மகிழ் வினைப் படலம்
 
மரியாளின்ஞானவுரையை மீண்டும்கேட்க சூசை
மரியாள்அறைக்குச்செல்லுதல்
 
804உள் நிலா உரை வழி உகுத்த பான்மையால்,
தெண் நிலா அடியினாள், செப்பும் சொல் விழைந்து,
எண் இலா வரத்தவன், எண் இலா முறை,
அண்ணி ஆய், அவள் உறை அரங்குள் ஏகுவான்.
85
   
மரியாள்பேரொளியோடு மேலெழுந்து
நிற்றலைச்சூசை கண்டு வியத்தல்
 
805விரை செயும் கொடியினான் நுழை பல் வேலை தேன்
உரை செயும் மடந்தை வான் உயர் நின்று ஒள் ஒளி
வரை செயும் அளவு அற வழங்கல் காண்டலும்
கரை செயும் கடலினும் களிப்புற்று ஓங்குவான்.
86
   
 
806தேனின் ஆர் மடி எனத் திங்கள் தெண் சுடர்ப்
பால் நிலா சகோரமே பருகினால் எனா,
வான் நிலா எழுந்த தாள் மடந்தை கால் கதிர்
மீன் நிலாவு இரு விழி மேய்ந்து உள் தேறுவான்.
87
   
 
807பேர் உயிர்த் துணை உடல் பெயர்ந்து, வான்மிசை
ஏர் உயிர்த்து, இரவி போல் எறிந்த வில் திரள்
நேர் உயிர்த்து, அனலி முன் பளிங்கு நேர் முகத்து
ஆர் உயிர்த் தோழனும் அலங்கித் தோன்றினான்.
88
   
 
808சடம் கொடு விண் உறை தளங்கள் தாழ்தலும்,
கடம் கொடு பல் இயம் கறங்கிப் பாடலும்,
இடம் கொடு சூழ்தலும் கண்டு, உளி் இன்பு அலை
புடம் கொடு கடல் பெருக்கு எடுத்து, உள் புக்கு உளான்.
89
   
 
809கண் குடித்தன ஒளி கிளர்த்த காட்சியான்
எண் குடித்து உவந்த கண் இமைப்பு இலாமையும்,
வண் கொடித் துணர் அலர் வாடு இலாமையும்,
விண் குடித் தகைமையால் விளங்கித் தோன்றினான்.
90
   
 
810‘இன் நிழல் இவரிய இழை பொன் பூணினாள்
தன் நிழல் ஒடுங்க நான், தகு மணத்திடை
மன் நிழல் எழும் கொடி வகுத்தது ஆம்!‘ என்றான்,
மின் நிழலுடன் புனல் விளைக்கும் கண்ணினான்.
91
   
 
811உன்னிய உவகையோடு உருகி, இன்பு அறா
மின்னிய முகில் துளி விட்டு எனா, மிளிர்
கன்னிய விழி மழை கான்று கான்று உயர்
துன்னிய புய மலை துளங்கத் தோன்றினான்.
92
   
 
812‘மன் என மணத்திடை அமைந்த மாது போய்,
மின் என மிளிர்ந்து உயர் மேவி, மீள்கு இலா,
தன் என விசும்பு உறின், இவள் தணந்து நான்
பின் என செய்வது?‘ என்று உளத்தில் பேணினான்.
93
   
 
813‘உந்து தேர் என நசை உகப்பில் ஏறினள்,
நொந்து தேர் அரும் புவி இடுக்கண் நூக்கு சூல்
நந்து தேறிய நயன் நல்க, மீட்டு இவண்
வந்து தேறுவள்!‘ என மனத்தில் தேறினான்.
94
   
பூமியில்இறங்கி நின்ற மரியாளிடம்சூசை பேசத்தொடுங்குதல்
 
814இத் திறத்து உணர்ந்த காலத்து,
  எந்தை தன் கருணை வீர
மொய்த் திறத்து, அவிர் தன் தாளின்
  முழுது உற விசித்த கோதை,
மெய்த் திறத்து எறிந்த கற்றை
  விலகி நீத்து இறங்கினாள் என்று,
அத் திறத்து இவன் தன் சொல்லும்
  ஆர்வமும் உயிர்த்துச் சொல்வான்.
95
   
சூசை, மரியாளையும்அவள்பால்அவதரித்த இறைவனையும்போற்றிக்கூறுதல்(மரியாளை நோக்கி)
 
815“கடம் புகும் தேறலைச் சூல் கொள் கண்ணி போல்
தடம் புகும் கடவுளைத் தாங்கும் பீடமே,
உடம்பு கொள் உனது சேய் உவப்பதற்கு, நின்
புடம் புகும் தமியனே புரிவது ஓதுவாய்.“
96
   
 
816“கையினால் உரை செய, கேட்பக் கண்களால்,
மொய்யினால் அலைவு கொள் சிந்தை மூகை போல்,
மெய்யினால் அமைந்த பின் விமலன் செய் அருள்
மையினால் உணர்கு இலா மருள்கின்றேன் அரோ.“
97
   
