நாட்டுப் படலம்
 
நீர்வளம்
மேகம்முழங்குதல்
 
14புள் உலாம் விசும்பு இடை தொறும்
  பொரும் படை பொருவ
வெள் உலாம் மழை வெண் கொடி
  உருக் கொடு விளங்கித்,
தெள் உலாம் திளை திதைப்ப உண்டு,
  எழுந்து உயர் பரந்து
வள் உலாம் கரு மத கரி
  இனம் எனத் தோன்ற.
1
   
 
15போர் புறம் கொடு பொருந்தலர்
  உரத்தில் தேய்த்து, ஒளிர் வேல்
சீர் புறம் கொடு, திசை தொறும்
  இருள் அற மின்னி,
வார் புறம் கொடு வளர் முரசு
  ஒலி என அதிர்ந்து,
நீர் புறம் கொடு நீல் முகில்
  முழங்கின மாதோ.
2
   
மழை பொழிதல்
 
16படை எனச் செருப் பகை தரப்
  படர்ந்தன அல்லால்,
கடை எனச் செறி கருணையோடு
  உஞற்றிய வள்ளர்
கொடை என, செழும் குன்றொடு
  வயின் தொறும் குளிர
மிடை எனச் சொரி வியன் முகில்
  வரைவு இல பொழிவ.
3
   
அருவிபுறப்படுதல்
 
17படித்த நூல் அவை பயன்பட
  விரித்து உரைப்பவர் போல்,
தடித்த நீல் முகில் தவழ் தலை
  பொலிந்த பொன் மலையே
குடித்த நீர் எலாம் கொப்புளித்து,
  அமுது என அருவி
இடித்து, அறா ஒலி எழத் திரை
  எறிந்து உருண்டு இரிவ.
4
   
அருவியின்தோற்றம்
 
18புள்ளி மால் வரை பொன் உலகு
  இடத்து எடுத்து உய்த்தல்
உள்ளி வான் விடும் வடம் எனத்
  தாரைகள் ஒழுக,
வெள்ளி நீள் தொடர் விசித்து அதைப்
  பிடித்து என, சூழத்
துள்ளி வீழ் உயர் தூங்கிய
  அருவியின் தோற்றம்.
5
   
முல்லைநிலத்தில் ஆறு
 
19ஒள் நுரைத்து, எரி உமிழ்ந்து
  அவிர் இன மணி வரன்றி,
தெள் நுரைத்து எழும் திரைத் திரள்,
  வயின் தொறும் புகுந்து,
வள் நுரைத்து, எதிர் வதிந்(த) எலாம்
  சாய்த்து, அவை கொடு போய்,
புண் உரைத்து அடக் கொள்ளை
  செய் பொருந்தலர் போன்றே.
6
   
மருதநிலத்தில் ஆறு
 
20விரை கிடந்து அசை வீ உமிழ் மதுவினால் பெருகி,
நிரை கிடந்து எழும் சோலையும் கழனியும் நிறைப்ப,
வரை கிடந்து இழி வளம் புனல், எங்கணும் உலவல்,
திரை கிடந்து உயிர் சீர்த்து உறுப்பு உலாவிய போன்றே.
7
   
நெய்தல் நிலத்தில் ஆறு
 
21அஞ்சு இலா எதிர் அடுக்கிய கல் எலாம் கடந்தே,
எஞ்சு இலா எழில் இமைத்த நீள் மருதமும் நீக்கி,
துஞ்சு இலா நதி, தொடர்ந்து அகல் கருங் கடல் நோக்கல்,
விஞ்சையார் எலாம் வெறுத்து வீடு இவறிய போன்றே.
8
   
ஆறு கடலிற்கலத்தல்
 
22மலையின் நேர் அறல் மலிய நால் திணை அருந்திய பின்,
அலையின் நேர் உறல், அவனி தன் மகர்க்கு எலாம் ஊட்டி,
முலையின் நேர் உறீஇ விஞ்சு பால் முடுகலில், உடுத்த
கலையின் நேர் உறீஇக் களிப்பொடு சிந்துவ போன்றே.
9
   
