பைதிரம் நீங்கு படலம்
 
முன்னுரை
 
1226களி முகத்தின் இவை ஆகி,
  பைம் பூ மேய்ந்த கனல் ஒப்ப,
சுளி முகத்தின் உற்ற துயர் உள்ளம்
  வாட்டித் துகைத்து, அன்னார்,
வளி முகத்தின் விளக்கு அன்ன
  மயங்கி ஏங்க வந்தவை, யான்
கிளி முகத்து இன் கிளவியொடு
  விரும்பி இங்கண் கிளத்துகிற்பேன்:
1
   
சூசையும்மரியும்கோவிலுக்குப்போய்வருதல்
 
1227பூந் தாமக் கொம்பு அனையாள்,
  பூத்த பைம் பூ முகை முகத்தில்
தேன் தாமத் திரு மகன் நேர்ந்து,
  இன்னும் எண் நாள் செல, அன்னார்
தாம் தாம் அக் கடி நகர்க்கண்
  தங்கல் உள்ளி, நாள்தொறும், பொன்
காந்து ஆம் அக் கோயில் விழா
  அணியின் வெஃகிக் கனி சேர்வார்.
2
   
சூசையின்உறக்கத்தில்வானவர்வந்து, எசித்து நாடு செல்க எனல்
 
1228நெஞ்சு பதி கொண்ட அருள் எஞ்சா
  நீரார் நிறைந்து ஐந் நாள்
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த,
  பைம் பூ மணிப் புகை சூழ்
விஞ்சு பதி கொண்ட அமரர்
  வைகும் கோயில், மேவிய பின்,
நஞ்சு பதி கொண்ட உரைத் தூது
  வானோன் நவின்று அடைந்தான்.
3
   
 
1229கான் வயிறு ஆர் பூங் கொடியோன்
  உறங்குங் காலை, கதிர் தும்மி,
மீன் வயிறு ஆர் உருக் காட்டி
  விண்ணோன் எய்தி, “விரைக் கொடியோய்,
ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன்
  இளவற் கோறல் உள்ளினன்; நீ
தேன் வயிறு ஆர் இப் பதி நீத்து,
  எசித்து நாட்டைச் செல்க“ என்றான்.
4
   
சூசை துயருறல்
 
1230அழல் குளித்த பைந் தாதோ கண் பாய் வேலோ
  அகல் வாய்ப் புண்
புழல் குளித்த செந் தீயோ உருமோ கூற்றோ
  பொருவு இன்றி
நிழல் குளித்த உரு வானோன் கொடுஞ் சொல் கேட்டு,
  நெடுங் கடல் நீர்ச்
சுழல் குளித்த மனம் சோர்ந்து, வளன், அப் பணியைத்
  தொழுது, உளைந்தான்.
5
   
 
1231மலி நிழல் பட்டு அலர் மலரின் நொய் அம் சேயின்
  மழ வினையும்,
பொலி நிழல் பட்டு அலர் பூங் கொம்பு ஒத்தாள் நொய்வும்,
  புரை வினையால்
அலி நிழல் பட்டு எரி எசித்தார் நாட்டின் சேணும்
  ஆய்ந்த வளன்,
புலி நிழல் பட்டு ஏங்கிய மான் போல ஏங்கிப்
  புலம்பினன் ஆல்.
6
   
 
1232அறிவு இன்மை, உறவு இன்மை, அறத்தின் இன்மை,
  அங்கண் செல்
நெறி இன்மை, நெறி தொலைக்கும் உறுதி இன்மை,
  நெறி தன்னில்
பறி இன்மை, சார்பு இன்மை, தன்பால் இன்மை,
  பரிசு அல்லால்
பிறிவு இன்மை ஓர்ந்து உளைந்தான்; உளைந்தும்,ஈண்டே
  பிரிவு உற்றான்.
7
   
எசித்துக்குப்புறப்படுதல்
சூசை ஆண்டவன்கட்டளையை மரியாளிடம்கூறுதல்
 
1233வேரி அம் தாரினான் விரைந்து எழுந்தனன்;
மாரி அம் தாரையின் வளர் கண் தாரை நீர்
நேரி, அம் துணைவியை நேடி, நாயகன்
தேரி அங்கு ஏவிய பணியைச் செப்பினான்.
8
   
மரியாளின்வாட்டம்
 
1234செய் இதழ்த் தாமரை பழித்த சீறு அடித்
துய் இதழ்த் துப்பு அவிழ் சுருதி வாயினாள்,
ஐ இதழ்த் தாரினான் அறைய, தீ முனர்
நொய் இதழ்த் தாது என நொந்து வாடினாள்.
9
   