 
817“கொம்பு அயில் கொடி என, கொடியில் என,
கம்பு அயில் முத்து என, மலருள் கள் என,
அம் பயில் உன் வயிற்று அமலன் ஆய பின்,
நம்பு அயில் எமக்கு உள நயன் சொல்வு ஆம் கொலோ?“
98
   
 
818“மொய் அகத்து இரட்டும் நீர் முடுகிச் சூழ்ந்து அமர்
வையகத்து உறும் துயர் மடிய, நாயகன்
மெய் அகத்து உதித்த போது, அலரை வென்ற நின்
கை அகத்து அடியனேன் காணல் ஆங்கொலோ?“
99
   
 
819“ஒளி அமை பிறை நுதல், புருவத்து ஒண்சிலை,
வெளி அமை உடு விழி, துகிரை வெல் இதழ்,
நளி அமை ஆம்பல் வாய், நளினம் நாண் முகம்
களி அமை நீர் உகக் காணல் ஆங்கொலோ?“
100
   
 
820“தண் படு மதுவொடு நறவு தாது அவிழ்
நுண் படும் அனிச்சையின் நொய்ய சீறு அடி
தெண் படும் மலர் இணை முத்தம் சேர்த்தி, என்
கண் படு புனலினால் கழுவல் ஆங்கொலோ.“
101
   
 
821“வீயினின் பூளையின் நொய்ய மெய் உடைச்
சேயினை, தொழிலினால் காய்த்த திண் கரத் -
தே இனி அடியனென் ஏந்தல் ஆங்கொலோ?
வாயின், என் உயிர் பிரியாமை ஆகுமோ?“
102
   
 
822“ஒளிப் பட உயர்ந்த பேறு ஒன்றும் இன்றியும்,
வெளிப் பட மனுப் புரம் வேய்ந்த நாயகன்
நளிப் பட, மலர்ப் பதம் நயந்து சென்னிமேல்
அளிப் பட இருத்தி, யான் அணிதல் ஆங்கொலோ?
103
   
 
823திருந்து பூஞ் சிகழிகை பூண்ட சீர் என,
பொருந்து பூந் திரு உடல் போர்த்து, நின் வயிற்று
இருந்து பூவிடை அவன் பிறந்த எல்லையின்,
வருந்து பூ எழச் செயும் வளப்பு எவன் கொலோ?
104
   
 
824“களிப்பனோ, அழுவனோ, கனியத் தான் எனை
விளிப்பனோ, சுளிப்பனோ, விழைந்த வாள் முகம்
ஒளிப்பனோ, தழுவிய உவப்பின் முத்தமும்
அளிப்பனோ, உலகு எலாம் அளித்த நாதனே?
105
   
 
825கோ முழுது இறைஞ்சிய கொற்றக் கொற்றவன்,
கா முழுது அளிப் படக் கலிகை விண்டு என,
பூ முழுது ஒழி நகை புரிதல் கண்டதேல்,
ஓ! முழுது உவந்து, உளத்து உருகி ஓங்குவேன்.
106
   
 
826“பால் நலம் கழை நலம் பகர் யாழ் நலம்
தேன் நலம் கடந்த மென் குதலைத் தீம் சொலை,
வான் நலம் உளம் படச் செவிகள் மாந்தினேல்,
யான் அலங்கு உயிர் விடல் இனியது ஆம் அரோ.
107
   
 
827“வளமை கொள் திறலினால் வயங்கு மாண்பினோன்,
இளமை கொள் பிறை என இளவலாய் வளர்ந்து,
எளிமை கொள் உணவினை, எளியன் எம்மொடு,
நளிமை கொள் கருணையால் நுகர்வது ஆவனோ?
108
   
(சூசை தன்மனதை நோக்கி)
 
828“கங்கை அம் சுழியினிற் பட்ட கால் எனச்
சங்கை அம் பெற்றியால் தவிக்கும் என் உளம்,
பங்கையம் பதத்தினான் பருக, நான் உழைத்து,
எம் கை அம் தொழிலனுக்கு இயலும் பான்மையோ?“
109
   
 
829“அரு வினைத் தொழில் உழைத்து அருந்துதீர் எனக்
கரு வினைச் சாபமாய்க் கடவுள் ஏவினான்;
பெரு வினை செய்ய நான், பிரான் உண்பான் எனில்
திரு வினைத் தன்மை ஆம் தொழில் செய்து ஆற்றலே.
110
   
 
830“துதி வளர் வரம்பு இலாது, அனந்த சோபனத்
திதி வளர் உவப்பு எழீஇ, அமரர் செய் புகழ்
விதி வளர் தகுதி மா விமலற்கு, ஈங்கு உரிப்
பதி வளர் இருத்தியின் பயன் இல் ஆயதே.
111
   
 
831“தேனொடு ஏந்திய மலர்ப் பதத்தில் சேர்த்திட,
கானொடு ஏந்திய நுரை கதுவு அப் பூந் துகில்,
ஊனொடு ஏந்திய திரு உடலம் சாய்ந்திட
மீனொடு ஏந்திய அணை, வேய்ந்து இல் ஆயதே.
112
   
