ஐயம் நீங்கு படலம்
 
சூசை கண்விழித்து வணங்குதல்
 
628அலை புறம் காண் அயிர்ப்பு அகத்தோன் ஐ எனக் கண்
  விழித்து, ஒளி சூழ் அன்றி மற்று ஓர்
நிலை புறம் காண்கிலன், களியும் வெருவும் உறீஇக்
  கடிது எழுந்தான்; நிறை நூல் தந்த
கலை புறம் காண் அறிவு ஓங்கி, கணிக்க அரிய
  தன்மையின், தூய் கன்னி மாறா,
விலை புறம் காண் மணி எனத் தன் மனை மகன் ஆம்
  எந்தை தொழ விரும்பி வீழ்ந்தான்.
5
   
சூசை கடவுளைப் போற்றுதல்
 
629சால் அரும்புச் சூல் அணிந்த சண்பகத் தண்
  சினைகள் தொறும், தவறும் தென்றற்
கால் அரும்ப, தாது அரும்பிக் கடி மலர் தே
  னோடு அரும்பும் கந்தம் என்னா,
வால் அரும்பு வாய் அரும்ப அரும்பு அரும் பூ
  வாகையினான், மகிழ வானோர்,
நூல் அரும்ப வாய் அரும்பி,ச்சுருதி மதுப்
  பொழியும் உரை நுதலிச் சொல்வான்:
6
   
சூசை இறைவன் அருளைப் போற்றுதல்
 
630“எல்லோடும் ஒளி பெருகாது, இரவொடு இருள்
  படாது, எங்கும் இலங்கும் சோதி!
சொல்லோடும் உணர்வு இன்றி, சூழ்ந்த எலாக்
  கலை வல்லோய்! தொழும் தொழும்பன்
புல்லோடும் புன்மை அறியாது, என்னோ
  இத்திறத்தில் பொலியச் செய்தாய்?
செல் ஓடும் வான் வியப்ப, சிறுமை எடுத்து
  அடல் காட்டும் திறலின் மிக்கோய்!“
7
   
 
631“பார் ஆழி உரை கொண்டே படைத்தாய்; ஓர்
  குறுஞ் சூரல் பயனைக் கொண்டே
நீர் ஆழி வழி வகுத்தாய்; நெடும் படையோன்
  பணிக் கொண்டே, நில்லா வான் மீது
ஊர் ஆழி நிறுத்தினையே: ஒத்த திறத்து,
  இன்று உலகம் உய்தற்கு அன்பின்
பேர் ஆழி கடக்கவும் நீ தொழும்பன் எனைத்
  துணைக் கொண்டாய், பெயராச் செல்வோய்!
8
   
 
632“என்பு என்போடு அடிபடக் கின்னரத்து ஓதை
  அடிபட, சேர் இனத்து இனங்கள்
அன்பு அன்போடு இசைபட, நேர் நரம்பு ஓடி,
  வளர் தசை மீது அதளும் போர்த்த
பின்பு, இன்போடு உயிர் படவே, பெயர்ந்து எழ முன்
  இசேக்கியல் காண் பெற்றி என்னா,
முன்பு என்போடு ஒன்று படக் கிடந்தனன் நான்
  உயிர்பட இம் முயல் கொண்டாயோ?“
9
   
 
633“தெவ்வின் அகத்து ஊன் உண்டு, தீ உமிழ் மால்
  கரியினும் உள் திறன் சுதீத்தை,
நவ்வி அகத்து உரன் விஞ்ச, நால் கடல் அம்
  படைத் தலைவன் நவிர்ச் சிரத்தை
வவ்வி, அகத் துணிவு எய்தி வாளால் இற்றது
  கேட்டு, உன் வலி புகழ்ந்தேன்.
குவ்வின் அகத்து எனை உயர்த்த குணம் கண்டே
  இனி யாது கூறுகிற்பேன்?“
10
   
 
634“மேழகங்கள் காத்தன கால், மேதினியின்
  காவலராய் விரி செங்கோலால்,
கேழ் அகம் கைத் தாவிதனும் மோயிசனும்,
  நீ தெரிந்த கிளர் அன்பு ஆண்மை
சூழ் அகம் கண் களி கூர்ந்தேன். இனி, உன் தாய்க்
  காவலனாய்த் துணை தந்தே, உன்
வாழ் அகங் கை எனைத் தூக்கி வகுத்த வரத்து
  இணை எவன் நான் வகுப்பல்?“ என்றான்.
11
   
கன்னித்தாய்க்குக் காட்டிய பரிவு
 
635உம்பரிலும் அரிதில் தனை உயர்த்த நிலை
  அன்பு பட உணர்ந்து உணர்ந்தே,
பொம் பரிவும் பொங்கி எழத் தொழுது தொழுது,
  ஆயிரம் நா புகல் கொண்டேனும்,
எம்பரிலும் நிழற்று மலர் எழில் துசத்தோன்,
  சூழ்ந்தவை, நான் இயம்பும் பாலோ?
கம் பரிவு மிக, முன்னர் கணித்த அயிர்ப்பு
  உணர்ந்து, உரைப்பான் கனிவின் மீண்டே:
12
   
இறைவனின் அன்னையைத் துணைவியாகத்தந்த
அருளை நினைத்தல்
 
636வான் செய்த சுடரினும் தூய் தெருளோனே,
  மருள் அற்ற வலி நல்லோனே,
தேன் செய்த மலர் ஈந்து சிறந்த மணம்
  கூட்டி, நினைச் சேய் என்று ஈனும்
மீன் செய்த முடியாளைத் தந்து, தந்த
  நயன் அறியா வினைப் பயத்தால்
யான் செய்த குறை குணியாது இனிது அளித்தி,
  நினைவினும் ஊங்கு இரக்கம் மிக்கோய்!
13
   
மரியாளை மனத்துள் புகழ்தல்
 
637“செய்ப் படு வான் உலகினோடு திணை யாவும்
  படைத்து அளித்து ஆள் சிறந்த கோவே!,
மொய்ப் படும் ஆர் கலி உடுத்த பாரில் நினக்கு
  அன்னை எனும் முகுளம் கன்னி
கைப்படுவான் அடியேனைத் தெரிந்தாயோ!
  அதன் பின் யான் கசடு உலாவும்
பொய்ப்படு ஆகுலம் எய்தி, போய் இவள் நல்
  புடை அகல உன்னினேனே!
14
   
 
638அரிய மறைக் கொழுந்து என மேல் படர் தர ஈங்கு
  ஒர் கொழுகொம்பு அன்னவட்கே
உரிய முறை அறிவு இல்லா யான் கொழுகொம்பு
  ஆவது உண்டோ? உயர் வான் மீதில்
விரிய உறை உம்பரையும் ஏவலைக் கொள்
  பொருவு அற்ற மேன்மையாளை,
திரிய முறை இட்டு, ஏவல் கொண்டேன்,
  கொண்ட நயன் தெரியாச் சீர்க்கே,
15
   
 
639“சேது உலாம் கதிர் எறிக்கும் செழு வெய்யோன்
  தனை உடுத்த செய்ய மேனி,
மீது உலாம் தாரகையை விளக்கு இமைக்கும்
  மகுடம் என வேய்ந்த சென்னி,
சீது உலாம் கதிர் காலும் திங்கள் உரைத்து
  ஒளி பாய்ந்த செழுந் தண் பூந் தாள்
ஈது உலாம் வடிவம் கொண்டு, இணை தீர்ந்த
  மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ?
16
   
 
640“இலகு எல்லாம் முயன்று, உயர்ந்த எந்தை, மடிவு
  இன்றி வகுத்து, இனிதின் செய்த
உலகு எல்லாம்முரிதர நஞ்சு உயிர்த்த கரும்
  பாந்தள் தலை உயர் மிதித்தே
விலகு எல்லா நஞ்சினுக்கு ஓர் மருந்து ஆகும்
  தையல் இவள், விரிந்த வையத்து
அலகு இல்லாள்; பொருவு இல்லாள். அமரர் தொழும்
  அடி நல்லாள் இவள் ஆம் அன்றோ?
17
   
 
641“செய் முறையும் கடன் முறையும் திறம்பாத
  நீதி நெறிச் செழுங் கண்ணாடி;
மெய் முறையும் மறை முறையும் விளக்குகின்ற
  ஞானம் அமை வியன் அத்தாணி;
கை முறையும் அளி முறையும் பொழி கனக
  மாரியினால் கருணைக் காளம்.
இம் முறையும் எம் முறையும் கடந்து உயர்ந்த
  மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ?“
18
   
 
642“புத்து ஆன வளம் எல்லாம் பூண்டு இமைக்கும்
  இயல்பு றிஇ, நூல் புலமை நல்லோர்
எத்தாலும் நிகர்ப்பு அரிய இவ் அறத்தி தனை
  ஐயம் இதயத்து எண்ணி,
சத்து ஆன கடவுள் தரும் தெருளோடு என்
  அகம் அறிந்த தகைவினாள்கண்
உத்தான வழி யாது?“ என்று, உளக் களிப்போடு
  உட்கு எய்தி உளைந்தான் சூசை.
19
   
சூசையின் உவகை
 
643கொழுந்து அழுந்து அழன்ற வாய் குறுகி வீழ்தலில்,
எழுந்து எழும் கரத்தினால் இழிவு இன்று உய்வர் போல்,
விழுந்து எழும் தகவினோன் வெருவி, நாதன் அன்பு
அழுந்து எழும் துணர் அடி, அரற்றி ஏற்றினான்.
20
   
 
644மடல் மடு வழிந்த தேன் வாகையான் உளத்து,
அடல் மடு திறந்து, அழுந்து அன்பொடு, ஆண்டகை,
கடல் மடு திறந்து என வரங்கள் கால, இன்பு
உடன் மடு மூழ்கினான், உவந்த சிந்தையான்.
21
   
சூரிய உதயம்
 
645இற்றை ஆகையில், இவை காண இச்சையால்
ஒற்றை ஆழியன் கடல் ஒல்லென்று ஈர்த்து எழக்
கற்றை ஆம் கரங்களை நீட்டும் காட்சி போல்,
அற்றை ஆர் ஒளியொடு சிவந்தது ஐந்திரி.
22
   
 
646மருள் தரும் இருள் தனை மாறிச் சூசை உள்
அருள் தரும் நய நலம் அன்று காட்டிட,
இருள் தரும் உலகு இனிது இருளும் தீர்ந்தன,
பொருள் தரும் ஒளியவன் பொலிந்து சேரவே.
23
   