இருவருத்மனந் தேரித்திருக் குழந்தையின்
ஆசிக்கேட்டுப் புறப்படுதல்
 
1235எதிர் இலான், பகை இலான், இணை எலாம் இலான்,
உதிர் இலா மதுகையான், உணர்வின் மேல் நின்றான்
விதிர் இலா விதி இது என்று இறைஞ்சி வேண்டினர்;
பிதிர் இலாத் திரு உளம் பேணித் தேரினார்.
10
   
 
1236தேரிய மனத்தவர் தேறி, நாயகன்
ஆரிய முகத்து உறை அங்கண் ஏகினார்;
நீரிய முகில் என அப் படத்தை நீக்கலால்,
சூரியன் நவி எனத் தோன்றல் தோன்றினான்.
11
   
 
1237முப் பொழுது ஒரு பொழுது ஆக முற்று உணர்ந்து
எப் பொழுது அனைத்தும் எப்பொருள் யாவிலும்
மெய்ப்பொருள் தெளித்து அவிர் காட்சி மேன்மையான்,
அப்பொழுது உறங்கினான், அன்னப் பார்ப்பு அனான்.
12
   
 
1238“கலை முகந்து அருந்திய புலமைக் காட்சியோய்,
அலை முகந்து அருந்திய அருள் என்று, உன் பணி,
கொலை முகந்து அருந் துயர் கொண்டும், செய்வல்!“ என்று,
உலை முகந்து அருந் தழற்கு உருகி, ஏந்தினாள்.
13
   
 
1239ஏர் வளர் அடி பணிந்து இளவல் ஏந்தலின்,
நீர் வளர் குவளை தேன் துளித்தல் நேர், அவன்
சீர் வளர் விழி மலர் சிறந்து முத்து உக,
சூர் வளர் மனத்து அவர், துகைத்து உள் ஏங்கினார்.
14
   
 
1240கதிர் தரும் காதலன் கன்னித் தாய் உரத்து
எதிர் தரும் விழி கலந்து இனிதின் சாய்ந்தனன்,
முதிர் தரும் அமிர்து உக முறுவல் கொட்டலால்,
பொதிர் தரும் இன்பம் உற்று இருவர் பொங்கினார்.
15
   
 
1241பொங்கிய அருத்தியால் பொலிந்த கன்னியும்,
தங்கிய கொடியொடு உள் தளிர்த்த சூசையும்,
பங்கய மலர் அடி பணிந்து, பாலனை
அங்கு இவர் அகலுதற்கு ஆசி கேட்டனர்.
16
   
 
1242மருந்து அடக் கனி முகம் மகிழ்ந்து நாயகன்,
அருந் தடத்து அவர்க்கு நல் அருளோடு ஆசியைத்
தரும் தடத்து இவர்ந்து, இருள் புதைத்த சாமத்து, ஆங்கு
இருந் தடத்து ஏகுதற்கு, எழுந்து போயினார்.
17
   
வானவர்புடைசூழ்ந்து செல்லுதல்
 
1243இருச் சுடரோன் பட, ஈர் ஐயாயிரம்,
குருச் சுடர் மேனியைக் கொண்ட, வானவர்,
திருச் சுடரோன் என அச் சிறுவன் தாள் இணை,
பருச் சுடர் பாய்ந்து உற, பணிந்து தோன்றினார்.
18
   
 
1244எல் இயல் படச் சுடர் இரவில் தோற்றினார்;
பல் இயம் கடல் ஒலி பட முழக்கினார்;
அல்லி அம் குழவியை அளவு இல் வாழ்த்தினார்;
கல்லியம் பாத் தொடை கனியப் பாடினார்.
19
   
திருக்குடும்பம்நீங்கிய நகரின் நிலை
உயிர்நீங்கிய உடம்பு
 
1245வார் வளர் முரசும் ஆரா,
  வரி வளர் வளையும் ஊதா,
தேர் வளர் உருளும் செல்லா,
  தெரு வளர் அரவும் தோன்றா,
ஊர் வளர் அசைவும் இல்லா
  உறங்கிய சாமத்து ஏகி,
சீர் வளர் உயிர் போய் அவ் ஊர்
  செத்த உடம்பு ஒத்தது அன்றே.
20
   
நலம்மெல்லாம்நீங்குதல்
 
1246நல் வினை உலந்த போழ்தின் நலம் எலாம் அகல்தல்போல,
கொல் வினை அறுப்ப வந்த குணத் தொகை இறைவன் போக,
வல் வினை மருளில் பொங்கும் அல்லவை உயிரை வாட்ட,
புல் வினை மல்கி,ச்சீலம் புரி நலம் போயிற்று அன்றே.
21
   
 
1247இருள் புரி கங்குல் நாப்பண்
  இரிந்து அறக் கடலோன் போக
அருள் புரிவு உணர்வு காட்சி
  அறம் தவம் சுருதி தானம்
தெருள் பொறை நீதி வீரம்
  சீர் தகை உறுதி ஞானம்
பொருள் புகழ் புலமை மற்றப்
  பொலி நலம் போயிற்று அன்றே.
22
   