நிலவளம்
மருதநிலத்தில் நீர்பாய்ச்சுதல்
 
23செறி உலாம் புனல் சிறை செய்து, பயன்பட ஒதுக்கி,
வெறி உலாம் மலர் மிடைந்து அகல் வயல் வழி விடுவார்,
பொறி உலாம் வழி போக்கு இலது, இயல்பட அடக்கி,
நெறி உலாவு அற நேர் அவை நிறுத்தினர் போன்றே.
10
   
உழவர்க்குப் பலன் விளைக்கும் நிலம்
 
24உவர்க்கும் தாழ் கடல் உடுத்து அகல் விரி தலை ஞாலம்,
எவர்க்கும் தாய் என எண் இலாக் கிழிபடக் கீறும்
அவர்க்கும் தான் உணவு அளித்தலே நோய் செய்வார்க்கு உதவும்
தவர்க்கும் தாவ அரும் தருமம் என்று இயற்றுதல் போன்றே.
11
   
நெல் விதைத்தல்
 
25கூர் விளைத்து அருட் குரு விதி போன்று, ஒன்று கோடி
நீர் விளைத்த நெல் நிரம்ப என வித்தினர் இரட்ட,
ஏர் விளைத்த பல் கடைச்சியர் குரவை ஆடு இயல்பால்,
தேர் விளைத்த ஓர் சிறப்பு எழும் விழா அணி போன்றே.
12
   
களைபறித்தல்
 
26நோக்க இன்பு உளம் நுகர, ஒள் முளரியோடு ஆம்பல்
நீக்கு அலாது, எலாம் நீர்மலர் களை எனக் கட்டல்,
ஆக்கம் ஆக்கினும், அறன் இழந்து ஆவது கேடு என்று
ஊக்கம் மாண்பினர் ஒருங்கு அவை ஒழிக்குதல் போன்றே.
13
   
அறுவடை
 
27பூரியார் திருப் போல் தலை பசிய கூழ் நிறுவி,
நீரினார் தலை நேர நேர் வளைவொடு பழுத்த
ஆரம் மானும் நெல் அறுத்து, அரி கொண்டுபோய் அங்கண்,
“போர் இது ஆம்,“எனக் களித்தனர் போர் பல புனைவார்.
14
   
சூடடித்தல்
 
28மெய் கலந்த பொய் விலக்கி மெய் கொள்பவர் வினை போல்,
வை கலந்த நெல் பகட்டினால் தெளித்து, வை மறுத்து,
கை கலந்து அடுத்து ஏற்குநர்க்கு அளித்த பின், களித்து,
துய் கலந்த நெல், உண்ணவும் ஈயவும் தொகுப்பார்.
15
   
நாட்டின் பெருமை
இரவலர்க்கு ஈதல்
 
29ஈதலோடு இசை இனிய வாழ்வுகள்
ஆதலோடு அறன் அழிவு இல் ஆக்கினர்;
காதலோடு உடல் கடிய நாள் வர
வீதலோடு உறும் வீட்டில் வாழ்வரே.
16
   
தீதிலாநாடு
 
30மறமொடு ஆகுலம் மலிந்த தீது எலாம்
புறமொடு ஆகையின், பொருவு இலா வளர்
அறமொடு ஆன்ற சூதேய நாடு அமை
திறமொடு ஆண்மையைச் செப்பச் சீரதோ?
17
   
கனிமரங்கள்
 
31மிடியில் ஆர் நயன் விளைவில் மாற்றுவான்,
முடியில் ஆர் கனிப் பொறை பொறா, முயன்று,
அடியில் ஆர் உயிர் அமைந்த நீர் தொழக்
கடியில் ஆர் மரம் வளைதல் காணுமே.
18
   
நாட்டில் சில காட்சிகள்
ஆட்டமும்வாட்டமும்
 
32ஆலை ஆர் புகை முகில் என்று, ஆர்ப்பு எழ,
சோலை ஆர் மயில் துள்ள, மாங் குயில்
மாலை ஆர் இருள் விரும்பும் மாக்கள் காண்
மேலையார் என, மெலிந்து தேம்பும்ஆல்.
19
   
