ஈரறம் பொருத்து படலம்
 
சூசை, மரியின் அச்சம்
 
454சுலவு உற்ற திரை ஆழி
  சூழ் புவனம் தாங்குகின்ற
அலைவு உற்ற உயிர்க்கு எல்லாம்
  ஆதரவு ஆம் திரு மணத்தால்,
நிலவு உற்ற பதத்தாளும்
  நீர் மலர்க்கோல் பூமானும்
உலைவு உற்ற உளத்து அஞ்சி
  உளைந்து இரங்கி வருந்தினரே.
1
   
உள்ளக்கருத்தை உரைக்க நாணம்
 
455தேன் வழங்கும் பூந் துறை
  ஆம் செழு வாகை ஏந்து தவன்,
வான் வழங்கும் இறையோன் தான்
  மனம் எழ முன் உணர்த்தமையால்,
மீன் வழங்கும் முடியாள் தன்
  விளம்பு அரிய மாட்சியொடு,
கான் வழங்கும் தவப் புங்கம்
  கணித்து, அவளை வணங்குவன் ஆல்.
2
   
 
456இருள் நீக்கும் துறவு ஆக
  இதய நசை தூண்டு எனினும்,
மருள் நீக்கும் கோல் தொடி தன்
  வாள் முகத்தால் எஞ்ஞான்றும்
கருள் நீக்கும் கதிர் உயிர்த்த
  காட்சியினால் உளம் வெருவி,
அருள் நீக்கும் பொறி செறித்தோன்
  அஞ்சி, உணர்ந்தவை சொல்லான்.
3
   
 
457மின்னிய தாரகை முடியின்
  விளங்கு அரிய காட்சியினால்,
துன்னியது ஓர் ஆவி படத்
  தூய பளிங்கு ஆசு உறும் என்று
உன்னியதால், ஆடவரோடு
  உரைப்பு அறியா மடவாளும்,
மன்னிய தார்த் துணையொடும்
  தன் மனம் காட்ட நாணுவள்ஆம்.
4
   
மரியாள்இறைவனை வேண்டுதல்
 
458“ஒப்பு அடையாத் துணை தந்து,
  என்உடைக் கன்னி காப்பான் என்று,
அப்பு அடை ஆர் கலி என்ன
  அலைந்த மனத்து உரம் செய்தாய்;
வெப்பு அடையா மனம் குளிர,
  விதித்தது எலாம் வெளியாகும்
தப்பு அடையா முறை அருள்தி
  தற்பரனே!“ எனத் தொழுதாள்.
5
   
சூசை தன் உள்ளக்கருத்தை உரைக்கத் துணிதல்
 
459வளம் ஆளும் திரு மடந்தை
  வருத்தம் கண்டு, இரக்கு உறீஇ, வான்
தளம் ஆளும் அரசு என்பான்,
  தவிர்க்கு அரிய வயத் தன்மைத்து
உளம் ஆளும் முறை தன்னால்,
  உரையாதும் உளம் தூண்டி,
அளம் ஆளும் மலர்க் கொடியோன்
  ஆய்ந்து அறையத் துணிவு ஈந்தான்.
6
   
 
460‘உற்ற ஆறு உளத்தில் அறிவு
  உறாது, உற்ற துணிவு ஓங்கி,
சொற்ற ஆறு அறியேனேல்,
  துகள் துடைத்த எந்தை வரம்
பெற்ற ஆறு உரைத்து, அதற்குப்
  பிரியாத ஓர் கைம்மாறும்
உற்ற ஆறு இவட் கேட்பேன்‘
  என வளன் முன் மொழி கொண்டான்.
7
   
 
461“வையகத்தார் வானகத்தார் வணங்குகின்ற
  வான் இறையோன்
மெய் அகத்தால் அருள் உணர்ந்து,
  வெய்து அரிய துணைவி எனப்
பொய் அகற்று ஆய் இழை உன்னைப்
  புன்மை அற, எனக்கு ஈதல்
மொய் அகத்தால் உணர்ந்து, அடியேன்
  முயலும் கைம்மாறு உண்டோ?“
8
   
 
462“மொய்ப் படு வெண் திரை ஆழி
  மூழ்கி எழும் பதங்கனது
செய்ப் படு வெங் கதிர் தாங்கித்
  தெளிந்து அத்தம் கதிர் விடும் போல்,
கைப் படு நன்று உளம் ஏய்ந்து,
  கைம்மாறாய் நன்று செயும்
மெய்ப் படு நல் முறை நீயே விதித்து
  அருள்தி.“ என்று அறைந்தான்.
9
   
