நூல் வந்த வழி
 
 
7அடவியால் வனப்பில் வாய்ந்த
  ஆகிர்த எனும் நகர்க்குள்,
புடவியால் உவமை நீத்த
  புகழ் வரத்து உயர்ந்த கன்னி,
நடவி, ஆர் தவத்தில் ஓங்கி,
  நாதனை ஈன்றாள் தாளைத்
தடவி, ஆர்வு உயரப் போற்றி,
  தகவு அடைந்து இருந்தாள் அன்றோ.
7
   
 
8பொறைஉழி சிறப்பில் வாய்ந்த,
  புலன் தவிர் காட்சி தன்னால்,
அறை மொழி இனிமை கான்ற
  அருள் அவிழ் வாயினாளே;
நிறை மொழி மாந்தர் பூத்த
  நீர்மையோடு ஒழுகல் செய்து,
மறை மொழி வாய்மை காட்டும்
  மாண்பு உடை அறத்தினாளே.
8
   
 
9சீது அருள் உடுக்கள்
  ஊடு திங்களைப் போல, கன்னி
மாதருள் அரிய மாண்பால்
  வயங்கினாள்; அன்றித் தன்னில்
கோது அருள் குறை அற்று, உம்பர்
  குழுவினுக்கு எந்தை அண்டம்
மீது அருள் காட்சி பூத்து,
  வேதியர்க்கு ஒளியே போன்றாள்.
9
   
 
10இளம் கொடி மாட்சி காட்ட
  இனிய தன் நாமம் தந்து,
வளம் கொடு நட்புக் காட்ட
  வரைவு இல வரங்கள் ஈந்தாள்;
விளங்கு ஒளி உடுத்த மேனி,
  வெண் மதி மிதித்த பாதம்,
உளங்கு உடு சூட்டும் சென்னி
  உடையவள் பரம தாயே.
10
   
 
11இன்னவை மகளும் தாயும்
  இணை என நடத்தும் வேளை,
பல் நவை அறும் தன் பூமான்
  பழங்கதை உரைத்து, உரைத்த
அன்னவை எவரும் கேட்ப
  அவை வரை(க) என்றாள் தாயும்.
சொன்னவை மகளும் அன்ன
  துணிவொடு வரைந்திட்டாளே.
11
   
 
12வருந்திய நசையால், நானும்
  வரைந்தவை வரைந்து காட்ட,
திருந்திய தமிழ்ச் சொல் இல்லால்,
  செவிப் புலன் கைப்ப நல்லோர்
பொருந்திய குறைகள் நோக்கின்
  புணர்ந்த மண் கலத்தைப் பாராது,
அருந்திய அமுது நன்றேல்,
  அருத்தியோடு அருந்தல் செய்வார்.
12
   
 
13சீரிய மறை நூல் பூண்ட
  செழும் தவத்து அரிய மாட்சி
நேரிய உளத்தில் ஓங்கி,
  நேமி காத்தவனைக் காத்த,
வேரி அம் கொடியோன் காதை
  விளம்ப, அக் கொடி விள் பைம்பூ ,
ஆரியனூரில், தேம்பாவணி
  எனப் பிணித்தல் செய்வாம்.
13