மரியாள் வேலையைச் சூசை செய்தல்
 
647“செய்ப் படும் உலகினர் வணங்கும் சீர்மையாள்
மொய்ப் படு பணி இனி முயல்தல் ஆம்கொலோ?
மெய்ப் படும் அடிமை யான் வினை செய்வேன்“் எனா
கைப் படு தொழில் எலாம் கனிவொடு இயற்றினான்.
24
   
சூசை, இறைவனின் தாயை வணங்குதல்
 
648படைத்தவன் தாய் அடி பணிந்து போற்றவும்,
துடைத்த தன் ஐயமும் துகளும் சொற்றவும்,
உடைத்து அன மன நசை பொறாத உண்மையால்,
அடைத்தன கதவின் வாய் அணுகி நின்றனன்.
25
   
கன்னித்தாயைக் கணவன் வணங்குதல்
 
649செழுந் திரு மாது அறை திறந்த போது, இவன்
எழுந்திருந்து ஐ என, இதயம் துண் எனா
விழுந்து, இரு விழுந் திரு அடியை வேண்டினான்,
தொழும் திரு அடி மிசை மழைக் கண் தூவியே.
26
   
 
650“ஈர் அணி தயவுடன் என்னை ஆள் உடை
சீர் அணி அறத்தினாய்! செகத்து நாயகி!
காரணன் மகவு எனக் கருப்பம் தாங்கி, மெய்
ஆரண மொழி முறை அமைந்த மாட்சியாய்!
27
   
 
651“கோது உறத் தமியன் உள் குணித்த யாவையும்
ஏது அறத் தெரி தரும் இரவிக் காட்சியாய்!
தீது அறத் தயையில் உன் சிறுவன் தன்மையால்,
நீது அறத் திளைத்த என் குறைகள் நீக்குவாய்.
28
   
 
652“துன்பு உறச் செய்த தோம் துடைத்து ஆசி நீ
அன்பு உறச் சொல்லினால் அல்லது, உன் அடி
பின்பு உறப் பெயர்வனோ? என, பெருக்கு அனை
இன்பு உற, துயர் உற இரங்குவான் அரோ.
29
   
மரியாள் இறைவனைத் துதித்தல்
 
653பொருள் தொடும் அரு மறை வடிவம் போன்று ஒளிர்,
அருள் தொடும் மடவரல், அகத்தில் இன்பு உற,
இருள் தொடு துயர் அகன்று அறிவை ஈந்தன
தெருள் தொடும் இறைவனைச் சிறந்து போற்றினாள்.
30
   
மரியாள்சூசையின்காலில்வீழ்தல்
 
654பொருக்கெனத் துணைவனைப் பொலியத் தூக்கினாள்;
பெருக்கு எனப் பெருகும் இன்பு உளம் புரண்டு எனா,
கருக் கனம்கண்மழை கழுமி வீழ்ந்தனள்,
இருக் கண முடியுடன் இரவி ஆடையாள்.
31
   
 
655கதிர்ந்து எழும் அன்பினான் காந்தை வீழ்கு உறா
எதிர்ந்து, “எழுக“என மலர்க் கரம் கொடு ஏந்தினான்.
விதிர்ந்து எழு தாழ்ச்சியால் மீண்டும் வீழ்ந்தனள்,
பொதிர்ந்து எழு வரங்களால் பொங்கு மாட்சியாள்.
32
   
மரியாள், தெய்வ கருப்பமுற்ற செய்தியை மறைத்தமைக்குக் காரணம் கூறல்
 
656“என் உளம் கொளாக் கனிவு இயற்றும் அன்பினோய்,
நின் உளம் கொளாத் துயர் நெடிது செய்து, யான்
துன் உளம் கொளாத் துகள் சூட்டினேன் என
நன் உளம் கொளா, தயை நல்கல் வேண்டுமே.
33
   
 
657“மன்னர் ஆள் மன்னவன் வகுத்த மாவரம்
தன்னை யான் மறைப்பது தகவு அது ஆம் என,
என்னை ஆள் உடையவன் ஏவல் இன்மையால்,
உன்னை யான் சூல் வினை ஒளித்தது, ஆம்“ என்றாள்.
34
   
இருவரும் இறைவனை வணங்குதல்
 
658என்று, அலர்க் கரம் எடுத்து இவனை ஏத்தினாள்.
மன்று அலர் உயிர்த்த வெண் வாகையாளனும்,
துன்று அலர் கடுத்து உடு சூட்டு மங்கையும்
சென்று, அலர் இறைவன் தாள் செறிந்து போற்றினார்.
35
   
சூசையின்இன்ப நிலை
 
659பீடையால் வற்றிய உளத்தில் பேர் ஒளி
ஆடையாள் உரையினால் அரிது இன்பு ஆழ்ந்தனன்,
கோடையால் வற்றி, பெய் கொண்டலால் பெருகு
ஓடையால் நிகர்த்தன ஓகைச் சிந்தையான்.
36
   
 
660கோள் கடைந்து அழுத்திய மகுடக் கோதையாள்
பீள் கடைந்து அழுத்திய கதிர் பிலிற்றல் காண்,
தாள் கடைந்து அழுத்திய தாரின் வாகையான்
வாள் கடைந்து அழுத்திய வருத்தம் நீக்கினான்.
37
   
 
661வண்டு உலாம் தாரினான் மலர்க் கண் வாயினால்
உண்டு, உலாம் மகிழ் வினை உளம் பொறாமையின்,
பண்டு உலாம் வளம் எலாம் பழித்த காந்தையைக்
கண்டு, உலாம் உரை மது கனியக் காலுவான்:
38
   
மரியாளை சூசை நேரில்போற்றுதல்
 
662“கூறு அருந் தகை உடை கோதையார் தமுள்
மாறு அருந் திரு வரம் வயங்கு மாட்சியாய்!
சேறு அருந் தன்மையால் சிறுவன் ஆகிய
பேறு அருங் கடவுளைத் தாங்கும் பீடமே!“
39
   
 
663“ஒளி முகத்து, இந்து எதிர், இரவி உற்று எனா,
களி முகத்து உன்னை உன் கடவுள் நோக்கி, முன்
தெளி முகத்து இயம்பிய சீர் இன்று உன் இடை
துளி முகத்து அமைந்ததால், துதிப்பர் யாருமே.“
40
   
மரியாள் ஆத்துதிகளை இறைவன்பால்சேர்த்தல்
 
664“மைக் கடல் மருவிய வையத்தாரின் உள்,
இக் கடல் மான் அரும் இருமை உற்ற நான்
அக் கடன் தவறு இலாத் திருத்தல் ஆக, நீ
நிக்கு அடல் மதலை ஆம் நிமலற் போற்றுவாய்.“
41
   
 
665என்று, உதிர் இரவி வில் எதிர் திருப்பல் ஆ
நின்று உதிர் பளிங்கு என, நிரம்பி ஓதிய
தன் துதி அடங்கலும் தனது நாதனைத்
துன் துதி ஆக்கினள், பளிங்கில் தூயினள்.
42
   
வானவர்மகிழ்ச்சி
 
666எண் இலாச் சுடர் என இமைத்த வானவர்
வண் நிலா நறு மலர் வருடம் தூவினர்;
ஒள் நிலாவு இவர் பதம் உவந்து சூடினர்;
அண்ணல் ஆம் தனைத் துதி அளவு இல் பாடினர்.
43
   
மரியாள்ஆகாயத்தில்நிற்பதுபோல்சூசை கனவு காணல்
 
667இருள் பரந்த ஐயமொடு துயரும் நீக்கி
  இன்பு அலையில் மூழ்கிய ஒண் தவத்தின் மிக்கோன்
தெருள் பரந்த காட்சி உறீஇ உளத்தில் ஓங்க,
  சேண் உறையோர் பாடிய பேர் உவகையால் ஓர்
உருள் பரந்த சுடர் உடுத்த மேனி தானும்,
  உயிர் சென்ற வழி, சென்றால் என்னா, சூழப்
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி,
  புவி நிலை விட்டு உயர் நின்றாள், உரை மேல் நின்றாள்.
44
   
மரியாளின் புகழ்பாட சூசையின்உதவியைக்கவிஞர்வேண்டுதல்
 
668நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும்
  நினைத்து உரைப்ப, நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான்
சென்ற நிலை கண்டு இரங்கி, துணிவும் பாவும்
  திருத்தித் தந்தால் அல்லால், துறை வல் நல் நூல்
வென்ற நிலை கொண்ட உணர்வோர்க்கும் பாலோ?
  விண் வியப்ப நீ வியப்ப விருப்பம் மூழ்கி,
மன்றல்நிலை வாகையினோய், அன்று கண்ட
  மாட்சி நலம் யான் இசைப்பத் துணையே நிற்பாய்.
45
   
சூசை கண்ட கனவுக்காட்சி
தேவதாய்நின்றநிலை
 
669விண் கதிர் கால் உருத் தோன்றி விண்ணில் நின்றாள்;
  ‘விரத நிலை இதோ?‘என்ன வளர்ந்து தேயும்
தண் கதிர் கால் பிறைக் குழவி அடியால் தேய்த்து,
  தனைச் சென்றார் சிதையார் என்று, இரவி முன்னும்
தெண் கதிர் கால் உடுக் குலமே முடியாய்ச் சூடி,
  ‘தெளி ஞான நிலை இது,‘என சுடாது தண்ணத்து
ஒண் கதிர் கால் செஞ் சுடரை உடுத்து நின்றாள்,
  உணர்வினும் மேல் நின்று, இனிது என் உளத்தில் நின்றாள்.
46
   
வானவர்இறைவன் தாயை வணங்குதல்
 
670திருக் கொண்டு, ஆர் ஒளி கொண்ட வானில் வைகி,
  தெளி உணர்வு உண்டு உரு இன்றி அணுவாய் நின்றோர்
உருக் கொண்டார்; உயர் நின்ற எந்தை தாய் தன்
  ஒளி எறிக்கும் மலர்ப் பதத்தை ஏத்தி ஏத்தி
மருக் கொண்டு ஆர் மது மலரைத் தூவித் தூவி,
  மதுத் தொடையால் மண்டு புகழ் பாடிப் பாடி,
கருக் கொண்டாள் வரப் பவ்வம் நீந்தி நீந்தி,
  கதிர் வெள்ளம் சூழ் எறித்துக் கனி நின்றார் ஆல்.
47
   