மரியாள் சூசையிடம் பேசத்தொடங்குதல்
 
463இன் இசையும், கோல் தேனும்,
  இன் கனியும், கழைப் பாகும்,
பன் இசையும், பாகு ஊறும்
  பணி யாழும், மாங் குயிலும்,
அன்னவையும் நாண இனிது
  அம் சொல் நலாள் உளம் நாணி,
சொன்னவை கொண்டு, உணர்வு உரைப்பத்
  துணிந்து துவர் வாய் மலர்ந்தாள்:
10
   
 
464“மின்னை அடை கடல் சூழ்ந்த
  வியன் உலகம் பரந்து அளிக்கும்,
என்னை உடை இறைவன் அலால்,
  என் உயிரை இனிது அளிப்பப்
பின்னை அடைவது ஓர் காவல்
  பேதை பெற வேண்டியதேல்
உன்னை அடை யான் அடைந்த
  உவப்பு உரைப்பப் பாலதோ?“
11
   
 
465“இவ்வாறு ஒன்று அருள் புரிந்தே
  இனிது என்னைக் காத்து இறையோன்,
வவ்வு ஆறு ஒன்று இல யாரும்,
  மலி நன்றி யாவினும், நான்
ஒவ்வு ஆறு ஒன்று இல நன்மை
  உற்றதின் கைம்மாறு ஆக
செவ் ஆறு என்று உளத்து ஓர்ந்த
  சிறிது உரைப்பேனோ?“ என்றாள்.
12
   
சூசை, மரியாளின் கருத்தைக் கூறுமாறு கேட்டல்
 
466கான் பயிலும் முறுக்கு அவிழ்
  செங் கமலம் தேன் துளித்தது என,
மீன் பயிலும் முடியாள் வாய் விரித்து
  உரைத்த தீம் சொல்லால்
தேன் பயிலும் மலர்க் கொடியோன்
  செவி இன்பு உண்டு, ‘அறைதி‘என,
தான் பயிலும் விடை ஆகி,
  தாழ்ந்து இவளும் மொழிகின்றாள்:
13
   
மரியாளின்மறுமொழி
 
467தணிக்க அரிது ஆம் ஐம் பொறிகள்
  சார் பொருள் சார்ந்து, உளம் பிரிந்து,
துணிக்க அரிது ஆம் விழைவு ஆதல்
  இளமையின்கண் தோன்றுதலால்,
கணிக்க அரிது ஆம் அருள் புரிந்த
  கடவுள் ஒன்றே மனம் சேர,
குணிக்க அரிது ஆம் இருள் ஈனும்
  கோது இனிமை நசை வெறுத்தேன்.“
14
   
 
468“நசை அற்ற மனம் ஓங்கி,
  நாயகற்கே பலியாக
வசை அற்ற கன்னிமையின்
  வளம் காக்க நினைத்தேன். இத்
திசை உற்ற காவலன் நீ சேர்ந்து
  அதனைக் காக்குதி.“ என்று
இசை உற்ற மதிப் பதத்தாள்
  இணை அடி தாழ்ந்து இறைஞ்சினளே.
15
   
 
469மீது இடை ஊர் பானு உடுத்தாள்
  விளிம்பிய சொல் கதிர் வெள்ளம்
காது இடை ஊர்ந்து, இதயச் செங் கமலம்
  முகை மேல் படவே
தாது இடை ஊர் அமுது என நீர்
  தடக் கண் பெய்து, உளம் மலர்ந்து,
போது இடை ஊர் மணக் கொடியோன்,
  பொங்கு அருளால் புகல்கின்றான்:
16
   
சூசை தன்வரலாறு கூறுதல்
 
470“புண் கனிந்த மருந்து ஒப்பப்
  பொங்கு கருணாகரியே,
விண் கனிந்த ஒளி இமைக்கும்
  வெஞ் சுடரோன் விரித்து உய்க்கும்
மண் கனிந்த கதிர் இருளை
  மாற்றும் என, இனிது உரைத்த
பண் கனிந்த நின் சொல்லால்
  பாசறை செய் மருள் தீர்த்தாய்.“
17
   