 
832“இலங்கு ஒளிக் குரு மணி இணைக்கி, பொன் தவழ்
அலங்கு ஒளிச் சாமரை அமைந்து இல் ஆயதே!
விலங்கு ஒளிப் பரப்பு உற விரித்து, நல் பகல்
துலங்கு ஒளிப் படம் உயர் தோன்று இல் ஆயதே!
113
   
 
833“தான் இழுக்கு உறாது எரி மதியம் தாங்கிய
மீன் இழுக்கு உற எரி பசும் பொன் வெற்பு எனா,
வான் இழுக்கு உற எரி மணிச் சிங்காசனம்,
பான் இழுக்கு உற எரி பாலற்கு இல்லதே!“
114
   
 
834“மின் வளர் நவ மணி மிடைந்த போதிகை,
பொன் வளர் தூண்மிசை, பொருத்தி, செஞ்சுட -
ரின் வளர் இள வெயில் எறிந்த மாளிகை,
கொன் வளர் நசைக்கு இணை, கொண்டது இல்லதே.“
115
   
 
835“இறைவனை அருத்தியோடு இருத்தல் ஆக, நூல்
துறை வனை உணர்வினாய், பணியைச் சொல்,“ எனா,
அறைவன், நைகுவான், நசைக்கு அலைந்த நெஞ்சினான்;
சிறை வனை வயிற்று உறை சேயை ஏற்றுவான்.
116
   
கவிஞர்சூசையைப்புகழ்தல்
 
836ஏற்றுவான், அன்பின் உள் உருகி, இன்பு உற;
தூற்றுவான் இரு விழி சொரிந்த மாரியை;
போற்றுவான், அவற்கு பொழி வரத் தொகை
சாற்றுவான், உணர்குவான் மக்கள் தன்மையோ?
117
   
கன்னி மரியாள்பேரின்ப மொழிகளைக்கூறுதல்
 
837பண் எனச் சொன்ன தீம் சொல்
  பயன் உணர்ந்து, அரிய அன்பால்
கண் எனத் தன்னைக் காக்கும்
  காவலன், விருப்பம் கண்டு;
விண் எனத் தரணி கவ்வும்
  விரிந்த மா கருணை வல்லாள்,
நுண் என முறுவல் கோட்டி
  நுதல்வு அருங் கனி சொல் சொல்வாள்.
118
   
 
838மவான்தனைக் காத்தோற் காத்து
  வளர்ப்பதற்கு உரி கைத் தாதை
போன்று அனைத்து உணர்வும் பூண்டோய்,
  பொலிந்த நின் விருப்பம் நன்றே.
மீன் தனைக் கசடு என்று ஓட்டி,
  விழி கடந்த ஒளி நிற்பானை,
மூன்று அனைத்து உலகம் எல்லாம்
  முயன்று செய் வணக்கம் சால்போ?
119
   
 
839“பகை எலாம் பழித்து, யாவும்
  படைத்து அளித்து அழிப்போனேனும்,
தகை எலாம் பழித்த பாவம்
  தாங்கிய உலகம் தாங்கு
மிகை எலாம் பழித்து, இவ் வாழ்க்கை
  விழைவு செய் மருளை நீக்க,
நகை எலாம் பழித்து, தண்மை
  நல்கிய வறுமை தேர்ந்தான்.
120
   
 
840தூய் மணி பெயர் பெற்று அஃகா
  துளங்கு உடுப் புறத்து நீக்கி,
வேய் மணி பெயர் அற்று, உன்னா
  விளக்கு அணி வீட்டில் நின்றோன்,
ஆய் மணி பெயர் பெற்ற இக் கல்
  ஆசை கொண்டு இங்கண் சேயாய்
தாய் மணி பெயர் பெற்று எம்பால்
  தாழ்ந்து உறல் உணர்வான் கொல்லோ?
121
   
 
841“கதிர் செயும் உலகின் வேந்தர்
  கழல் தொழ உவகை பொங்கிப்
பொதிர் செயும் திருவோன், ஈங்குப்
  புன் திரு நேடான் அன்றோ?
முதிர் செயும் கனித் தேன் மாந்தி
  முன்னர் யாம் உற்ற நோயைப்
பிதிர் செயும் மருந்து ஆம் கைக்கும்
  பிணி உணத் தலையாய் வந்தான்.
122
   
 
842“ஆறு எலாம் கடலுள் வைகும்;
  அரிய தூய் அறத்தின் உள்ளும்
வேறு எல்லாத் திருவே வைகும்,
  விழுத் தவத்து இறைவ, நாமே
மாறு எலாம் கடந்த அன்பால்
  வணக்கம் உள் புரிந்தால், எம் சேய்
பேறு எலாம் கடந்த செல்வப்
  பெற்றியால் இமிழின் கொள்வான்.“
123
   
இறைவனால்ஆட்க்கொள்ளப்படுதற்கு மரியாள்கூறும்வழி
 
843“களி வளர் தவத்தின் வீட்டில்,
  காட்சி நல் நிலையில், ஞான
ஒளி வளர் கதவு சேர்த்தி,
  ஒழுக்க நல் தாளைப் பூட்டி,
அளி வளர் நெஞ்சின் மஞ்சத்து,
  அன்பு அணை பரப்பினேமேல்,
வெளி வளர் உயர் வான் வேந்தன்
  விழைந்து உறைந்து, எம்மை ஆள்வான்.
124
   