இறைவன் தாய்க்குப்பணிபுரிந்த வானவர்ஆயிரவர்எனல்
 
671எவ் உலகினோரும் உய்யக் கருணை உள்ளி
  இம் மடந்தை தனை, முதலோன், வனைந்து, வானத்து
அவ் உலகினோர் பிரிந்த அவைகள் ஒன்பான்,
  அவை அவைக்கு ஓர் ஒரு நூறும், பலர் ஓர் நூறும்,
இவ் உலகின் இவள் பிறந்த முதல் நாள் ஆதி
  இவள் பணி கேட்டு, ஆயிரரும், பிரியா, முந்நீர்
வவ்வு உலகின் தமது அரசி ஆகச் சூழ
  வான் இறையோன் அன்பு புரிந்து ஏவினானே.‘
48
   
‘ஆண்டகை தாய்மரி‘என மரியாளை வானவர் போற்றுதல்
 
672ஏவிய ஆறு இவட் பிரியா அன்னார், இந்நாள்
  எழில் முகத்தில் வான் முகத்தைத் தோன்றத் தோன்றி,
பூவிய ஆறு அரக்கு ஒளி பெய் துகில் உடுத்து,
  பொழி மது வாடாத மலர்ச் சுடிகை சூடி,
ஆவிய ஆறு அணி அணியாய் நின்ற யாரும்,
  ஆண்டகை தாய் மரி என்னும் வாசகத்தை
மேவிய ஆறு ஓங்கிய மார்பு அணிந்து, வெய்யோன்
  வேய்ந்து அனைய அவ் அணி வேய்ந்து இனிதின் நின்றார்.
49
   
வானவர்மலர்மாலைகள்சாத்துதல்
லீலிமலர்மாலைகள்
 
673நீமம் உடைத் திங்கள் துடைத்து ஒளியைப் பாய்ந்த
  நேர் அடியாள், நேர் அற, விள்ளா வண்ணம்,
காமம் உடைத்து, ஒளி உடுத்து, சுடரில் தூய
  கருத்தில் அமை கன்னி நலம் காட்டுதற்கே,
தாமம் உடைத் தண் தாது மடு உடைத்துச்
  சாய்ந்த மது வெள்ளமொடு வாசம் வீசி,
ஏமம் உடைத் தனி விருது என்று, அலர் சுவேத
  இலீலி எனும் மாலை, பதத்து, ஒரு நூறு, உய்த்தார்.
50
   
உரோசா மலர் மாலைகள்
 
674இருதி எழில் படுத்திய வான் வரத்து வல்லாள்,
  இவர் வானோர் நிலை கடந்த அன்பு விஞ்சக்
கருதி, எழில் படுத்திய ஒன்று ஆய எந்தை
  கண்ணி அமை நேய நலம் காட்டுதற்கே,
குருதி, எழில் படுத்திய செந்தாது உலாவும்
  கொழுந் தண் தேன் உரோசை எனும் கோதை கொண்டு,
பருதி எழில் படுத்திய சீறு அடியைப் போற்றிப்
  பணி ஆக முன் படைத்தார், ஒரு நூறு அன்றோ.
51
   
கமல மலர் மாலைகள்
 
675வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள்,
  விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்பு உற்று உய்ய,
கேடு அவிழ்த்த நெஞ்சினர்க்கும் உறுதி செய்யும்
  கிளர்ந்தன தன் தயாப நலம் காட்டுதற்கே,
நீடு அவிழ்த்த வாய் இடத்துப் பிரிந்து ஓடும் பல்
  நீர்க்கு எல்லாம் அடைக்கலம் செய் வாவி பூத்த
தோடு அவிழ்த்த விரைக் கமலம் மாலை மாற்றி,
  சூடிய தாள் தொழுகின்றார், ஒரு நூறு அன்றோ.
52
   
சூரியகாந்தி மலர் மாலைகள்
 
676துறை கெழு நூல் வழி அனைத்தும் அடையா ஞானத்
  துறை அன்னாள், மாசு அறு நல் உணர்வின ஈர்த்து,
மறை கெழு நூல் வழி வழுவா, கடவுள் நல் தாள்
  மாறு இல மெய்ஞ் ஞான நலம் அமைந்ததற்கே,
முறை கெழு நூல் வழி அன்ன வெய்யோன் வானின்
  முடுகு வழி விடா திரியும் இரவிக் காந்தம்,
அறை கெழு நூல் வழித் தொடை போல் தொடையல் ஆக்கி,
  அருச்சனை செய்து, அடி அணிந்தார் ஒரு நூறு அன்றோ.
53
   
குமுத மலர் மாலைகள்
 
677மாசு என்று மதியம் மிதித்து உயர் தூய் தாளாள்,
  மனம் கலங்கத் துயர் வரினும், நெருப்பிற்கு அஞ்சாத்
தேசு என்று குலையா நெஞ்சு உறுதி எஞ்சா,
  செல் அல்லற்கு உயர்ந்த திறம் காட்டுதற்கே,
தூசு என்று மலை சூழ்ந்து ஒல் எனத் தாழ் ஓடித்
  துறும் வெள்ளத்து அளவில் தலை நிறுவி, பூண்ட
காசு என்று தேன் துளிக்கும் குமுத மாலை
  கால் அணியாய்த் தொழுது இடுவார், ஒரு நூறு அன்றோ.
54
   
செவ்வந்தி மலர் மாலைகள்
 
678மண் பொதுளும் சேற்று ஒழுகும் கதிர் சேறு ஆகா
  வண்ணம் என, கதிர் கலங்கின் கலங்கா நெஞ்சாள்,
கண் பொதுளும் இன்னாமைக்கு அழுக்கு உறாதாள்,
  கதிரினும் தூய் மாட்சி நலம் அணிந்ததற்கே,
முள் பொதுளும் மணம் பொதுளும் நொய் அம் தாது
  முருகு ஒழுகும் முகை விண்ட செஞ் செவ்வந்தி
விண் பொதுளும் நலம் தொடுத்த மாலையாக
  விழுந்து இறைஞ்சிக் கொணர்ந்தனரே ஒரு நூறு அன்றோ.
55
   
சண்பக மலர் மாலைகள்
 
679இத்திறத்தால் வெஞ் சுடரும் எஞ்ச எஞ்சாது
  இயல்பு உயர்ந்தாள், இன்பு அருந்திச் செயிர் நாம் செய்த
அத்திறத்தால் வந்த தவம் செயிர் ஒன்று இன்றி
  அரிது உலகம் அதிசயிப்ப நோற்றாள் என்னா,
மைத்திறத்தால் விரி சிறகை ஓசனித்த
  வண்டு அணுகாச் சண்பக அம் தொடையை, அன்றே,
மெய்த்திறத்தால் மறை தொடுத்த தொடையல் என்னா
  விசித்து, அணிந்தார், தாள் வணங்கி, ஒரு நூறு அன்றோ.
56
   
வகுள மலர் மாலைகள்
 
680வானாரும் நடுக்கு உற்று வணங்கும் தேவ
  வரத்து உயர்ந்த வான் அரசாள், நவை நாம் மாறா
கூன் ஆரும் செருக்கு ஆறாத் திறத்தின் நாண,
  குணிக்கு அரிய தாழ்ச்சி அருள் கொண்டாள் என்னா,
தேன் ஆரும் மலர் இனத்துள் புன்மை கொண்டு,
  தேறலொடும் மணத்தினொடும் எவையும் வெல்லும்
கான் ஆரும் வகுளம் பூ மாலை, தாள் மேல்
  களிப்பு எழ இட்டு இறைஞ்சி நின்றார், ஒரு நூறு அன்றோ.
57
   
தும்பை மலர் மாலைகள்
 
681வஞ்சம் சேர் தந்திரத்தால் பழியே விஞ்ச
  மன் உயிர்கள் பகைத்து அழிக்கும் குணுங்கு இனங்கள்
நெஞ்சம் சேர் நஞ்சு உகுப்ப எடுத்த நாக
  நெடுந் தலையை, என் தொடையால் நேரா வல்லாள்,
கஞ்சம் சேர் திருப் பதத்தால் மிதித்த வெற்றி
  காட்ட, மதுக் கான்ற நறுந் தும்பை மாலை,
பஞ்சம் சேர் உவப்பினொடு பைம் பொன் சேர்ந்த
  பதத்து அணியாய்த் தொழுது அணிந்தார், ஒரு நூறு அன்றோ.
58
   
வானவர்புடை சூழ்ந்து நிற்றல்
 
682இம் முறையால் ஒன்பது அணி சூழ்ந்து நிற்ப,
  எவர்க்கும் நலம் செய் பொழிலோ? முகிலோ? பானோ?
அம் முறையால் நிகராது, எவ் உயிரும் யாவும்
  அமுதினும் ஊங்கு இனிது அன்பால் ஓம்பும் தாய் செய்
கைம் முறையாம் என, பணி பொன் சுடிகை ஆரம்
  கண்டிகையோடு இனக் கலன் எண் இல்லாது ஏந்தி,
மெய்ம்முறையால் ஒளிர்ந்து இறைஞ்சும் ஈர் ஆறு உம்பர்,
  விழைந்து இவள் சூடு ஈர் அறு மீன் போல நின்றார்.
59
   
மரியாளின்மகனாய்அவதரிக்கும்இறைவன்மாளும்வகையை வானவர்காட்டுதல்
 
683வையகத்தார் வடு தீர்ப்ப இவட்கு ஓர் மைந்தன்
  வந்த பிரான் அருள் புரிந்து, வஞ்சம் மிக்கோர்
கை அகத்தால் அடியுண்டு மாள்வான் என்னா,
  கடு மரமோடு ஆணியும் முள்முடியும் தூணும்
மொய் அகத்தால் அடும் மற்றக் கருவி யாவும்
  மூ அறு வானவர் ஒரு பால் கையில் ஏந்தி,
மெய் அகத்தாள் உள் உருக முன்னர் நின்றார்;
  விளம்பு அரிய எந்தை தயை வாழ்த்தி நின்றார்.
60
   
வானவர்நின்ற நிலை
 
684ஏர் இறகு ஆறு ஓர் ஒருவர் கொண்டு தோன்றி,
  ஏழ் எழு ஆய்ப் பத்து அணியாய் நின்ற வானோர்,
ஈர் இறகால், அஞ்சினர் போல், முகத்தை மூட,
  ஈர் இறகால் அடிமூடி, மற்று இரண்டு
சீர் இறகால் தென்றலும் தண் நிலாவும் காலச்
  செழும் பைம் பொன் சாமரை போல் விசித்து இரட்டி,
பாரில் தகா வளத்து ஓங்கும் அரசாள் தன் தாள்
  பணிந்து பணிந்து, அருத்தி எழச் சூழ்ந்து நின்றார்.
61
   