 
471“திரு உளத்திற்கு உணராது ஒன்று
  ஈங்கு உண்டோ? செய்ம் மணத்தோடு,
இரு உளத்திற்கு உணர்வு ஒன்றாய்
  இசைத்த முறை நன்று அறியக்
கரு உளத்திற்கு உணர்வு உண்டோ?
  கருத்து உயர்ந்து தூண்டும் நசை
வரு உளத்திற்கு, கருணை வலோன்,
  வாய்ந்த தயை வழங்குவனே.“
18
   
 
472“ஆசு அடை பூவனத்து உன்னை
  அமலன் எனக்கு அளித்ததனால்,
மாசு அடை பூரியர் ஒத்த என் மனம்
  மலரும் என்று உணர
பாசு அடை பூங் கொடி தந்து,
  பாசறை தீர் உரம் செய்யும்
தேசு அடை பூண் அறிவு உன்னைச்
  செழுந் துணையாய்த் தந்தனனே.
19
   
 
473“அணித்து ஆக அரிது ஆய
  அருள் புரிந்த நாயகன் தாள்
பிணித்து ஆக நசையொடு, நான்
  பெறும் வயது ஓர் ஈர் ஆறு
நணித்து ஆகி , சாந் தனையும்
  நறும் கற்பு நலம் காக்கக்
குணித்து ஆகி, கடவுள் தனைச்
  சாட்சி எனக் கூறல் உற்றேன்.“
20
   
 
474“இளி செயும் என்று, இம் மணத்தை
  ஏவிய கால், வெரு உற்றேன்,
நளி செயும் என் உயிர் நாதன்,
  நவை அறும் நின் கன்னிமையால்,
அளி செயும் என் கற்பு, இனிதாய்
  அளிப்பதற்கு அன்றோ மணம் ஆய்,
களி செயும் என் இறைவற்கு ஓர்
  கைம்மாறு எது? அறிகிலன் யான்.
21
   
 
475“கைம்மாறும் அரிது எனில், அக்
  கடன் கழிப்ப, வீவு அளவும்,
பொய்ம்மாறும் காட்சியினால்,
  பொற்பு உயர் எம் கற்பினை யாம்
மெய்ம்மாறும் செயிர் இன்றி வெய்ய
  மலர் எனக் காத்து,
மைம்மாறும் திருத் தகும் தாள்
  வாழ்த்திடல் நன்றே.“ என்றான்.
22
   
 
476என்பதும் ஆங்கு உள் உருக
  இவர் இன்பக் கடல் மூழ்கி,
அன்பு அது வாழ் இல்லறத்தோடு
  அணிக்க அரிய துறவறத்தை,
முன்பு அது ஆங்கு இல முறையான்
  முயன்று தமில் சேர்த்தமையால்,
பின்பு அது வான் அதிசயிப்ப,
  பெயர்ப்பு அரிய மாண்பு அடைந்தார்.
23
   
 
477கண் புலன் ஆதி ஐங் கதவு அடைக்கலான்,
மண் புலன் உளது எலாம் மனம் புகாது, உயர்
விண் புலன் முதல் எலாம் ஆளும்வேந்து இவர்
உள் புலன் தனித்து அடைந்து உவப்பில் ஆளும் ஆல்.
24
   
நசரேத்தூரில்சூசையும்மரியும் வாழ்ந்த விதம்
 
478ஐங் கதவு அடைத்து, அதற்கு அறம் நல் காவலாய்,
தம் கதவு அடுத்த பல் பொருள் தடுத்து, உளத்து
அங்கு அது கொணர் உணர்வுவிட்ட பின், விடைப்
பங்கு அது பகர்ந்து, உளப் பகை அற்று ஓங்குவார்.
25
   
 
479மானமே வேலியாய், வகுத்த சொல் தரும்
ஞானமே தூதனாய், நயப்ப யாவரும்
தானமே தோழனாய், அறிவின் தன்மையால்
வானமே உறையுளாய் மடிவு இல் வாழுவார்.
26
   
 
480எள்ளலைக் கலந்த வாழ்வு இழந்து அகன்று, வான்
வள்ளலைச் சிவணி உள் மலிய வாழுவார்,
அள்ளலைக் கலந்த நீர் கடந்து அருந்து இலா,
தெள் அலைச் சுனை அடுத்து உண்ட சீர்மைபோல்.
27
   
