பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 297

"பகை படக் கலந்த வண்ணம் பழுது இல் ஓவியம் தோன்று
                                   ஆறும்,
நகை படப் பசும் பொன் வீக்கி நவிர் அணி அமைக்கும்
                                   ஆறும்,
வகை பட நரம்பின் பாலால் வந்த நோய் உரைக்கும் ஆறும்
தொகை படப் பழகாத் தன்மைத் தொழில் எலாம் அரிய
                                   அன்றோ?


     "ஒன்றுக்கொன்று பகையாகக் கலந்த பல நிறக்கலவையால் பழுதற்ற
சித்திரம் தோன்றும் விதமும், பசும் பொன்னை ஒளிமிகுமாறு அடித்து
இறுக்கி அழகிய அணி அமைக்கும் விதமும், வாதம், பித்தம் சிலேட்டுமம்
என வகைப்பட நின்ற நாடியின் தன்மையால் வந்த நோய் இன்னதென்று
சொல்லும் விதமும் என்று இவ்வாறு தொகைப்பட நின்ற தொழிலெல்லாம்
பழகாத் தன்மையால் அரியனவாகத் தோன்றும்?

     எனவே, பழகிய தன்மையால் இவையெல்லாம் எளியன ஆதல் போல்,
காம இச்சையை அடக்கியாளும் செயலும் பழக்கத்தால் இயலுவதாம் என்பது
கருத்து.

 
          17
பற்றொழிற் கெல்லா மிஃதே
     பாலெனி லறத்தின் றூய
நற்றொழிற் கிதுவு மன்றி
     நசைக்கிணை பயனுண் டாமால்
சிற்றொழில் பலநாட் கற்றுந்
     திருந்திலா தேனு மின்ன
மற்றொழிற் பயன்பட் டோங்க
     மனத்துணி வொன்றே சால்பாம்.
 
"பல் தொழிற்கு எல்லாம் இஃதே பால் எனின், அறத்தின் தூய
நல் தொழிற்கு இதுவும் அன்றி, நசைக்கு இணை பயன் உண்டாம் ஆல்.
சில் தொழில் பல நாள் கற்றும் திருந்து இலாதேனும், இன்ன
மல் தொழில் பயன்பட்டு ஓங்க மனத் துணிவு ஒன்றே சால்பு ஆம்.