வளன் சனித்த படலம்
 
தாவீது மன்னன்சிறப்பு
 
167அன்ன மா திரு நகர் அகத்து, உடற்கு உயிர்
என்ன, மா தாவிதன் இனிதில் வீற்றிருந்து,
ஒன்னலார் வெரு உற, உவந்து பாவலர்
சொன்ன பா நிகரும் மேல் துளங்கினான் அரோ.
1
   
 
168அருளொடு வீங்கிய அகத்தினான்; துளி
மருளொடு வீங்கிய மழைக் கையான்; மலர்ச்
சுருளொடு வீங்கிய தொடையல் மார்பினான்;
பொருளொடு வீங்கிய பொறைப் புயத்தினான்.
2
   
 
169ஒளி தவழ் அசனியை உமிழ்ந்த வில்லினான்;
அளி தவழ் நிழல் செயும் அருட் குடையினான்;
வெளி தவழ் நவ மணி விழுங்கும் தேரினான்;
களி தவழ் மதம் பொழி களிற்றின் ஆண்மையான்.
3
   
 
170மொய் முனர்ப் பின்று இலா முரண் கொடு ஏறு எனா,
மெய் முனர்ப் பொய் என வெருவு ஒன்னார் இவன்
கை முனர் நிற்கு இலாக் கலங்கிப் போற்றும், போர்
செய் முனர் செயம் செயும் சிங்க வாகையான்.
4
   
 
171வேல் செயும் போரினால் வெலப்படான்; தனைச்
சால் செயும் தவத்தினால் வென்ற தன்மையான்;
சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று, ஒளி
மேல் செயும் வானவர் விழைந்த பான்மையான்.
5
   
 
172நீதி நல் முறை எலாம் நிறைந்த நீள் தவம்,
ஆதி தன் மறை இவை அனைத்தும் மேல் படர்
கோது இல் நன் உதவி செய் கொழுகொம்பு ஆகி, வான்
ஏது இல் நல் முறை இவண் இசைந்த மாட்சியான்.
6
   
 
173கோல் நலம் கோடு இலா நிறுவிக் கூர்த்தலால்,
நூல் நலம் பொருள் நலம் அறத்தின் நுண் நலம்
தேன் நலம் இனிதினில் திளைந்து, நாடு எலாம்
மீன் நலம் பயின்ற வான் வியப்ப வாழ்ந்ததே.
7
   
 
174பகை செய்வார்க்கு இடி என, படிந்து போற்றிய
தகை செய்வார்க்கு அமுது என நாமத் தன்மையான்,
நகை செய்வார்க்கு, இளவலாய், நடத்தும் வேல் இலான்,
மிகை செய்வான்; ஆண்மையை விளம்பல் நன்று அரோ.
8
   
தாவீதின்இளமைப்பருவம்
சவூல்அரசனைப் பீலித்தேயர்எதிர்த்தல்
 
175மறை வழங்கிய வளம் கொள் நாட்டு இடை சவூல் ஆண்ட
முறை வழங்கிய கால், மறை பகைத்தனர், முகில் நின்று
உறை வழங்கிய ஒப்பு எனச் சர மழை வழங்கி,
பொறை வழங்கிய பிலித்தையர், போர் செய எதிர்த்தார்.
9
   
பீலித்தேயருள் இராக்கதன்
 
176வேலியால் கது விடாத் திரு நகர் எலாம் நடுங்க,
மாலியால் கதிர் வகுத்த வாள் ஏந்தினர் நாப்பண்,
ஆலியால் கரிந்து அகல் முகில் உருக்கொடு வேய்ந்த
கோலியாற்று எனும் கொடியது ஓர் இராக்கதன் எதிர்த்தான்.
10
   
கோலியாற்றின்தோற்றம்
 
177துளி சிறைச் செயும் முகில் புகும் இரு மலை சுமந்த
ஒளி சிறைச் செயும் ஒரு கரும் பருவதம் என்னா
வெளி சிறைச் செயும் வியன் இரு புயத்து மேல் சிரமே,
களி சிறைச் செயும் கதம் கொடு வெரு உறத் தோன்றும்.
11
   
 
178நீண்ட வாள் புடை நெருங்கியே, படர் கரு முகில்போல்,
மாண்ட தோள் வியன் வட்டமே பொறுத்து, வெஞ் சுடரைத்
தூண்டல் ஆம் எனச் சுளித்த நீள் ஈட்டி கை தாங்கி,
கீண்டு அளாவு அழல் விழிவழி கிளர்ப்ப விட்டு எதிர்ந்தான்.
12
   