 
481கோல் திருந்தினர்க்கு எலாம் கோன் என்பான் பணி
நூல் திருந்திய முறை நுதலி ஆக்கிய
பால் திருந்து இவர் உளம் பழுது அற்று, ஆண்டகை
வீற்றிருந்து ஆளும் ஆசனத்தின் மேன்மையே.
28
   
 
482வெப்பு அருள் ஆசையை வெறுத்த சீர் கொடு
தப்பு அருள் பொருளினைத் தவிர்த்த ஆண்மையால்,
அப் பொருள் படைத்தனை அடைந்த மாண்பினர்
எப் பொருள் அனைத்திலும் இதயத்து ஓங்கினார்.
29
   
 
483எள்ளும் ஓர் நவை இலாது எனினும், யாக்கையை
உள்ளும் ஓர் தவத்தினால் ஒறுத்த தன்மையார்,
விள்ளும் ஓர் மலர் உலைப் பெய்து வீழும் நீர்
கொள்ளும் ஓர் மணம் எனக் குணம் கொண்டு ஓங்கினார்.
30
   
 
484பொன் ஒளி காட்டும் எரிப் பொறிகளோ? மணி
பன் ஒளி காட்டிய பாடையோ? உரு
உன் ஒளி காட்டிய உளியனோ? உளம்
தன் ஒளி காட்டிய தவம் அது ஏந்தினார்.
31
   
 
485மீன் ஒளி விழுங்கிய மேகம் போல் நசை
தான் ஒளிந்து, இறைவனை உணரும் தன்மையால்
வான் ஒளிர் காட்சியால் வளன் விளங்கி, உள்
பானு ஒளி விழுங்கிய பளிங்கு ஒத்து ஆயினான்.
32
   
 
486உண்ட செங் கதிர் உமிழ் அத்தம் ஒத்து, அவன்
விண்ட செங் கமலம் மான் இதயமே ஒளி
மண்ட, வெங் கதிர் என மலிந்த காட்சியைக்
கொண்ட சொல் இறைவனை வாழ்த்திக் கூறுவான்:
33
   
சூசை இறைவனை வாழ்த்துதல்
 
487“அறக் கடல் நீயே; அருள் கடல் நீயே;
  அருங் கருணாகரன் நீயே;
திறக் கடல் நீயே; திருக் கடல் நீயே;
  திருந்து உளம் ஒளிபட ஞான
நிறக் கடல் நீயே; நிகர் கடந்து, உலகின்
  நிலையும் நீ; உயிரும் நீ; நிலை நான்
பெறக் கடல் நீயே; தாயும் நீ எனக்கு;
  பிதாவும் நீ; அனைத்தும் நீ அன்றோ?“
34
   
 
488“கார்த் திரள் மறையா, கடலின் உள் மூழ்கா,
  கடை இலாது ஒளிர் பரஞ் சுடரே!
நீர்த் திரள் சுருட்டி மாறு அலை இன்றி
  நிலைபெறும் செல்வ நல் கடலே!
போர்த் திரள் பொருதக் கதுவிடா அரணே!
  பூவனம் தாங்கிய பொறையே!
சூர்த் திரள் பயக்கும் நோய்த் திரள் துடைத்து,
  துகள் துடைத்து, உயிர் தரும் அமுதே.
35
   
 
489“விண் கிழித்து ஓங்கி, மின் பயில் கொடிஞ்சி
  வேய்ந்து உயர் தேர்த் திரள் காப்போ?
கண் கிழித்து ஒளி பாய் வாள் திரள் காப்போ?
  கால் தவிர் பரித் திரள் காப்போ?
மண் கிழித்து ஒழுகும் புனல் எனச் சீறி
  மதம் பொழி கரித் திரள் காப்போ?
புண் கிழித்து அடலார் காப்பு அதோ? நீயே
  புரந்து செய் காப்பு அது காப்பே.“
36
   
 
490“வஞ்சினர் உளம் போல் அளக்க அரிது ஆழ்ந்த
  வாரணத்து இடை வழி கீண்டி,
அஞ்சினர் நனையாக் கடக்கவே தந்தாய்;
  ஆறு நின்று அதர் விடத் தந்தாய்;
துஞ்சினர் சுகத்தில் இனிது மூ இளையோர்
  சிகிக்கு இடை குளிர்ந்து உறத் தந்தாய்;
எஞ்சினர் உன்னை நம்பிய தன்மைத்து
  இயற்ற ஒன்று உனக்கு அரிது உண்டோ?“
37
   