மிக்கயலும்கபிரியலும்சிறந்து நிற்றல்
 
685செம் பொன் மேல் பசும் பொன்னால் எழுதினாற் போல்,
  திண் கவச மேல் அணிகள் தியங்கித் தோன்ற,
பைம் பொன் மேல் பயிற்றிய மா மணியால் எல்லைப்
  பாய் மகுடம் புனைந்து, அலகை முனைந்து வென்ற,
வெம் பொன் மேல் கதிர்ந்த வை வேல் கையில் ஏந்து
  மிக்கயலும், கபிரியல் ஆம் திரு வல்லோனும்,
அம் பொன் மேல் திவழ் உருக்கொண்டு, ஆங்கு உலாம் பேர்
  அணிகள் இரு தலைவர் எனத் தோன்றினாரே.
62
   
வானவர் அணிவகுப்பு
பலவகை கோலமுடன்சில வானவர்நிற்றல்
 
686இவரும் அலது, உள அமரரும் அளவு இலாது,
  எரியும் வெளி மிசை இரி பல சுடர் ஒளி
கவரும் முடிகளும் நவமணி அணியொடு
  ககன எழில் அணி பணிகளும் மிக ஒளி,
துவரும் உடன் உள பல நிற மலர் அணி
  தொடையல் மது மழை குமிழிகள் எழ விழ,
நிவரும் மணி அணி குடையொடு கொடிகளும்
  நிறைய வெளி வெளி, நிரை நிரை நிகழ்வரே.
63
   
 
687அலையின் அலை அலை மிசை இசைவன என
  அரசர் உருவுடன் அணி அணி நெரிதர,
நிலையின் உள முரசொடும் உள கருவிகள்
  நிகர் இல் உயர் உலகு உள பல கருவிகள்
மலையின் உயர் இன முகில் அதிர்வன என
  மலிய முழகின இனியன ஒலியொடு
கலையின் உயரின தொடை தொடை தொடர்வன
  கனிய, இன எனது உரை அடை கருமமோ?
64
   
 
688ஒலி அதிர முடி முடியொடும் அடிபட
  உவகை எழ விழ, அணி தொடை அசைவொடு
மலிய மது மழை சலசல என, இன
  மணிகள் கணகண என, எனது அணு உரை
மெலிய நிமலனை மகவு உடையவள் உடை
  வெயிலின் எழு மடி ஒளி வடி வடிவு அடி
பொலிய அவரவர் சிரமிசை அணிகுவர்;
  பொருவு இல் நசையொடு பணிகுவர் அணுகியே.
65
   
வானவர்இறைவன்தாயைப்புகழ்ந்து கூறுதல்
 
689அரவின் உருவொடு கடி விடு விடம் அற
  அரிதில் உயிர் தரும் இனிது அமுது இவள் என,
இரவின் இருளினும் வடு தரும் இருள் அற
  இரவி ஒளியினும் ஒளிர் சுடர் இவள் என,
உர இழிவும் அற உயிர் அடும் இகல் அற
  உறுதி இவள் என, உயிர் இவள் என, விரி
புரவில் நிகர் இல தயவினில் நிகர் இல
  புணரி இவள் என அறைகுவர், சிலருமே.
66
   
 
690கடியின் நெடிது அமர் எழ உயிர் மெலிகுவர்,
  கவலை அடைகுவர், மகர் இல உளைகுவர்,
மிடியின் மெலிகுவர், பிணிகளின் மெலிகுவர்,
  வெருவி உருகுவர், விளிவு உறி அயர்பவர்,
குடியின் மெலிவொடும் இருமையின் இழிவொடு
  குழைய அழுவர், கலுபவர், மடிபவர்,
படியின் அனையவர் உதவிய நலம் மலி
  பரவை இவள் என, மொழிகுவர், சிலருமே.
67
   
 
691ஒளி கொள் உலகமும் முதலிய உள பல
  உலகு பொது அற அனையவும் நடவிய
அளி கொள் அதிபதி தனை மகவு என அணி
  அரிய கருவுடன், உலகு இடர் எரி அற
வளி கொள் கவரமும் நிழல் தரு கவிகையும்
  மருவும் எமது அரசியும் இவள் என, அருள்
துளி கொள் முகில் என, மண மலர் மது மழை
  சொரிய அடி இணை தொழுகுவர் சிலருமே.
68
   
 
692ஒருவர் கவரிகள் இடஇட அணுகுவர்;
  ஒருவர் கவிகைகள் எழ எழ மருகுவர்;
ஒருவர் பணிவிடை முடிதர விழைகுவர்;
  ஒருவர் இறையவன் விடை மொழி கொணர்குவர்;
ஒருவர் எழுதிய முக எழில் கருதுவர்;
  ஒருவர் அதிசயம் உறீ இனிது உருகுவர்;
ஒருவர் புகழ்இட நிகர் இல மெலிகுவர்;
  ஒருவர் புகழுவர்; பணிகுவர் எவருமே.
69
   
மரியாளின்பணிவான எண்ணத்தை
அறிந்து வானவர்உள்ளம்உயர்தல்
 
693பருதி உடை உடை நலம் மிக, அருள் உடை
  பரமன் அதிபதி ஒரு கரு உடையவள்,
சுருதி மொழி எழ, எனது இறையவன் இவை
  தொகுதி அற அளவு அற இடும் அளவையில்,
இருதி அற, எனது அற அறிவு இசைதர,
  இனி அடியனளும் என முயல்வது? என உள்
கருதி நசையொடு கருதிய உணர்வுகள்
  கனிய உணர்தலில், அமரர் உள் உயருவார்.
70
   
இறைவன்தாய்நின்ற நிலையால்இவ்வுலகமே மோட்சமாதல்
 
694அயமும் வழுவையும் இரதமும் விருதரும்
  அடையும் நிருபரும் நிகர் இல மெலி தர,
வயமும் இருமையும் அறிவொடு கருணையும்
  மருவும் இறையவன், ஒரு சிறு மனை இடை,
நயமும் ஒளிமையும் விபவமும் அடையலும்
  நடவும் அளவையும் இது எனில், வடுவொடு
கயமும் நடலையும் மலி புவி, அருளொடு
  கனிய, அது பொழுது உயர் கதி நிகருமே.
71
   
சூசை இன்பக்கடலுள்மூழ்குதல்
 
695இற்றை எலாமும் இயற்றிய காலை,
  இனத்து இயலா நயம் ஆய்,
மற்றை எலாமும் மனத்தின் உசாவும்
  மலர்த்திரு வாகையினான்,
கற்றை உலாவு பளிக்கு உரு வாமம்
  மிக, கதிர் வீசி உருள்
ஒற்றை உலாவு இரதக் கதிர் ஆக,
  உவப்பு அலை மூழ்கினனே.
72
   
 
696வென்னை விரித்திடு கூளி நடுக்கிய
  வேத மொழித் திறலோன்,
பொன்னை விரித்து அதன்மீது
  புதைத்த மின் மாலை இறுத்திய போல்,
கொன்னை விரித்த நிலாவின் நிறத்து அவிர்
  கோலம் உடுத்து எனை ஆள்
அன்னை விரித்த நிலா உண
  அத் திறல் நானும் விரித்தனன் ஆல்.
73
   
 
697ஓசை எழுந்து அகல்ஓலம்
  எறிந்தன வாரி உடன்றல் எனா,
ஆசை எழுந்தன ஓகை
  அடங்கு இலதாய், அலர் தன் கொடி போல்,
பூசை எழுந்த நறா மது அம்
  புகழ் பூசல் தரும் படியே,
சூசை, எழுந்து உயர் நாயகி தன்
  துதி, தூவி, அறைந்தனன் ஆல்.
74
   
சூசை இறைவனின்தாயைப்போற்றுதல்
 
698“நீ ஒரு தாய்; ஒரு தாதையும் நீ;
  உயிர் நீ எவை ஆகிலும் நீ
நீ கனிவு ஆர் கடல்; நீ ஒளி ஆர் சுடர்;
  நீ அருள் ஆர் முகில் நீ
நீ இறையோன் எழும் ஆசனம்; நீ
  நெறி வேதம் வழா நெறி நீ
நீழ முகிளாத நறா மலர்; நீ நிறை;
  நூல் நிகரா உரு நீ.“
75
   
 
699“ஏர் அணியே, இதயத்தில் இருந்து
  எனை ஆள் உடை ஆனவளே,
சீர் அணியே, மதி வெண் குடையே,
  திரு மாரி விடும் புயலே,
ஆரணியே, கருணாகரியே, உயிர் யாவும்
  அளித்த அமுது ஆர்
வாரணியே, தனி நாயகியே, நனி
  வாழுதி, வாழுதியே!“
76
   
 
700“வாழி, அனந்த தயாபரனுக்கு உரி
  வாய்ந்த அருள் தாய் அவளே!
வாழி, விசும்பு இடை வாழ் உயர்
  உம்பரின் வாம இராக்கினியே!
வாழி, முகிண்டு இல பூ அனை
  கன்னிய மாதரை ஆள் அரசே!
வாழி, அழுந்து அருளே!
  மறையே, அறனே, நனி வாழுதியே!“
77
   
சூசை கடவுளின்திருமுகத்தைக்காணுதல்
 
701என்றனன்; என்று புகழ்ந்து புகழ்ந்து,
  இவை எண்ணி மகிழ்ந்தனகால்,
நின்றன உம்பர் அடைந்த நிறைந்த
  நிகர்ந்து இல காட்சி எனா,
தன் தனது ஆசை தணந்த
  தவன், தகை தாங்கிய மார்பில் எழ,
சென்ற பிரான் முகமே மறையாது
  தெளிந்து உயர் கண்டனனே.
78
   
 
702மேவு அரு மீ வரும் மாணொடு
  வேய்ந்த பிதாச்சுதன் நேயன் எனும்
மூவரும் ஓர் நிகராத பராபரம் ஆம்
  முதலோன் முயல் ஓர்
தாவு அரு மா முறையால் மறையாது
  உரு யே்ந்து தயாபம் எழா
ஆவு அரு மாதவன் ஈது உயர் காண்
  அளவு ஆம் நயன் ஓர் அளவோ?
79
   
