பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்328

மேல் சபையாக வானோர் விருப்பு எழீஇ மருங்கில் சூழ,
நூல் சபையாகக் கற்றோர் நுதலிய புகழின் மிக்கோர்,
கோல் சபையாக மூவர், கொடுந் துயர் குடியாய் வைகும்
பேற்சபை என்னும் கானம் பெற்று, உளம் தளரா புக்கார்.

     மேலுகத்துக் குழுவினராகப் பத்தாயிரம் வானவர் இரு பக்கமும்
தம்மைச் சூழ்ந்துவர, நூல் உணர்ந்தோர் அவையில் இடம் பெறத்தக்க
கற்றோர் கருதிய புகழுக்கெல்லாம் மேம்பட்ட வரும், ஆட்சிக்குரிய
குலத்தவருமாகிய இம்மூவரும், கொடிய துன்பங்களெல்லாம் குடிகொண்டு
தங்கும் பேற்சபை என்னும் பாலைவனம் வரப்பெற்று, தம் உள்ளம்
தளராமல் அதனுள் புகுந்தனர்.

                     7
காட்டிய விரலைத் தீக்கக் கண்டகண் விழியைத் தீக்கச்
சூட்டிய கொடிய கானம் சுடுமெனி லெனும்வாய் தீக்க
வீட்டிய வழலை யெண்ணி லெண்ணிய மனத்தைத் தீக்கக்
கோட்டிய மனத்திற் றீக்குங் கொடியதோர் சுரம தன்றோ.
 
காட்டிய விரலைத் தீக்க, கண்ட கண் விழியைத் தீக்க,
"சூட்டிய கொடிய கானம் சுடும்" எனில், எனும் வாய் தீக்க,
ஈட்டிய அழலை எண்ணில், எண்ணிய எண்ணம் தீக்க,
கோட்டிய மனத்தின் தீக்கும் கொடியது ஓர் சுரம் அது அன்றோ.

     இதுவே அப்பாலைவனமென்று சுட்டிக்காட்டிய விரலையே தீய்க்கவும்,
அதுகேட்டு நோக்கிய கண்ணின் பார்வையைத் தீய்க்கவும், "இப்பெயர்
சூட்டியுள்ள இப்பாலைவனம் சுடும்" என்று ஒருவன் சொன்னால், அவ்வாறு
சொல்லும் வாயையே தீய்க்கவும், அங்கே திரண்டுள்ள நெருப்பை மனத்தால்
எண்ணினால், எண்ணிய அவ்வெண்ணத்தையே தீய்க்கவுமாக, கோணிய
மனம் போலத் தீய்க்கும் கொடியதோர் பாலைவனம் அது.

     'அன்றோ' அசைநிலை. அடுத்து வரும் பாடல்களுக்கும் இது
பொருந்தும்.