 
491“தலை எழும் வரையோடு உயர்ந்த மற்ற எவையும்
  தகர்ப்ப வான் ஏறு உமிழ் முகிலே,
முலை எழும் பயன் நேர் உமிழ்ந்த நீர் குழிவின்
  முடுகி வந்து இனிது உறைவது போல்,
அலை எழும் கடல் சூழ் புடவியில் செருக்கு உற்ற
  அசடரைத் தாழ்த்திய கையால்,
கலை எழும் பயனால் தாழ்குவர் எடுத்து,
  களிபடக் கருணையே செய்வாய்.“
38
   
 
492“வான் முகத்து எழுந்து, ஈங்கு உலகையே நோக்கி,
  மாலி, தன் செழுங் கதிர்க் கோலால்
கான் முகத்து அரிது ஓர் ஓவியம் என்னக்
  கடி மலர் எழுதிய வண்ணம்,
நூல் முகத்து அடங்காத அன்பில், என் தணிமை
  நோக்கி, முள் கான் பொருவு என் உள்
தேன் முகத்து அவிழ்ந்த பூம் பொழில் ஒப்பத்
  திருத்திய நினது அருட்கு அளவோ?
39
   
 
493காய்ந்த போது, அழல் முன் வை என, உன் முன்
  காய்ந்து எரியாதது உண்டோ? கருணை
ஈய்ந்த போது, அருத்தி பின் உற அளிப்பாய்.
  இருள் தவிர் காட்சியால் அனைத்தும்
ஆய்ந்த போது, இருளும் உள்ளமும் கடந்தே,
  அறிகு இலாது ஏது உண்டோ? மனு ஆய்
வேய்ந்த போது அன்றே, என் உயிர் இன்ப
  வேலையில் மூழ்குப செய்வாய்?
40
   
 
494“வளிச் சிறை ஆக, பொங்கு அலை கீண்டி
  மரக்கலம் போயின வழியும்,
ஒளிச் சிறை ஆக விண் திசை கீண்டி
  ஓதிமம் பறந்தன வழியும்,
அளிச் சிறை ஆக நினைவு செல் வழியும்
  ஆய்ந்து, அவை அடைகினும், ஆர்வக்
களிச் சிறை ஆக நீ் வரும் வழியே
  கண்டு, அதை அடைவது பாலோ?“
41
   
 
495“உணங்கிய மரத்திற்கு உயிர் வரப் பெய்த
  உறை என வருதியே உலகிற்கு
இணங்கிய இருளைச் சீக்க வெங் கதிர் கொள்
  இரவி போல் வருதியே எஞ்சாது
அணங்கு இயற்றிய வெம் பழம் பழிக் கூளிக்கு
  அரி என வருதியே உன்னை
வணங்கிய நல்லோர்க்கு அருள் புரிந்து அன்னை
  வரும் என வருதியே“ என்றான்.
42
   
 
496சூல் மலி முகில் பெய் மாரியால் பெருகி,
  சுருட்டு அலை கரை அகட்டு அடங்கா,
தேன் மலி காவும் கழனியும் நிறைப்பத்
  திரை புரண்டு உலவிய வண்ணம்,
நூல் மலி யோகத்து உணர்ந்தவை பொங்கி,
  நுதலிய இவற்றொடு பலவும்
தான் மலி உவப்பின் சாற்றுவான், உயர் வான்
  தளம் தொழும் தவத்து இறை என்பான்.
43
   
 
497தேன் உண்ட உவப்பில், குயில் இரண்டு, உண்ட
  தேன் உமிழ்ந்து எனத் தம்முள் இசலி
பானு உண்ட நிழல் செய் சினை அடுத்து இனிதாய்ப்
  பாடிய வண்ணமே, ஒரு நாள்,
கான் உண்ட கொடியோடு ஆரணம் பூண்ட
  காவலனோடு, உயிர் விளக்கும்
மீன் உண்ட முடியாள், ஞான பல் விதிகள்
  விளம்பிய முறை உரைப்பு அரிதே.
44
   