இருவரும்இறைவனை மன்றாடுதல்
 
844“துளைத்து எழும் நசையின் முந்நீர்ச்
  சுழியில் நாம் பட்டதே போல்
திளைத்து எழும் ஐயம் என்னோ?
  செய் கடன் இன்னது என்ன,
விளைத்து எழும் தயையின் எந்தை,
  விளம்ப வேண்டுதல் நன்று“ என்றாள்.
கிளைத்து எழும் நயப்பில் தம் சேய்க்
  கேட்டு இவர் வேண்டுகின்றார்.
125
   
கடவுள்சூசை, மரியாள்உள்ளத்தில்பேசுதல்
 
845காரின் பால் கடந்த அம் கண்
  ககனம்பால் எதிர் இல் ஆளும்
ஓர் என்பான் மனத்துள் சொல்வான்:
  “உளத்தின்பால் வணக்கம் செய்து,
பாரின்பால் தோன்றும் பாலால்
  இருவர்பால் பயந்த சேய் போல்,
நீரின்பால் வறுமைக்கு ஒப்ப
  நீர் எனை வளர்த்தல் வேண்டும்.“
126
   
 
846“பொறையினார், விரும்பும் வாழ்க்கைப்
  புரையினால் சிதைவு உற்றார் என்று,
இறைவன் நான், அழிவு இல் வீட்டை
  இருக்கும் ஆறு இமிழின் காட்ட,
சிறுமையால் வளம் பெற்று, உம் கண்
  சிறுவன் ஆய், திரு என்று ஈந்த
வறுமையால் உயர்ந்த உம்மை
  வையம்வாய்த் தெரிந்தேன்“ என்றான்.
127
   
சூசை, தம்வறுமையை ‘நன்று‘எனல்
 
847“மாடக இசை நேர் இச் சொல்
  மாதவன் சூசை கேட்டே,
ஆடக மாடத்து ஓங்கி, அரு மணி
  அணைமீது அம் பொன்
பாடகம் ஒளிர்ந்து ஈங்கு ஆளும்
  பார்த்திபர் செல்வம் ஏய்க்கும்
கோடு அகல் எமது இல்லாமை
  குணம்“ எனக் கூறினானே.
128
   
இருவரும்பேரின்பத்தில்மூழ்குதல்
 
848அழற்றிய வேனில் காலத்து,
  அருந்திய அமுதைக் கான்று,
நிழற்றிய கொம்பில், பேசு
  நிறக் கிளி இரண்டும் என்னா
மிழற்றிய வண்ணத்து அன்னார்,
  விருப்பு எனும் எழும் கால் பொங்கிச்
சுழற்றிய நெஞ்சில், ஆவி
  சுகக் கடல் அமிழ்ந்திற்று அன்றோ.
129
   
பேறுகாலம் நெருங்குதல்
பரமன்தோன்றும்நாள்நெருங்குதல்
 
849தோடு அணி மகளிர் மன்றல்
  துடங்கிய உவகை போல,
கேடு அணி உலகம் பூத்த
  கேதம் அற்று உவப்ப, கன்னி
நீடு அணி கருப்பம் முற்றி,
  நீத்து எழும் பருதி போல், மெய்க்
கூடு அணி பரமன், தோன்றக்
  குணித்த நாள் குறுகிற்று அம்மா.
130
   
மரியாள்திருக்குழந்தைக்குப்பூந்துகில்புணைந்து போற்றுதல்
 
850வீ முயங்கிய பைந் தோகை
  விரித்த நல் மஞ்ஞை போன்றே,
மீ முயங்கிய மீன் செய்த வெயில்
  முடி பூண்ட கோதை,
சே முயங்கிய மெய் போர்த்த
  சேய் எழும் முன், தன் கையால்
பூ முயங்கிய பால் ஆவிப்
  பூந் துகில் வனைந்திட்டாளே.
131
   
 
851தூம நல் புகைகள் சூட்டி,
  துளித்த தேன் சினை கொள் பைம் பூத்
தாம நல் கமழ் நீர் தூற்றி,
  தாழ்ந்து ஒரு பேழை தன்னில்
வாம நல் துகில் பெய்தே,
  தன் மனம் எனத் திருத் தன் சேயின்
நாம நல் புணர்ச்சி பூட்டி,
  நயப்ப நாள் விரும்பி நின்றாள்.
132
   
உரை கடந்த மகிழ்ச்சி
 
852தண் தமிழ்ச் சொல்லும் நூலும்
  சால்பொடு கடந்த வண்ணத்து,
உண்ட அமிழ்து உவப்பின் உள்ளத்து
  ஓங்கும் இவ் இருவர், தம்முள்
பண் தமிழ் உரைத்ததே போல் பயன்
  பகர்ந்து, இளவற் காண
மண்டு அமிழ்து உகும் அவாவின்
  மகிழ்வினை உரைப்பர் ஆரோ?
133
   
