பால மாட்சிப் படலம்
 
சூசையின்இளமைப்பருவம்
சூசைக்கு விண்ணவர்நன்மையிருத்தல்
 
228வான் அடுத்த அரசு அடைந்து வாழ, அக்
கோன் அடுத்த நல் குணத்த சீர் எலாம்
மீன் அடுத்த வீடு உடைய விண்ணவர்
தேன் அடுத்த அலர் சிறுவற்கு ஊட்டினார்.
1
   
 
229ஊட்டினார் அருள்; முடியின் ஒப்பு எனச்
சூட்டினார் அறம்; சுடரும் பூண் எனப்
பூட்டினார் தவம்; பொற் செங்கோல் எனக்
காட்டினார் அறிவு அமைந்த காட்சியே.
2
   
மூன்று வயதில்மூதறிவு
 
230இளைய வான் பிறை என வளர்ந்து, உளம்
வளைய மாசு உறா, வயது மூன்று உளான்,
உளைய நூலவர் உற்ற காட்சியின்
திளைய வான் அறிவு எய்திச் சீர்த்தனன்.
3
   
 
231அறிவு உற்று ஆகையின், அலர்ச் செங்கை எழீஇ,
செறிவு உற்று ஆசையின் தெய்வம் ஏற்றி, வில்
நெறிவு உற்று ஆர் நுதல் நிலத்தில் தாழ்ந்தனன்,
வறிது உற்று ஆம் உடற்கு உயர்ந்த மாட்சியோன்.
4
   
 
232இரவி காண் மரை இகல வாய் மலர்ந்து,
அருவி மான் துதி அறைந்து, கும்பிட
மருவி ஓங்கு செங் கரங்கள் மாலையில்
பருதி போய்க் குவி பதுமம் மானுமே.
5
   
சூசை இயற்கையை ஊன்றி நோக்கி எண்ணத்தில்உயர்தல்
 
233தூநிலாவு செஞ் சுடரும், மீன்களும்,
வான் உலாவு உடு நடு வழங்கிய
பால் நிலாவையும் பார்த்து, நாதனைத்
தேன் உலாவு உரை செப்பி வாழ்த்துவான்.
6
   
 
234முலைகள் ஆம் என மலை, முடிக்கு மேல்
அலை கொள் பால் என அருவி, விஞ்சி வெண்
கலைகள் ஆம் எனக் கடலில் சிந்திய
நிலை கொள் மாது என நிலம் கண்டு, ஓங்குவான்.
7
   
 
235சோலை வாய் இறால் துளித்த தேறலும்,
மாலை வாய் மலர் வழிந்த தேறலும்,
ஆலை வாய்க் கழை அளித்த தேறலும்,
நூலை ஆய்ந்து என நுதலி மூழ்குவான்.
8
   
 
236நிழலில் மேதிகள், நீரில் சங்குகள்,
பொழிலில் தோகைகள், பூவில் வண்டுகள்,
கழனி ஓதிமம் துயிலக் கண்டு வாழ்
குழவி வாய் நலம் துயில் கொள்வு ஆம் அரோ.
9
   
 
237குயில்கள் பாடலும், குழல் ஒப்பு ஓதிமம்
வயல்கண் பாடலும், மது உண் கிள்ளைகள்
பயில்கள் பாடலும் பாலன் கேட்டு, இயைந்து
இயல்கள் பாடலும் இனிது இயங்கும் ஆல்.
10
   
 
238மலை, மலைக்கு உரி வனப்பும், வாங்க அரும்
அலை, அலைக்கு உரி மணியும், ஆர்ந்த சீர்
நிலை, நிலைக்கு உரி மருத நீர்மையும்,
கலை, கலைக்கு உரி கருத்தும் எய்தினான்.
11
   
 
239மூக்கில் தாக்கிய, முயல் மெய் தாக்கிய,
நாக்கில் தாக்கிய, செவி நள் தாக்கிய,
நோக்கில் தாக்கிய நுனை இன்பு இன்ன ஆய்த்
தூக்கில், தாக்கிய நயன் சொல்வு ஆகுமோ?
12
   
இறைவழியிற்செல்லுதல்
 
240மீது உலாவிய மீன்கள் தீபமாய்,
போது உலாவிய புவியும் வீதியாய்,
கோது உலாவிய குறை கொய் காட்சியான்,
மூது உலாவு இறை அடைய முன்னினான்.
13
   
 
241ஆறும் ஆறும் ஒன்று ஓடலாய், தம் உள்
மாறும்ஆறு கொண்டு அலை மயங்கு என,
சாறு தாறும் ஒன்று இன்றித் தான் வளத்து
ஏறு பேறு கொண்டு இளவல் ஓங்கினான்.
14
   
மேய்ப்பகைவெல்லல்
 
242மாக்கள் தாக்கிய மறம் கொள் கூளிகள்,
நோக்கத்து ஆக்கிய நுண் சடத்து, இவன்
ஆக்கத்து ஆக்கிய அருளைத் தாக்கு உற,
ஊக்கத்து, ஆக்கிய இகல், உடைத்து உளான்.
15
   
வரங்களோடு வளர்தல்
 
243கள்ளம் காட்டு களங்கம் கடிந்து, ஒளிர்
உள்ளம் காட்டு ஒளி காட்டிய ஒள் முகம்
தெள்ளம் காட்டு எழில் தீட்டி, வரங்கள் தம்
வெள்ளம் காட்டி, வளர்ந்து விளங்கினான்.
16
   
 
244இன் தெளித்து, எவரும் நசை எய்துவ,
பொன் தெளித்து எழுதும் படப் பொற்பினான்;
மின் தெளித்து எழுதிக் கதிர் வீசு எழில்
கொன் தெளித்து என, ஆசையின் கோடு இலான்.
17
   
சூசையைக் கண்ட மங்கையர்
 
245கதிர் முகத்து அலர் கஞ்சம் கொல், கஞ்சம் மேல்
பொதிர் முகத்து எழும் பொற்பு அளி கொல், நசை
பிதிர் முகத்து இழையார் இவன் பேர் எழில்
முதிர் முகத்து இடை மொய்த்தன நோக்கமே?
18
   
மங்கையரைக் கண்ட சூசை
 
246விதி முகத்து அலர் மேதையின் மேன்மையான்,
புதி முகத்து அலர் பூ அணிச் சாயலார்
நிதி முகத்து எதிர் மூடிய நீண்ட கண்,
மதி முகத்து எதிர் தாமரை மானுமே.
19
   
 
247கான் இறைஞ்சிய நல் தவக் காவலன்,
மீன் இறைஞ்சிய மின் விழியார் உரை,
ஊன் இறைஞ்சிய வேல் என ஓர்ந்து, தான்
தேன் இறைஞ்சிய தீம் சொலைக் கேட்கு இலான்.
20
   
போரும் காமமும்
 
248“கார் முகத்து வளைத்தன கார் முகம்
சீர் முகத்துச் செயம் தரும். காம வெம்
போர் முகத்து வெல்வான், புரை ஆசை அற்று,
ஏர் முகத்து எதிராது ஒளித்தான்,“ என்றான்.
21
   
சூசை கான் ஏகல்
 
249என்று, ஒளித்து எனக் கான் உற ஏகினான்,
குன்று ஒளித்த குரு மணிச் சாயலான்,
கன்று ஒளித்த கறவை கனைத்து என,
அன்று ஒளித்தவற்கு ஆர்த்து அழ யாருமே.
22
   
 
250தேம் முயங்கிய தேன் தரு நீடிய
கா முயங்கிய கார் வரை கண்ட கால்
பூமுயங்கு புலம் தரு நீழல் கீழ்
பா முயங்க வதிந்தனன் பாடுவான்.
23
   
சூசை ஒரு மலையைக் கண்டு புகழ்தல்
 
251வளைத்தன தனுக் கொடு எழுவும் ஈர்க்கு அடை
  வடிக் கணை வினைப்பட, வினையை ஆக்கிய
விளைத்தன நசைக் கொடு விளையும் நோய்த் திரள்
  விட, பகை பகைத்தன பொறிகள் ஈர்த்துபு,
திளைத்தன மிறைக் கொடு நசையும் நீத்து, அவை
  செகுத்து ஒடு புதைத்திட உரியது ஆய், பொருவு
இளைத்தன திருக் கொடு, வளரும், மாட்சியை
  இயற்றிய முகில் படர் மலையின் ஊக்கமே.
24
   
 
252“சினைக் கரு முகில் தலை விலக ஊக்குபு,
  திரள் கனி திளைத்தன பொழில்கள் சூட்டிய
நனைக் கரு விளைத்து, உயர் இடம் இது ஆய், கதிர்
  நடத்திய திருக் கிளர் உலகின் மேல் செல
நினைக்கு அரும் உரித் தடம் என, இராப் பகல்
  நிறுத்திய தவத் துணை உதவியால், பல
வினைக் கரு மறுத்து இறையவனை வாழ்த்தலின்,
  விருப்பினும் நனித் தகும் மலையின்ஊக்கமே.“
25
   
 
253“உடித்தன முதல் கதிர் எழுது கோட்டு உயர்,
  உளத்து இருள் ஒளித்து ஒளி அறிவு நீர்த்தலின்,
முடித்தன தவத்து உயிர் இனிது காத்து உளி
  முரண் படு பகைப் பட அரணின் மாட்சி ஆய்,
இடித்தன மழைத் துளி பெருகும் ஆற்றொடும்
  இணைப்பட நிறைபடும் அருளின் நீத்தம் உள்
குடித்தன மனத்து எழ உறுதி ஆக்கிய
  குணத்து, அருள் குடித் தகும் மலையின் ஊக்கமே.
26
   