காடைப்போர்
 
33மல்ல விள் அலர் மலிந்த கான் தொறும்
புல்ல அன்பு அறா, பொருது காரணம்
இல்லது, ஒல்எனக் குறும்புழ் ஈந்த போர்
அல்லது, இல்லது ஓர் அமர் அந் நாட்டிலே.
20
   
கடாய்ப்போர்
 
34தீ எழத் தகர் சினந்து தாக்குப,
மீ எழத் துகள் விரைந்து பின் உறல்,
நோய் எழப் பகை நுதலும் ஒன்னலர்,
வாய் எழச் செயும் வணக்கம் மானுமே.
21
   
ஆய்ச்சியர்தயிர்கடைதல்
 
35வேர்ப்பு எழ, கயல் விழியர் கை வளை
ஆர்ப்பு எழக் கடை தயிரில் ஆய நெய்,
கூர்ப்பு எழத் துயர் குறுக, மேல் அறம்
ஏர்ப்பு எழச் செய்வோர் இயல்பு மானுமே.
22
   
பறவையின் இன்னிசை
 
36கழை இறால் பனை கனிகள் தேங்கு அலர்
உழையில் தாவிய தேறல் உண்ட பின்,
மழையில் தாவிய மதுவின் ஊங்கு இனிது
இழை இறா அழகு இளம் புள் பாடும்ஆல்.
23
   
பால்வளம்
 
37உண்டு அகன்ற கன்று உள்ளி மேதிகள்,
மண்ட அன்பு உறீஇ வழிந்த பால் திரள்,
கொண்ட அன்னமே குடித்தல் ஆவது
கண்டது அங்கு உள களவு இது ஆம் அரோ.
24
   
மயிலின் ஆட்டம்
 
38குயில் இனத்தொடு கொம்பில் ஆர் கிளி
பயில் இனத்தொடு ஞிமிறும் பாடவே,
துயில் இனத்தொடு விரித்த தோகை கொள்
மயில் இனத்தொடு மகளிர் ஆடும்ஆல்.
25
   
இன்னிசை முழக்கம்
 
39கா சிலம்புவ களித்த புள் இனம்;
வீ சிலம்புவ மிடைந்த தும்பிகள்;
பா சிலம்புவ; சிலம்பப் பண்; புகழ்
நா சிலம்புவ சிலம்பும் நாடு எலாம்.
26
   
பல்வகை ஒலி
 
40முட்டு இரட்டின முரண் தகர். பெடை
பெட்டு இரட்டின குயில். மிளிர்ந்த முத்து
இட்டு இரட்டின கரும்பு; இன்பு ஈன்ற கள்
விட்டு இரட்டின வீ இனங்களே.
27
   
பல்வகைச்சிறை
 
41நிழலின் கண் சிறைபடுத்தும் நீண் பொழில்.
குழலில் பூச் சிறைபடுத்தும் கோதையார்.
கழலில் கால் சிறைபடுத்தும் காந்தர். நீர்
விழலின் தான் சிறைபடுத்தும் வேலியே.
28
   
 
42துன்அல்இல் சிறைபடுத்தத் தோம் இலால்,
அன்ன பல் சிறை அல்லது இல்லை ஆல்,
பொன்ன நல் சிறை அன்னப் புள் உறை,
மன்னவர்க்கு இறை வழங்கும் நாட்டிலே.
29
   
பல்வகை வண்டிகள்
 
43வாய்ந்த செந் நெலை மறுகும் பண்டியும்,
ஆய்ந்த மெல் இலை அமையும் பண்டியும்,
பாய்ந்த பூக ஒண் பழம் பெய் பண்டியும்,
வேய்ந்த தீம் கனி விம்மும் பண்டியும்,
30
   
 
44பன்னும் தேங்கு இளநீர் பெய் பண்டியும்,
துன்னும் தீம் கழை சுமக்கும் பண்டியும்,
மின்னும் தேன் செறி வீ பெய் பண்டியும்,
மன்னும் தேசு பல் மணி கொள் பண்டியும்,
31
   