வானவர்இறைவன்தாய்க்கு மணி ஆரம்சூட்டுதல்
 
703செகத்து இயலாத சிறப்பு எழு
  நாயகியைச் செக நாயகனே
அகத்து இயலாத அருள் கொடு
  நோக்கி, அருத்தியொடு ஏவியதால்,
முகத்து இயலாத நயத்து, நிலா
  உரு முற்றிய வானவர், சூழ்
நகத்து இயலாத மணிக் கலன்
  ஆர நயத்தொடு சூட்டினரே.
80
   
கடவுள்மரியன்னைக்கு முடிசூட்டும்காட்சி
 
704தன் உயிர் ஆம் என உன்னு
  தயாபமொடு, எண்ணிய மூ உலகு ஆர்
மன் உயிர் யாவையும், உள்ளினள்
  ஆள் ஒரு மன் அரசாள் இவள் என்று,
என் உயிர் ஆள்பவன், மின்னிய
  மீன் ஒளி எண் இல ஏவி, உலாம்
மின் உயிர் ஆகிய சென்னியின்
  மீது, ஒரு மின்முடி சூடினனே.
81
   
சூசை, பேசாமல்அழுது நிற்றல்
 
705முழுது உணர்ந்து அருள் முற்றிய மாமுனி,
பழுது உணர்ந்த பனிப்பு அற, இற்றை அப்
பொழுது உணர்ந்தமையால் புகல் அற்று, இனிது
அழுது உணர்ந்தவை ஆர் அறைவார் அரோ?
82
   
சூசை, மரியாளின்திருவயிற்று இறையுருவைத்தரிசித்தல்
 
706ஈது யாவும் உணர்ந்து இதயத்து எழும்
போது, யாவும் புரந்திட நாயகன்,
கோது யாவும் துடைத்து, இவண் கொண்ட மெய்,
நீதி யாவும் நிறைந்தவன், கண்டு உளான்.
83
   
 
707பளிங்கு மஞ்சிகத்து ஊடு உறை பால் மணி
வெளிக்கு மஞ்சு அற வேய்ந்தது போல், உலகு
அளிக்கும் நாதன் அமைத்த மெய் தாய் வயிற்று
ஒளிக்குள் மாதவன் ஓர்ந்து கண்டான் அரோ.
84
   
கவிக்கூற்று
 
708கஞ்சமோ, விரைக் கஞ்சம் உள் முத்தமோ,
விஞ்சு பால் மதியோ, விரி செஞ் சுடர்
எஞ்சு பான் இயல்போ, எனவோ, வளன்
நெஞ்சு வாழ்குப காண் உடல் நீர்மையே?
85
   
சூசை மாமுனிவன்பளிங்கென ஒளிர்தல்
 
709கண்ட நாயகன் கண் ஒழுகும் கதிர்
உண்ட மா தவன், ஒள் ஒளி உண்டது ஓர்
சண்ட தூய பளிங்கு உயர் தாணு எனா
விண்ட வான் ஒளி, வெஞ் சுடர் வெல்லும் ஆல்.
86
   
நாதன்சூசையை எதிர்நோக்கல்
 
710சீர்த்த பூங் கொடியோன் திரு நாதனைப்
பார்த்த வேலையில், பார்த்தனன் நாயகன்;
நேர்த்த ஆசையின் கண் எதிர்ப்பட்டு, எழும்
கூர்த்த ஆர்வமும் கூறுதல் ஆம்கொலோ?
87
   
சூசைக்கு மேலான உணர்ச்சிகளை அறிவித்தல்
 
711தண் அம் தாமரை தாது அவிழச் சுடர்
கண் அங்கு ஆம் கதிரால் கனி பார்த்து எனா,
விண் அம் காவலன் பார்த்து விழைந்து, உளத்து
எண்ணம் தாவு உணர்வு இன்பொடு உணர்த்தினான்:
88
   
 
712“விண்ட பூங் கொடி தந்த விருப்புடன்
உண்ட மா மணத்து உன் துணை பூங் கொடி
கொண்ட மாட்சி குணிக்க அருங் காட்சியால்
கண்டது ஆம், மறை காட்டிய மாண்பினோய்!“
89
   
 
713“இன்ன தன்மையினாட்கு இவண் நீ துணை
துன்னு தன்மையினால், அருள் சூழ்ந்து, உனக்கு
உன்னு தன்மையினால் உணரா வரம்
மன்னு தன்மையினால் வகுத்தோன் அரோ.
90
   
 
714“கருவி ஒன்று இல கன்னி பயந்தினும்,
மருவி என்னை வளர்க்கும்கைத் தாதையாய்,
பொருவு இல் நன்றி புணர்ந்திட, நான் உனைத்
துருவினேன் எனச் சூழ்ந்து, ஒழுகு“ என்றனன்.
91
   
சூசையின்உள்ளம்உயர்தல்
 
715சொரிய மாரி துறும் தொனி வெள்ளம் ஆய்
பெரிய ஆர்கலி மேல் புரண்டால் எனா,
அரிய மா தவற்கு, ஆதி வளர்ப்பதற்கு
உரிய மா வரம் உற்று, உளம் கூர்ந்ததே.
92
   
வானவர்சூசையைப் போற்றுதல்
 
716அண்ணற்கு இங்கண் அமைந்த கைத்தாதையைக்
கண்ணற்கு ஓங்கு கருத்தொடு போற்றி, உள்
எண்ணற்கு ஏந்திய ஆசி இயம்பினார்
வண்ணப் பூ மழை, வானவர், வாரியே.
93
   
சூசையின்உள்ளங்கொள்ளா உவகை
 
717சிறைப் படும் கனல் சிக்கென வாய் கிழித்து,
உறைப் படும் ககனத்து எழ ஓங்கல் போல்,
அறப் படும் தவன் அன்பு மிகுந்து உயிர்,
புறப் படும், பரன் போதல் இருத்து இலால்.
94
   
சூசையின்வணக்கம்
 
718இருத்தி வாழ் உயிர் ஏவி உள் தூண்டிய
அருத்தியால், இளவல் பதத்து அர்ச்சனை
திருத்தி, வீழ்ந்தனன் சென்னி நிலம் பட,
கருத்தில் ஆர்ந்த மறைக் கொழு கொம்பினான்.
95
   
காட்சியிற்கண்ட இறைவன்தாயை, சூசை தன்அருகிற்கண்டதும்
சிந்தனையில்ஆழ்தல்
 
719வீழ்ந்த ஆசையின் மீண்டு எழுந்தான்; அருள்
ஆழ்ந்த காட்சி ஒன்று இன்றியும், அண்டையில்
தாழ்ந்த காந்தையைக் கண்ட தவத்தினோன்,
சூழ்ந்த யாவையும் சூழ்ந்து உளத்து ஓங்கினான்.
96
   
சூசை தான்பெற்ற நன்மைகளால்உள்ளம்உருகுதல்
 
720இன்ன யாவையும் உளத்து எண்ணி, எண்ணிய நிலைக்கு
உன்னலால் உளம் உயர்ந்து, இன்பு அறாது உருகுவான்,
பன்னலால் அடைவு அரும் பண்பு அடைந்து உயரினாள்
துன்னலால் அடை நயன் சூழ்ந்த மாதவ நலோன்.
1
   
கடவுளை வளர்க்க நான்தகுதியோ?
 
721‘முந்தை ஆம் முதலினோன், மூ இடத்து ஒருவன் ஆய்,
தந்தை யாவரும் இலா கன்னியின் தனயன் ஆம்
எந்தை யான் இவண் வளர்த்து எற்கு இதோ இயல்பு?‘ எனாச்
சிந்தையால் உருகி, மீண்டு ஆய்ந்த சொல் செப்பினான்:
2
   
திருமகன்மழலையைக்கேட்பேனோ?
 
722“வானும் நேராது மாறா வரத்து ஓங்கி, வான்
மீனும் நேராது மெல் ஆக்கை கண்டு, ஏந்தி, ஊர்
தேனும் நேராது தேர் தீம் சொலைச் செப்பவே,
நானும் நேர் ஆகி, நாணாது கேட்பேன் கொலோ?“
3
   
திருவடியைத்தலைமேற் சூடுவேனோ?
 
723“வேதமே வேடமாய் வேய்ந்த மா தவர் எலாம்,
ஏதமே தீர்க்குவான் ஈங்கு நாடிய பிரான்
பாதமே பாவி நான் பார்க்கவும், தலையின் என்
கேதமே தீர மேல் சூடவும் கெழுமுமோ?“
4
   
புலவரும்கூறமுடியாத நலம்பெற்றேன்
 
724“நீர் உலாம் உலகினோர் நீண்ட செங் கதிரவன்
தேர் உலாம் உலகினோர் சேர்ந்து போற்றிய, நிலா
ஏர் உலாம் அடியினாள் எய்தி, எய்திய நலம்,
சீர் உலாம் அடியினால் தீம் சொலார் அடைவரோ?“
5
   
வானவர்விறும்பும்நலம்பெற்றேன்
 
725“மேலின் ஆர் வாசமே வீசு பூ விள்ளும் ஓர்
கோலினால் வந்த கோடாத பூங் கொடியை என்
பாலின் நான் எய்தலால், பான் உலாம் நாடரே,
ஏலினால் மேவு சீர் ஆயது“ என்று எண்ணுவான்.
6
   
சூசை, மரியாளைத்தன்உள்ளத்தில்போற்றுதல்
 
726மாட்சியால் ஓங்கு பூ வாகையான், எண் அருங்
காட்சியால் ஓங்கி, முன் கண்ட யாவும் தரும்
சூட்சியால், ஓங்கு தன் தூய மாதேவியைத்
தாட்சியால் ஓங்கு உளத்து ஓர்ந்ததே சாற்றுவான்:
7
   
மரியாளைப்புகழ்ந்துரைத்தல்
 
727“தூய் உலாம் இந்து உலாம் சொக்கு உலாம் பாதமும்,
சேய் உலாம் பான் உலாம் சீர் உலாம் தேகமும்,
மீ உலாம் மீன் உலாம் மின் உலாம் சென்னியும்,
ஓய் இலாது இற்று எலாம் உற்ற மா மாட்சியாய்!“
8
   
 
728“நீர் அளாம் புணரி சூழ் நீண்ட பார் உலகமும்,
கார் அளாம் கதிர் அளாம் காய வான் உலகமும்,
சீர் அளாம் கருவி இல்லாது செய்தன விதத்து
ஏர் அளாம் முறைமை ஈங்கு இன்று கண்டனன் யான்.“
9
   