மலையை நோக்கிக் காட்டினுள்விரைந்து செல்லுதல்
 
254என்று, எழுந்து, உவப்பில் ஓங்கி,
  இரட்டு அலைக் கடலின் நீந்தி
நின்று எழும் கரை கண்டால் போல்
  நிழற்றிய திமிசு விம்மும்
குன்று எழும் குவடு நோக்கி,
  குயில் குயின்று, அகவ மஞ்ஞை,
அன்று எழுந்து எழுதும் வண்ணத்து
  அலர்ந்த கான் நுழைந்தான் சூசை.
27
   
ஒரு முதியவன் சூசையைச் சந்தித்தல்
 
255கார் இடைக் குளித்த மின் போல்
  கான் இடைக் குளிப்பப் போகில்,
நீர் இடைக் குளித்த பேவு
  நிற நரை குளித்த ஓர் மூப்பன்
தார் இடைக் குளித்த தேன் போல்
  தயை இடைக் குளித்த சொல் கொண்டு,
“ஏர் இடைக் குளித்த பாலா,
  இயம்புதி போவது.“ என்றான்.
28
   
சூசை தன்கருத்தைத் தெரிவித்தல்
 
256“வீடு இழந்து இகல் செய் பேய்கள்
  வினைப் பகைக்கு அஞ்சி, ஓடி
நாடு இழந்து ஒளித்து, கானில்
  நயந்து உறை அறத்தை நாடி,
ஈடு இழந்து உயர்ந்த குன்றத்து
  இடத்து நான் ஒளித்தல் உள்ளி,
தோடு இழந்து ஏகுது.“ என்றான்
  துணை இழந்து உயர்ந்த பாலன்.
29
   
துறவில் வீரம் வேண்டும்- முதியவன்
 
257“கார் முகத்து அலரும் முல்லை
  கடி முகத்து இமைக்கும் வண் கால்
ஊர் முகத்து அஞ்சும் நாவாய்
  உடைத் திருக் கொணரும் கொல்லோ?
போர் முகத்து எதிரா நீங்கின்
  புணருமோ விழைந்த வெற்றி,
ஏர் முகத்து உணர்வில் தேர்ந்த
  இளவலோய்? என்றான்“ மூத்தோன்.
30
   
மக்களிடை வாழ்ந்தால்ஆசை அனலாகும்- சூசை
 
258“பைம் பொறி அரவின் நஞ்சில்
  பழிப்படப் பகைத்துக் கொல்லும்
ஐம் பொறி அன்றி, சூழ்ந்த
  அனைத்துமே பகைத்த காலை,
செம் பொறி பெய்த பைம் பூ
  சிதைந்து என, உளமும் ஏங்கி,
வெம் பொறி ஆக ஆற்றா
  வேட்கையே.“ என்றான் சூசை.
31
   
துன்பத்தில் மனவலிமை வேண்டும்- வானவன்
 
259“பொன் ஒளி காட்டும் செந்தீ.
  புகை அகில் மணத்தைக் காட்டும்.
மின் ஒளி மணியைக் காட்டும்
  வினை செயும் படைக்கல். மாட்சி
தன் ஒளி காட்டும் துன்பத்
  தகுதியில் குன்றா ஊக்கம்
மன் ஒளி காட்டும் நல்லோய்,
  மறை இது.“ என்றான் சான்றோன்.
32
   
ஆசையை அறுக்கத் தவமே வழி - ஆசை
 
260உள் உயிர் உண்ணும் கூற்றின்
  உடன்று கொல் நசையைக் கொல்ல,
தெள் உயிர் மருட்டும் செல்வத்
  திரள் துறந்து, ஒருங்கு நீங்கி,
கள் உயிர் உயிர்த்த பைம் பூங்
  கானில் வாழ் தவத்தை நாடல்,
எள் உயிர் தெளிக்கும் வண்ணம்
  என்பரே?“ என்றான் சேடன்.
33
   
நெடும்போரிலேயே உறுதி உண்டு - முதியவன்
 
261“ஒருங்கு எலாம் நீக்கல் ஓர் நாள்
  உறுதியே. பகைத்துச் சூழ் தன்
மருங்கு எலாம் இருப்ப, உள்ள
  வாய் அடைத்து, இடை விடாது
நெருங்கு எலாம் நுழையாக்காத்தல்
  நெடும் பயன் பயத்த நீண் போர்.
சிருங்கு எலா நிலையின் ஊங்கும்
  திறம் இது“ என்று அய்யன் சொன்னான்.
34
   
துறவறமே மேன்மை தரும்- சூசை
 
262“நாள் தொறும் கனிந்த செந் தேன்
  நல் கனி அளித்தல் நன்றோ?
கோடு உறு மரமும் தன்னைக்
  கொடுத்தலே நன்றோ? இவ்வாறு,
ஈடு உறும் உளதும் உள்ளும்
  ஈதல் செய் துறவே என்பார்
வீடு உறு நூலோர்.“ என்ன
  விளம்பினான் இளவல் மாதோ.
35
   
அயலாரையும் நல்வழிப்படுத்துதல்அறம்- முதியவன்
 
263“காயொடு மரம் தந்தாற் போல்
  கடித் துறவு அருமை வெஃகி,
வேயொடு நெருங்கும் கானில்
  விழைந்து தான் ஒழுகல் நன்றோ?
தீயொடு குழை மற்றோரும்
  செவ்வு உறச் செலுத்தல் நன்றோ,
தூய் உடு உணர்வோய்?“ என்னச்
  சொற்றினான் குரவன் அம்மா.
36
   
அயலாரால்ஆசையும் வளருமே - சூசை
 
264“பெற்று அறம் அணிந்த நல்லோய்,
  பிறர் மனை விளைந்த செந் தீ
அற்று அற ஓடித் தன் வீடு
  அழன்றதே போல, வேட்கைப்
பற்று அற உணர்த்தி, உள்ளம்
  பற்றிய நசையில் வெந்தால்,
இற்று அற உறுதி என்னோ?“
  என்றனன் அரிய சூசை.
37
   
இடத்தையும் வெல்வது மனமே - முதியவன்
 
265“தீது இலா இடமே வேண்டின்,
  சேண் உலகு எய்தல் வேண்டும்.
கோது இலா வனத்தும் தன்னைக்
  கொணர்ந்த கால், விளையும் வெம் போர்.
ஏது இலாது ஒழுகல் உள்ளத்து
  இயல்பினால் ஆகும் அன்றி,
வாது இலா இடத்தால் ஆகா,
  மைந்தனே!“ என்றான் சான்றோன்.
38
   
ஈரறத்திலும்சிறந்த அறம் எது? - சூசை
 
266“ஈர் அறம் வழங்கும் வண்ணத்து,
  இயாவையும் துறந்த தன்மை
பேர் அறம் என்பக் கேட்டேன்
  பின்னை, அத் துறவின் ஊங்கும்
ஓர் அறம் உளதேல், ஐயா,
  உரைக்குதி. உரைத்த அன்ன
சீர் அறம் விழைவேன்“் என்றான்
  சேண் உலகு உரிய பாலன்.
39
   
ஈரறத்தையும் இணைப்பதாலை பெரும்பயன்விளையும்- முதியவன்
 
267“ஈர் அறம் பிரிந்து நோக்கில்,
  இயம்பிய துறவின் மாட்சி
பேர் அறம் ஆவது அன்றி,
  பிரிவு இலா இரண்டும் தம்முள்
ஓர் அறமாகச் சேர்க்கில்,
  உறுதியும் பயனும் ஓங்கத்
தேர் அறம் ஆகும்.“ என்றான்
  செழும் துறைக் கேள்வி மூத்தோன்.
40
   
இல்லறப்புண்ணியம் துறவறத்தை மாட்சிமைப்படுத்துமோ? - சூசை
 
268“பால் கலந்திட்ட தெள் நீர் பால்
  குன்றும்; பண்பும் இல் ஆல்.
மேல் கலந்து ஒளிர்ந்த வெய்யோன்
  வெயிலின் முன் எரித்த தீபம்
போல், கலந்து இசைத்த மற்றப்
  புண்ணியம், துறவு வாய்ந்த
சால் கலந்த, இயல்பை ஏற்றும்
  தகுதியோ?“ என்றான் பாலன்.
41
   
நாட்டிற்செய்யும்துறவின்நன்மைகள்- முதியவன்
 
269தெருள் தகும் உணர்வின் சான்றோன்
  சேடனைத் தழுவிச் சொல்வான்:
“அருள் தகும் உணர்வு அன்பு ஊக்கம்
  அரும் பொறை ஈகை மற்ற
மருள் தகும் இயல் தீர் மாட்சி,
  மதியை மீன் சூழ்ந்ததே போல்,
பொருள் தகும் நாட்டில் வைகும்
  பொலம் துறவு, அணியும் அன்றோ?“
42
   
கடமையை உணர்த்தி முதியவன் மறைதல்
 
270“கான் வளர் தவத்தைக் கானில்
  கண்டு எளிது அடைவார் மற்றோர்.
தான் வளர் தவத்தைக் கூட்டித்
  தமர்க்கு எலாம் நகரில் காட்டல்
வான் வளர் வலமை பூத்த மாண்பு
  இதே. இது நின் பால் ஆம்,
மீன் வளர் உணர்வோய்!“ என்று
  மின் என மறைந்தான் சான்றோன்.
43
   
வந்தவன் வானவனே என உணர்ந்த சூசை நகர்க்குத் திரும்புதல்
 
271ஊன் உருக் காட்டி வந்த
  உம்பன் என்று அறிந்து, போற்றி,
தேன் உருக் கோதை ஒத்தான்,
  திளைத்த இன்பு, உருகி, மூழ்கி,
கூன் உருப் பிறையும் எஞ்சக்
  கொழுங் கதிர் முகத்தில் வீச,
பான் உருச் சுமந்து நாறும்
  பவள நல் மதலை ஒத்தான்.
44
   