முன்னுரை
 
853செல் செயும் சாபம் நீக்கச் செஞ்சுடர் சாபம் சேர் கால்,
கொல் செயும் சாபம் நீக்கி கூ எலாம் உறவு ஆய், பாவத்து
அல் செயும் சாபம் நீக்க ஆண்டகை மகரம் சேர்ந்து, உள்
எல் செயும் கன்னி நீக்கி இளவலாய் உதித்தல் சொல்வாம்.
1
   
சூசையும்மரியும்பெத்திலேம்செல்லுதல்
இறைவன்அவதரிக்க நினைத்தல்
 
854மா இரு ஞாலம் கொண்ட
  மருட்கு இனைந்து அழுத வானம்,
காய் இரும் இடர் தீர் கால் ஆய்க்
  களித்தென, மாரி காலம்
போய், இரு புடையில் செந் நெல்
  பொதிர்ந்த மார்கழி நாள் ஐ ஐந்து
ஆய், இரு உலகும் ஓங்க
  ஆண்டகை உதித்தல் ஓர்ந்தான்.
2
   
உலகம்ஒரு குடைக்கீழ்வரல்
 
855பழி எலாம் நீக்கி, நீங்காப்
  பகை முதிர் கொடுங்கோல் ஓச்சி
அழிவு எலாம் பயத்த பேய் வென்று,
  அமலனும் மகரும் ஒன்றாய்,
இழிவு எலாம் ஒழித்து, வீக்க
  இளவலாய்ப் பிறப்ப நாதன்
உழிவு எலாம் முனைவு அற்று, எங்கும்
  ஒரு குடை நிழற்றிற்று அன்றே.
3
   
ஒத்த வியான்கட்டளை
 
856நிலம் உறை பகையைச் சீக்கி,
  நிகர் இல் ஒத்தவியான் என்பான்,
வல முறை ஒருவன் ஆண்ட
  வளமையால் செருக்கு உற்று, எங்கும்
பல முறை பிரிந்த யாரும்
  பண்டு உறை காணி ஊர் போய்,
குல முறை இறையும் எண்ணும்
  கொணர்ந்து இடப் பணி இட்டானே.
4
   
சூசை, மரியாளிடம்வேந்தன்கட்டளையைக்கூறத்தொடங்குதல்
 
857இப் பணி கேட்டு, வேதத்து
  எழில் நுதல் திலதம் ஒப்ப
ஒப்பு அணி கடந்த சூசை,
  உளத்து அழல் புகுத்தினாற் போல்,
வெப்பு அணி உயிர் உலாவும்
  வெய்து உறல் ஆற்ற, மொய் கொள்
அப்பு அணி உலக வேந்தின்
  அன்னையை நோக்கிச் சொல்வான்:
5
   
கட்டளையைத்தெரிவித்து மரியாளின்கருத்தைக்கூறுமாறு கேட்டல்
 
858“மன்னவன் உலகில் எங்கும்
  வகுத்தது ஓர் பணி ஈது அன்றோ?
பின், அவன் பணித்த ஆற்றால்,
  பெத்திலேம் என்னும் வாய்ந்த
என் நகர்க்கு, இறையும் எண்ணும்
  ஈவதற்கு ஏகல் வேண்டும்;
அன்னதற்கு அடியேன் செய்யும்
  ஆவது என்று அருளிச் சொல்வாய்.
6
   
 
859விண் தலம் அகத்து வேந்தர்
  வேந்தனாம் உனது மைந்தன்,
மண் தலம் அகத்துத் தோன்றி
  மனுமகன் பிறப்ப நாள் ஆய்,
தண்டலை அகத்து விள்ளும்
  தாதினும் நொய் தாள் நீயும்
கண்டகம் அகத்து என்னோடு
  துணை வரக் கருதலாமோ?
7
   
 
860“மின்னி நா இடி வெற்பு ஈர்ந்து
  வேறு இரு கூறு செய்வது
உன்னி, நான் உய்யல் ஆற்றேன்,
  ஒரு நொடி பிரிந்து போகின்;
முன்னி, நான் அடை நோய் நீக்க
  முதல்வற் கேட்டு, அவன் செய் ஏவல்
பன்னி, நான் செய்வது என்னோ
  பகர்தியே“ என்றான் சூசை.
8
   
மரியாள் திருமகனை வேண்டி விடை கூறுதல்
 
861என்று, அரு மா மறை வடிவம்
  ஏந்து தவன் இவை கூற,
பின் தரு யாவையும் உணர்ந்தும்,
  பேர் இறையோன் தனைத் தாங்கும்
துன்று அரு மா மாட்சிமையாள்,
  தன் துணைவன் சொல் பணிய,
அன்று அரு மா மகவினைத் தாழ்ந்து,
  அதற்கு இயற்றும் பணி கேட்டாள்.
9
   
 
862கேட்பது அருந் தயைக்கு இறைவன்
  கேட்டு உரைத்த திரு உளமே
கோட்பது அருங் குணக் கிழத்தி
  கொழுநன் உளத்து எழச் சொல்லி,
“வேட்பது அரும் மணம் மணத்த
  உயிர் இரண்டும் வேறு ஆகா;
வாட்பது அரும் நயத்து இருவர்
  மாநகர்க்கு ஏகுதும்“் என்றாள்.
10
   
