பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 178

      உருவத்தில் வளர்கின்ற பிற மதியோடு அதன் ஒளியும் சேர்ந்து
வளர்ந்ததுபோல, மணம்பொருந்திய தாமரை மலர் போன்ற குழந்தை
நாதனின் உடல் வளருந் தோறும் அச்சட்டையும் அதற்கேற்ப வளர்ச்சி
பெற்றது. அதனோடு, யாரும் அஞ்சத் தக்க முறையில் தான் இறந்தபோதும்
அது புதிய தன்மையுடையதாய்த் தோன்றியது.

     இயேசு இறந்தபோது சட்டைக்கு நேர்ந்தது. அரு. 19 : 23 - 24
காண்க. 'தோன்றினது' என்ற சொல் இறுதி குறைந்து நின்றது.

 
                     7
குழனிகர் தேமொழிக் குழவி கண்டனர்
நிழனிகர் நீங்கிலா நிமிர்ந்த காதலாற்
கழனிக ரடிமலர் புல்லிக் காயுள
மழனிக ரடுந்துயர் குளிர்ப்ப வாற்றுவார்.
 
குழல் நிகர் தேன்மொழிக் குழவி கண்டனர்
நிழல் நிகர் நீங்கு இலா, நிமிர்ந்த காதலால்
கழல் நிகர் அடி மலர் புல்லி, காய் உளம்
அழல் நிகர் அடுத் துயர் குளிர்ப்ப ஆற்றுவார்.

     புல்லாங்குழல் போன்று இனிய மொழி பேசும் இக்குழந்தையைக்
கண்டவர். நிழல்போல் அதனைவிட்டு நீங்குதல் இன்றி, மிகுந்த அன்பினால்
செருப்புப் போல் அதன் காலாகிய மலரைப் பற்றி நின்றி, காய்ந்த தம்
உள்ளம் குளிரும்படி நெருப்புப் போல் வாட்டும் துயரங்களை ஆற்றிக்
கொள்வர்.

 
                       8
போதுவாய் மலர்ந்துரை முதற்பு கன்றபோ
தேதுவாய் மடங்கவு மினிது ளத்தொடு
காதுவாய் குளிரவுங் கனியச் சூசைபார்த்
தோதுவா யிளவலன் றுணர்த்தி னானரோ.
 
போது வாய் மலர்ந்து உரை முதல் புகன்ற போது,
ஏது வாய் மடங்கவும், இனிது உளத்தொடு
காது வாய் குளிரவும், கனியச் சூசை பார்த்து,
ஓது வாய் இளவல் அன்று உணர்த்தினான் அரோ.