பாவ இருள்துன்பம்தீவினை முதலியன குடிப்புகுதல்
 
1248அலை புறம் கொண்ட ஞாலத்து
  அடர் இருள் நீக்க, யாக்கை
நிலை புறம் கொண்ட ஞான
  நெடுஞ் சுடர் அனையான் போக,
கொலை புறம் கொண்ட வேந்தன்
  குணத்து, உரி நகரும் நாடும்
வலை புறம் கொண்ட பாவம்
  மலிந்து, இருள் மொய்த்தது அன்றே.
23
   
 
1249கதி தள்ளி உயர் வான் ஏற்றும் கனிந்த தம் வேந்தனோடும்
பதி தள்ளி அமரர் போகப், பகையும் நீண் பசியும் நோயும்
நிதி தள்ளி மிடியும் கேடும் நிசிதமும் தீய யாவும்,
மதி தள்ளி மருட்டும் பேயும் மறு குடி ஆயிற்று அன்றே.
24
   
 
1250மணி வளர் முகில் தண் ஊர்தி,
  வான் உடுக் கொடி, தண் திங்கள்
அணி வளர் குடை கொண்டு, எங்கும்
  அருள் நிழல் மன்னன் போக,
பணி வளர் நகரும் நாடும்
  பனிப்பு உறப், பகைத்து வாட்டி,
பிணி வளர் வினையின் செந் தீ
  பிரிவு இலா மேய்ந்தது அன்றே.
25
   
நகருக்கு வெளியில்இயற்கைப்பொருள்கள்இரங்குதல்
அகழி அலை
 
1251கண் அகன்ற அகழி கலங்கலின்,
தண் அகன்ற தரங்கம் தளம்பலே,
எண் அகன்ற குணத்து இவர், “நின்மின்!“ என்று,
ஒண் அகன்ற கை நீட்டினது ஒத்தவே.
26
   
அகழியிலுள்ள மலர்கள்
 
1252அலை அலைந்து அலர் கூப்பிய தாமரை
இலை அலைந்து அலை மீது எழுந்து ஆடல், அந்
நிலை அடைந்தனர், “நீங்கலிர்! நின்மின்!“என்று,
உலைவு அடைந்து கை கூப்பியது ஒத்தவே.
27
   
பிறைச்சந்திரன்தோற்றம்
 
1253நாக நெற்றியின் நன் மணி ஓடை போல்,
நாக நெற்றியின் நன் மணி ஆறு பாய்
நாக நெற்றியின் நன் மலர்க் கா அப்பால்
நாக நெற்றியின் நன் மதி தோன்றிற்றே.
28
   
 
1254உறை கிடந்த விண் வேந்து உயிர் உண்பல் என்று
உறை கிடந்த அயில் ஓங்கு அரசைப் பகைத்து,
உறை கிடந்த கடல் பறைக்கு ஓர் குணில்
உறை கிடந்து அன, ஒண் பிறை தோற்றமே.
29
   
விண்மீன்களின்தோற்றம்
 
1255சிதம் மிடைந்த அலர்ச் சேடு அனையாள் கையில்
சிதம் மிடைந்து அலர் சேடனை நோக்குப,
சிதம் மிடைந்து அலர் சேடு எனத் தாங்கு பல்
சிதம் மிடைந்து, அலர் சேடு கண் ஒத்தவே.
30
   
சூசை மரியின்வருத்தம்
 
1256மனவு அணங்கு வணங்கு அடி நாயகன்
மன அணங்கு வணங்கு இல் வருந்தினார்,
மன அணங்கு வணங்கல் இல் ஆளனும்,
மனவு அணங்கு வணங்கும் அணங்குமே.
31
   
கோழியின் துயர்
 
1257ஆரணம் தரும் ஆண்டகை ஆகுலம்
காரணம் தரும் கண் புனல் கண்டு, இடர்
பூரணம் தரும், மார்பு புடைத்து, எலா
வாரணம், தரும் வான் உறக் கூக்குரல்.
32
   
வானமும்சோலையும்வருந்துதல்
 
1258பேர்ந்த தன் பெருமான் அடை பிழை வான்
ஓர்ந்த தன்மை உழைந்து அழுதால் என,
வார்ந்த தண் பனி தாரையின் மல்கி அன்று,
ஆர்ந்த பைந் தழைக் கா அழுது ஆயதே.
33
   
பறவைகளின்அழுகை
 
1259கறாகறா எனக் காடை கலுழ்ந்தன;
ஞறாஞறா எனத் தோகைகள் நைந்து அழும்;
புறா குறாவுதலோடு, இவர் போதலால்,
அறா நறாப் பொழில் ஆர் அழும் ஓதையே.
34
   