 
272“நீதியும் நெறியும் சொன்ன
  நிலை எலாம் உணர்ந்த பின்னர்,
ஆதியும் அந்தம் தானும்
  ஆய நின் கழல் அல்லாது,
வீதியும் எனக்கு ஒன்று உண்டோ,
  வினை அறும் இறையோய்?“ என்ன
ஓதியும் விறலும் விம்ம
  ஒளித்த தன் நகரம் சேர்ந்தான்.
45
   
 
273கார் வளர் மின்னின் மின்னிக்
  கதிர் வளர் பசும் பொன் இஞ்சி
வார் வளர் முரசம் ஆர்ப்ப மணி
  வளர் நகரம், வில் செய்
தேர் வளர் பருதி ஒத்தான்,
  சென்று புக்கு உவப்ப யாரும்,
பார் வளர் திலகம் ஒத்தான்,
  பழிப்பு அற விளங்கினானே.
46
   
சூசையின் தூய வாழ்க்கை
 
274மீன் ஆர் வானம் பெற்றவன் ஓது விதி பெற்று,
தேன் ஆர் கானம் பெற்ற திருந்தும் தெளிவு ஆறாது,
ஊன் ஆர் காயம் பெற்று இவன், உவவோடு, உயர் மற்ற
வான் ஆர் மானம் பெற்று அறம் ஒன்றாய் வனைகின்றான்.
47
   
 
275வானம் கொண்டார் மாண்
  அருள் கொள்வான், அவர் கொண்ட
ஞானம் கொண்டான்; இல்லவன்,
  இல்லோர் நகை கொள்வான்,
தானம் கொண்டான்; மாசு இல
  தூயோன் தவம் கொண்டான்.
ஈனம் கொண்டார் உள் வலி
  கொள்வான், இவை கொண்டான்.
48
   
 
276புன்மைப் பட்டார் கொண்டவை வெஃகி, பொருள் கொண்ட
தன்மைப் பட்டார், யாவையும் உண்ணார் ; தால் செய்யார்
இன்மைப் பட்டான் சூசை உழைத்தே இனிது உண்பான்;
நன்மைப் பட்டு ஆர்ந்து ஏற்குநர் உய்வான், நனி ஈவான்.
49
   
 
277வேய்ந்து ஆர்ந்து ஒன்றும்
  வான் பொருள் விஞ்ச, விழைவோடு ஒன்று
ஈய்ந்தால், ஒன்றே கோடி
  பயக்கும் எனில், அன்பால்
வாய்ந்தான், ஒன்றும் தன்
  வறுமைக்கே மலிவு ஈகல்
ஆய்ந்தால், ஒன்றும் வான் புகழ்
  கூறல் அரிது அன்றோ?
50
   
 
278மெய்யால் குன்றாது, ஒள் தவம் மாறா வினை ஆண்மை
கையால் குன்றா வண் கொடையோடு, உள் களி கூர்ந்து,
பொய்யால் குன்றா நெஞ்சு அரு வல்லோன், புணர்வு ஆக்க,
மையால் குன்றா வெம் வனம் ஏகா, மனை நின்றான்.
51
   
 
279காக்காது உள்ளம் ஐம் பொறி காட்டும் வழி நிற்பப்
போக்காது, உள்ளம் உய்ய மெய் ஞானம் புரி ஆண்மை
ஆக்காது உள்ள யாவும் அகன்றே, அழிவு ஆக்கம்
நோக்காது, உள்ள தே அருள் நோக்கி நுதல்கிற்பான்.
52
   
 
280சொல்லும் செல்லாக் கான் நுழையா, தண் துளி தூற்றும்
செல்லும் செல்லா, தீ எரி கற்றை திளை வேந்தன்
எல்லும் செல்லாக் கான் நகு நல் கான் என, உள்ளம்,
புல்லும் பொல்லாங்கு ஈர்த்துபு புக்கு ஐம் பொறி காத்தான்.
53
   
 
281சுட்டு ஆகுலம் உற்று ஓர் வனம் உற்றான், துகள் தீரா,
முட்டு ஆசையை உற்று, எங்கணும் உற்றால் முனி தானோ,
பட்ட ஆசை இரண்டு ஈர்த்து, உளம் ஓங்க, பல யாவும்
விட்டு ஆய், உளது ஓர் ஆண்டகை மேவி வினை தீர்த்தான்.
54
   
 
282மைப் பட்டு இளகும் சேற்றில்
  உலா விண் மணி மாலி
செய்ப் பட்டு ஒளிரும் செங் கதிர்
  மாசு ஆய்ச் சிதைவு ஆமோ?
பொய்ப் பட்டு அயரும் புன் பொருள்
  மேல் ஐம் பொறி விட்டால்,
மெய்ப் பட்டு உயர் இன்னான் உளம்
  மாழ்கா வினை கொள்ளான்.
55
   
சூசை, தன்பன்னிரண்டாம்வயதில்மணம்
செயேன்என்று உறுதி செய்தல்
 
283போர் ஆறு என்னும் இடை
  மாக்கள் புரை எல்லாம்
சேர் ஆறு என்னும் இன்பம்
  எலாம் தீர் தெளிவு எய்தி
ஈர் ஆறு என்னும் ஆண்டு உளன்,
  என்றும் இனிது இன்னா
ஊர் ஆறு என்னும் மன்றல்
  செயேன் என்று உரன் உற்றான்.
56
   
சூசையின்மனம் வீட்டின் பத்தில் மூழ்குதல்
 
284உடல் கிடந்து உடலம் கடந்தான் எனா
மிடல் கிடந்து, உயர் வீடு உள இன்பு அது
கடல் கிடந்து, கனிந்த களிப்பு உறீஇ
மடல் கிடந்த கள் வார் மலர் மானுவான்.
57
   
அசையாத மனநிலை
 
285கலை உற்று, உள் இருள் நீங்கிய காட்சியான்
அலை உற்று இப் பொருளோடு அலையாது உளம்
நிலை உற்று, எந்தை நெருங்கு அடி சேர்ந்து, உயர்
மலை உற்றான் என மாறுபடான் அரோ.
58
   
நன்மையைத்தேர்தல்
 
286தேக்குப் பாரில் திளைத்து உள யாவையும்
தூக்கிப் பார்த்தனன், தோன்றிய தீது எலாம்
போக்கி, பாய் பயன் பூத்து, கலந்த நீர்
நீக்கிப் பால் உணும் ஓதிமம் நேருவான்.
59
   
இறைவன்அருளில் பற்றுதல்
 
287மீ இருள் கொணர் மேகம் மிடைந்து எனா,
போய் இருள் கொணர் ஐம் பொறி போக்கு இலான்,
தூய் அருள் கொணர் சூழ்ச்சி தெளிந்து, உளம்
பாய் அருள் கொணர் பற்றுதல் எய்தினான்.
60
   
நீதியின் ஆசான்
 
288கோது இல் ஓர் முறை கொண்டு நடந்த பின்,
ஏது இல் ஓர் முறை யாரும் நடந்து எழ,
நீதி ஓர் முறை நேர் நெறி ஓதுவான்
வேதியோர் முறை விஞ்சிய மாட்சியான்.
61
   
பயன்தரும்வாய்ச்சொல்
 
289முனி பழித்த இளைய மூத்தோன் என,
பனி பழித்த பயன் பட யாவரும்,
கனி பழித்த கனிந்த நல் வீணை தன்
தொனி பழித்த சொல் சொல்லிய வாய்மையான்.
62
   
தீயோர்மீது இரக்கம்
 
290பொருள் கடிந்து புலன்கள் அடக்கலால்
மருள் கடிந்த மனம் தெளி காட்சியான்
அருள் கடிந்த அசடரை நோக்க லோடு
இருள் கடிந்த இரக்கம் உற்று ஏங்குவான்.
63
   
இன்னா செய்தார்க்கும்இனிய துணைவன்
 
291தவர்க்கும் ஊங்கு அரிது ஆம் தயை தாங்கு உளத்து,
உவர்க்கும் வேலை உடுத்தன பார் உறை
எவர்க்கும் நன்றி இயற்றி, இன்னா செயும்
அவர்க்கும் வாய்ந்த அறந் துணை ஆயினான்.
64
   
துன்புற்றவர்க்கு உயிர்த்துணைவன்
 
292‘அன்பு வாய்ந்த உயிர் நிலை; அஃது இலார்க்கு
என்பு தோல் உடல் போர்த்தது,‘ என்று அன்பு உறை
இன்பு தோய்ந்த நிலை என, தான் இவண்
துன்பு காய்ந்த உயிர்த் துணை ஆயினான்.
65
   
மாண்பின் வளமுடையவன்
 
293பொறையது ஆண்மையினோடு, எரி பூண் எனா
மறையது ஆட்சி அணிந்த வளன் தகும்
நிறைய மாட்சி நிகர்ப்பது, நூல் வழி
அறைய வாய்மையர் எய்துப ஆண்மையோ?
66
   
இறைவன்அவதரிக்கக்காரணம்
சூசையின் கவலை
 
294இவ் அருங் குணத்து, இரங்கிய
  இனிய அன்புடைமை
வவ்வு அருங் குணத்து, அவனி
  கொள் மடி வினை நீக்கி,
செவ் அருங் குணத்து இறையவன்
  சென்று அதைத் தீர்ப்ப,
அவ் அருங் குணத் தவன்,
  விருப்பு எய்தி, நொந்து அயர்வான்.
1
   
பழவினை
 
295உலகு உண்டாய கால்
  மனுக் குலத் தலையவன் உண்ட
விலகு உண்டு ஆய காய்
  விளைத்த தீது, உயிர் எலாம் சிதைப்ப,
அலகு உண்டு ஆய் இலாது,
  அடும் விடம் குடித்த வாய் வழியால்
இலகு உண்டு ஆயின எலா
  உறுப்பு உலவு என உலவு ஆம்.
2
   
