அளவுநூல் தவறாமல் இருபுறமும் அமைந்து எல்லை
இல்லாது நெடுக ஓடும் தெருக்களும், சிறந்தவையெனச் சுட்டிக் காட்டத்
தக்க அறநூல் அறிஞரின் கல்வித் தெளிவுபோல் வளர்ந்த மாளிகைகளும்,
போர்ச்சட்டநூல் அறிவுகொண்ட வீரரின் முறைமையும், கற்பின் பெருமை
வாய்ந்த மகளிர்தம் முறைமையும், சக்கர நூல் எனப்படும் அரசியல்
நூல்நெறி பிறழாமல் சிறந்த மற்ற நலங்களும் இனி சொல்லத்
தொடங்கினேன்.
|