 
45துளித்த தேறலைத் துவலை சோலை சூழ்
களித்த நாடு எலாம் கசடு இல் வாழ்வு உற,
சுளித்த மள்ளர்கள் தூண்டும் ஏற்று இனம்
திளைத்த பண்டிகள் நெருங்கித் தேயும் ஆல்.
32
   
கனிவளம்
 
46பாய்ந்த தேங்கு அதின் பழங்கள் வீழ்தலால்,
வாய்ந்த வாழை மா வருக்கை ஆசினி
சாய்ந்த தீம் கனி சரிந்த தேன் புனல்
தோய்ந்த வாய் எலாம் இனிமை தோய்ந்தன
33
   
செல்வம் பயன்படுமுறை
 
47வளைந்து அளித்தரும் கடலின் வாழ் வளை
உளைந்து அளித்த முத்து, ஒருங்கு மற்று எலாம்
திளைந்து அளித்தலின், திரு என்று ஆண்டகை
விளைந்து அளித்தவை விருந்து என்று ஆம் அரோ.
34
   
 
48பொறையினோடு இகல் பொதிர்ந்த பொன் மணி;
உறையினோடு இகல் உவந்து இடும் கொடை;
மறையினோடு இகல் முனிவர் மாண்பு; வான்
முறையினோடு இகல் முயன்ற நாடு எலாம்.
35
   
குளம்,சோலை,வயல்
மருதநிலம்
 
49காம் அலர் பெடை தழீஇ, அன்னம் கண்படும்
தேம் மலர்த் தடம் தழீஇ, சினைகள் நீடிய
பூமலர்ப் பொழில் தழீஇ, பொலிந்த பொற்பு எழும்
தூமலர் வயல் தழீஇத் துளங்கு நாடு அதே.
36
   
சோலைகள்
 
50ஓலைகள் கிடந்த நீள் கமுகொடும் பனை,
பாலைகள், மா, மகிள், பலவு, சுள்ளிகள்,
கோலைகள், சந்தனம், குங்குமம் பல
சோலைகள் கிடந்தன, தொகுக்கும் வண்ணமோ
37
   
 
51தேன் வளர் அலங்கலைச் சிறை செய் கூந்தலோ?
கான் வளர் சண்பகம் மலர்ந்த காவுகள்;
வான் வளர் துளி நலம் வழங்கும் கொண்டலோ?
தேன் வளர் ஒலி கொடு தேன் பெய் சோலையே
38
   
 
52தோடு அணி கவினொடு தூங்கும் குண்டலம்
நீடு அணி மதி முகம் நிழல் செய் மாதரோ?
கோடு அணி எழுது அரும் கோலப் போதொடு
சேடு அணி கனி நலம் திளைத்த சோலையே
39
   
 
53நீல் நிரைத்து எழுதிய படத்தின் நேர், உடு
மேல் நிரைத்து எழுதிய விசும்பின் தோற்றமோ,
கால் நிரைத்து எழும் தளிர்க் காழகத்து உயர்,
தேன் நிரைத்து அவிழ் மலர் திளைத்த சோலையே.
40
   
சோலை-சித்திர கூடம்
 
54அப் புறத்து அமுது உணும் சிறைப் பொற்பு ஆர்ந்த புள்,
இப் புறத்து அலர்கள் கொய் இளைஞர் வாள் முகம்,
முப் புறத்து எழுதிய முகைகள் காட்டிய
துப்பு உறச் சித்திரக் கூடம் சோலையே.
41
   
சோலை-மணப்பந்தர்
 
55கயில் துணை கலன் எனக் கம்பில் தூங்கு அலர்,
குயில் துணை குயிலவும், குழல் வண்டு ஊதவும்,
மயில் துணை உலவி வந்து இரட்ட, மற்று எலாம்
பயில் துணை களி மணப் பந்தர் சோலையே.
42
   
சோலை-துறவிடம்
 
56முதிர் செயும் கனி மலர் மொய்த்துத் தூங்கலோடு,
உதிர் செயும் பழந் துணர் ஒளிசெய் குப்பையால்,
கதிர் செயும் முடி கலன் கழிந்து மன்னவர்
பொதிர் செயும் துறவு இடம் போலும் சோலையே.
43
   