 
1260கிளி அழ, குயில் கேட்டு அழ, தேன் உணாது
அளி அழ, சிறை நைந்து அழ, ஆ! என
வளி அழ, துயர் மல்கி வனத்து எலா
உளி அழ, தகவோர் அழ ஏகினார்.
35
   
துயரம்விளைத்த மறதி
 
1261கான் மறந்தன கா மலர், அன்னதே;
தேன் மறந்தன தேன் இனம், அன்னதே;
பால் மறந்தன மான் பறழ், அன்னதே;
ஆன் மறந்தன தம் பிள்ளை, அன்னதே.
36
   
கீழ்த்திசை சிவத்தல்
 
1262சுருதி ஏந்து சுதன் துமிப்பேன் என,
கருதி ஏந்து குரோதம் கதித்து என,
பருதி ஏந்து படம் படரா முனர்,
குருதி ஏந்து குணக்கு சிவந்ததே.
37
   
 
1263முழவு எழும் தொனி ஒப்ப முந்நீர் ஒலி
எழ, எழுந்து பொரக் கதிர் எய் சரம்
விழ எழுந்த வெய்யோன் சிவந்து எய்தி, வான்
அழ, எழும் துயர் ஆற்று இல தோன்றிற்றே.
38
   
இறங்காதவர்
 
1264பானும், பானொடு பாசறை பட்டு அழும்
வானும், வானொடு மண்ணும் இரங்கின-
ஏனும், ஏதும் உணர்கில மாக்களும்
கோனும் கோடனை கொண்டு இரங்காயினார்.
39
   
சூசையும்மரியும்திருக்குழந்தையை எடுத்துக்கொண்டு விரைதல்
 
1265இரங்கு படர் கான் எவையும் நைந்து அழுது, இரைக்கும்
தரங்கு படர் வேலையில் தளம்பி அலை நெஞ்சார்,
அரங்கு படர் வான் தொழும் அருள் குழவி ஏந்தி,
குரங்கு படர் காட்டு நெறி கொள்ள, வலம் உற்றார்.
1
   
 
1266பிழைக் குலம் அளிப்பவர் பிழைப்பு இடம் இலார் போல்,
உழைக் குல நடுக்கம் என உள் குலைய நைந்து
மழைக் குலமிடத்து நுழை மின் மருள, மல்கும்
தழைக் குலமிடத்து நுழையச் சடுதி போனார்.
2
   
சூசை துயர்ற்று உரைத்தவை
 
1267இருத்தி எழு வான் அரசன் ஈர் அடி நனைப்ப
அருத்தி எழு துன்ப முகில் ஆர்த்து உமிழ் கண் மாரி
திருத்தி எழு மாதவன் உளைந்து, உளை உள் தேற்றா,
கருத்தில் எழும் ஆர்ந்த துயர் கான்று, இனைய சொன்னான்:
3
   
 
1268“விண் முழுதும் ஏற்று தனி வீர முதலோனே!,
புண்முழுதும் ஏந்திய புலால் அயிலனோடு
மண் முழுதும் ஒன்றுபட மல்கி அமர் செய்தால்,
எண் முழுதும்நீத்த நினது ஆண்மை எதிர் உண்டோ?
4
   
 
1269“புல் வினை உளைந்து அழ உதித்து, அருள் புரிந்து,
நல் வினை தளிர்ப்ப நலம் யார்க்கும் இடும் நல்லோய!,
கொல் வினை உணர்ந்து, உன் உயிர் கோறல் தனது ஆண்மைக்கு
ஒல் வினை எனக் கருதுவோன்உலகில் உண்டோ?
5
   
 
1270“தொல்லை உள நம் வினை துடைத்து, நமை வீட்டில்
வல்லை உள அன்பொடு புகுப்ப மனு வந்தோய!்,
ஒல்லை உள நம் துயர் ஒழித்திட, நினக்கே
எல்லை உளது ஒன்றும் இல வேண்டும் இடர் கொல்லோ?
6
   
 
1271“முற்று முதல் ஆய், உலகம் மூன்று தொழ வான்மேல்
பெற்று, முதல் ஈறு இல பெருந் தகையை, மண்மேல்
உற்று, முதல் வீடு இல, விலங்கு உறையுள் வந்தாய்;
இற்று முதல் நாடு அகலல் வேண்டும், இனி, கொல்லோ?
7
   
 
1272“ஞானம் உறு சீலம் இல, நட்பு உறவும் இல்லா,
வானம் உறு வேதம் இல, மாண்பு அருளும் இல்லா,
கானம் உறு காய்ந்த சுரம் அக் கடை கிடந்தார்
ஈனம் உறு நாடு அடைதல் வேண்டும், இனி, கொலலோ?
8
   