கோலியாற்றின்கோபவுரை
 
179பெருக்கு வீங்கிய பெரும் புனல் அலை சுருட்டு அன்ன,
எருக்கு வீங்கிய இழிவு உகு நெஞ்சு இடை அடங்காச்
செருக்கு வீங்கிய இராக்கதன் எரி எழச் சினந்து,
தருக்கு வீங்கிய சல உரை இடி என இடிப்பான்.
13
   
 
180“கூர்த்த போர் செயக் கூடினர்க்கு
  ஒருவன் வந்து எய்தி,
சீர்த்த நான் அவன் சிறந்த
  போர் தனித் தனித் தாக்க,
தோர்த்த பாங்கினர் தொழும்பர்
  என்று ஆகுவர்“, என்னா,
ஆர்த்த ஓகையான் நகைத்து, இகழ்வு
  அறைந்து அறைந்து அழைப்பான்.
14
   
கண்டவர்மருட்சி
 
181பெரிய குன்றமோ பேய் அதோ பூதமோ யாதோ
உரியது ஒன்று இலா உருவினைக் கண்டு உளி வெருவி,
கரிய விண் இடி கதத்த மின் கொடு விடுத்து அன்ன
அரிய கோலியாற்று அறைந்த சொல் கேட்டனர் மருண்டார்.
15
   
கோலியாற்றின்அகந்தை நகைப்பு
 
182நல் நெடும் படை நடுக்கு உறீஇ வெருவிய தன்மை
கல் நெடுங் குவடு ஒத்தனன் செருக்கு எழக் கடுத்து,
பல் நெடும் பகல் பரமனைப் பகைப்பவும், இகழ்ந்த
சொல் நெடும் பகை தொடர்ந்தனன் எவரையும் நகைப்பான்.
16
   
சவூல்அரசன்அறிக்கை
 
183தாங்குவார் இலா, சாற்றிய
  உரைகள் கேட்டு எவரும்
நீங்குவார் என, நிருபனும்
  அயரு தன் நெஞ்சிற்கு
ஏங்குவான்: “எவன் எதிர்ந்த
  அவ் அரக்கனை வென்றால்,
ஆங்கு நான் அவற்கு என் மகள்
  அளிக்குவேன்“ என்பான்.
17
   
வீர இளைஞன் தாவீதன்
 
184இன்னவாய்ப் பகல் நாற்பதும் இரிந்த பின், அண்ணர்
முன்னர் மூவரே முரண்செயப் போயினர், அவரைத்
துன்ன ஆசையால் தொடர்ந்து இள தாவிதன் எய்தி,
அன்ன யாவையும் அஞ்சினர் அறைதலும் கேட்டான்.
18
   
தாவீதன் இரசவேலரிடம்வீரமொழி விளம்பல்
 
185கேட்ட வாசகம் கிளர் திற நெஞ்சு இடத்து எரியை
ஈட்டல் ஆம் என எழுந்து, “உளம் நினைந்தவை ஆக்கிக்
காட்ட, வாய்மையின் கடந்த, வல் கடவுளை நகைப்ப
வேட்டலால், விளி விழுங்கிய கயவன் ஆர்?“என்றான்.
19
   
 
186“கை வயத்தினால், கருத்து இடத்து உடலின் ஊங்கு ஓங்கும்
பொய் வயத்தினான் புகைந்த சொற்கு அஞ்சுவது என்னோ?
மெய் வயத்தினால் விழை செயம் ஆவதோ? கடவுள்
செய் வயத்தினால், சிறுவன் நான் வெல்லுவேன்“என்றான்.
20
   
சவூல் அரசன்வினாவும்தாவீதன்விடையும்
 
187என்றது அண்ணல் கேட்டு,
  “இவன்தனைக் கொணர்மின்“என்று இசைப்ப,
சென்ற அன்ன நல்
  சேடனை நோக்கலும், “நீயோ
பொன்ற உன்னினாய்? பொருப்பினைப்
  பெயர்த்து எறிந்து, உவமை
வென்ற திண்மையான் வெகுளி
  முன் நீய் எவன்!“ என்றான்.
21
   