சோலை-சிலம்பக்கூடம்
 
57வால் நிறத் தகர் இனம், கலையின் மான் இனம்,
தூநிறத்து உயரிய தூரியத்து இனம்,
நீல் நிறப் பகட்டு இனம் நெடிது உழற்றலின்,
கோன் நிறச் சிலம்ப நல் கூடம் சோலையே.
44
   
சோலை-பள்ளிக்கூடம்
 
58கறாகறா என ஒர் பால் காடைப் புள் இனம்,
ஞறாஞறா என ஒர் பால் நயந்த தோகைகள்,
புறா குறாவுதலொடு புள் பல் ஓதையால்
அறாது, உறா உணர்வு உகும் அரங்கம் சோலையே.
45
   
சோலை-நாடகசாலை
 
59மேல் வளர் அலர்ப் படம் விரித்து, வீணைசெய்
பால் வளர் சுரும்பு இசை, பாட மாங் குயில்
வால் வளர் மயில் நடம் காண மற்றைப் புள்,
சால் வளர் நாடக சாலை சோலையே.
46
   
சோலையிற்கூத்து
 
60கால் எடுத்து, அடுத்து, எதிர்த்து, ஒளி க்கலாப நீள்
வால் எடுத்து, பக மாற மஞ்ஞைகள்,
கோல் எடுத்து அஞ்சனக் கோலக் காருகம்,
மேல் எடுத்து ஆரியக் கூத்து வீக்கும் ஆல்.
47
   
பொய்கை மலர்களின் இன்பம்
 
61கூட நின்று ஓடை, தன் குவளைக் கண் திறந்து,
ஓட நின்று, அலைந்து அலைந்து, ஒருமித்து ஓர் இடம்
நாடலின், நகைத்து என நனைத்த முல்லை - நீடு
ஆடலின் ஆவித்து என்று அலர்ந்த காந்தளே.
48
   
சோலைக்குள் மாதர்வருகை
 
62தோகை கொள் மயில் என மாதர் தோன்றலின்,
வாகை கொண்டார் என மயில் ஒடுங்கலால்,
சாகை கொண்டு எனைய புள் சிரித்த தன்மை போல்,
ஓகை கொண்டு ஒலிதர, ஒலிக்கும் நாடு எலாம்.
49
   
 
63உதித்தன கதிர் என உவந்த மாங் குயில்
துதித்து எனப் பாட, ஒள் அனம் தன் தூய் நடை
விதித்து என முன் நடந்தன, தம் மெல் அடி
பதித்து என நடந்தனர் பனி கொள் கோதையார்.
50
   
மாதர்மலர் பறித்து மகிழ்தல்
 
64இன் நிறப் பிறைக் கதிர் திரட்டி ஈட்டு எனா,
பல் நிறத்து அலர்ந்த பூ படர்ந்த காஇடை,
கொன் நிறத்து அலர்ந்து எனக் கொய்து கொய்து தாம்
மின் நிறத்து அடவி சூழ் விரும்பி ஏகுவார்.
51
   
 
65கொள்ளை கண்டு அளி இனம் கூ என் ஓதையும்,
கிள்ளை கண்டு இனைவ போல் கீ என் ஓதையும்
வள்ளை கொண்டு இனிது இசை மறலப் பாடினர்,
வெள்ளை கொண்டு உள பல நிறத்த வீ கொய்வார்.
52
   
 
66ஐ மணி பவளம் முத்து அம் பொன் இற்று எலாம்,
பம்மு அணி பெற அரும் படலை கோத்து என,
பொம்மு அணி மலர் எலாம் புணர் பொன் நூலினால்,
தம் அணி இணை என, தார் பிணிக்குவார்.
53
   
 
67பிணித்த தார் விரலின் மேல் பிறழக் காட்டுவார்:
“அணித் தகாது உனது!“என இசலி ஆர்த்த பின்,
தணித்த பூண் ஒள் கலம் சவிக் கிலுத்தங்கள்
பணித்த பூம் புகைக் குழல் படியச் சூடுவார்.
54
   