 
729“ஈறு இலா செகம் எலாம் ஏத்தும் ஓர் இறையவன்,
மாறு இலாத் தயையினால் வந்து, காரணம் இலா,
பேறு இலாத் தகவு இலாப் பேதையாம் எனை, உன்னால்,
தாறு இலாத் திரு உறத் தான் தெரிந்தனன், இதோ!“
10
   
 
730“வானகத்து உற்று நின்றோர் வணங்கு உன் வளம்
யான் அகத்து உற்றிலன் ஏவல் கொண்டேன் நினை;
தேன் அகத்து உற்ற அருள் சீர்மையான் நீ பொறுத்து,
ஊன் அகத்து உற்ற உன் சேயொடு ஆள் என்னையே.
11
   
மரியாளைத்தொழுதல்
 
731“தாயும் நீ தலைவி நீய் தாழ்வு இலாத் தயவு எலாம்
ஈயும் நீ பரியும் நீ இட்ட என் குறை எலாம்
தேயும் நீ கருணை ஆம் சேயொடு அன்பு அலையினுள்
தோயும் நீ எனையும் நீ ஆள்“ எனாத் தொழுது உளான்.
12
   
மரியாள்வருந்திக்கூறுதல்
 
732பற்று அறுத்து, உள் திறல் பற்று அருள் பொற்பினான்
சொற்றல் உற்றிட்ட அச் சொல் செவிப் பட்ட போது,
உற்ற அழல் பட்டது ஒத்து உள் திகைத்து, ஒப்பு இலாது
உற்று, அகத்துள் தகச் சொக்கினாள், சொற்றுவாள்:
13
   
 
733“தொழுதேல், தொழுதேல்! இறைவன்
  தொழுதால் நன்று என்றாலும்,
பழுதே தவிர் சூல் பயனால்
  பரமன் என்னோடு ஒன்று ஆம்
பொழுதே தொழுதால், எனக்கே
  புரி ஓர் பணிவு ஆம்“ என்னா
அழுதே அழுதே தொழுதாள்,
  அமரர்க்கு அரசாள் என்பாள்.
14
   
‘வீட்டு வேலைகளை நானே செய்வேன்‘என சூசை கூறுதல்
 
734பைந் தாள் உயர் தாமரை போல்
  பிறை மேல் படி பொன் பதத்தாள்
நொந்தாள் என்னா, தானும்
  நொந்து, ஆம் என்றான் என்றால்
“செந் தாள் நோகப் பணி நீ
  செய்யாது, அடியேன் முடிப்பத்
தந்து, ஆள்பவே, தயை செய்து
  அருள்வாய்“ என்றான் முனிவன்.
15
   
 
735துன்று ஆய பணித் தொழில் என்
  தொழிலே என்றாள் அவளும்.
என்று ஆய், எளிமைத் தகவு
  எய்துதற்கே இருவர் தம்மில்
பின்றா முறையால் இசலி,
  பெரிது உம்பரும் உள் வியப்பச்
சென்று, ஆய பணித் தொழிலைச்
  செய முன்னுவர் அச் சான்றோர்.
16
   
மனத்தாழ்ச்சி பற்றிய உரை
 
736வீழ் வாரியினால் குழி நீர்
  வீயாது உறைகின்று என்னாச்
சூழ்வார் இல்லால், தொடர் தீது
  அறியாது, ஆள்வார் அல்லால்
வாழ்வார் இல்லை என்பார்
  மாணா மண்ணோர் மனத்தில்
தாழ்வார் உயர்வார் என இத்
  தக்கார் தண்மை விழைவார்.
17
   
 
737காயா மரமே அல்லால்,
  காய்த்த சினைகள் நிறுவா,
தீயார் செல்வத்து அல்லால்,
  தெருளோர் செருக்கு எய்துவரோ?
பாயா நெகிழும் பணியாதன
  வில் பணித்த சரமே.
வீயாது உயரும் வளி நேர்
  வெகுளா வளையும் தருவே.
18
   
 
738சால் ஓர் பொருளால் நிறை பொற்
  கலமே தரும் ஓர் தொனியோ?
நூலோர் இயக்கம் பேசார்,
  நுண் மாண் நுழைகின்ற அறம் கொள்
மேலோர் உகப்பே மேவார்
  மேவார்த் தொடர் தம் நிழலைப்
போல், ஓர் இடத்தும் தேடாப்
  பொழுதே தொடரும் புகழே.
19
   
 
739ஈதே மறைநூல் என்னா
  அறைதற்கு இறையோன் வந்த, அப்
போதே எளிமை புணரக்
  கண்டு, அத் தணிவில் பொலிவோர்,
கோதே கொணர் ஆள் வினையைக்
  குணியா, குனி தாழ் வினையே
நீதே என, அந் நெறி நின்று
  ஒழுகற்கு இசலா நின்றார்.
20
   
வீட்டு வேலையிற்போட்டி வளர்த்தல்
 
740பல் நாட்கு ஒரு நாள், மனையாள்
  மனையைப் பரிவாய் விளக்க
முன் நாட்கு இணையா, முனிவோன்
  கண்டே, “முதலோன் சூல் கொள்
அன்னாட்கு இதுவே முறையோ?“
  என்றான். அவளும், “முறை ஈது
இன்னாட்கு இறை ஆம் நினக்கோ?“
  என, அத் தொழிலை முயன்றாள்.
21
   
 
741உனதே எனதே இல்லாது,
  இல்லில் ஒரு நாள், பணிப் பால்
தனதே என, மா தவனே செய்தான்.
  “தவறாது, இந் நன்று
எனதே“ என்றாள் அமரர்க்கு
  அரசாள். “இது நன்று என்றால்,
நினதே என்பாய் கொல்லோ?
  நிருபற்கு இது“ என்று உழைத்தான் .
22
   
மரியாள்கண்விழிக்கி முன்சூசை வீட்டு வேலை செய்தல்
 
742வண்டு ஆயிரம், செஞ் சுடர்
  தோன்றிய முன் வந்தே கமலத்
தண் தாதினைத் தாம் குடைந்து
  ஊறிய தேன் உண்ணும் தன்மைத்து,
ஒண் தாது அவிழ் பூங் கொடியோன்
  உறங்கு இன்று, அவள் தாமரைக் கண்
விண்டு ஆகுதல் முன், விழையும்
  பணியே எல்லாம் முயல்வான்.
23
   
மரியாள்உரையை மறுத்தல்
 
743முயலாது ஒன்று உண்டு என்றால்
  முடுகி முடிப்பக் கேட்பாள்,
புயல் ஆர் உடு ஆர் குழலாள்,
  அவனும், புரி புன்னகையால்,
“ இயலாது உனக்கு“ என்று மறுத்து,
  இடை வான் பொருள் போக்கியகால்
மயல் ஆம் என்னா, மனம் நொந்து
  அழுவாள் வானோர்க்கு அரசாள்:
24
   
மரியாள்வருந்தி திருமகனை வேண்டுதல்
 
744“சேய் ஆய் எளிமைக்கு ஒளி
  ஆக்குதற்கே சென்றாய், திருவோய்!
தாய் ஆய், அடியாட்கு எளிமைத்
  தகைமை வேண்டாது என்னோ?
தூய் ஆய் இந் நன்று இலதேல்,
  துஞ்சாது உயிர்க்கு ஓர் நிலையோ?
வீயா அருளே, மகவே!“ என்னா
  விழைவு உற்று அயர்வாள்.
25
   
இறைவன்விருப்பத்தை சூசையிடம்வானவர்தெரிவித்தல்
 
745‘அயர்வாள் தாயோ?‘என்னா
  அன்போடு இரக்கு உற்று, அம் சேய்,
துயர் வாடு அகமே துன்பு அற்று
  அலரத் தூது ஏவிய ஓர்
உயர் வானவன், உற்று, ஒரு நாள்
  வளன் அப் பணியைச் செய்யப்
பெயர்வு ஆயின கால், பிழி வாய்
  மலரே பிளிரச் சொல்வான்:
26
   
 
746நுணிக் கொம்பினும் ஊக்கினர்
  நொந்து இறப்பார்; அனைய ஊக்கம்
குணிக்க, உம்பரும், மானிடரும்,
  குணியா, கெட்டார் என்னாக்
கணிக்கும் பரிசால், கடவுள்
  மனுவாய் எளிமை காட்டத்
தணிக்கும் பரிசால், தாய் தண்
  தொழில் செய்யாதால், தகவோ?“
27
   
 
747“செல் ஆர் உலகிற்கு உயர் வாழ்
  எமக்கும், சேல் ஆர் கடல் சூழ்
கல் ஆர் உலகு உற்றவர்க்கும்
  கனி இன்பு இயற்றும் கருணை
வல் ஆரிய மா மடவாள்
  வருந்தும் துயரம் கண்டும்,
வில் ஆர் அறிவோய், விழையும்
  தொழிலை விடல் ஆகாதோ?“
28
   
 
748“இன்பால் வான் ஏத்து இவளை நீ
  ஏற்றுதல் நன்று அன்றோ?
அன்பால் விழை தண் தொழிலை
  அன்னாள் அரிது ஆற்றிடலே
தன் பால் என, தாய் தனையன் இனி
  வாழ்ந்து உண வேர்த்து உழைத்தல்
உன் பால் என ஆண்டகை ஏவினன்“
  என்று உரைசெய்து ஒளிந்தான்.
29
   
சூசை தன்நீதி இது எனல்
 
749“மீ ஏவியது ஓர் விதிமேல்
  விதி ஒன்று உண்டோ? இறைவா!,
நீ் ஏவியதே நான் மேவிய
  நீதி“ எனத் தொழுதே
போய், ஏவியதைப் புகழ் மேல்
  நின்றாட்கு உரைசெய்தனன் ஆல்,
வாய் ஏவிய பா நிகரா மறைக்கு
  ஓர் கொழுகொம்பு அன்னான்.
30
   
சூசை மரியாள்பணிவுக்கு நிகர்இல்லை (கவிக்கூற்று)
 
750இப்பால் ஏது ஒன்று இல்லாது
  எல்லாம் உள ஆக்கினனாய்
முப்பால் ஒன்று ஆம் முந்தைக்கு உரி
  மாண் முறையோடு அருகு உற்று
ஒப்பால் அடையா இப் பண்பு
  உடையோர் உடை இவ் எளிமைக்கு
அப்பு ஆர்கலி சூழ் உலகு ஆள்
  அரசர் தகவு ஒத்து உளதோ?
31
   