சூசையின்பதில்
 
863தேன் நிகர் சொல் செவி மாந்தச்
  செழுந் தவத்தோன் உளத்து ஓங்கி,
மீன் நிகர் பொன் சிவிகையும், மால்
  வேழமும், பாய் பரி மாவும்,
வான் நிகர் பொன் திண் தேரும்
  வறுமையர்க்கு இல்லாமையின், நீ
கான் நிகர் முள் தடத்து ஏகக்
  காண்டல் உளம் பொறுப்பு அரிதே!
11
   
 
864“தொல் மாண்ட புடை நகரில்
  துன்னிய பின், ஆங்கு உறையும்
பொன் மாண்ட முடித் தாவின்
  பொலிவு அமைந்த எம் குலத்தோர்,
வல் மாண்ட அருள் புரிந்து,
  வந்த துயர் ஆறும்“ என,
தன் மாண்ட உளத்து இதுவே
  சார்பு எனத் தான் உணர்ந்தானே.
12
   
மரியாள் கூறிய தேற்றுரை
 
865“மாண் தகையார், அறன் சார்வார்
  அல்லது, இன மனுச் சாரார்.
ஆண்டகை ஆர் அருட் சாரார்க்கு
  அல்லது, ஒரு துயர் சாரா.
சேண் தகை ஆர் இவன் சார்பால்
  செல்லுதும் நாம்“ என, வான் ஆர்
பூண் தகையால் அறம் சார்ந்தாள்,
  புரை சாராப் புகல் செய்தாள்.
13
   
இருவரும்வழிநடத்தல்
 
866குவட்டு ஆய வெள்ள நிகர்
  கூர்த்து உவகை பெருகி எழ,
துவட்டாத தூய் தவனும்
  துணைவி எனும் ஆய் இழையும்,
உவட்டாத பணி முறையால் செல்வது
  என உணர்வு உற்றார்,
சவட்டாத அன்பு உரிமைச்
  சால்பின் இரண்டு அன்றில் ஒத்தார்.
14
   
 
867பூண் மின்னும் மணிப் பேழை
  போன்று அருஞ் சூல் முற்று அணிந்தாள்
கோள் மின்னும் முடி தாழக்
  கொழுநனைத் தான் தொழ, அவனும்
மாண் மின்னும் மனம் வெருவி வணங்க,
  பின்பு இருவர் தொழும்
தாள் மின்னும் மகன் தந்த
  ஆசியோடு தடம் கொண்டார்.
15
   
இருவரையும்வானவர்புடை சூழ்ந்து காத்தல்
 
868அருள் வீங்கும் விண் அரசாட்கு
  ஆயின ஆயிரர் அன்றி,
இருள் வீங்கும் துகள் துடைத்தோன்
  பிறக்கும் கால் என, இன்னும்
பொருள் வீங்கும் உம்பர் ஒன்பது
  ஆயிரரும், புடை திரிந்து
தெருள் வீங்கும் கதிர் பரப்பிச்
  செல, விட்டான் முதலோனே.
16
   
 
869பிறை பழித்த பொற் பதத்தால் பிறை மிதித்தாள் தனைச் சூழ,
பொறை பழித்த தோள் திறத்தில் பூண் தவழ, செஞ் சுடரை
நிறை பழித்த உருச் சூட்டி, நிரை நிரை விண்ணோர் இறைஞ்சி,
உறை பழித்த மலர் மாரி உந்தரத்தில் பொழிகின்றார்.
17
   
 
870வஞ்சத்தார் மனம் போல
  இருண்ட இரா வாட்டும் ஒளி
விஞ்ச, தாரணி அறியா வெயில்
  வெள்ளம் உம்பர் உக,
தஞ்சத்து ஆர் தவம் செய்தோர்
  தகை போல இவர்க்கு இருள் சூழ்
எஞ்ச, தாம் இரவு பகல்
  என்று அறியாது ஏகுகின்றார்.
18
   
 
871புண் காத்த மருந்து அன்ன
  பொலி அருள் சேர் மா தவனும்
விண் காத்த வேந்தனைச் சூல்
  வேய்ந்து ஒவ்வாக் கன்னிகையும்
மண் காத்த அருள் பரப்பி
  வழி வருங்கால், வளைத்து இவரை,
கண் காத்த நிமை என்னக்
  காத்தார் அக் ககனத்தார்.
19
   
 
872துன்று ஆங்கு முள் தடத்தில்
  துயர் ஆற்றா, துவள் கொடிபோல்,
அன்று ஆங்கு நொய் அடியாள்,
  அயர்வு உற்றுச் சோர்ந்து விழ,
பொன் தாங்கு பொறைத் திண் தோள்
  பொலிந்த உம்பர் தாங்கினர் ஆல்,
மின் தாங்கு மலைத் தோற்றம்
  விளங்கு வடிவு ஒத்து எனவே.
20
   
இருவரும்சென்ற வழியில்நன்மை மிகுதல்
 
873பானு அளாவு உழி பாய் இருள் நீத்து ஒளி
தான் அளாவிய தன்மையின், ஆயினார்
போன வாயில் எலாம் புரை நீத்து, அருள்
ஆனது, ஆர் உயிர் ஆகுலம் மாறவே.
21
   