மங்கையர்பாடத்தொடங்குதல்
 
68முருகு விம்மிய மலர் குடைந்து, மூழ்கு தேன்
பருகு விம்மிய அளி, பசி தவிர்ந்த பின்
அருகு விம்மியது என, அலர் கொய் மங்கையர்
உருகு, விம்மிய களிப்பு உயிர்த்துப் பாடுவார்
55
   
 
69பூமலி சேக்கை மேல் பொலிந்து, நூல் படி,
பா மலி பதத்து அறம் பழிச்சி, பங்கயத்
தேம்மலி சேக்கை மேல் சிறந்த ஓதிமம்
நா மலி இனிது இசை நாணப் பாடுவார்.
56
   
 
70ஆம்பல் வாய் நறும் விரை அவிழ்த்து விள்ளிய
ஆம்பல் வாய் மலர்ந்து, அன அணங்கிணார், இனிது
ஆம்பல் வாய்க் குரலுடன் ஆய்ந்து, வெண் மதி
ஆம்பல் வாய் திருந்து உணர்வு அறைந்து பாடுவார்:
57
   
மண்ணும்,விண்ணும்
மாதர்பாடிய பாடல்
 
71விண் புதைத்த மலர்ப் பணை வாய் விரை குளித்த தேன் ஒழுகி,
கண் புதைக்கும் இருள் பொழில் கொள்  களி கூர்ந்த நாடு இதுவே;
களி கூர்ந்த நாடு இதுவேல், கண் கடந்த கவின் நாடி,
நளி கூர்ந்த நயன் நல்கும்  வான் உலகம் நாடேமோ?
58
   
 
72நிழல் மூழ்கும் பூம் பொழில் கண்
  நிறம் மது கான் இன்பம் அலால்,
குழல் மூழ்கும் இசை துவைப்ப,
  கோடு அருஞ் சீர் நாடு இதுவே:
கோடு அருஞ் சீர் நாடு இதுவேல்,
  கோது எனக் கோள் புறத்து இமைப்ப,
வாடு அருஞ் சீர் மல்கி எழும்
  வான் உலகம் நாடேமோ?
59
   
 
73பட நாகம் தோல் உரித்த பான்மையின், கல் ஊடு உரிஞ்சி,
தட நாகம் தூங்கு அருவி  தாவு அழகு ஆர் நாடு இதுவே:
தாவு அழகு ஆர் நாடு இதுவேல், தரங்கம் இலாது அருட் பவ்வம்
வாவு அழகு ஆர் திரு நிலைத்த வான் உலகம் நாடேமோ?
60
   
 
74பகை தீர்ந்து, சண்பகத்தின் தண் நிழற் கீழ்ப் பள்ளி வர,
மிகை தீர்ந்து, புறத்து எவர்க்கும் வேட்கை செயும் நாடு இதுவே:
வேட்கை செயும் நாடு இதுவேல் விரி காலத்து இமிழ் குன்றா
வாட்கை செயும் நிலைமை உள வான் உலகம் நாடேமோ?
61
   
 
75நக்கு அளவாய் நயன் கொண்ட நாட்டு நலம் நாடியகால்,
மக்கள் அவா மேல் நலம் கொள் வான் உலகம் நாடேமோ?
வான் உலகம் நாடேமேல், மன் உயிர் மன் நயன் வெஃக,
கான் உலகம் காட்டும் நலம் அக் கவலை மாற்றுவதோ?
62
   
 
76பண் கனிந்த நரம்பு உளரிப் பாண் இசைகள் பாடல் எனா
கண் கனிந்த கவின் நல்லார் களி கூர்ந்து, இன்னதும் பலவும்
தண் கனிந்த தேன் இசையால் சாற்றலொடு, பல நாளும்
விண் கனிந்த இன்பு உண்பார் விழைவு ஓங்க; அந் நாடே.
63
   