எங்கும்இருள்
 
296குடித்த நஞ்சினால் குருடு
  கண் பாய் என, பாவம்
முடித்த நஞ்சினால் முதிர் செயிர்க்கு
  உளத்து இருள் மொய்ப்ப,
படித்த விஞ்சையால் பணிந்த
  மெய் இறைவனைப் பழித்து,
பிடித்த வஞ்சனால் பெருகியது
  எங்கணும் மருளே.
3
   
 
297பண் அருஞ் சுடர்ப் பருதி
  போய், பாய் இருள் நீக்க
எண் அருஞ் சுடர் ஏற்றுவர்
  இணை என, மாக்கள்
ஒண் அருஞ் சுடர் ஓர்
  இறையவன் ஒளித்து, எவையும்
மண் அருஞ் சுடர் மானும்
  என்று இறைஞ்ச உள்ளினர் ஆல்.
4
   
நன்மைகள்நீங்குதல்
 
298மறம் ஒழித்திலர்; மறை முறை ஒழித்தனர்; இறைவன்
திறம் ஒழித்தனர்; செய்முறை ஒழித்தனர்; சிறந்த
அறம் ஒழித்தனர்; அறிவு ஒழித்தனர்; நலம் யாவும்
புறம் ஒழித்தனர்; புணர் உயிர் ஒழித்தனர் சிதடர்.
5
   
பேய்கள்தீவினை நஞ்சைக்கக்குதல்
 
299எஞ்சுகப் பயன் இயற்றிய அறங்களே, இன்னா
விஞ்சுக, பகை வினை செயும் பழம் பழிப் பேய், அந்
நஞ்சு உக, பகு வாய் அரவு உருக் கொடு அந் நாளில்
அஞ்சுகப் புவிஅனைத்துமே, தோன்றியது ஆம் ஆல்.
6
   
எங்கும்பாவ நஞ்சின்கொடுமை பரவுதல்
 
300அன்ன நஞ்சு உறும் பாவமே பரந்ததின், அதனை
உன்னின், நஞ்சு உறும் உன்னிய உன்னமும்; அதனைப்
பன்னின், நஞ்சு உறும் பன்னிய வாய் அதும்; அதனைத்
துன்னின், நஞ்சு உறும் துன்னிய திசை எலாம் அன்றோ.
7
   
 
301நிழலில் நஞ்சு உறும்; வெய்யிலில் நஞ்சு உறும். நெடு நீர்க்
கழனி நஞ்சு உறும்; கடி மலர் நஞ்சு உறும். பொலிந்த
பொழிலில் நஞ்சு உறும்; புணர் கனி நஞ்சு உறும். மடவார்
எழிலில் நஞ்சு உறும்; காண்டலால் இன் உயிர் இறக்கும்.
8
   
 
302காரும் நஞ்சு என, கனலியும் நஞ்சு என, மாரி
சோரும் நஞ்சு என, துறும் வளி நஞ்சு என, சுடர்ப் பூண்
ஆரும் நஞ்சு என, ஆடை நஞ்சு, உணவு நஞ்சு, அமிர்த
நீரும் நஞ்சு என, நேமி கொள் எவையும் நஞ்சு எனவே.
9
   
 
303நஞ்சு எஞ்சாமையின் நடு நெறி தவிர்தலோடு, இன்னா
விஞ்சு எஞ்சாமையின் சிறுமை நோய் துயர் பிணி மிடைந்து,
நெஞ்சு எஞ்சாமலும் நெடியது ஓர் நடுக்கு உறா நிற்ப,
மஞ்சு எஞ்சாமலும் மருண்டு இருண்டு அழிந்தன உலகம்.
10
   
பாவ நஞ்சு பரவியதால்விளைந்த கேடுகள்
 
304மீன் மறந்தன மேதினி விளக்கலும்; வெய்ய
வான் மறந்தன மாரியை வழங்கலும்; மதுரத்
தேன் மறந்தன செழு மலர் பெய்தலும், வேத
நூல் மறந்தனர் நுதல் அருந் தீமை செய்தமையால்.
11
   
 
305அறம் மடிந்தன; அடைந்தன தீயவை அனைத்தும்;
மறம் மிடைந்தன; மறந்தன தருமமே; வஞ்சத்
திறம் நிறைந்தன; தீர்ந்தன தவங்களே; விரதம்
புறம் முரிந்தன; பொதிர்ந்தன பகை செயும் புரையே.
12
   
 
306விண் கிழித்து இழி வெள்ள நீர் சிறைசெயும் உழுநர்
மண் கிழித்து உழ வழங்கிய கொழுவினை நீட்டி,
புண் கிழித்து நெய்ப் புனலொடு போர் முகத்து அஞ்சா,
கண் கிழித்து ஒளி கான்ற வேல் ஆக்கின பகையே.
13
   
 
307அன்பும் இல்லன, எனது உனது என்பதில் ஆர்வ
நண்பும் இல்லன, வஞ்சனை கற்கலால் நல் நூல்
பின்பும் இல்லன, தீயவை இனிது எனப் பெட்டற்கு
இன்பும் இல்லன, இச்சையால் வறுமை உள்ளதுவே.
14
   
 
308கரும்பு உலாவிய சாறு இல காய்ந்தன ஆலை.
அரும்பு உலாவிய அமுது இல அழுதன கமலம்.
சுரும்பு உலா வயல் பயன் இல துறுவின கடு முள்.
விரும்பு தேன் உணாப்பாடில விம்மின குயிலே.
15
   
சூசையின்வேண்டுதல்
 
309எள்ளல் ஆய மன் உயிர்கள்
  இன்னா இனிது என்று அதை விரும்பி,
அள்ளல் ஆய இருள் மொய்ப்ப,
  அவனி எங்கும் மொய்த்தன தீது
உள்ளல் ஆயது அருமை அதோ?
  உள்ளி உள்ளத்து இரங்கி வளன்,
வள்ளல் ஆய இறையவனை
  வணங்கி, வருந்தி உரை வகுத்தான்:
16
   
 
310“ஒன்றாய் ஆளும் அரசே, என்
  உயிர்க்கு ஓர் நிலையே, தயைக் கடலே,
குன்றா ஒளியே, அருட் பரனே,
  குணுங்கு ஈங்கு ஓச்சும் கொடுங்கோன்மை
பின்றா வினை செய்வது நன்றோ?
  பிறந்து அப் பகையைத் தீர்த்து அளிப்பச்
சென்றால், ஆகாதோ?“ இரக்கஞ்
  செய்யக் குணித்த நாள் எவனே?
17
   
 
311“மறையைப் பழித்த பொய்ம்மதங்கள்
  மருட்டும் வினையால், ஒண் தவத்தின்
முறையைப் பழித்த சிற்றின்பம்
  மூழ்கும் நசையால், என்றும் இதோ
உறையைப் பழித்த எண்இல மன்
  உயிர்கள் எரி தீ நரகு எய்த,
தறையைப் பழித்த பேய் இனங்கள்
  தவிராது ஈங்கு ஆள்வது நன்றோ?“
18
   
 
312“முன் நாள் இனிதின் நீ உரைத்த
  முறையால், பகைத்த வெறித் தலையை
இந் நாள் மனுவாய் அவதரித்து
  இங்கு எய்தி மிதிக்கில், ஆகாதோ?
பல் நாள் உலகம் கொண்ட
  பழிப் பகையை எண்ணுவது நன்றோ?
அந் நாள் எம் மேல் காட்டிய பேர்
  அன்பு இன்று எண்ணில் ஆகாதோ?
19
   
 
313“தந்தை நோக, உணர்வு இன்றி,
  தவறாநின்ற பிள்ளைகள், தம்
சிந்தை நோகப் பணிந்து அடுத்தால்,
  சினந்த தாதை அகற்றுவனோ?
நிந்தை ஆகப் பிழைத்து எனினும்,
  நினக்கு ஓர் பிள்ளை ஆக, எமக்கு
எந்தை ஆக நீ என்றும்
  இரங்கா முனிவது ஆம் கொல்லோ?“
20
   
 
314“பொறியைத் தவிர்த்த மா தவத்தோர்
  புலம்பற்கு இரங்கின் குறை என்னோ?
அறிவைத் தவிர்த்த குழவிகளும்
  அழுதற்கு இனைந்தால் தீ என்னோ?
நெறியைத் தவிர்த்த வஞ்சம் மிக
  நேமி சிதைத்து ஆள் கொடுங்கோன்மை
வெறியைத் தவிர்த்த வயம் கொடு நீ
  வினை தீர்த்து உதிப்பத் தடை என்னோ?“
21
   
 
315“கன்னித்தாய் தன் கரத்து உன்னைக்
  கண்டு உள் உவப்ப, உன் மலர்த் தாள்
சென்னித் தார் என்று அணிந்து இலங்க,
  சிறுவனாய் நீ அழுது உணுங்கால்
துன்னித் தாழ்ந்து தொழ, உன் தீம்
  சுவை ஆர் குதலைச் சொல் கேட்ப,
என்னில் தாழ்வு உண்டு ஆயினும், என்
  இறைவா, அடியேற்கு அருள்க.“ என்பான்.
22
   
மரியாளின் வேண்டுதல்
 
316இன்னான் இன்ன யாவும் உரைத்து
  ஏங்கி ஏங்கி அழுகின்ற
அந் நாள், அன்ன உரைக்கு இசையாய்,
  அன்பு தூண்டும் அரிய நசை
தன்னால், உன்னப் பொருவு அற்ற
  தரும கன்னி மரி என்பாள்,
பல் நாள் துன்னாத அருள் புரியப்
  பரமன் எய்த வேண்டினளே.
23
   
