பக்கம் எண் :

முதற் காண்டம்768

     "வானவர் வணங்கும் செல்வனே, தீவினையைச் செய்த நாங்கள்
அது நீங்கப் பெற்று மகிழுமாறு, நீ வினையைச் செய்வதற்கு இடமான
உடலை எடுத்துக் கொண்டு இவ்வுலகில் வந்த பின், அதன் பொருட்டு
இறவாதிருப்பாயோ? சாவிற்குரிய வினையைப் பகைவர் செய்வதனால் உன்
உடல் துன்புற, எங்களை விண்ணுலகிற் கொண்டு சேர்க்கும் பொருட்டு,
தாய் போன்று செயலாற்றும் உன் தயவின் ஆழத்தை யார் அறிவார்!"
என்பார் சிலர்.

     'உலவாயோ' என்பதற்கு, 'சாவாயோ?' எனப் பழைய உரையாசிரியரும்,
'மரணமடைவாயோ?' என முதலியாரும் உடன்பாட்டுப் பொருள் கொண்டது
பொருந்துமாறில்லை. 'உல' என்ற பகுதி, 'உலப்பாய்' என உடன்பாடும்,
'உலவாய்' என எதிர்மறையும் பெறுதல் இயல்பு. தீ, நீ, வீ என்பன எதுகை
இன்னோசைப் பொருட்டு யகர மெய் பெற்று நின்றன.
 
               89
தீயவமை தீயரெரி சென்றெரிவ ரென்றாற்
காயவமை யோர்குறைநின் கண்ணமைவ துண்டோ
தூயவமை வீட்டுவகை தோய்ந்துமனு வாழ்த
லாயவமை திக்குநயன் யாதுநினக் கென்பார்.
 
"தீய அமை தீயர் எரி சென்று எரிவர் என்றால்,
காய அமை ஓர் குறை நின்கண் அமைவது உண்டோ?
தூய அமை வீட்டு உவகை தோய்ந்து மனு வாழ்தல்
ஆய அமைதிக்கு, நயன் யாது நினக்கு?" என்பார்.

     "தீவினைகள் பொருந்திய தீயவர் நரகம் சென்று எரிவாரென்றால்,
அதனால் வருந்தத் தக்க ஒரு குறை உன்னிடம் வந்து சேர்வதுண்டோ?
அன்றியும், தூயனவே சென்று சேரத் தக்க வான் வீட்டில் மனிதகுலம்
மகிழ்ச்சியில் தோய்ந்து வாழ்தலாகிய நிலைமையை முன்னிட்டு, உனக்கு
வந்து சேரும் நன்மை யாது?" என்பார் சிலர்.
 
               90
வெவ்வினைய றுத்துயிர்வி ளைத்தகனி யாக
வுய்வ்வினையெ மக்கருள வுற்றனபி ரானை
யெவ்வினையு மற்றமுறை யீன்றவரு டாயே
மைவ்வினையை நாங்கழிய வாழிநனி யென்பார்.