 
1273“வெவ் வினை விளைத்து அடும் இவ்
  வாழ்வு விடம் என்னா,
மைவ் வினை மறுப்ப இவண் வந்து,
  துயர் வேண்டின்,
மொய்வ் வினை முதிர்ந்த
  முழுது என் மிடிமை அல்லால்,
எவ் வினை தொலைக்கு அடைதல்
  வேண்டும், இனி ஐயா?
9
   
 
1274“விஞ்சிய திறம் செறியும் விஞ்சை மலி வல்லோய்,
துஞ்சிய நிலத்தில் உயிர் தோன்றி, வினை நீக்கி,
எஞ்சிய நலம் தருவை என்று அறிவர் யாரே?
அஞ்சியது ஓர் தன்மை இது என்று அறைவர்!“ என்றான்.
10
   
 
1275இற்று உறும் அருத்தியில் இயம்பின; இயம்பப்
பற்று உறும் உணர்ந்த பலவும் பகர்தல் தேற்றா,
முற்று உறும் அரந்தை எனும் நீத்தம் முழுகிச், சொல்
அற்று, உறும் அழுந் தொழில் அலால், எதுவும் ஆற்றான்.
11
   
மரியாளின்ஆறுதல்மொழிகள்
 
1276ஆசை வெற்பு வீழ் அரந்தை வாரியுள்
சூசை பட்டு, அய்யச் சுழியின் மூழ்கலின்,
பூசை வாயினாள் புகல் கை தந்து, உரம்
மாசை அம் கரை மருவச், சொல்லினாள்:
12
   
 
1277“உருக்கும் கால் உலகு உயிர் எலாம் கெட
முருக்கும் காலமே முடிந்து போய், அருள்
பருக்கும் காலம் ஆயப்புரந்து பாதுகாத்து
இருக்கும் காலம் என்று, இளவல் ஆயினான்.
13
   
 
1278“மண்ணை வேண்டினும் வகுத்து, வாழ்வு அறா
விண்ணை வேண்டினும் விரும்பி ஈகுவான்;
கண்ணை வேண்டினும் அளிக்குங் கால், தனை
எண்ணி வேண்டினும், இகல் செய்வான் கொலோ?
14
   
 
1279“மணி உயிர்க்கு நாண் வடிவில் தோன்றினன்.
பிணி உயிர்க்கும் மால் அவா செய் பீழையால்
தணி உயிர்க்கு எலாம் உறுதி தந்து, தன்
அணி உயிர்க்கு இடர் ஆக மாள்குவான்.
15
   
 
1280“இறந்து நம் உயிர் இரங்கிக் காக்க வந்து,
அறம் துதைந்தவன், இறத்தற்கு அஞ்சவோ?
திறம் துதைந்து முச் செகத்தை ஆள்பவன்,
மறம் துதைந்த புன் மதுகைக்கு அஞ்சவோ?
16
   
 
1281“நஞ்சினால் உயிர் அருந்தும்நாற் படைக்கு
அஞ்சு இலான், அறிவு அருள் வல் ஆண்மை ஈடு
எஞ்சு இலான்“ என, இறைஞ்சிக் கூறினாள்,
நெஞ்சினால் அமுது ஆர்ந்த நேமியாள்.
17
   
 
1282புடை வரும் புகழ் பொலிந்த மிக்கயேல்
அடைவு அருந் தயை அணிந்த தாள் தொழுது,
உடைவு அருங் கருத்து உணர்ந்த ஆண்மையை,
தொடை வரும் கனி பாவின் சொற்றினான்:
18
   
மிக்காயேல் என்னும் வானவன்இறைவன்நீதியின்வல்லமையைக்கூறத்தொடங்குதல்
 
1283“அஞ்சுவான் கொல்லோ?, நீதி
  அணிக் கலத்து இலங்கு வீரத்து
எஞ்சுவான் கொல்லோ?, ஞாலத்து
  யாவரும் பனிப்ப ஆண்மை
விஞ்சுவான் கொல்லோ? என்ன,
  மேவிய எசித்து நாடர்
துஞ்சுவான் உணர்ந்தார் முன்நாள்,
  சுருதி சேர் கொழுகொம்பு அன்னோய்!
19
   
 
1284“நினைந்த யாவையும் நினைந்த
  நிலைக்கு அவை நிகழ்த்தும் தன்மை
புனைந்த மா மதுகை காட்ட,
  புணர்ந்த புன் சூரல் கொண்டு
முனைந்த கால், இவன் முன் நாளில்,
  முரிந்து எசித்து அஞ்சி வாட
வனைந்த யாவையும், நினக்கு ஏன!்
  வகுத்து யான் உரைப்பல்?“ என்றான்.
20
   