 
498“பொருள் கொண்டு எவையும் ஆக்கினன், அப்
  பொருளில் குன்றா புகுந்துளன் ஆய்,
மருள் கொண்டு அவை கொள் மாறும் இலா,
  வயிரக் குன்றின் நிலை கொண்டோன்
அருள் கொண்டவர்க்கு அல்லால், உண்டோ
  ஆவல் கொண்ட உயிர்க்கு நிலை,
சுருள் கொண்ட அலை நீர் சூழ்ந்த புவி
  சூழ்ந்தால்?“ என்றான் பூந் துசத்தான்.
45
   
 
499“தேர் மேல் தியங்கும் பதாகை அதோ?
  சிகரி சிந்தும் சிந்து அலையோ?
நீர் மேல் படரும் சைவலமோ?
  நீர் மேல் ஆடு குமிழிகளோ?
தார் மேல் பனியோ? நுண் மணல் மேல்
  தடத்தில் வரைந்த உணர்வு என்றோ,
பார் மேல் கடவுள் நிலை இல்லார்
  பான்மை?“ என்றாள் மீன் முடியாள்.
46
   
 
500“நிலை கொண்டேனும், அந் நிலையால்
  நிலைக்கும் பயன் ஒன்று உயிர்க்கு உண்டோ?
அலை கொண்டு அவியா மொய்க்கடல் போன்று
  அயர்ந்து மயங்கும் மனம் நிலை கொண்டு,
உலை கொண்டு எரித்தாற் போல் நசையை
  உய்க்கும் துயர் அற்று உள் குளிர,
கலை கெண்டவரும் ஈங்கு ஏதோ
  கண்டார்?“ என்றான் பொறி செறித்தான்.
47
   
 
501“கனவில் பிடித்த தனம் என்றோ
  கனம் நின்று ஒல்கிப் பாய்ந்த மின்னோ
சினவித் திளை தீ முன் வையோ
  திளைப்ப உவரில் பெய் உறையோ?
நினவிற்கு ஊமன் உணர் தூதோ?
  நிசி நாடகர் கொள் கோலம் அதோ
என இத் திசை கொள் வாழ்வு அனைத்தும்“
  என்றாள் பிறை தேய்த்து ஒளிர் பதத்தாள்.
48
   
 
502“நிந்தை பொதுளும் வாழ்வு அடை முன்
  நினைவைத் தூண்டும் ஆசை சுடும்
சிந்தை பொதுளும் என்று அடைந்தால்,
  சிந்தை வருந்த வெறுப்பு எய்தும்,
எந்தை, பொதுளும் தாய் வினையால்,
  இரங்கிப் புரிந்த அருள் ஒன்றே
நந்தை பொதுளும், நசை நிறைய
  நயக்கும்“ என்றான் மறை வடிவான்.
49
   
 
503“கனியோ? கழையோ? கழை கான்ற
  கனிந்த பாகோ? கோல் தேனோ?
நனி ஓகையினால் கூட்டியது ஓர்
   நறவோ? உயிர் செய் மருந்தோ? வான்
தனிலோ வழங்கும் அமுது என்றால்,
  தகுமோ எந்தை அருட்கு இவையே?
இனி ஓர் உவமை ஈங்கு உண்டோ?“
  என்றாள் வழுவா மறை மொழியாள்.
50
   
 
504“தேவ அருள் அல்லால், இங்கண்
  தேடற்கு உரிது ஓர் பயன் உண்டோ?
மேவ நயம் செய் மற்று எவையும்
  விரும்புகின்ற நசை தானே,
ஓவ வினை செய்து, அதின் ஊங்கும்
  ஒன்னார் உண்டோ, உயிர்க்கு எல்லாம்
பாவம் மலிதற்கு?“ என்று உரைத்தான்
  பகைப் பேய் நடுக்கும் பரிசு அன்னான்.
51
   
 
505“நக்கிக் கொல்லும் நச்சு அரவோ,
  நயம் செய்து உயிர் உண் கொடுங் கோலோ,
பக்கிக்கு இட்டது ஓர் இரையோ,
  பயனுள் கலந்த நஞ்சு அதுவோ,
புக்கு, இற்று ஒக்க யாவும் அற,
  பொறித் தீ ஒளி என்று, எரிப்பதுவோ
இக்கு இச்சிக்கும் நசை?“ என்றாள்
  எரி வான் நயக்கும் பரிசு அன்னாள்.
52
   