 
188ஏந்தல் ஈர் அடி இறைஞ்சிய இளவலும் அறைவான்;
“காய்ந்தது ஓர் பகை கடுத்த தன் பவம் செயின், மீட்டு
வேய்ந்தது ஓர் படை வேண்டுமோ? கடவுளைப் பகைத்து,
வாய்ந்த ஆண்மையை மறுத்தனை எவன் வெலான், அய்யா
22
   
 
189“திறம் கடுத்த கொல் சிங்கமும் உளியமும் பாய்ந்து,
மறம் கடுத்து அதிர் வல்லியத்து இனங்களும் எதிர்ந்து,
கறங்கு அடுத்த கால், கழுத்தினை முருக்கி நான் கொன்றேன்,
அறம் கெடுத்தவன் அவற்றினும் வலியனோ?“என்றான்.
23
   
 
190அரிய ஆண்மையை அதிசயித்து அரசன், “நன்று“என்னா,
விரி அளாவு ஒளி வேலொடு தனது பல் கருவி
உரிய போர் செய ஒருங்கு தந்தனன். “அவற்றொடு“தான்,
“திரிய வாய் முறை தெரிகிலேன்“் என மறுத்து அகன்றான்.
24
   
தாவீதன்போருக்குப்புறப்படுதல்
 
191தெரிந்த வாய்ந்த ஐம் சிலையொடு கவண் எடுத்து, எவரும்
இரிந்த பாலனை நோக்கி உள் அதிசயித்து இரங்க,
விரிந்த ஆசையால் வேதியர் ஆசியைக் கூற,
பிரிந்த கால் ஒலி பெருக ஆங்கு அனைவரும் ஆர்த்தார்.
25
   
கோலியாற்றின்கோபமொழி
 
192ஆர்த்த ஓதை கேட்டு,
  அரக்கன்நின்று அமர்க்கு எதிர் வருகப்
பார்த்த பாலனைப் பழித்து
  எழுந்து, யாவரும் அஞ்சக்
கூர்த்த வேலொடு குறுக வந்து,
  அகல் கரு முகிலின்
பேர்த்த கோடை நாள் பேர்
  இடி என உரை செய்தான்:
26
   
 
193“நீ அடா எதிர் நிற்பதோ? மதம் பொழி கரி மேல்
நாய், அடா, வினை நடத்துமோ? கதம் கொடு நானே
வாய், அடா, பிளந்து உயிர்ப்பு இட மறுகி நீ நுண் தூள்,
ஆய், அடா, உலகு அப் புறத்து ஏகுவாய்!“ என்றான்.
27
   
தாவீதன் மறுமொழி
 
194“வெல் வை வேல் செயும் மிடல்
  அது உன் மிடல், அடா! நானோ
எல்வை ஆதரவு இயற்று
  எதிர் இலாத் திறக் கடவுள்
வல் கையோடு உனை மாய்த்து,
  உடல் புட்கு இரை ஆக
ஒல் செய்வேன்“ எனா,
  உடை கவண் சுழற்றினன் இளையோன்.
28
   
கோலியாற்றின் வீழ்ச்சி
 
195கல்லை ஏற்றலும், கவணினைச் சுழற்றலும், அக் கல்
ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர்; இடிக்கும்
செல்லை ஒத்து அன்ன சிலை நுதல் பாய்தலும், அன்னான்
எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும் கண்டார்.
29
   
இறைவனைப் பழித்த இராக்கதன் தலை
 
196கடை யுகத்தினில் கரு முகில்
  உருமொடு விழும் போல்,
படை முகத்தினில் பார் பதைத்து
  அஞ்ச வீழ்ந்தனன் தன்
புடை அகத்தினில் புணர்ந்த
  வாள் உருவி, “என் தெய்வம்
உடை உரத்தினை உணர்மின்“
  என்று இருஞ் சிரம் கொய்தான்.
30
   
 
197கூன் நெடும் பிறை குழைந்த வாய் நிரைநிரை தோன்ற,
ஊன் நெடுந்திரை ஒழுக, ஆங்கு அனைவரும் கூச,
நீல் நெடும் பொறை நிகர் தலை தூக்கினான், ஒன்னார்
மால் நெடும் படை மருண்டு உளைந்து உளம் முறிந்து ஓட.
31
   