அவதார ஏற்பாடு
 
317அன்று, என் தொடையால் அடையாப் பண்பு
  அன்னார் இருவர் சொல் அமிர்தம்
துன்று என்று இரு நள் செவி உவப்பத்
  தொடர்பின் கேட்ட வான் இறையோன்,
நன்று என்று இரங்கி, உலகு அளிப்ப
  நரன் ஆவதற்கே உதவி இவர்
ஒன்று என்று இவரை மணத்து ஒன்ற
  உள்ளத்து உள்ளி முடித்தான் ஆல்.
24
   
 
318அணை அற்று அகன்ற பவ வெள்ளத்து
  அமிழ்ந்தும் உயிர்கள் தம் குறை தீர்த்து,
இணை அற்று அகன்ற அருள் பவ்வத்து
  இனிதின் மூழ்கி உய்வதற்கே,
தணை அற்று அகன்ற தயைக் கடவுள்
  தனித் தான் செய்யும் தொழில் எனினும்,
துணை அற்று அகன்ற மாண்பு இவரைத்
  துணையாய்ச் சேர்த்த நலம் சொல்வாம்.
25
   
இறைவன் தூது அனுப்புதல்
 
319ஆர் ஆனும் நிகர்ப்பு அரிய அன்பு ஆர்ந்த நாயகன் தான்
  அலகை வெல்ல,
கார் ஆரும் வான் உலகும் மண் உலகும் கடி நயக்கும்
  கருணை கண்ணி,
ஏர் ஆரும் மணி இமைக்கும் எருசலேம் ஆலயத்தில்
  இருமை வாய்ந்த
சீர் ஆரும் கன்னியின்கண் சேடு அமை ஓர் வானவனைச்
  செலுத்திச் சொல்வான்:
26
   
 
320“சேய் ஆக, மனுக் குலத்தில் சேர்ந்து உதித்து வையகத்தார்
  சிதைவை நீக்க,
தாயாக வளர் கன்னி, தாய் வயிற்றில் பழம் பழி சேர்
  தவறு இல்லாது,
தூய் ஆகம் அறிவு ஆண்மை சுடர் காட்சி வலி அருள் மாண்
  துணிவு சூழ்ச்சி
வீயாத வரம் கொடு பெற்று எவ் உலகும் வியப்பு எய்த
  வேய்ந்தாள் அன்றோ.“
27
   
 
321“காரணமாய் ஏது அறியா வையகத்தார் இனிது உளத்தில்
  களித்து மூழ்கி,
வாரணமாய் இன்பு எய்த தலைவி என வான் தளங்கள்
  வகுப்பு யாவும்
பூரணமாய்த் தொழுது உவப்ப, பூவனத்தில் பொருவு இன்றிப்
  போர்த்த வெய்யோன்,
பேர் அணியாய், பிறை மிதித்து, முடி ஒப்ப மீன் சூடிப்
  பிறந்து வேய்ந்தாள்.“
28
   
 
322“பிறை ஒக்கும் ஒளி அன்னாள்
  பெருகும் வயது ஒருமூன்றில் கோயில் சேர்ந்து
மறை ஒக்கும் ஒளி அன்னாள் வழுஇல
  நாள் தொறும் என்னை வணங்கும் ஆற்றால்
பொறை ஒக்கும் துணை அன்னாள்,
  பூவனத்தில் நிற்பவருள் பொலிந்த வானோர்
முறை ஒக்கும் நிலை அன்னாள்
  முற்றி வளர் வரத்து அங்கண் முதிர்ந்தாள் அன்றோ.“
29
   
 
323“துணை தீர்ந்து கன்னி எனை ஈன்றாலும்,
  உறும் துயரில் துணை ஆதற்கும்,அக்
இணை தீர்ந்த இப் பயன் பேய்க்கு ஒளிப்பதற்கும்,
  அவட்கு இகழ்வு ஆங்குஎய்தாதற்கும்,
அணை தீர்ந்த துணை அளிப்பேன், இவை கூறா,
  மணத் தூதாய் வான் விட்டு அங்கண்
அணை தீர்ந்த அருட் கன்னி, ‘ஆம்‘என ஏகு,“
  என்று இறையோன் அனுப்புகின்றான்.
30
   
வானவன்தூது உரைத்தல்
 
324வான் செய்த சுடர் ஏய்க்கும் வடிவொடு
  வானவன் சடுதி வந்து, அக் கன்னி
கான் செய்த மலர்ப் பதத்தைக் கண்டு இறைஞ்சி,
  “கடவுள் அருள் கருதும் தன்மை
தான் செய்த ஏவல் என, தவறாது ஓர்
  மணத்து அமைதல் தருமம்,“ என்ன,
தேன் செய்த கனி சொல்லால்
  சீர்த்த பல உறுதிகளும் செப்பினானே.
31
   
 
325மண மொழி முற்று உணரா முன்
  மனம் உளைந்து, வாடுகின்ற வதனம் மாற,
பணி மொழி முற்று உணராதாய்
  பகல் செய் கண் ஆறு என நீர் பயின்று சேப்ப,
அணி மொழி முற்று உணர் நெஞ்சம்
  உள் துடிப்ப நெட்டு உயிர்ப்போடு அரற்றி, பின்னர்
துணி மொழி உற்று, இறைவனது துணைத்
  தாளைப் பணிந்து இவளும் சொல்லல்ஓர்ந்தாள்.
32
   
மரியாளின்பணிவுரை
 
326தேன் தானோ நஞ்சு அதுவோ என
  விழுங்கலோடு உமிழ்தல் தேற்றா நெஞ்சள்,
மீன் தான் ஓர் முடிச் சென்னி நிலம் புல்ல,
  முழந்தாளை விரும்பி ஊன்றி,
வான் தான் ஓர் அணி என வெஃகிய கூந்தல்
  வலத் தோளின் வயங்கு, திங்கட்
கூன் தானோ பூஎருத்தம் கோட்டி, இரு
  கை கூப்பிக் கூறல் உற்றான்.
33
   
 
327“உலகு எல்லாம் புரக்கும் அருட் கொடையோனே,
  உரு இல்லாது ஒளி வல்லோனே,
அலகு இல்லா தற்பரனே, அற்புதனே, என்
  அன்பே, அரசர் கோவே,
நலம் எல்லாம் தந்து, தந்த நல் உணர்வும்
  அறியாயோ? நலம் மிக்கோய், உட்
புலம் எல்லாம் அறிந்தாயேல், புலம்பி மனம்
  உடைந்து உளைய, புகல்கிற்பான் ஏன்?“
34
   
 
328“நீ உகுத்த வணக்கம் என் நினைவு
  ஓங்கி, மூ வயது நிகழா முன்னர்,
மாய் உகுத்த வாழ்வு உகுக்கும் மணம் இன்றி,
  எஞ் ஞான்றும் மாறாக் கன்னி
ஆய் இருப்ப நான் உணர்கால், ஆம் என நீ
  அருள் புரிந்தாய் அன்றோ, ஐயா?
நோய் உகுப்ப உளத்து அலக்கண்
  நுழைந்து அறுப்ப, மணம் இப்போநுதல்கிற்பான்ஏன்?“
35
   
 
329என்று என்றாள் மென் தாளாள்,
  இதயத்தில் தீ பாய்ந்து உள் எரி புண் அன்னாள்,
அன்று என் தாய், மனம் உருகி
  ஆகுலத்து ஆழ்கடல் மூழ்கி அழுந்தா நிற்ப,
நின்று அன்று ஆயிரக் கதிரோன்
  நேர் உருக் காட்டிய வானோன், நிகராக் கன்னி
மின் தன் தாள் தொழுது, இன்னும் விரி
  வேதத்து உறுதி உரை விளம்புகின்றான்:
36
   
வானவன்கடவுளின்அருளை எடுத்துரைத்தல்
 
330“மீனொடு மின் சுடர் எல்லாம் வெல் அறிவு உற்று
  அயர்வான்ஏன்? வெருவாதுஒன்றாய்த்
தேனொடு கொல் அரி இனம் ஓர் நாவாய்க்குள்
  அடக்கினனும், திளைத்த செந்தீக்
கானொடு தண் மது மலரின் குளிரச்
  செய்தவனும், மணக் கடியோடு உன்கண்
வானொடு மண் வணங்கும் தூய் கன்னிமை
  காப்பதும் அரிதோ,மறை பூண்டு உள்ளாய்?“
37
   
 
331“சொல் வழியும் உள் வழியும் தொடர்ந்து
  அடங்காது, எவ் உவமைத் தொகுதி யாவும்
வெல் வழியும் ஆய வலி வேய்ந்த பரன்
  திருவுளம் ஆய், விகற்பம் என்னோ?
எல் வழியும் கடந்த அறிவான் ஏவலினால், இன்னல்
  உறாது என்ன வானோன்,
கல் வழியும் கடந்துஅன திண் கன்னி அறா
  மணத்து இணங்கி, கடவுள் தாழ்ந்தாள்.
38
   
இறைவன்சீமையோனுக்குக்கூறிய செய்தி
 
332ஆம் என ஆயினது அறைய வானவன்,
நாம் என யாவரும் நயப்ப, நாயகன்,
ஏம் என மாண்பு இசை சீமையோன் எனும்
தோம் என யாவும் தீர் தவற்குச் சொற்றுவான்:
39
   
 
333கோது இல தாவிதன் குலத்தில், தாதை தாய்
மாது இல தணர்ந்த மா மரி என்பாள், இவண்
ஏது இல வரத்து உயர்ந்து, இலங்கு மீன்களுள்
மீது இயை மதிஎன விளங்கின்றாள் அரோ.
40
   
 
334“ஈர் எழு வயது உள் ஆய் இலங்கு இம் மங்கையை
நேர் எழு துணை மணம் முகிப்ப, நீர்த்த தன்
சீர் எழு குலத்தினுள் தெரிந்து அம்மாட்சியான்,
பேர் எழு மணம் கொடு பிணிக்குவாய்“் என்றான்.
41
   