 
506“பவமே பழித்து, பூவனத்தில்
  படர்ந்த அணங்கு இற்று உயிர் காத்து,
துவமே நயனைப் பயத்து உய்க்கும்
  துணை ஏது என்னின், மன் உயிர்க்கு ஈங்கு
அவமே துயர் செய் நான் எனது என்று
  ஆய இரு பற்று இனிது அறுக்கும்
தவமே உயிர்க்கு ஓர் துணை என்றான்
  தவத்தின் பவ்வக் கரை கண்டான்.
53
   
 
507“பொதிரும் முள் தாள் தாமரையோ,
  பொதிர் முள் புற உள் சுவைக் கனியோ,
அதிரும் ஒலியால் வெருவு உய்த்தே
  அவனி உவப்பப் பெய் முகிலோ,
எதிரும் ஒன்னார்க்கு ஓங்கு அரணோ,
  எவரும் அஞ்சும் உருக் காட்டிக்
கதிரும் இன்பு ஆர் தவம்?“ என்றாள்
  கருணைப் பவ்வக் கரை இல்லாள்.
54
   
 
508“மொய்யும் துறவே எந்தை அடி
  முறைகொண்டு அடைய வழி என்றால்
பொய்யும் இருளும் பொதிர்ந்தது எலாம்
  போக்கும் துறவோ குறை என்பார்?
கொய்யும் புரை தீர் இறைவன் அருள்
  கொடுக்கும் துறவே! இன்பு அலையே!
மெய்யும் உயிரும் நீ“ என்றான்
  விளங்கு ஈர் அறக் கண்ணாடியினான்.
55
   
 
509“தாயும் நீயே; தந்தையும் நீ;
  தாவும் நசை நாட்டு இயம் நீயே;
தீயும் நசை தீர் நசை நீயே,
  செல்வம் நீயே, உயிர் இனிதின்
தோயும் அலை நீ ஆகி, உனைத்
  துறவாது அணுகல் செய் துறவோ
காயும் வினை என்பார்? என்றாள்
  கதிப்பால் காட்டும் கஞ்சனத்தாள்.
56
   
 
510என்றான் அவன், என்றாள் அவள் என்று,
  இன்பக் கடலில் மூழ்கி, உளம்
குன்றா வியப்போடு எய்திய வான்
  கொண்ட தளமும், பொங்கு உவப்பின்,
பொன்றா மணமும் தேன் திரளும்
  பொழி பூ மழையைப் பொழிந்து, ஆசி
ஒன்றாய் எவரும் உரைத்து நிற்ப,
  உயர் வானவர் ஒத்து இவர் வாழ்ந்தார்.
57
   
 
511துறவினால் உடல் துறந்தன உயிர் எனத் தோன்றி,
நறவினால் நறை நறுந் துணர் விள் அலர் போல், இல்-
லற வினாவுடன் அனைவரும் ஓம்பிய அன்பின்
உறவினால் உலகு உயிர் எலாம் உடல் எனக் கொண்டார்.
58
   
 
512தாழு பான்மையோர் தகவு உடை பான்மையோர் என்னா,
சூழும் யாரையும் சூழ்ந்து, சூழ்வு அரு நயம் செய்வார்,
கீழும் மேலும் என்று உணர்கிலாது, உறுப்பு எலாம் கிளர்ப்ப
வாழுமே உயிர் மலிந்து உடல் உலவிய போன்றே.
59
   
 
513துய் அம் தாய் உரித் தொடர்பினார் சுடப் புகன்றவர்க்கும்
மய்யம் தாவிய மனத்து எழும் அன்பின் நன்று இயற்றல்,
நொய் அம் தாதுகள் நோவ உள் குடைந்து இமிர் அளிக்கும்
செய் அம் தாமரை திளைப்ப நல் விருந்து இடும் போன்றே.
60
   
 
514வாய்ந்த மாண்பினர் வருந்தலும் செய்குவர்க்கு உள்ளம்
தோய்ந்த ஆர்வு உறத் துறவிய நலம் நிறை அளித்தல்,
காய்ந்த ஆலையின் கரும்பினை முறுக்குதற்கு அளவில்
ஈய்ந்த பாகு இனிது இரிந்து எலாம் நிறைந்தன போன்றே.
61
   
 
515வருந்தினார் முகத்து எழுதிய
  வருத்தமே கண்டால்,
விருந்தினார் முகத்து அழைத்து,
  அவர்க்கு ஊட்டிய மிடை தேன்
திருந்து இன் ஆர் முகத்து உரைத்த
  சொல் திளை மதுச் செவியால்
அருந்தினார், முகத்து எழு நயக்
  கடலின் ஆழ்ந்து அகல்வார்.
62
   