தாவிதன் அரசனாதல்
 
198கார் முகத்து அசனி கூசக்
  கடுத்த அவ் அரக்கன் வென்ற
சீர் முகத்து இளவல், பின்னர்
  திறத்த தன் நாம வேலால்
போர் முகத்து எதிர் ஒன்று இல்லான்,
  பொழி மறை பழித்த யாரும்
பார் முகத்து அதற்கு எஞ்ஞான்றும்
  பரிந்திட வகை செய்தானே.
32
   
 
199கொய்த வாள் முடி திரண்ட
  குப்பைகள் ஏறி, வெய்யில்
செய்த வாள் முடியைச் சூடி,
  சிறந்த ஆசனத்தில் ஓங்கி,
பெய்த வான் ஒளியோடு ஆய்ந்த
  பெருந் தயை பிலிற்றும் செங்கோல்
எய்த வான் இறையோன் ஆண்மை
  எய்தியே, அரசன் ஆனான்.
33
   
 
200நூல் நகத் துளங்கு, கேள்வி
  நுண் அறிவாளர்க்கு ஒவ்வா,
வான் அகத்து ஒதுங்கி வாழும்
  வரும் பொருள் காட்டும் காட்சி,
கான் அகத்து ஒதுங்கி வைகும்
  கடித் தவத்தோடும் இன்ன
கோன் அகத்து இலங்கி, அங்கண்
  குடி என வதிந்ததாம் ஆல்.
34
   
தாவிதனின் தவச்சிறப்பு
 
201சூழ்ந்த பொன் முடியும் கோலும்
  துறந்து போய் அரிய கானில்
வாழ்ந்த ஒண் தவம் செய் மன்னர்
  வழங்கினும், அதனைக் கூட்டி
ஆழ்ந்த பல் மணியின் வீங்கும்
  ஆசனத்து இருக்கச் சேர்த்தல்
தாழ்ந்த பண்பு ஒழித்த இன்ன
  தரும கோன் அரிதின் செய்தான்.
35
   
தாவிதனின்குணச்சிறப்பு
 
202வேலொடு மாற்றார் வெள்ளம்
  வென்று வென்று அடக்கி, தன்னை
நூலொடு வெல்ல ஐந்து
  நுண் புலன் அடக்கிக் காத்து,
கோலொடு வழாமை நீதிக்
  கொழுந்து சேர் கொழுகொம்பு ஆனான்,
சூலொடு வழங்கும் மாரித்
  துளி பழித்து அருளும் கையான்.
36
   
 
203மன் அரும் தயையால் பாரில்
  வழங்கிய கீர்த்தி அல்லால்,
இன் அரும் குணங்கள் தம்மால்
  இறையவற்கு உகந்த கோமான்,
முன் அரும் தவத்தோர் கொண்ட
  முறை தவிர் வரங்கள் எய்தி,
துன் அரும் உயர் வீடு உள்ளோர்
  துணை எனப் புவியில் வாழ்ந்தான்.
37
   
தாவிதனுக்கு இறைவன்வரம்அருளுதல்
 
204ஆயினான் நடந்த தன்மை
  ஆண்டகை உவப்பில் ஓர் நாள்
“வீயினால் நிகர்ந்த எச்சம்
  இடை முறை பலவும் போய் ஓர்
சேயினால் நயப்பச் செய்வேன்,
  சிறந்த மூ உலகில் அன்னான்
வாயினால் நவிலாக் கோன்மை
  வரம் பெற அளிப்பேன்“ என்றான்.
38
   
தாவீதனது மரபின் தோன்றல்
 
205தந்த இவ் வரம் இன்னான்
  தன் சந்ததி முறையில் சேய் ஆய்
வந்த தற்பரனால் ஆய
  வளப்பம் என்றாலும், என்ற
இந்த நல் முறையால், மைந்தன்
  இயல்பொடு தேவன் என்பான்
அந்தரம் முதலாய் யாண்டும்
  ஆள்வதும் அரிய பாலோ?
39
   
 
206கோன்மையால் உயர்ந்த தாவீ(து)
  கோத்திரத்து உதிக்கும் தெய்வ
மேன்மையால் ஒருவன் அன்றி,
  விபுலையில் பிறக்கும் மாக்கட்
பான்மையால் உயிர்த்த மைந்தன்
  பாரொடு வானும் ஆள,
நான்மையால் வழுவாச் செங்கோல்
  நல்க உள்ளினன் ஆல் நாதன்.
40
   
