பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்304

"மின் முகத்துப் பொறித்த அணி இரு கல் ஏந்தி, வெஞ்
                                             சுடர் போல்
நல் முகத்து மோயிசன் வில் வீசி, வெற்பின் நயந்து இழிந்தான்.
புன் முகத்து மனு மகன் இந் நாதன் அந் நூல் புரிந்தமையால்,
தன் முகத்துத் தாள் பணிய உற்றது" என்றான் சட்சதனே.

     "மின்னலின் தன்மையாக எழுத்துப் பொறித்த இரண்டு கற்களையும்
ஏந்திக் கொண்டு, நல்ல முகவழகு கொண்ட மோயீசன் ஞாயிறு போல்
ஒளி வீசி, அம்மலையினின்று விருப்பத்தோடு இறங்கி வந்தான். எளிய
கோலத்தோடு மனித மகனாய் அவதரித்து வந்துள்ள இவ்வாண்டவனே
அவ்வேத நூல் விதியை வகுத்து வழங்கியவனாகையால், அவன்
முகத்தெதிரே வந்து திருவடி பணியுமாறு வந்ததாகும் எமது வருகை"
என்று சட்சதன் என்னும் வானவன்கூறி முடித்தான்.

             படர்ந்த சோலையும் பட்ட மரமும்

      - விளம், - மா, - தேமா, - விளம், - மா, - தேமா

                     24
பண்ணொன்று பாடலொத்த பயனெலா மிமிழிற் கேட்டுக்
கண்ணொன்று மகனுந் தாயுங் கண்ணிமை யொன்றிக் காத்த
மண்ணொன்று பைம்பூங் கோலான் மகவினை வாழ்த்தி யாரும்
விண்ணொன்று வெற்பு வேத வெற்பென வணங்கிச் சேர்ந்தார்.
 
பண் ஒன்று பாடல் ஒத்த பயன் எலாம் இமிழின் கேட்டு,
கண் ஒன்று மகனும் தாயும் கண் இமை ஒன்றிக் காத்த
மண் ஒன்று பைம்பூங் கோலான் மகவினை வாழ்த்தி, யாரும்
விண் ஒன்று வெற்பு வேத வெற்பு என வணங்கிச் சேர்ந்தார்.

     யாழோடு ஒன்றிய பாடலுக்கு நிகராகச் சட்சதன் கூறிய
பொருளையெல்லாம் இனிமையாகக் கேட்டு, கண்ணுக்கு நிகரான
திருமகனையும் தாயையும் கண் இமை போலக் காத்த அணி பொருந்திய
பசு மலர்க் கோலைத் தாங்கிய சூசை அத் திருமகனை வாழ்த்தவே,
வானளாவிய அம்மலையை வேத மலை என்று வணங்கிய தன்மையாய்
யாவரும் அதனை அடுத்துச் சென்றனர்.