 
516கூர்ந்த நன்மையைக் கூறிய பயனினால் எவரும்
சேர்ந்த தன்மையின் செயிர் அற ஓங்கி வேறு ஆவார்,
ஆர்ந்த பொன் வரை அடுத்து உறை காகமும் கருமை
பேர்ந்து அப்பொன் வரை பேர் எழில் பிளிர்ந்தன போன்றே.
63
   
 
517போய தாதையர் ஈட்டிய பொருள் எலாம் பொறை என்று
ஆய, ஆயின அனைத்தையும் ஆலயத்து ஒருபால்
நேயம் ஆர்உயிர் நேரிய இரவலர்க்கு ஒருபால்
தூய ஆரியர் விரைந்து அரும் தொடர்பொடு தொகுத்தார்.
64
   
 
518துன்பு துன்றிய பொருள் என அனைத்தையும் தொகுத்த
பின்பு, துன்றிய பேர் அரிது அன்பு உளம் தூண்டி,
என்பு தந்தினும் இனிது என ஈயவும் உழைத்தே,
அன்பு தந்து உணவு அளித்து உணவு ஆம் மழை போன்றார்.
65
   
 
519சிறுமையார் துயர் சிதைத்து இரந்து ஆயினும் அளித்து,
வறுமையார் பலர் வறுமை தீர் திருவினர் ஆகி,
உறுமை ஆர் முகில் உறை இரந்து, உயிர்க்கு எலாம் உகுத்த
நறுமை ஆர் நளிர் நறுமலர் வாவியே போன்றார்.
66
   
 
520தாய் ஒத்து ஆர்வொடு
  தரித்திரர்க்கு அனைத்துமே ஆகி,
தீ ஒத்த ஆகுலம் தீர்த்து உளம்
  குளிர வண் முகில் ஆய்,
பேய் ஒத்தால் அதைப் பெயர்க்க
  அணி ஒத்தனர்; பெயரா
நோய் ஒத்து ஆய கால் நுகர்ந்து
  உயிர் தரும் மருந்து ஒத்தார்.
67
   
 
521பொய் எனப் படர் புழைப் படக் குடைந்த புண் உடலை,
மெய் எனத் தயை வேர்விடு நெஞ்சினார், நோக்கி,
‘ஐ‘எனத் தமுள் இரங்கிய தன்மையோடு, அப் புண்
நொய் என, கதிர் உதித்து இருள் என மறைந்ததுவே.
68
   
 
522காவி உண்ட அருட் கண்ணினார்
  முகமன் நோக்கலின், ஆங்கு
ஆவி உண்ட சாவு அதைக் கடிது
  உமிழ்ந்ததே, அமலன்
ஏவியும், தவிர்த்து ஏகிய
  இயோனசு என்றவனைத்
தாவி உண்ட பின் தந்தன
  திமிங்கிலம் போன்றே.
69
   
 
523ஓதும் முற்று அருள் உரையினால், எவரும் உள் காமக்
கோது முற்று அழல் குளிர நீக்குவர், கரம் பிடித்து,
தீது முற்று அழல் திளைத்த போது, இலோத்து எனும் அவனைச்
சோதுமத்தில் நின்று அமரரே துரத்தினர் போன்றே.
70
   
 
524அன்பின் காணியார், அன்பொடு வீங்கும் இல்லறம் செய்
இன்பின் காதலால், இன் உயிர் தன்னிலும் எவர்க்கும்
நன்பின் காவலாய், நவை அற நயன் எலாம் நல்கி,
முன்பின் காசினிக்கு இணை இலா முயன்றதற்கு அளவோ?
71
   
 
525ஆலம் முற்றிய அகல் புவி நயன்பட, அருளின்
கோலம் முற்றிய குணத்து இவர், கெழுவிய கருணை,
நீலம் முற்றிய நெடும் வரை எங்கணும் குளிரச்
சீலம் முற்றிய சினை முகில், பொழிந்தன போன்றே.
72
   
 
526கானகக் துறவு ஆயினர் இன்னணம் கனிவாய்
வானகத்து உறவு ஆயின இல்லறம் வனைந்தார்,
மான் அகத்து உற மனுவொடு தெய்வதம் இறையோன்
ஊன் அகத்து உற உரம் கொடு புனைந்தன போன்றே.
73