 
207உள்ளினது எல்லாம் உள்ளும் உறுதியால் ஆக்க வல்லோன்,
எள்ளினது எல்லாம் நீக்கும் இயல்பொடு, தாவிதன் தன்
வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ உலகம் ஆள
நள்ளின வளம் கொள் சூசை நயத்தொடு தெரிந்திட்டானே.
41
   
தாவீதன்மரபின் தோன்றல்தொழிலாளி சூசை
 
208ஏற்றிய முறையோடு, எந்தை, இயன்ற தன் வலிமை காட்டப்
போற்றிய வரம் கொடு எங்கும் பொருநனாய்த் தெரிந்த சூசை,
சாற்றிய கோத்திரத்தின் தலைமுறை வழுவாது ஏனும்,
மாற்றிய திரு ஒன்று இன்றி வறுமையான் பிறக்கச் செய்தான்.
42
   
 
209பொய்ப் படும் உலக வாழ்வின்
  பொருட்டு இலா மிடிமையோடு,
கைப்படும் உழைப்பில் உண்டி
  காண வந்து உதித்த இல்லான்,
மெய்ப்படும் மறத்தின் ஆண்மை
  விளங்கிய முறையின், பின்னர்
ஐப் படும் விசும்பொடு எங்கும்
  அரசனாய் வணங்கச் செய்தான்.
43
   
சூசையின்பெற்றோர்
 
210நூல் நிலம் காட்சியால் நுனித்த கால் உணர்
மீன் நிலம் கடந்து எலாம் ஆளும் வேந்து தான்
தேனில் அம் கருணையால் தெளிந்த எல்வையில்,
கான் நிலம் தவத்தினால் கருப்பம் ஆயதே.
44
   
 
211கொலை முகந்து அழன்ற வேல் கொற்றத் தாவிதன்
தலை முகந்து ஒழுகிய குலம் சகோபு அவன்
சிலை முகந்து அவிர் நுதல் தேவி நீப்பி இன்பு
அலை முகந்து உவந்து சூல் அணிந்து உள் ஓங்கினாள்.
45
   
நீப்பி தரித்த சூல்
 
212மணி பழித்த அருங் கவின் மங்கை உள் உவந்து,
அணி பழித்து அணிந்த நல் கருப்பம் ஆய கால்,
பிணி பழித்து உறு நயம் பெருகி மேல் எழீஇ,
பணி பழித்து ஒளி முகம் பொறித்த பான்மையே.
46
   
 
213தாரொடு சனித்த தேன் தன்மையோ? வளை
ஏரொடு கொண்ட முத்து இலங்கும் தன்மையோ,
நீரொடும் ஐந்து தம் பகையை நீத்து, ஒரு
சீரொடு, வேற்று இல சிறந்த சூல் அதே
47
   
 
214அறை வளர் மனையினுள் அரசன் புக்கு என,
இறை வளர் அன்பின் ஓர் உயிர் இயற்றி, வெண்
பிறை வளர் நலமென வளர்ந்த பீள் உள
சிறை வளர் உடலினுள் செலுத்தினான் அரோ.
48
   
தாயின்கருப்பத்திலேயே பழவினையை நீக்குதல்
 
215வாய் வழி பரவிய நஞ்சின் வண்ணமே,
காய் வழி ஆதன் முன் கனிந்து அருந்திய
தீய் வழி, கரு வழி சேரும் தொல் செயிர்,
ஓய் வழி, பொறாது, இறை ஒழிய முன்னினான்.
49
   
 
216புரப்ப ஓர் பொது முறை பொறாத தன்மையால்,
கருப்பம் ஓர் எழு மதி கடக்கும் முன் வினை
பரிப்ப ஓர் சிறப்பு அருட் பயத்தின் சூல் செயிர்
விருப்பமோடு இறையவன் விலக்கினான் அரோ.
50
   
தாயின்நிகரிலா மகிழ்ச்சி
 
217தீயவை விலக்கிய சிறப்பின், தேவு அருள்
தூயவை பதி வரத் தொகையின் சூல் இடத்து
ஆயவை அறிந்திலள், அளவுஇல் உள் மகிழ்
தாய் அவள் வியப்பு உறீஇ, தளர்வு அற்று ஓங்கினாள்.
51
   
 
218தேன் முகம் புதைத்த சூல் செறித்த சீர் கொடு
கான் முகம் புதைத்து அவிழ் கமலப் பூ என,
சூல் முகம் புதைத்த சீர்த் தொகை புறப்பட,
தான் முகம் புதைத்து ஒளி தயங்கும் தாய் அரோ.
52
   