செல்வமயக்கம்
மகிழ்ச்சிஒலி
 
77தேய முழங்கின ஆலைகள்,
  பண்டிகள் தேய முழங்கின; பா
ஆய முழங்கின ஆர் புகழ். சங்குகள்
  ஆயம் முழங்கின. மேல்
பாய முழங்கின மேடகம். இன்
  புனல் பாய முழங்கின. நீர்
தோய முழங்கின மேதிகள். தெண்திரை
  தோய முழங்கு இழையார்.
64
   
சோலை முதலியன சொரிந்த செல்வம்
 
78கான் திரள் சிந்திய சோலை.
  இபம் செறி கான் மலர் சிந்திய, தீம்
தேன் திரள் சிந்திய பூ,
  தரளம் செறி தீம் புனல் சிந்திய. வான்
மீன் திரள் சிந்திய மான
  வளம் செறி வேய் மணி சிந்திய.
பால் ஆன் திரள் சிந்திய, சீர்
  எவையும் செறி ஆர் பொழில் சிந்தியதே.
65
   
தேன்வளம்
 
79ஆலையின் வாய் உள தேன்,
  அகலும் தரு ஆர் மலர் வாய் உள தேன்,
சோலையின் வாய் உள தேனொடு,
  தூறிய தூய் கனி வாய் உள தேன்,
மாலையின் வாய் உள தேன், அளி வந்த
  இறால் அதின் வாய் உள தேன்,
வேலியின் வாய் உள தேறிய செந்நெல்
  விளைக்குவ பாயினவே.
66
   
பொய்கை வானக் கண்ணாடி
 
80 பானு அழகே நனி காட்டிய பங்கய நானம் முயங்கு அழகே.
மீன் அழகே நனி காட்டிய விண்டு அவிர் வீ இனம் மண்டு அழகே,
தேன் அழகே நனி காட்டிய தெள் துளி மாரி செறிந்த அழகே
வான் அழகே நனி காட்டும் பளிங்கு என வாவி வழங்கு அழகே.
67
   
சிறந்தபோட்டி
 
81காரொடு நேர் பொருதும் பொறையே;
  பொழி காரொடு கை பொருதும்.
தாரொடு நேர் பொருதும் கலனே;
  தட மாரொடு தார் பொருதும்.
பாரொடு நேர் பொருதும் சகடே. நளிர்
  பாலொடு பா பொருதும்.
சீரொடு நேர் பொருதும் பொழிலே;
  செழு வீடொடு சீர் பொருதும்.
68
   
அன்னத்தின் மயக்கம்
 
82காலை ஒளிர்ந்த உளி, மொட்டு
  இதழ் விண்ட கடிக் கமலம் தவிசின்
சூலை உளைந்து ஒளிர் முத்து
  சொரிந்த வளைக்குலம் நின்று இரிய,
மாலை உறைந்த உளி பொற்சிறை வந்து,
  அது தன் கரு என்று அடைகாத்து,
ஆலை உளைந்து இழி இக்கு இடும்
  இன்பம் அவித்து இசை பாடினவே.
69
   
எங்கும் ஆண்டவன்துதி
 
83கா இடை மா தவர், கந்தம் மலிந்தன
  கஞ்சம் மிடைந்த அனமே,
பூஇடை தேன் அளி, கொம்பு மலிந்து
  புகன்ற மடங் கிளிகள்,
நா இடை பா இனம், நங்கையின்
  நன் கையில் நம்பும் நரம்பு உள யாழ்,
யா இடை ஆயினும், என்றும்
  அரும் தயை எந்தையை வாழ்த்தினவே.
70
   
அறத்தின் சிறப்பு
 
84‘அறத்தில் துறும் புகழ் ஒள் புகழ் என்றும்;
  அடும் பகை நின்றனர் கொல்
திறத்தில் துறும் புகழ் வஞ்சனை; என்றும்
  தெளிந்த மனம் சிதைய
மறத்தில் துறும் களி துன்பு என, வந்து
  மயங்கி வழங்கும் எலாம்
புறத்தில் துறும் களி, பொன்று இல உண்டு
  அன பொன் பொழில் பொங்கினவே.
71
   