 
874போர்க் கணம் கடுத்தால் என, பொங்கு ஒலிக்
கார்க் கணம் கதம் காட்டி மலிந்து கால்
நீர்க் கணம் கழு வாவி நிறைந்து, சூழ்
சீர்க் கணம் கொடு சீர்த்தன நாடு எலாம்.
22
   
 
875சோலை சூழ் வரை தூங்கிய தீம் புனல்,
மாலை சூழ் வழி ஒல்என வந்து பாய்ந்து,
ஆலை சூழ் வயல் ஆர்ந்து விளைந்த நெல்,
வேலை சூழ் வளை முத்து என வேய்ந்ததே.
23
   
 
876மாலை ஆரும் மணமகள், ஆம், எனா,
சோலை ஆர் தருப் பூம் பணைத் தோற்றமே
மாலை ஆர் உடு காட்டிய வான் எனா,
சேலை வார் பொய்கை தேன் மலர் விள்ளவே.
24
   
 
877வீறி மின்னிய விண் திரள் பெய்த நீர்
ஊறி நீத்தம் முடுக்கு என, ஓங்கி இவர்
தேறி எங்கணும் செய் தயை நேர, நல்
ஆறு இது ஒத்து என, ஓடிய ஆலையே.
25
   
 
878கொம்பின் ஆர் குயில் கூவவும், மஞ்ஞைகள்
பம்பி ஆடவும், பைஞ் சிறைத் தேனொடு
தும்பி பாடவும், தூய் அனம் நாணவும்,
நம்பி மாதொடு நல் நெறி போயினான்.
26
   
காந்திரியின்கதை
காந்தரி என்ற காமுகி நின்ற நிலை
 
879தூமம் சூடிய தூய் துகில் ஏந்துபு,
தாமம் சூடிய தாரொடு பூண் மலி,
காமம் சூடிய காந்தரி என்று ஒரு
நாமம் சூடிய நாரியைக் கண்டு உளார்.
27
   
 
880வெம் சினக் கரி மேய்ந்து உகும் வெள்ளிலோ,
நஞ்சின் முற்றிய காஞ்சிரமோ, நகை
விஞ்சி வெற்று எழில் பாவையின் வேடமோ,
நெஞ்சின் நல் தகை நீத்த எழில் நாரியே?
28
   
 
881ஆலம் ஏந்திய ஆனனத்து ஓடி, நல்
கோலம் ஏந்திய கோள் என வேய்ந்து, கொல்
காலன் ஏந்திய வாள் கவர்ந்து ஈர்ந்து உயிர்,
நீலம் ஏந்தி, நிறைந்து உணும் கண்ணினாள்.
29
   
 
882புலம்பும் ஓதையின் நொந்து எனப் பொன் இடச்
சிலம்பு மேல் வலச் சீறு அடி ஊன்றி, வில்
அலம் புனைந்த பொன் தூண் அயல், பொன் மலைத்
தலம் புனைந்த மின் சாயல் ஒத்தாள் அரோ.
30
   
 
883துகில் கலாபம் உள் தோன்ற விளிம்பு எடுத்து,
உகிர்க் கொடு ஆய் அலர் கிள்ளி உதிர்த்து, எழும்
அகில் கவர் புகை தூது விட்டு, அம்குழல்
முகில் கவர் மினின் மின் முகம் கோட்டுவாள்.
31
   
 
884பால் கலந்தன நஞ்சு பருகினாற்
போல், கலந்தன இன்பொடு புன்கணை
மால் கலந்த மனத்து உண, மைந்தர் சூழ்
வேல் கலந்த கண் வெஃகி நெருங்கினார்.
32
   
 
885காமத் தீ எழ ஓர் நகை காட்டினள்,
ஈமத் தீ எழ வெஞ் சினம் காட்டுவாள்;
தூமத் தீ எழத் தோன்று இருள் போன்று, கண்
வாமத் தீ எழ, உள் நிசி மல்கும் ஆல்.
33
   
 
886மஞ்சு தோய் சிறகு ஆடிய மஞ்ஞை போல்,
நஞ்சு தோய் மன நங்கை, நறா அகில்
மஞ்சு தோய் துகில் ஆடி வதிந்த கால்
நெஞ்சு தோய் தகவோர் நெறி எய்தினார்.
34
   
மரியாள், காந்திரியின்மனத்தைப்பார்த்தல்
 
887கோலம் மூடிய அங்கக் குடத்து இணை
சீலம் மூடிய தீ மனம் கண்டு, கார்
நீலம் மூடிய பானொடு நேர் மிடி
சால் மூடு தலைவி இரங்கினாள்.
35
   
மரியாள்வருந்துதல்
 
888வீய் கலந்த வனப்பொடு வீங்கு உளம்
பேய் கலந்து, குடி எனப் பேர்கு இலா
தீய் கலந்த சிதைவு உடைப் பேதையை
நோய் கலந்த உயிர்ப்பொடு நோக்கினாள்.
36
   
மரியாள்சூசைக்கு அவள்மனத்தைச்சுட்டிக்காட்டுதல்
 
889‘கண்ட தீயவை அல்லது, கண் உறா
கொண்ட தீயவை எண்ணுவர் கொல்?‘ எனா,
உண்ட தீய உளத்தில் உறைந்த பேய்
அண்ட வாகை வளற்கு அவள் சூட்டினாள்.
37
   