சூசையின்பிறப்பு
 
219சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின்
  பைம் பொன் சூல் முற்றி,
அல் ஆர் இருள் கெட மீ முளைத்த
  திங்கள் அணி மணி போல்
எல் ஆர் முகத்து இலங்கிப் பிறந்த
  தோன்றல் எழில் கண்டு,
பல்லார் உடை மம்மர் கெட,
  தாய் இன்பப் பயன் கொண்டாள்.
53
   
பக்கத்திலிருந்தவர் வாழ்த்துதல்
 
220கண்டார் எவரும் உளத்து
  உவப்ப மேல் ஓர் கனி இன்பம்
கொண்டார்; அருள் பொறித்த
  முகத்தின் மாமை கொழித்த கதிர்
உண்டார்; தெளிவு உண்டார்;
  “கடவுள் தன் தாட்கு உவகை செயும்
தண் தார் இவன் ஆவான்,“
  என்ன வாழ்த்திச் சயம் சொன்னார்.
54
   
தாயின்வேண்டல்
 
221மாசை மிக்க நிற மணியின் சாயல் மகன் நோக்கி,
ஆசை மிக்க கனி ஈன்றாள், “கற்றோர் அருந் தொடைப்பா
ஓசை மிக்க அறத் தொகையின் பீடத்து உயர் வளர்க,
சூசை!“ என்று அவனை ஏற்றி, எந்தை தொழுகின்றாள்.
55
   
 
222எல்லின் கதிர் திரட்டி, திலகம்
  திங்கட்கு இட்டது போல்,
வில்லின் முகத்து இன் தாய் மகனை
  ஏந்தி, விழைவு உற்ற
சொல்லின் முகத்து இறையோன் தாளைத்
  தாழ்ந்து, “இத் தோன்றல்“ அறத்து
அல்லின் வேந்தன் என வளர்தற்கு
  ஆசி அருள்(க), என்றாள்.
56
   
இவனே என்தேம்பாஅணி
 
223வீடா வான் நலம் செய் நோக்கு நோக்கி விண் இறையோன்
கோடா வரத்து ஆசி செய் வான் மேல் ஓர் குரல் தோன்றி,
“ஆடா நிலை அறத்து என் மார்பில் தேம்பா அணி ஆவான்
வாடா அருள் மகன்,“ என்று அம் பூமாரி வழங்கிற்றே.
57
   
குருக்கள்வாழ்த்து
 
224மைந்நூற்று எனக் கரும் பூங் குழலாள்
  வாய்ந்த மகன் நலம் கேட்டு,
எந் நூல் திறத்தினும் மேல் அடியின்
  வீழ்ச்சி இனிது இயற்றி,
மெய்ந்நூல் திறத்த மறை முறையின்
  விள்ளா வினை எல்லாம்
கைந்நூல் திறத்து அறவோர் இயற்றி
  ஆசி கனிந்து உரைத்தார்.
58
   
உறவினர்மகிழ்ச்சி
 
225கூம்பா அணி மகற்குக்
  கணிதம் மிக்கோர் கூறு புகழ்
ஓம்பா அணி ஆக அனைத்தும்
  நீக்கி, “ஒருங்கு உடன் ஓர்
சாம்பா அணி ஆக இரங்கி
  எந்தை தான் புகழ்ந்த
தேம்பாவணியே!“ என்று,
  அணி மிக்கு அம் பூண் சேர்த்தினரே.
59
   
 
226செய் வாய் வான் உடு சூழ்
  குழவித் திங்கட் சீர் பொருவ,
பெய் வாய்க் கிண்கிணியும் சிலம்பும்
  ஆர்ப்பப் பெய்து, சுடர்
வைவாய் மணி ஆழி இட்டு,
  பைம் பூ மலர் கிடத்தி,
“மொய் வாய்க் கடல் உலகின்
  திலதம்,“ என்பார் முகம் கண்டார்.
60
   
 
227“வான் மேல் வைத்த சுடர்
  கிடக்கும் வண்ண வடிவு,“ என்பார்.
“கான் மேல் வைத்த தவம் இனி நன்று
  இங்கண் காட்டும்,“ என்பார்.
“நூல் மேல் வைத்த மறை விளக்கும்
  நுண் மாண் சுடர்,“ என்பார்.
நால் மேல் வைத்த புகழ் விள்ளார்;
  கொண்ட நயம் விள்ளார்.
61