பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்423

     'அன்றோ' அசை நிலை.

                   115
அட்டென நீவிர் விற்ற வாணர னவன்றா னானென்
றிட்டெனத் துணுக்கென் றன்னா ரிடித்தகார் கிழித்தவேறு
பட்டென வுயிர்பட் டாற்போற் பாசறை குளிப்ப வின்னீர்
மட்டென மலர்க்கண்டூவ மார்புறத் தழுவினானே.
 
"'அட்டு என நீவிர் விற்ற ஆணரன் அவன் தான் நான்!' என் -
றிட்டென, துணுக்கென்று அன்னார், இடித்த கார் கிழித்த ஏறு
பட்டென உயிர் பட்டாற் போல் பாசறை குளிப்ப, இன் நீர்
மட்டு என மலர்க் கண்தூவ மார்பு உறத் தழுவினானே.

     "'கொன்ற தன்மையாக நீங்கள் விற்ற ஆணரன் என்னும் அவனே
நான்!' என்றதும், அவர்கள் திடுக்கிட்டு, இடித்த கரு மேகத்தைக் கிழித்து
வந்த இடிபட்டதும் உயிர் மடிந்தாற்போல் துன்பத்து மூழ்க, தன் மலர்
போன்ற கண் தேன் போல் இன்பக் கண்ணீர் தூவ, அவர்களைத் தன்
மார்போடு இறுகத் தழுவிக் கொண்டான்.

     'இட்டென', 'பட்டென' என்ற இரண்டும் 'செய்தென' என்னும்
வாய்பாட்டு வினையெச்சங்கள்.

                     116
தீதுநீர் விதைத்த வேலி செல்வநீர் விளைத்த தன்றோ
கோதுநீர் நினைத்த வண்ணங் கோதுநான் குணிக்கல்
                                     செய்யேன்
றாதுநீ ரொழுகுஞ் சாகி தனைக்கொய்வார் நிழற்றும் போல
யாதுநீ ரஞ்சல் வேண்டா வியல்புற வளிப்ப லென்றான்.
 
"'தீது நீர் விதைத்த வேலி செல்வ நீர் விளைத்தது அன்றோ?
கோது நீர் நினைத்த வண்ணம் கோது நான் குணிக்கல் செய்யேன்
தாது நீர் ஒழுகும் சாகி தனைக் கொய்வார் நிழற்றும் போல,
யாதும் நீர் அஞ்சல் வேண்டா; இயல்பு உற அளிப்பல்' என்றான்.