சூசை, காந்திரியின்மனத்திலுள்ள காம ப் பேயை ஓட்டுக எனல்
 
890மகொடிய கோல் கோடு ஆண்ட குணுங்கு இனம்
மடியச் சூல் கொடு வந்தவன் நாம வல்
கடிய வேல் கொடு அக் கடி ஓட்டு“ எனா
நெடிய கோல் கொடு நின்றவன் வேண்டினான்.
38
   
காம ப் பேய்ஓடுதல்
 
891மொய் கொள் நீரொடு மூ உலகிற்கு எலாம்
மெய் கொள் நாயகி மேவி, உள் ஏவலால்,
மை கொள் சோகு பழம் பதி மாற்றி, வாய்ப்
பொய் கொள் வேகம் நரகு உறப் போயதே.
39
   
காந்திரியின்மனமாற்றம்
 
892கள்ளம் காட்டு குணுங்கு கடிந்த பின்,
உள்ளம் காட்டு பளிங்கு உணர்ந்தால் என,
“வெள்ளம் காட்டு வாலாமை விழுங்கு எனா,
மள்ளம் காட்டி மாழ்ந்தேன்!“ என நாணினாள்.
40
   
 
893உவா அமர்த்திய அங்குசம் ஒப்பு என,
தவா வயத்து இவள் தாங்கிய நாணமே
சுவாது அமைத்த துகள் துடைத்து, ஓர் கரை
அவா உடைக் கடற்கு ஆங்கு அடைத்தாள் அரோ.
41
   
 
894நாணி, நாணுப நாடிய காரணம்
காண் இலாள், வெருவும் களியும் கொடு,
வாள் நிலா விழி நித்திலம் வார் முகம்
கோணி, ஒன்று உரையா, குழு நீங்கினாள்.
42
   
அங்கு நின்ற காமிகர்அஞ்சி அகல்தல்
 
895நீர் ஆர் பவளத் துறையின்
  நிரை நித்திலம் உய்த்து என்னா,
ஏர் ஆர் துவர் வாய் முறுவல்
  இலங்க நின்றாள், ஏதோ
சூர் ஆர் முகத்தோடு, உரையா
  துறந்தாள்!“ என்று, ஆங்கு உறைந்தார்,
வார் ஆர் கழல் ஆர்த்து இடிப்ப,
  வருந்தி வெருவிப் போனார்.
43
   
தேவதாயின்அருளால்காந்திரி மனவீரம்கொள்ளுதல்
 
896விண் தோய் மாடத்து ஒதுங்கி,
  வினை அற்று; உளம் ண்டு உணர்வால்
கண் தோய் புனல் ஆடினள், தன்
  கசடே கருதும் தன்மைத்து
உண்டு ஓய் இல, மெய்ஞ் ஞானத்து
  உறுதித் துணை ஓர் அமரன்,
மண் தோய் துகள் தீர்ந்தவன் தாய்,
  விடவே, மனம் ஓங்கினள் ஆல்.
44
   
காந்திரி தன்அணிகளை இகழ்ந்து அறுத்து எறிதல்
 
897இன்னே இரவி காண் அந்தகன்
  நேர் இயல் கொண்டு இன்னாள்,
“பொன்னே மணியே பொலி ஓர்
  பெயர் கொள் வலைகாள், உம்மால்,
கொன்னே குழையப் பிறரும்
  குழைந்தேன்!“ என நொந்து அழுதே,
மின்னே, மின்னிப் பெயுங் கால்,
  விழும் போல் விழ, ஈர்த்து எறிந்தாள்.
45
   
 
898“விண்டு இக்கு ஒழுகிக் குழல் சூழ்
  விரை வீசிய தண் தொடைகாள்,
வண்டிற்கு இரை செய்து, எனையும்
  வண்டிற்கு இரை செய்தீரே,
இண்டு இக்கு ஒழுகா நஞ்சு
  இட்டீர்!“ என்று இவள் உள் சினந்தே,
தெண்டித்து என, பூந் தாளால்
  தேய்த்தாள், துவைத்தாள், துடைத்தாள்.
46
   
 
899“அரும்பு மடல் தேன் குளிர் என்று
  அணியாய் முலை சூழ் அலங்காள்,
கரும்பு வில் ஏவிய வெங்
  கணையாய், மனமே கருக,
விருப்புச் செய்து உள் நுழைந்தே,
  வெந் தீப் புகுத்திக் கொன்றீர்;
நெருப்புக் கொணர்ந்தீர் நெருப்பில்
  வேவீர்!“ எனச் சுட்டிட்டாள்.
47
   
 
900சுண்ணம் கலவை சுவை சாந்து
  எனும் வண்டு இவறும் சேறே,
தண்ணம் கொண்டாய் என்றார்
  சடமே என்றார்; தழலும்
வண்ணம் கொண்டாய் என என்
  மனமே அறியும்; கசடு ஆய்,
எண்ணம் கடிய எரிந்தேன்,
  எரிந்தேன்! என்னா எறிந்தாள்.
48