 
1285வீங்கு எழும் துயருள் ஆற்றா
  வெதிர்ப்பு எழும் புணரி நெஞ்சில்,
பூங் கெழுங் கொடியோன், “சொல்லிப்
  புரை அற உணர்ந்ததேனும்,
ஈங்கு எழுந்து, எளியன் என்ன
  இரிந்த நாயகனை வாழ்த்த,
ஆங்கு எழும் திறலின் ஆண்மை
  அறைதி“ என்று, அறைந்தான் வானோன்.
21
   
பாரவோன்யூதர்க்குத்துன்பம்இழைத்தல்
 
1286“பேர ஓங்கிய வெற்பு உச்சி
  பிளந்த விண் அசனி ஏறு
நேர, ஓங்கு அடலில்சீற்றம்
  நெறித்து, அருள் வணங்காச் சென்னிப்
பாரயோன் என்பான், நாதன்
  பணித்த நல் பூசை செய்யா
வீர யோகத்து யூதர்
  விலக்கி, மிக்கு அல்லல் செய்தான்.
22
   
யூதர்அழுத கண்ணீர்
 
1287“உடைக் கலத்து இலங்கி, செற்றத்து
  உடன்று இருள் பருகும்நெஞ்சான்,
அடைக்கலத்து அடைந்த யூதர்க்கு
  அடிமை என்று இயற்றும் பீழை
துடைக்கல் அற்று, எவரும் எஞ்சி,
  தொறும் தொறும் அழுத கண்ணீர்,
படைக்கலத் தகுதி போலப்
  பைதிரம் சிதைத்தது அன்றே.
23
   
இறைவன்மோயீசனுக்குப்பிரம்பு அளித்தல்
 
1288“நொந்து நொந்து அழுத ஓதை,
  நுழைந்து உயர் வானத்து உச்சி
வந்து வந்து, அருளில்மிக்கான்
  வருந்தினர்க்கு இரங்கி, குன்றின்
முந்து நின்று அருணம் மேய்த்த
  மோயிசன் விளித்து, ஓர் சூரல்
தந்து, ‘நின் குலம் கொல் கோன் கண்
  சடுதி தூது ஏகுக‘ என்றான்.
24
   
 
1289“கொடிய கோன் வெருவா! அன்னான்
  குலைவு உறீஇ வெருவப் பேசி,
விடிய மா பூசை ஆக
  விடுதி!“ என்று, அவன் விடாதேல்,
நெடிய சூரலைச் சூழ் ஓங்கி,
  நிருபனோடு எவரும் அஞ்ச,
கடியது ஓர் துயர் ஆங்கு உய்த்து, என்
  கதத் திறல் காட்டுக“ என்றான்.
25
   
மோயீசன்அரசனைப்பிரம்பால்அச்சுறுத்தல்
 
1290“ஓளியில்சொன்ன யாவும்
  உணர்ந்த மோயிசன் போய்க் கூற,
ஆளியில்கொடுங்கோன் கேளாது,
  ஆங்கு அவன் எறிந்த சூரல்
வாள் எயிற்று அடும் செம் பாந்தள்
  வடிவு எடுத்து எழுந்து அங்கு ஆடி,
நீள் எயிற்று அழலும் கண் தீ
  நிறைய விட்டு உடற்றிற்று அன்றோ.
26
   
 
1291“சாத்திர மாய விஞ்சைத் தன்மையில் அவரும் பல் பல்
காத்திரம் காட்ட, அன்னார் காட்டிய அரவைத் தேவ
சூத்திர அரவு நுங்க, தொடர்ந்து மோயிசன் வால் வவ்வி,
வேத்திரம் ஆய தன்மை வேந்து கண்டு அஞ்சினானே.
27
   
 
1292“அஞ்சினான் எனினும், தேவ
  அருச்சனைக்கு இடஞ் செய்யாத
நெஞ்சினான், கொடுமை ஆற்ற,
  நீர் எரிக் கமலத்து அன்னம்
துஞ்சி வாழ் பொய்கை போகில்,
  ‘சொன்னவை மறுப்பாய் ஆயின்,
எஞ்சு இலாத் துயரத்து ஆழ்வாய்!‘
  என்று, மோயிசன், சொல்கின்றான்.
28
   
 
1293“சொல்லிய விசையில், ஏந்தும் சூரலைச் சுழற்றி நிற்ப,
க ல்லிய மலர்கள் வாட, கயல் இனம் தளர்ந்து மாள,
உல்லியர் மயங்க, யாரும் உண்ணும் நீர் இன்றிச் சோர,
புல்லிய புனல்கள் யாவும் புண்ணின் நீர் ஆயிற்று அன்றே.
29
   
 
1294“மீட்டு அரும் சூரல் வீச,
  வீழ்ந்தன நுணலை மாரி;
தீட்டு அருஞ் சயன மாடம்,
  சித்திரக்கூடம் யாவும்
ஈட்டு அருங் கனகச் சாலை
  இவை முதல் இடங்கள் தோறும்,
வாட்டு அருந் துயர் கொள் நாட்டில்,
  மல்கிய நுணலை ஈட்டம்.
30
   