சீமையோன்திருமண ஏற்பாடு செய்தல்(சூசை-மரியின்திருமணம்)
 
335முனிவரன் முதலவன் மொழிந்த யாவையும்
தனி வர மடந்தையை விளித்துச் சாற்றி, “உள்
நனி வர அருள் புரி நாதன் ஏவல் ஆல்,
இனி வர மணம் செயல் வேண்டுமே,“ என்றான்.
42
   
 
336என்றலும் கேட்டு உயிர்ப்பு எழ இரங்கினாள்.
“மன்றலும் மன்றல் செய் வாழ்வும் எற்கு அதே
பொன்றலும் பொருவு இல புன்கண் ஆயினும்,
ஒன்றலும் ஆம் இறை உரைக்கிலே.“ என்றாள்.
43
   
 
337என்றவை உணர்ந்த மா தவனும், இன்பொடு
மன்றலை முடிதர, அங்கண் வைகிய
நன்று அமை முனிவரைக் கூட்டி, நாயகன்
அன்று அமைந்து அறைந்த நல் பணி அறைந்து உளான்.
44
   
 
338அறைந்த வாசகம் உணர்ந்து அரிய மாதவர்,
“நிறைந்த தாவிதன் குல நிலையில் மாட்சி கொண்டு
உறைந்த யாவரையும் விளித்து, ஒருவனைப் பிரான்
பறைந்தது ஆகையில், ஒரு பழுது உறாது“ என்றார்.
45
   
 
339நன்று என நயப்பொடு நாதன் வேண்டினர்.
கன்றின முரசு ஒலி கறங்க, “தாவிதன்
துன்றின அனைவரும் துன்மின்!“ என்று அழைத்து,
அன்று இன மணி நகர் அரிது உவந்ததே.
46
   
மரியாளின்புலம்பலும் வேண்டுதலும்
 
340கார்க்கடை உரும் என முரசம் கால் ஒலி,
ஈர்க்கு அடை கணை என இரு செவிப் புக,
போர்க் கடை என மனம் புலம்பி மாமரி,
சீர்க்கு அடை பிரான் அடி இறைஞ்சிச் செப்புவாள்:
47
   
 
341“எள் ஒழிந்து, உனது தாள் இறைஞ்சி, நாள் எலாம்
தெள் ஒளிர்ந்து உயர்ந்த இத் தேவ கோயிலின்
நள் ஒளிந்து இருப்ப என் நசை அறிந்து உளாய்,
உள் ஒளிந்ததும் எலாம் உணரும் நாதனே!“
48
   
 
342தீயினும் சுடும் மணம், செய்க என்றாய் அது
வாயினும் மடவரல் மறுக்கல் ஆம் கொலோ?
வீயினும் கொடியது இவ் வினையினால் உளம்
காயினும், திரு உளம் கனிவு என்று ஆம் அரோ.
49
   
 
343கடி செயும் காலையும் கன்னி காக்க நின்
அடி செயும் உறுதியால் அகத்தில் ஓங்கி, வான்
குடி செயும் அவரை நேர் குணித்த என் துணை
படி செயும் திரு நகப் பயன் பகுக்குவாய்.
50
   
 
344“பார் படைத்தன திருப் பற்று இலான், அருட்
சீர் படைத்தன நலம் திளைப்ப, கற்பு எனும்
பேர் படைத்தன வரம் பெறத் தந்து ஆயினான்,
சூர் படைத்தன எனைத் துணைக் கொள்வு ஆம் அரோ.“
51
   
 
345“உடைப்பதற்கு அருந் துயர் உயிர்த்த வாழ்வுகள்
கிடைப்பதற்கு உரித்துணை கிடைப்பக் கேட்கிலன்.
துடைப்பதற்கு அருந் துகள் துடைத்து, நின் அருள்
படைப்பதற்கு அறத் துணை பணிக்குவாய்,“் என்றாள்.
52
   
ஆண்டவன்சூசைக்கு வரம்அருளல்
 
346என்று, பெய் மாரியால் எழுந்த வெள்ளம் ஆய்,
சென்று மொய் வேலை மேல் திரண்ட ஆறு போல்,
துன்று துய் மணம் செயத் தெரிந்த சூசை மேல்,
நன்று பெய் வரம் எலாம் நாதன் ஈட்டினான்.
53
   
 
347இன்ன அரு முறைக்கு இவர் இருவர் எய்திய
துன்ன அரும் வரங்களால் துணை இலார், தமுள்
உன்ன அருந் துணைவர் என்று உணர்ந்த நாயகன்,
பன்ன அரு மணம் புணர் பயன் சொல்வாம் அரோ.
54
   
மக்கள்தேவாலயத்தில்கூடுதல்
 
348குணில் உற்று ஒலி உற்று அகல் கோமுரசின்
பணி உற்று, மணப் பயன் ஆக நசைத்
துணிவு உற்று, அரசு ஆயின சுற்றம் உளார்
அணி உற்று எவரும் கடிது அண்டினர் ஆல்.
55
   
சூசை ஆலயம் எய்துதல்
 
349குரு மா முனி கூறிய ஏவலினால்,
மருவா நசை ஆ மணமும் தவிர்கின்ற
அரு மா தவன் ஆயின சூசை, பணிந்து
இரும் மா மணி ஆலயம் எய்தினன் ஆல்.
56
   
 
350குரு மா மணியால் ஒளிர் கோயிலினுள்
திரு மாதினை வேட்டும் எலாரும் உற,
பொருவாது ஒளிர் பூங் கொடியைக் கொணர்வான்
அரு மா முனி அங்கண் அறைந்தனன் ஆல்.
57
   
திருமண நினைவால்மரியாள்துயளுறுதல்
 
351தன்னில் தவிராத் தகு பற்று அளவாய்
உன்னில் தவிராப் பயம் ஓங்கிய போல்,
கன்னிக்கு அழிவு ஆகும் எனா கதனம்
துன்னிக் கலுழ்வாள் சுடர் சுந்தரியாள்:
58
   
 
352“மின்னும் திரை சூழ் விரி மேதினி மேல்
துன்னும் உயிரும் தொடர் காவலன் நீ
என்னும் பொழுது, என் இறை நின்னை அலால்,
பின்னும் உயிர்க் காவலன் ஆர் பெறவோ?“
59
   
 
353“இறையோன் அடி எய்திய வானவரே,
பொறையோர் பொருவாத் துயர் பூத்து அயர்வான்,
கறை ஆகுலம் அற்று உயர் கன்னியர் ஊடு
உறை யான், பெயரத் தகும் ஓர் விதி ஏன்?“
60
   
 
354“தாது ஊது அளி சூழ் தவழ் தண் தொடையால்
மாது ஊடு மனம் சுட, வானவனே,
மீது ஊது ஒலி இங்கிதம் மேவு உரையால்
நீ தூது நடந்த இது நேர் பயனோ?“
61
   
 
355“பரனோ பரிவு அற்று, அருளே பணியான்;
சுரரோ மணம் ஆகுப தூது அறைவார்;
நரரோ உதவார்; நறு மா மணமே
வரலோடு வரும் பயன் மாட்சி இதோ?“
62
   
 
356“நிழல் ஆலயம் நீங்கும் மணப் பயனால்,
சுழல் ஆயின என் துயர், நாளும் எலாம்
புழல் ஆயின புண் நுழையப் பொதுளும்
தழலாய் உருகும் தமியேன் இனியே.“
63
   
 
357மனனே, மறவாது வருந்துதியே.
கனலே உணு கண்கள், கலுழ்ந்துதிரே
எனவே உளம் ஏங்கி, அறாது அழுவாள்
புனலே பொருவா, விழி பொங்கு இழையாள்.
64
   
இறைவன்மரியாளைத் தேற்றுதல்
 
358உள் உற்ற அணங்கில் அணங்கு உளைய,
தெள் உற்ற அருந் தெருள் தேர்ந்து இறையோன்
அள் உற்ற அழுங்கும் அழுங்கல் அரும்
கள் உற்ற கனிந்த சொல் உற்றனன் ஆல்.
65
   
 
359“அருள் எஞ்சு இல நெஞ்சு அவிரும் சுதையே,
மருள் நெஞ்சு ஒரு வஞ்சனை அஞ்சியதோ?
திரு எம் சரண் அஞ்சலியும் செயும் நின்
தருமம் செறி தஞ்சமும் எஞ்சியவோ?“
66
   
 
360“கொன்னே குலையேல், குலையேல்! குழைவு ஏன்
நின் ஏசு இல கன்னி நினைத்த விதத்து?
என் ஏவலினால் துணை எய்தினனே,
கல் நேரிய கன்னிமை காக்குவான் ஆல்.“
67
   
 
361“நீ ஆவிய நீர்மையின் நேர் துணைவன்
ஓயாத தவத்து உனொடு ஒத்தனன் ஆய்,
தூய் ஆரினும் ஊங்கு அருள் தூயனும் ஆய்,
வீயாது ஒளிர் கன்னிமை வீற்று இயல்பு ஆம்.“
68
   
 
362“குலையேல், குலையேல்! குழையா மரபால்,
கலையே தரு காட்சி கடந்த அறிவோடு,
அலையே நிகர் ஆம் துணை ஆகும் அவன்
நிலையே, நெறியே, எழ நீ அறைவேன்.“
69
   
சூசையின்இயல்பு கூறுதல்
 
363“தாய் செய் சிறை நீக்கு முன்னர், தரையில்
பேய் செய் சிறை நீத்து அருள் பெற்று, உடல் ஆம்
நோய் செய் சிறை நூறுப, கன்னி அறா
நீ செய் சிறை நேர், பொறி காத்தனன் ஆல்.“
70
   
