பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்353

     தேரின் மேல் அமர்ந்த அரசன் போல, முழங்கிய தெளிந்த திரை
கொண்ட கடல் நீரின் மேல் எழுந்து தோன்றும் பகலவன், உலகத்தில்
எழுந்து நிற்கும் இருளுக்கு எதிராகத் தன் நெடிய கதிராகிய அம்புகளைப்
பரப்பி ஓட்டுதலினால், கருமையாக எழும் இருளெல்லாம் தன்னுட் சென்று
மறைந்ததுபோல் தோன்றும் சோலை அது.


              5
கள்ளுற மலர்ந்தகாக் கலந்த நீழலோ
டள்ளுற மலியிரு ளிருகண் ணட்டதாற்
றெள்ளுற வுளத்தெழீஇத் திளைத்த ஞாபக
முள்ளுறத் தவங்கனிந் துறையுங் காவதே.
 
கள் உற மலர்ந்த கா கலந்த நீழலோடு,
அள் உற மலி இருள், இரு கண் அட்டதால்
தெள் உற உளத்து எழீ இத் திளைத்த ஞாபகம்
உள் உறத் தவம் கனிந்து உறையும் கா அதே.

     தேனைப் பொழிந்து மலர்ந்த சோலையில் எங்கும் கலந்து கிடந்த
நிழலோடு, அள்ளலாம் போன்று செறிந்து கிடந்த இருளும் சேர்ந்து,
பார்ப்பவர் இருகண்களையும் கெடுத்த தன்மையால், தெளிவோடு
உள்ளத்தில் எழுந்து தோன்றிய ஞான அறிவு உள்ளத்தில் ஆழ்ந்து
பதியவே, தவமே இனிதென்று எவரும் கனிவோடு வந்து தங்கும் சோலை
அது.

                 6
சீர்விளை புவியெழின் முகத்தின் சீர்மையா
லேர்விளை யெசித்துநாட் டருகி லேந்திய
தார்விளை குழலெனக் கமழ்தண் டாதவிழ்
கார்விளை நிழலொடு கரிய காவதே.
 
சீர் விளை புவி எழில் முகத்தின் சீர்மையால்
ஏர் விளை எசித்து நாட்டு அருகில், ஏந்திய
தார் விளை குழல் என, கமழ் தண் தாது அவிழ்,
கார் விளை நிழலொடு, கரிய கா அதே.

     செல்வம் கொழிக்கும் நிலமகளின் அழகிய முகம் போன்று அமைந்த
சிறப்பினால் அழகு பொருந்திய எசித்து நாட்டின் அருகில், அந்நிலமகள்
தாங்கிய மாலையோடு கூடிய கூந்தல் என்று சொல்லத் தக்கவாறு, இருள்
பொருந்திய நிழலோடு மணம் கமழும் குளிர்ந்த மலரிதழ்கள் விரியும் கரிய
சோலை அது.