 
1295பண் இகல் இசையால் கோகு
  பயன் படாது என்ன, அன்னான்
எண் இகல் விடாமை, நாதன்
  ஏவலில் சூரல் ஓங்கி,
உண்ணிகள் எண் இல் மொய்ப்ப,
  உழி தொறும் வெருவும் மொய்த்து,
புண் நிகழ் கிடந்த நாடு
  பொருவு இலா வருந்திற்று அன்றே.
31
   
 
1296“தீ இனம் குளித்த நெஞ்சான் செருக்கு உளத்து அறாது சீற,
தூய் இனம் வெருவ, மீண்டு சூரலை ஆட்டும் தன்மைத்து,
ஈ இனம் எண்ணும் ஈறும் இன்றியே எவணும் மொய்த்து,
வீ இனம் மலர்ந்த நாடு வீந்தது ஓர் பிணத்திற்று ஆமே.
32
   
 
1297“வெரு உற அரசன், போக
  விடை செய, இடரும் நீங்கும்
உரு அற இடர்கள் நீங்க,
  உரைத்தவை மறுத்துச் சீற,
செரு உறச் சாதி ஓங்க,
  சிந்துரம் முதல் மா எல்லாம்
தரு அறா, உணரா நோயால்
  தளர்ந்து நொந்து இறக்கும் மாதோ.
33
   
 
1298“சுட்ட நோய் ஆறின் ஆறாத்
  துகள் தரும் தருக்கு நீக்க,
விட்ட நோய் போதா, வேகத்து
  இவன் சுழல் சூரல் தன்னால்
குட்ட நோய் அரசன் ஆதி
  கொண்டு, உளம் குலைந்தார் யாரும்,
பட்ட நோய் ஒன்றும் இன்றிப்
  பரிவு அற யூதர் வாழ்ந்தே.
34
   
 
1299“உலை முகந்து அருந்தும் தீய் நெஞ்சு
  உரு உற, சூரல் ஓங்கி,
அலை முகந்து அருந்தி ஐ என்று
  அழல் முகில் ஆர்த்து மின்னி,
சிலை முகந்து அருந்திக் கான்ற
  சீர் எனப் பெய்த ஆலி,
கொலை முகந்து அருந்தி எங்கும்
  கொல் உயிர் அளவு ஒன்று உண்டோ?
35
   
 
1300“மதம் கலந்து அரசன், கொண்ட
  மறம் கழிந்திலன் ஆம் தன்மை,
கதம் கலந்து அசைத்த சாதி
  கடுகிய பதங்கம், எங்கும்
சிதம் கலந்து அலர்ந்த நாட்டில்
  சிறு புல் ஒன்று இன்றி யாவும்
இதம் கலந்து இமைக்கும் முன்னர்
  இற்று அழித்து ஆயிற்று அன்றே.
36
   
 
1301“துச்சு இறை உளம் போன்று அள்ளும்
  தொகுதியால் இருள் மொய்த்து, ஆடாக்
கைச் சிறை கடக்கல் தேற்றா
  கால் சிறை ஆகி, எங்கும்
மெய்ச் சிறைப்பட்ட யாரும்
  வெருவி ஆர்த்து அலறி நோக,
மைச் சிறைப்பட்ட நாடு,
  மறச் சிறை நகு ஒத்து ஆம் ஆல்.
37
   
யூதர்விடுதலை பெறல்
கடவிள்எசித்தியருக்கு இட்ட சாபங்கள்
 
1302“அங்கு அடைக்கலமாய் அடைந்தவர் ஆள் என்று
  ஆக்கிய கொடு வினை மாறாப்
பங்கு அடை கொடிய வேந்தனைத் தணிப்ப,
  படி உள வேந்தர் ஆள் பரமன்,
வெங் கறை, நீகம், உண்ணிகள், ஈக்கள்,
  விலங்கின் நோய், குட்ட நோய் ஆலி,
சங்கு அடை பதங்கம், மல்கு இருள் என்னும்,
  சபித்தது ஓர் சாபம், ஒன்பதுவே.
38
   
அரசன் யூதர்களைப் போகவிடல்
 
1303“கான் முகம் புதைத்த கள் மலர் நாட்டில்,
  கலக்கம் உற்று இடந் தொறும் யாரும்,
வான் முகம் புதைத்த முகில் முழக்கு எஞ்ச
  மயங்கி ஆர்த்து அலற, மற்று யூதர்,
தேன் முகம் புதைத்த மலர் என அங்கு ஓர்
  சிதைவு இல வாழ்தலைக் கண்டே,
ஊன் முகம் புதைத்த வேல் அரசு, அஞ்சி,
  ‘ஒருங்கு அகன்று ஏகுமின்!‘என்பான்.
39
   