சூசையும்மரியும்அறம்ஆற்றிய முறை
 
751நீர்க் கணம் குழி நேடிய நீர்மையால்,
சீர்க்கு அணங்கு எளிமைத் துணை தேடினர்;
கார்க்கு அணங்கு உறை கான்றலும் போல், அறத்து
ஏர்க்கு அணங்கு எனும் ஈகை இயற்றினார்.
32
   
 
752மறுமை நாடி வழங்கிய அன்பொடு
நறுமை நாடிய வான் கொடை நல்கலின்
சிறுமை நாடிய பற்று அறத் தீர்த்திட
வெறுமை நாடினர் நாடு அரு மேன்மையார்.
33
   
 
753வீட்டு நன்மை விளை நிலம் ஆம், இலோர்
நீட்டு தம் கரம், என்று நினைத்து, அருள்
மாட்டு வித்து என, வந்து இரப்பார் கரத்து
ஈட்டு வான் பொருள் எண் இலது ஆம் அரோ.
34
   
 
754ஈந்து தாமும் இல்லார் என ஆய பின்,
காய்ந்து தீந்த குளம் கடி தோண்டு எனா,
தோய்ந்து உலாய அருளால் தொழில் செய்து உயிர்
வாய்ந்து வாழவும் ஈகை வழங்குவார்.
35
   
 
755‘உழுது உண்பார் உயிர் வாழ்பவர்; மற்று எலாம்
தொழுது உண்பார்‘ எனில், தாம் தொழில் செய்த பின்,
அழுது உண்பார், கொடை கோடல் இல் ஆயின
பொழுது, உண்பாரில் யார் எனப் பூசவே?
36
   
 
756அந்த நுண் தொழில் ஆம் எனக் கொள்பவர்
தந்தது ஒன்றினை, தாமும், நிறை குறை
வந்தது என்று இலர், வாழ்த்திக் கொண்டு, அய்யமாய்ச்
சிந்தவும், புயற் செங் கையில் கொள்ளுவார்.
37
   
 
757நாக்கு அணங்கு கனிந்து நவின்ற சொல்,
நோக்கு அணங்கு கண்ணோட்டம், நொதுத்த கை
ஊக்கு அணங்கு இடும் தானம் என்று உள்ளுவார்,
கோக்கு அணம் கொடு ஓங்கு குலத்தினார்.
38
   
 
758மங்குல் முட்டிய மாடம், எவன் செயும?்,
கங்குல் முற்றிய கையரைக் கொண்டதேல்
சங்கு உள் முத்து என, புன் மனை தாம் உறைந்து,
எங்கும் முற்றிய மாண்பு, இவர், ஏந்தினார்.
39
   
 
759அங்க மண் கலம் தீட்டுவர் ஆா?் எனா,
பொங்கு அகத்தைக் கவர் வலை போன்ற, பூண்
செங் கலத்து இனம், தீது என நீத்து, அருள்
தங்க முற்று எளி வேடம் தரித்து உளார்.
40
   
 
760பானு உடைக் கொடு, பால் மதிப் பாவலும்
மீன் உடைக் குடமும் தனில் வேய்ந்த பின்,
கான் உடைத் தொடையோ? கலனோ? தகா,
வான் உடைத் தளம் வாழ்த்து அரசாட்கு அரோ.
41
   
 
761‘வான் பொழிந்த இன்பு எய்து இலர் மண்ணிடை
தேன் பொழிந்தவை இன்பு எனத் தேடுவார்;
கான் பொழிந்த கனிக் கடு பாய்ந்த பின்,
ஊன் பொழிந்த உடற்கு இனிது ஏது?‘ என்பார்.
42
   
 
762என்று, தம் பசி மாற்றிட உண்கிலர்;
பொன்று தம் உயிர் போக்கு இலது உண்பர் ஆல்;
பின்று, தம் இறையோன் பெரிது ஊட்டியது
ஒன்று தம் உளத்து உண்டு இனிது ஓங்குவார்.
43
   
வறுமையின்கொடுமை சூசை மரியாரை வாட்டுதல்
 
763புவி அருந்திய புன் மிடி ஊங்கு எழ,
செவி அருந்திய கேள்வியார், தே அருள்
அவி அருந்தல் அல்லாது, அருந்த ஒன்று இலா,
நவி அருந்திய நல் உடல் வாடும் ஆல்.
44
   
சூசையின்தளராத நம்பிக்கை
 
764சிந்தை தேறிய தேறல் செய் வாகையான்,
“முந்தை ஆய எலீய முனிக்கு, உணா,
தந்தை, காகை கொடு ஈந்தன தன்மையால்,
எந்தை இன்று உணவு ஈதல் செய்வான் என்றான்.
45
   
பறவைகள்கனி கொணர்தல்
 
765உரை செயும் பொழுது, ஒப்பு இல பாடிய
நிரை செயும் பல புள், நெடு நாள் உறீஇ,
விரை செயும் கனி ஈந்து, விருந்து எனா
கரை செயும் கடை அற்று இனிது உண்பர் ஆல்.
46
   
நல்லோர்விருந்து அளித்தல்
 
766ஏம் அகத்து அருள் நாயகன் ஏவியும்,
சேம் அகத்து அருள் தேறு நல்லோர், பல
யாம் அகத்தில், நினைத்து இலது, இன்ன மா
கோ மகர்க்கு விருந்து எதிர் கொள்வர் ஆல்.
47
   
இறைவன்அருளை வாழ்த்துதல்
 
767கொண்ட யாவையும் கொண்டு, இறை வாழ்த்தி முன்,
“பண்ட நாள் சிறைப்பட்டு உறை தானியற்
கண்ட மேலவன், ஆங்கு உழவன் கொடு
மண்டு உணா கொணர் மாண்பு இது“ எனா உண்டார்.
48
   
சூசையின் வருத்தம்
 
768பின்னை, ஒன்று இல பிற் பகல், பேர் எழில்
அன்னையின் திரு ஆனனம் வாடல் காண்
தன்னை உன்னு இல மாதவன் நொந்து, மீன்
மின்னை வென்ற கண் விண்டு உறை வென்றதே.
49
   
கன்னி மரியாளின்தேற்றுரை
 
769“மன்ன நம் மணம் வாய்ந்து முடிப்ப முன்
பொன்ன நின் கொடி பூத்தது. தந்த பின்,
உன்ன அருஞ் சுவை ஒன்று இலது ஈதலும்
அன்ன வண் தயையோற்கு அரிதோ?“ என்றாள்.
50
   
தேன்கலம்காணல்
 
770என்னலோடு, ஒரு காரணம் இன்றியும்,
கன்னலோ மதுவோ கனித் தன்மையோ,
மின்னல் ஓடிய பொன் கலம் மீது, ஒரு
பன்னலோடு அடையாப் பயன் கண்டு உளார்.
51
   
வானவர்சூசை மரியார்க்கு விருந்தளித்தல்
 
771இற்றை ஓர்ந்த இல்லோர், உவந்து ஓங்கவே,
மற்றை ஓர் பகல் மாந்திட ஒன்று இலர்,
கற்றை ஓர் பிழம்பு உற்ற உருக் காட்டி, வான்
உற்றையோர், உணவு உய்த்து வழங்கினார்.
52
   
 
772எண்ணம் தீர்ந்த எழில் கொடு, வெண் நிலா
வண்ணம் தீர்ந்து ஒளிர் மாறுகத்து உம்பர், சூழ்,
தண் அம் தீம் புனல் ஆடு அலர்த் தண் தொடை
சுண்ணம் தோய்ந்து உரம் தூங்குபு, தோன்றினார்.
53
   
 
773துகிலில் தோய் உரம் தோய் அணி தோன்றவே,
அகிலில் தோய் துகில் வாடையோடு ஆட, விண்
முகிலில் தோய் வரை மொய் புயம் ஓங்க, நான்
புகலின், தோய் நயத்து ஓர் பொருவு ஒத்ததோ?
54
   
 
774புரிந்த தாமரை பொன் தவிசு இட்டு, மின்
எரிந்த மீனொடு தேன் இழி பூந்துகள்
விரிந்த வானி விரித்து, உயர் வாசனை
சொரிந்த நீர்ப் புனல் தூற்றி வழங்கினார்.
55
   
 
775கான் சொரிந்த கனிப் பட, பாலொடு
தேன் சொரிந்த சுவைப்பட, சேண்உளோர்,
வான் சொரிந்த மதுக் கொடு, பல் உணா
மீன் சொரிந்த வெயில் கலத்து ஈட்டினார்.
56
   
 
776கண் கொடு உண்ட களிப்பினும் ஏழு இசைப்
பண் கொடு உண்ட செவிப் பயன் பாடு எனா
எண் கொடு உண்டு, அளவு எல்லை இல் தேவ பல்
உண் கொடு உண்ட நயத்து இணை உள்ளதோ?
57
   
சூசையும்மரியும்விருந்துண்ணுதல்
 
777எல்லும் செல்லா ஒள் ஒளி ஏந்து ஓர் எழில் உண்டு ஆய்,
செல்லும் செல்லா விண் உறைகின்றோர், சிறிது ஆங்கு ஓர்
இல்லும் செல்லா நின்றன தன்மைத்து, இவர் தம்பால்
சொல்லும் செல்லா உள்நயம் உண்டே, தொழுது உண்டார்
58
   
வானோர்பாவிற்கிசைய சூசை பாடத்தொடங்குதல்
 
778அள்ளும் தன்மைத்து ஆர்ந்த
  ஒளி வானோர், அரிது என் பா
கொள்ளும் தன்மைத்து இன் இசை
  பாட, குளிர் தன் கோல்
விள்ளும் தன்மைத்து ஊறிய
  தேன் போல், வினை எல்லாம்
உள்ளும் தன்மைத்து, ஒண் கொடி
  கொண்டான், உரை கொண்டான்:
59
   
இறைவன்அருளைப்போற்றுதல்
 
779“பின்றா வல்லோய், பேணிய அன்போய், பிரிவு இன்றி
ஒன்றாய் நின்றோய், ஈங்கு உயிர் எல்லாம் உணவு ஈய்ந்தோய்,
குன்றா அன்பால் நம்பின யார் யார், ‘குறை உண்டோம்‘
என்றார் உண்டோ? என் உயிர் மாறாது இனிது ஆள்வோய்!“
60
   
 
780“வல்லார் உண்டோ உன்னை அலாது? உன்
  வலம் நம்பி
இல்லார் உண்டோ? உண்டிலர் உண்டோ?
  இவை இங்கண்
கல்லார் உண்டோ? கண்டவை எண்ணிக்
  கரவாதேல்,
சொல்லார் உண்டோ? உன் அருள் வாழ்த்தும்
  தொடை மிக்கோய்!
61
   