 
364“அடை ஆரணம் நேர், அறம் நேர் வடிவான்;
கொடை ஆகையினால் குளிர் கார் அனையான்;
உடை ஞான அறிவால் ஒளி மானம், அருள்
கடை ஆவது இலால், கடல் நேரினன் ஆல்.“
71
   
 
365“தீ ஒக்கும் வனம் தெளியாத தவம்,
தாய் ஒக்கும் அருள் தகை வென்ற தயை,
மீ ஒக்கும் அவர்க்கு உரி மேதை உளன்,
நீ ஒக்கும் நிலைக்கு உரி நீர்மையினான்.“
72
   
 
366“விண் ஆரும் அவர்க்கும் வியப்பு உறவே,
கண் ஆதி எலாப் பொறி காக்குதலால்,
தெண் ஆழியினும் திரைகொள் நசை அற்று,
எண்ணான், இவறான் எனை நீங்கும் எலாம்.“
73
   
 
367“எனக்கு ஆவல் இயற்றிய யாரினும் உள்
மனக் காவலினால் மறவாப் பிரியன,்
தனக்கு ஆய வரத்து அமரர்த் தகைமேல,்
உனக்கு ஆகுவதற்கு உரி காவலனே.“
74
   
மரியாள் தேறுதலடைதல்
 
368என்றான் இறையோன், களி கூர்ந்து இவளும்
வன்தாள் தொழுவாள், தகை வானவரும்
சென்று, ஆர் விழி நீர்த் திரை மாற்றி அறாத,
அன்று ஆர் உரன் ஆகி எழுந்தனளே.
75
   
 
369ஈறு ஒப்பு அளவு ஆதி யாவும் இலாது
ஆறு ஒப்பு இல நீர்மையினான் அருள் உள்
தேறு ஒப்பு இல ஊக்கமொடும் தெருளாள்
நூறு ஒப்பு இல தோழியர் நோக்கினளே.
76
   
மரியாளை அலங்கரிக்கத் தோழியர்ஆடையணிகள் கொணர்தல்
 
370இடி ஒத்து, அலர்ந்த எழில் ஏந்து சிலம்பு, இரட்ட,
குடி ஒத்து, அலர்ந்த இருள், வைகிய கூந்தல் நல்லார்,
முடி ஒத்து அலர்ந்த மதி நாண, முதிர்ந்த பைம் பொற்
தொடி ஒத்து, அலர்ந்த கொடி வேய்துப, சூழ்ந்து அடைந்தார்.
77
   
 
371வான் வைத்து அவிழ்ந்த மலர் போல்
  ஒளிர் மீன்கள் மானத்
தேன் வைத்து அவிழ்ந்த சினை நாடு
  அளி சேர்ந்து விம்ம,
கான் வைத்து அவிழ்ந்த கடி மாலை
  கனிந்து சூழ,
மீன் வைத்து அவிழ்ந்த விழியார்
  சிலரே, மிடைந்தார்.
78
   
 
372கடியாய் அலர்ந்த ஒளிர் காந்தளின் நேர் கரத்தில்
இடியாய அணிப் பொன் வளை இட்டு அணிவாரும் அல்லால்,
கொடி ஆய தண்ண நறை, நானமொடும், குளிர்ந்த
பொடி ஆய சுண்ணம் சிலர் பூசிடவும் பொதிர்ந்தார்.
79
   
 
373செம் பொன் சிலம்பும், செருவோடு சிலம்பல் அன்றிப்
பைம் பொன் சிலம்பும் பல கிண்கிணியும் படர்ந்த
அம் பொன் சிலம்பும் மணிமேகலை யோடு, பொற்பு ஆர்
அம் பொன் சிலம்பும் கலனும் சிலர் கொண்டு அடைந்தார்.
80
   
 
374நல் வாசம் உண்ட நறு நெய் நனி பூசி, நானம்
கொல் வாசம் உண்ட குளிர் பூம் புனல் ஆட்டி, வெந்த
பல் வாசம் உண்ட புகை பாய்ந்து அவிர் பாலின் ஆவி
வெல் வாசம் உண்ட துகில் ஏந்தினர் வேய்ந்து அடைந்தார்.
81
   
மரியாள்அலங்கார ஆடையணிகளை வெறுத்தல்
 
375கடு கொண்ட கண்ணின் கவினார்
  கனிவு ஆய ஆசை
கொடு கொண்ட யாவும் இவள் கண்டு,
  குளிர்ந்த சொல்லால்,
உடு கொண்ட சென்னி ஒசித்து,
  “ஒல்லை அகல்மின்!“என்னா,
நடு கொண்டு அகன்று, நகை கொண்டு
  நடந்து போனாள்.
82
   
 
376“தூங்கு ஆய மாலைத் தொடையோ மணவாது; தூய் பொன்
வீங்கு ஆய ஆரக் கலனோ மிளிராது. எந்தை
பாங்கு ஆய பாதம் பணியே; அழகே, அது அல்லால்,
ஈங்கு ஆய யாவும் இழிவு.“ என்று விரைந்து அகன்றாள்.
83
   
 
377விண் ஆவி ஆய கதிர் தூசு என வேய்ந்து, விண் மேல்
கண் ஆவி ஆய கடி மீன் முடி கவ்வி, நல் தாள்
தண் ஆவி ஆய மதி தாங்கிய தாரின் மேலும்
பண் ஆவி ஆய குரலாட்கு ஒரு பாங்கு நன்றோ?
84
   
 
378வஞ்சம் செறிந்த நிலம் மண்டிய பூண் அனைத்தும்,
கஞ்சம் செறிந்த அடியாள், கழிவாய்க் கடிந்தே
அஞ்சம் செறிந்த நடை ஆடி அகன்று, அனந்தன்
விஞ்சம் செறிந்த மிளிர் வான் அணி வேய்ந்து அணிந்தான்.
85
   
 
379வான் ஆரும் எய்தி, அறமே
  மணி என்று அணிந்தார்;
மீன் ஆரும் ஓதி மிளிர் தோடு
  என வேய்குகின்றார்;
தேன் ஆரும் மாலைத் திரள்
  என்று அருள் சேர்க்குகின்றார்;
கான் ஆரும் வாய்ந்த தவமே
  கலையாய் வனைந்தார்.
86
   
மரியாள் கோவில் புகுதல்
 
380அலின் ஆர் ஒளிர் ஆரிய தாரகையுள்
மலி பால் ஒளி கால் மதி போவது போல்,
ஒலி ஆய சிலம்பு உடை மங்கையருள்
பொலி ஆலயம் ஊடு இவள் புக்கனளே.
87
   
 
381அடர் அற்று அடி வைத்தனள், அண்டிய வாய்,
சுடர் அற்ற, இருளும் துகளும் வெறியும்
படர் அற்று, இசை பன் எழு காதம் அகன்று,
இடர் அற்று, இழிவு அற்று எழு சீர் அடியாள்.
88
   
 
382வையம் பொருவா மடவாள் வர, அம்பு
எய்யும் கொடு வேளொடு, காம் இழிவும்
பொய்யும் பவமும் அகலும், புசியாத
ஐ உண் அலர் கண்டு அளி நீங்கின போல்.
89
   
 
383காமக் கனல் ஆற்றின நோக்கிய கண்;
வீமக் கருள் விட்டன மூடிய கண்;
ஏமக் கதி காட்டும் விழித்த இரு கண்,
வாமக் கதிர் வாட்டும் களித்த கணே.
90
   
 
384வில் ஏவிய கோல் விழியார் அறை தீம்
சொல்லே உயிர் உண் எனவே சொலுவார்.
கொல் ஏதம் இலாக் குதலைச் சொல் நல்லாள்
நல்லே உயிர் காக்கும் நவின்ற சொலால்.
91
   
 
385பல்லும், விழியும், பவளத்து இதழும்,
சொல்லும் கனி அம் சொலும், ஒள் நுதல் கொள்
வில்லும், கரமும், விரி சீறு அடியும்
செல்லும் திசை செல் உறழ், செல் அருளே.
92
   
 
386அரிதாய் மடவாள் வர, ஆங்கு எவரும்
பரிவாய் விழி விண்டனர் பார்க்குதலும்,
எரி வானில் உலாம் மதி எய்திய கால்,
விரி ஆம்பல் விரைச் சினை விண்டமை போல்.
93
   
மரியாளைக்கண்ட மக்களின் மகிழ்ச்சி
 
387அரு ஞானமும் மானமும் ஆய் அறிவும்
இரும் ஊக்கமும் ஆக்கமும், ஆங்கு எவரும்
கருதா வழி, கண் வழி மேய்ந்து, மனம்
தெருள் தாவு அருள் தேர்ந்து தெளிந்தனரே.
94
   
 
388வீடு ஆடி விளங்கு எழில் வேய்ந்த முகத்து
ஆடு ஆடி விரும்பி அழுந்திய கண்,
ஏடு ஆடி வடிந்த இளங் கனி தேன்.
ஊடு ஆடி உவந்த அளி ஒத்தன ஆம்.
95
   
 
389“குறை ஈர்ந்து, உயர் வான் குடி ஆய இவள்
கறை ஈர்ந்த எழில் காண, எமக்கு இரு கண்
முறை ஈந்து அலது, ஆயிர கண் முதல் ஆம்
இறை ஈந்தனனேல், இனிது!“ என்று அறைவார்.
96
   
 
390“மறை செய்த வனப்பு என வாய்ந்த நலாள்,
மிறை செய்தது இலா விழியும் உளமும்
சிறை செய்தன காலும், நலம் செயும் நல்
முறை செய்தன ஏது!“ எனவே மொழிவார்.
97
   
 
391“எள்வார் இல இக் கவினால் எமது உள்
கள்வு ஆய், களி நாம் பெறல் என்! களவைக்
கொள்வாரும் அலாது, கொடுப்பவரோ
உள் வாரிய இன்பு உளர்!“ என்று அறைவார்.
98
   