 
85எல்லை நிகழ்த்திய எல் என,
  எல்லை இல் எந்தை நிகழ்த்திய நூல்,
வில்லை நிகழ்த்திய மெய் மறையின்
  விதி, உண்மை நிகழ்த்திய தூய்
ஒல்லை நிகழ்த்திய ஒள் அறம்
  ஒன்றிய உள்ளம் நிகழ்த்திய சீர்,
சொல்லை நிகழ்த்திய நுண்மை
  அறிந்தவர் சொல்லி நிகழ்த்துவரோ?
72
   
 
86ஆற்ற வருந்து இல நல் அறம்
  அல்லதும் அல்லவை இல்லை எனா,
மாற்ற அருந் துயர் இல்லதும் உள் மயல்
  மல்கலும் இல்லை எனா,
ஏற்ற அருந் துதி ஒல் ஒலி அல்லதும்
  எள் அதும் இல்லை எனாச்
சாற்ற வருந்தினும், ஒல்லும் அருந்
  தமிழும் சமம் அல்லதுவே.
73
   
சூதேய நாட்டின் புகழ்
 
87பூமலிந்த பொருத்த அரும் பொற்பு எலாம்,
பூமலிந்து, பொருந்திய பொற்பினால்,
நாம் மலிந்த நசைக்கு உயர் நாடினும்,
நா மலிந்த இசைக்கு உயர் நாடு அதே.
74
   
 
88வண்டு உரைத்து மலர்ந்த அலர்ப் புண் அலால்,
வண்டு உரைத்து மலர்ந்த அகப் புண் இலால்,
வண்டு உரைத்து மயக்கு இல நாடு, அலை
வண்டு உரைத்து மயக்கு உறும் நாடு அதே.
75
   
 
89மாலை மாறி வயங்கிய மா மதி
மாலை மாறி வயங்கிய மாதர்கள்
மாலை மாறிய கற்பு உடை மார்பு உறை
மாலை மாறிய கற்பு உடை மாண்பர் அரோ.
76
   
 
90மாசு இகற்கு வழங்கிய அம்பு இலார்,
மாசு இகற்கு வழங்கிய அன்பினார்
தேசிகத்து இணை சீர் வரைத் தோளினார்,
தேசிகத்து இணை சீர் வரைத்து ஓதும் ஆர்?
77
   
 
91அல்லது இல்லை அருந் தவம் ஆய். திரு
அல்லது இல்லை அருந்த அளித்தலால்.
புல்லது இல்லை புனைந்த அற மாட்சியால்.
புல்லது இல்லை புனைந்து அன வாழ்க்கையால்.
78
   
 
92இருள் அகன்று அவிர் எல் வினை போல், எலா
இருள் அகன்று அவிர் இல் வினையோர் தமுள்,
அருள் அகன்ற கைப்பு ஆரும் இலாமையால்,
அருள் அகன்று அகைப்பார் அலது இல்லையே.
79
   
 
93வேயும் முத்தம் மிடைந்தன. வேலி வாய்
வேயும் முத்தம் மிடைந்தன. வேலை வாய்
வாயும் முத்தம் மலிந்தன. தீம் கழை
வாயும் முத்தம் மலிந்தன வாய் எலாம்.
80
   
 
94செல்லின் மாரி திளைத்து என, வள்ளியோர்
செல்லின், மாரி திளைத்தன வண்மையே.
சொல்லின் மாரி சொரிந்து என, ஏது இலாச்
சொல்லின் மாரி சொரிந்தனர் வேதியார்.
81
   
 
95வாவு இபம் கயம் மல்கிய நாள் மலர்,
வாவி பங்கயம் மல்கிய மாண்பு என,
பாவி அங்கு இயலாப் பயன் ஆகையால்,
பா இயங்கிய யா பயன் சால்பு அரோ?
82
   
 
96பார் அணிந்த அணிக்கலப் பான்மைபோல்
சீர் அணிந்த செழுந் தட நாட்டு இடை,
மார் அணிந்து அணி மா மணி மானிய
ஏர் அணிந்த நகர்க்கு இயல் ஏத்துவாம்.
83