 
781“நீர் தோய் பொன் ஆர் தன் தலை நீட்ட நிசி நீத்தோன்,
ஏர் தோய் மின் ஆர் பொன் சிறை அம் புள் இனம் எல்லாம்
சீர் தோய் தம் நா நின் புகழ் பாட, செயிர் இன்றி,
தார் தோய் தேனோடு ஊண் பல தந்தே தயை செய்வோய்!“
62
   
 
782“காய் கான் செல் என் முந்தையர், உண்நீர்க் கனிவு இல்லா
நோய் கான்று, ஈட்டும் தாகம் அவித்தே நுகர்வு எய்த,
தீய் கால் கல்லே தீம் புனல் கால, திரிவார் தம்
வாய் கான் எல்லாம் பின் செல, அக்கல் மலிவு உண்டார்.“
63
   
 
783“அன்னார் அந் நாள் அவ் வனவாய் வந்து அமுது இன்றி,
பல் நாள், தன்னால் உள்ளிய இன்பம் பல ஈந்த ஓர்
உன்னா நுண் மா தே அவி, தந்து, ஆங்கு ஒரு கோடி
இன்னா துன் நோய் ஒன்றுஇல வாழ்ந்தே இனிது உண்டார்.
64
   
 
784“மாண்ட ஓர் முனியே கான் வழி உண்ணா மயல் உற்றான்,
ஆண்டு ஓர் அமரன் தந்த ஓர் பிண்டம் அயில்கின்றான்,
நீண்ட ஓர் வழியே நாற்பது நாள் போய், நிகர் அற்றான்,
மீண்டு ஓர் பசி தோன்றாது, உயர் குன்றின்மிசை சென்றான்.
65
   
 
785“கறித்து உண் பைம்புல் ஒன்று
  இல காய்தல் கருதி, கார்
மறித்து, உண்ணாது எண்ணா உயிர்
  மாழ்ந்தே, மருள் எல்லாம்
செறித்து உண் அன்று, ஆர்
  யோகி அவற்கே, திளை, பல் நாள்,
பறித்து உண் காகம் தான்,
  உணவு ஈயப் பரிவு ஈந்தோய்.
66
   
 
786“நின்னால் ஆம் ஓர் நன்றது வெள்ளம் நெடிது எண்ணல்
என்னால் ஆமோ? என் உயிர் வேநதே! இயல் தம் கை
தன்னால் ஆம் ஓர் புன் தொழில் சார்பு என்றவர் வாழாது,
உன்னால் ஆம் ஓர் நல் துணை ஓர்ந்தார் உயிர் வாழ்வார்.
67
   
 
787“குற்றம் தேடேன்; கோல் குடை என்னும் குறை தேடேன்;
சுற்றம் தேடேன்; சூழ்ந்து என உள்ளம் சுடு அம் பொன்
பெற்றம் தேடேன்; நம்பிய இம்மை பெரிது உய்க்கும்
அற்றம் தேடேன்; தேடுவன் நீ செய் அருள்“ என்றான்.
68
   
 
788என்றான் மென் தாது ஓங்கிய
  கோலான், இவை கேட்டு ஆங்கு
ஒன்றா நின்றார் வான் சபை
  உள்ளா உணர்வு உள்ளி,
குன்றா மென் தாது ஊறிய
  தீம் தேன் கொடு பைம் பூ ,
பொன்றா அன்பால், விண்
  மழை போலப் பொழிகின்றார்.
69
   
கதிரவன்மறைவு
 
789மாண் அக் கால், அப் புன் மனை வானோர் மனை ஒப்பப்
பேண் அக் காலத்து, ஒள் ஒளி பெற்ற பெரிது என்னாக்
காண் அக் காலத்து, ஆக்கை சிவந்தே, கடல் அம் கீழ்,
நாண் அக் காலத்து, ஆழ் முழுகிற்றே, நனி வெய்யோன்.
70
   
சூசை மரியின்மனைச்சிறப்பு
 
790மா இரு ஞாலம் மூடு
  மாசு இரா அற வில் வீசிப்
பாய் இரு சுடரோடு ஒத்தார்,
  பகல் இரா இல வானோர்க்கு ஒன்று
ஆய், இருவரும், உள் ஓங்கி,
  அமரர் சூழ் பணிந்து நிற்ப,
காய் இரு விசும்பின் மாட்சி
  காட்டிய மனை அது அன்றோ
71
   
மரியாள்கூறிய ஞான உரை
 
791சூல் முகத்து எரிந்த மேகம்
  சுடர்ந்து இருள் அறச் சூழ் மின்னும்
போல், முகத்து இறைவன் தன்னைப்
  புதல்வனாய்க் கருப்பம் பூண்டாள்
தான் முகத் திரு வில் வீசும்
  தகுதியால், தெளிந்த ஓதி
நூல் முகத்து உமிழ்ந்து, தீம் தேன்
  நுகர்ந்த வாய் மலர்ந்து சொல்வாள்:
72
   
 
792“கார் எழும் ககனத்து ஊர்ந்த கதிர் பல உதித்தல் தந்தே
ஏர் எழும் மணியும் பூவும் இனிய தீம் கனியும் மற்றச்
சீர் எழும் பொறித்த மாமை திளைத்தன எவையும் தந்த
பேர் எழும் கருணையானே பின்னையும் தன்னைத் தந்தான்.
73
   
 
793“நூல் நெறி வழங்கா வண்ணம்,
  நுதலிய கருணைச் சால்பில்
சூல் நெறி நர தேவு ஆகித்
  தோன்றிய பின்னர் எந்தை,
பால் நெறி பெருகும் இன்பப்
  பரவை நாம் மூழ்கல் தந்து,
வான் நெறி வழங்கும் தன்மை
  மண்ணிடை வழங்கான் கொல்லோ?“
74
   
 
794“கோல நல் படலை, பைம் பூக் கூர் உகிர் விசித்த மாலை,
சால நல் கதிர்ப் பொன் பற்றும் தட மணிப் படலை, மற்ற
நீல நல் கடல் சூழ் பாரில் நிகர் அற வலிய ஆர்த்து, இஞ்
ஞாலம் நல் தகவில் ஓங்க நாயகன் மனிதன் ஆனான்.
75
   
 
795“பூட்டிய புணர்ச்சிப் பாலால்,
  புணர் இரு துவங்கள் வேற்று ஆய்,
கூட்டிய ஒருவன் ஆய
  குணத்தவன் மனுவும் என்பான்;
ஈட்டிய நலங்கள் குன்றா
  இறைவனும் என்பான்; இவ்வாய்ச்
சூட்டிய கருணை நல் நூல்
  துறை வலோர் அடையும் பாலோ?
76
   
 
796“நஞ்சு அமிர்து இரண்டும் சேர்த்து,
  நஞ்சு நல் அமிர்தம் ஆமோ?
விஞ்சு அவிர் பொன்னில் சீருள்
  விசித்து, இது பசும் பொன் ஆமோ?
நெஞ்சு அவிர் கருணை பூண்ட
  நிமலன், தன் குணமும் குன்றா,
எஞ்சு அழி மனுவின் தன்மை
  இறைமையோடு உயர்த்தினானே!“
77
   
 
797“கீழ்வரே சேர்ந்த மேலோர்
  கீழ்மையே மாறி, தாமும்
தாழ்வரே அன்றி, தாழ்ந்தார்
  தகவு உற வலியர் ஆரோ?
வாழ்வரே, இறைவற்கு ஒத்த
  வளமையும் உணர்வும் பண்பும்
சூழ்வரே, பரமன் நல் தாள் தொழுது
  அருகு உவப்பின் சேர்ந்தார்.“
78
   
 
798புரு வளர் கதிர்கள் கோலால்
  பொறித்தது ஓர் படத்தின் சாயல்,
மரு வளர் மலரும் வாமம்
  வளர் இன மணியும் பொன்னும்,
உரு வளர் பருதி, தோற்றி
  உடைத் தொழில் எஞ்ச, நாதன்
திரு வளர் தயையின் சார்பு
  சீர் எலாம் பயக்கும் அன்றோ?
79
   
 
799“மெய் விளை இடம் ஐந்து
  இன்றி விளங்கிய கடவுள் ஆகி,
பொய் விளை பொறிகள் அட்டு,
  புரை விளை நசையும் அட்டு,
துய் விளை உளத்தில் பொங்கும்
  தொடர்பு இறகு ஆக ஊக்கி,
ஐ விளை உணர்வோர் அல்லால்,
  அனந்தன் நல் பாதம் சேரார்.“
80
   
 
800“செரு வழி பொறிகள் ஐந்தும்
  செகுத்துத் தன் நிலையில் ஊக்கல்
அரு வழி என்று, தானே
  அம் கண் வான் இறங்கிப் பாரில்
கரு வழி வந்த நாதன்,
  கலை முதிர் சுருதி காட்ட,
உரு வழி தோன்றி மாக்கள்
  உறவு உற மகன் ஆனானே!“
81
   
 
801“கோள் நெறி கடந்த ஞானம்
  கூறி, எம் உயிர்கள் வாழ,
வாள் நெறி கடந்த புண் போல்
  வருந்தல் நிற்கு இனிதோ? அன்பால்
பாண் நெறி கடந்தோய், எம்மால்
  பயன் உனக்கு ஈங்கு ஒன்று உண்டோ?
சேண் நெறி கடந்து நம்மைத்
  தேடி வந்து உளைவாய்!“ என்றாள்.
82
   
இருவரும்திருமகனைப்போற்றி மகிழ்தல்
 
802தேன் உருக் கோதை ஒத்தாள்
  செப்பிய கனிந்த தீம் சொல்
கான் உருக் கொடியோன் சாலக்
  களிப்பு உறச் செவியின் மாந்தி
ஊன் உருக் கொண்ட நாதன்
  உணர்ந்து இறைஞ்சு இருவர் வாழ்த்தி,
மீன் உருக் கொடு வில் வீச,
  வேத நல் திலதம் ஒத்தார்.
83
   
 
803இன்ன அரு நிலைமையோடு, இரவு எலாம், இனிது
உன்ன அரும் உவகையோடு, உணர்ந்த ஓதியால்,
துன்ன அரும் அருள் புரி சுதனை வாழ்த்தலின்,
பன்ன அரு மகிழ் வினை பயத்தது ஆம் அரோ.
84