 
392“அருகு ஆயின வான் அழகு ஆர் வதனம்
பருகு ஆயின எம் விழி பார்த்தலின், நாம்
உருகாது அளி உற்றிலமேல், எமது உள்
திருகாதன கல் திரள்!“ என்று அறைவார்.
99
   
 
393“அவளோடு இனிதாய் மணமே அமைவான்,
உவமோடு, இறையோன் உளம் ஒத்தனனோ?
தவம் ஓகையனோ? தகவு ஆனவனோ?
எவனோ அவள் எய்துவன்! என்று அறைவார்.
100
   
 
394“மின் பட்ட மடந்தை விடங்கம் உறீஇ,
மன் பட்ட மணம் பெறுவான், முதலோன்
நன் பட்டன தாள் நலம், வீட்டு நயம்,
பின் பட்டனன் வான் பெறும்,“ என்று அறைவார்.
101
   
சீமையோன்கோவிலிற்கூடிய ஒவ்வொரு வாலிபர்கையிலும்
கோல்கொடுத்தல்
 
395அறைவார் அறை நீக்கி அருந்தவன், ஆங்கு
உறைவார் கையிலே தனி ஒவ்வொரு கோல்
இறை வாய் முறை என்று அதை ஈந்து எவரும்
முறை வாய் விதி கேட்ப மொழிந்தனன் ஆல்.
102
   
சூசையின்நடுக்கம்
 
396மொய்ப் பட்டு அலை நீர் முடுகும் தலம் மேல்
மெய்ப் பட்டு எதிர் அற்று ஒளிர் மின் கொடியைக்
கைப் பட்டு உறல் ஓர்ந்து களித்து எவரும்,
மைப் பட்ட வளன் தனில் அஞ்சினன் ஆல்.
103
   
 
397‘திறல் ஆர் திரு நீரிய தீம் கொடியைப்
பெறல் ஆக எனக்கு ஒரு பேறு உளதோ?
துறவு ஆய், மணம் நீக்குப சொல்லிய பின்,
உறல் ஆம் மணமோ? என உள்ளினன் ஆல்.
104
   
இறைவன்சூசையை மணவாளனாகக்காட்டுதல்
 
398உள்ளும் பொழுதே, இவன் ஓங்கிய கோல்
கள்ளும் கடியும் பொழி காமர் இதழ்
விள்ளும் செழு வெண் மலர் பூத்தமையால்,
மள்ளும் விரை ஆலயம் மல்கியதே.
105
   
 
399“காம்பா அணி காட்டிய கன்னி நலத்து
ஓம்பா அணி இவ் அணி ஓர்ந்த பிரான்,
நாம்பா அணி நம்பியை நல்கிட, ஓர்
தேம்பா அணி பூங்கொடி சேர்த்தன்.“ என்றார்.
106
   
 
400செழுந் தூய் துகிர் சே அடி, பொன் நிறம்வாய்,
விழுந் தூவிய வெண் சிறை வேய் புறவம்,
கொழுந் தூவி கொடு ஓங்கி, வளன் தலை மேல்
எழும் தூவியை நீட்டி இருந்ததுவே.
107
   
 
401‘கண்ணா மணம் நான் செயல் ஆம் கசடு‘என்று,
உள் நாணிய சூசை உளைந்து உருக,
விண் நாதன் உரம் தரவே வெரு அற்று
எண்ணாதன காட்சியை ஈந்து அறைவான்:
108
   
 
402“துறவு ஆதல் தொடர்ந்து மணம் தொடராது
உறல் ஆவது எனோ? திரு என் உளம் ஆய்,
அற ஆலயம் ஆய அணங்கினை நீ
பெற, ஆவிய பெற்றி அதே பெறுவாய்.“
109
   
 
403என்ற ஊடு ஒலி ஆய், இள வெண் புறவும்
தன் தூவி புடைத்து உயர் தாவிய கால்,
வன் தூய் ஒளி வீழ்ந்து, வளன் தலை மேல்
மின் தூவி, நிலா முடி வேய்ந்ததுவே.
110
   
 
404வேய்ந்தான் ஒளி வேந்து என; வேய்ந்தது எலாம்
ஆய்ந்தான்; அருளே அளிய அமுதே
தோய்ந்தான் கடல் தோய்ந்து என; உம்பரினும்
வாய்ந்தான்; தொழுதான் மது வாகையினான்.
111
   
 
405வண் ஆம் கவின் ஆர், வயது ஈர் எழு கொள்,
தண் ஆம் கலை தேய்த்து ஒளிர் தாள் கொடியை,
எண் நாங்கொடும் ஓர் வயது ஏகி மணம்
தெண் ஆம் கொடியான், செய வான் விதியே.
112
   
மக்கள் அனைவரும்மணமக்களை வாழ்த்துதல்
 
406வடிய மலி மது நுகர அளி இனம்
  மலரை மருவு அன வழி எனா,
நெடிய கொடியுடன், உரிய வர நிலை
  நிகர் இல் நிறை அமை வளனின் மேல்,
படிய விழி விழி, படிய மனம் மனம்,
  இனிதின் விழ, விழு பரிவுடன்,
“முடிய வரு மணம் உரிய துணை இவன்!“
  முறையின் மொழிகுவர் எவருமே.
113
   
 
407அருப்பு விரை மலர் தளிர்த்து நறு மது
  விழ்த்த வளன் உடை கொடியினை,
“கருப்பு விலின் இடை தொடுத்த பசு மலர்
  கதிர்த்த பகழிகொல்?“ என அவர்,
“நெருப்பு விட அது, குளிர்ச்சி விடும் இது;
  நிகர்த்த வினை அலது.“ என இவர்,
“விருப்பு மலி அன தவத்தில் இணை அற
  விதித்த விருது“ என எவருமே.
114
   
சூசையும்மரியும்சீமையோனை வணங்குதல்
 
408அன்று நசையொடு நின்ற அனைவரும்,
  அங்கண் அமைவன காணலால்,
கன்று மனம் எழ, இன்பம் மலி கடல்
  கன்றி முழுகிய வேலையே,
நின்று குரவனும், மன்று அக்கொடியொடு
  நின்ற வளனினை, ‘வா‘எனா,
சென்று துணை அடி துன்றி வளன் அவை
  சென்னி மிசை தொழுதான் அரோ.
115
   
 
409நாண நளினமும், நாண மதியமும், நாண அனையவும், நாரியைக்
காண மனம் எழு ஞான ஒளியொடு காமம் அற, உறு காதலாய்,
கோண மரபு அறு ஞான குரு அடி கோதை என அணி கோதையும்,
யாணர் ஒளியொடு சாயு பிறை நுதல் ஈசன் அடி உற ஏத்தினாள்.
116
   
சீமையோன்திருமணம் முடித்து வைத்தல்
 
410வாய்ந்த ஒளி இரு வான சுடரினை
  மானும் இருவரை, “வாழ்க!“என,
சாய்ந்த முனிவரன், ஆசி மொழியொடு
  தாவி அணைகுபு தாங்கினான்;
“ஆய்ந்த இறையவன் ஏவு விதி முறை
  ஆகி, இணை என ஆசியால்
வேய்ந்த மணம் இனி மேவி முடி தரல்
  வேத முறை“ என ஓதினான்.
117
   
 
411காந்தள் மிசை ஒரு தாமரையின் அலர்
  காணல் என, அரு மா தவன்
காந்தன் விரியு கை நான மலர் மிசை
  காந்தை கரம் அணிவு, ஆகி “வான்
வேந்தன் உமது உரி தாய முறை உரு
  மேவி வர!“ எனும் ஆசியோடு
ஏந்த, மறை முறை ஏது இல் முடிதர,
  ஏது இல் அரு மணம் ஆயதே.
118
   
மங்கல முழக்கம்
 
412முடுகு முரசு ஒலி முடுகு முழவு ஒலி
  முடுகு முருடு ஒலி முடிவு இலா,
கடுகு பறை ஒலி கடுகு கலம் ஒலி
  கடுகு கடம் ஒலி கனிவு எழா,
தொடுகு குழல் ஒலி தொடுகு குரல் ஒலி
  தொடுகு துதி ஒலி தொடுதலால்,
படுகு முகில் ஒலி படுகு கடல் ஒலி,
  படுதல் இல மணம் ஆயதே.
119
   
 
413“வாழி, அற உரு, வாழி, மறை உரு,
  வாழி, திரு உரு மானுவீர்!
வாழி, எமது உயிர், வாழி, உலகு உயிர்,
  வாழி, உயிர் உயிர் போலுவீர்!
வாழி, அருள் நிலை, வாழி, தவ நிலை,
  வாழி, நில நிலை ஆயினீர்!
வாழி!“ என இவர், “ வாழி“ என அவர்,
  வாழும் அரு மணம் ஆயதே.
120
   
சூசைமரியின்திருமணப்பயன்
 
414பொறுமை அறு பகை பொதுளும் பழி அமர்
  பொதுளும் சினம் இடர் புரை அறா,
நறுமை அறு சலம் நணுகு மறம் மருள்
  நணுகும் இருள் நிசி நயம் அறும்
சிறுமை உறுதுயர் செறியும் மடி மிடி
  செறியும் வெருவு இழி சிலுகு நோய்
வறுமை மறு பவம் அனைய இவை இனி
  மடிய, அரு மணம் ஆயதே.
121
   
 
415நிறையும், ஒளியொடு திருவும், நயமொடு
  நிதியும், நனியொடு நெறி வழா
முறையும், மகிழ்வொடு கலையும், அறிவொடு
  முயலும், வலியொடு முரண் அறாப்
பொறையும், அளியொடு பொருளும், வரமொடு
  புகழும், நலமொடு புரை இலா
மறையும், அருளொடு தவமும் அறமொடு
  வளர, அரு மணம் ஆயதே.
122