கடவுள்எசித்தியருக்கு இட்ட கொடிய ஆக்கினையும் காரணமும்
 
1304“என்பதும், வீர மோயீசன் தன் கை
  எடுத்து இடர் தீர்ப்பதும் ஒன்றாய்த்
துன்பு அது நீங்க, அரசு உளத்து இகன்று,
  தொழும்பராய் நின்மின்! என்றமையால்,
‘ஒன்பது சாபம் நிறை நிறை தொடர,
  உவமியா மதுகையோன், இட்ட
பின்பு அது கணியானோ‘ என, சினந்து,
  பெயர்ப்பு அரும் இடுக்கண் உய்த்திட்டான்.
40
   
 
1305“கண் முழுது அட்ட இருள் இரா நடுவில்,
  கதத்து அளவு அருந் திறல் மிக்க,
விண் முழுது அன்றி மண் முழுது இறைஞ்சும்
  வேந்தர் வேந்து, அரை நொடிப் பொழுதில்,
மண் முழுது ஆண்ட கோன் தலை மகனும்,
  மற்றவர் தலை மகர் யாரும்,
எண் முழுது இன்றி இறந்து உயிர் செகுப்ப,
  எசித்து நாடு எங்கணும், கொன்றான்.
41
   
‘இலக்கணமே நாட்டை விட்ட கல்க‘என அரசன்கூறல்
 
1306“ஒல்என உளைந்து, கண் புதைத்து அலறி,
  ‘உடன்ற இக் கடவுளோடு எதிர்ப்ப
வல் என எவரோ? மற்று எமை ஒருங்கு
  மடிப்பனோ?‘என உளத்து அஞ்சி,
அல் என எண்ணாது அரசன் மோயிசனை
  அழைத்து, உமர் இக் கணத்து எழுகச்
சொல்! என இரைப்ப, அனைவரும் உவந்து,
  துணுக்கென எழுந்து ஒருங்கு அகன்றார்.
42
   
 
1307“இற்று யாவையும் இவ் இளவல் தான் காட்டி,
  எசித்திடைச் சிதறிய வெருவின்
வெற்றியால் யூதர் தம் சிறை தீர்த்து,
  மிடைந்தன தெரிவையர் இளைஞர்
முற்றி ஆம் கிழவர், இவர் அலது, அரும் போர்
  முரண்பட மலைப் புய வீரப்
பெற்றியார் அறு நூறாயிரர் கடல் சேர்
  பெருஞ் சுரத்து ஏகினர் அன்றே.
43
   
பாரவோன் சேனை, யூதரைத் தடுக்க விரைதல்
 
1308“விண் உக ஆர்த்து வீழ் உரும் அன்ன
  வேந்து மீண்டு உலம்பி, ‘ஐ என்ன
பண்ணுக பசும் பொற் கொடிஞ்சி அம் தேரும்!
  பண்ணுக புரவியும்! செந் தீக்
கண்ணுக படு மா மத கரி மாவும்!
  கடிந்தனர்த் தகைப்பன்!‘ என்று, அயில் கொண்டு,
எண் உக இடம் அற்று அபயர் மா கடல் சூழ்ந்து,
  எய்த கோல் பின்னுறத் தொடர்ந்தான.்
44
   
கார்மேகம் வழியடைத்தல்
 
1309“நோக்கிய நோக்கம் திசை தொறும் தீக்க
  நூக்க அருஞ் செருக்கொடு நோக்கி,
தாக்கிய தாக்கின் உடன்று, உளம் தாக்கச்
  சலத்து அடும் மடங்கல் ஏறு அன்னான்,
நீக்கிய பாக்கத்து அகல்வரைத் தாக்க
  நெருங்கிய கால், நெடு மறைவை
ஆக்கிய படத்தில், ஆர்த்த கார் முகில் விட்டு
  அடைததனன், மதுகையின் வல்லோன்.
45
   
மோயீசன்கடலை வழிவிடச்செய்தல்
 
1310“இப் படை தொடர, புணரி முன் நெருங்க,
  இடை வரும் யூதர் உள் வெருவ,
அப்ப டை கடலை மோயிசன் பிரம்பால்
  அடித்தலின், பளிங்கு ஒளிச் சுவர்கள்
ஒப்ப, டை அலைகள் பிரிந்து அகன்று இரு பால்
  உயர்ந்து நின்று, இடத்து இவர் புக்கு,
வெப்ப டை அரசன் உளத்து உடன்று உலம்ப,
  விருப்புடன் யூதர்கள் போனார்.
46
   
மாற்றார்கடல்நடுவில்வகுதல்
 
1311“மறம் கொடு, கதம் சால் மருட்டிய மனத்தில்
  வரும் சிதைவு உணர்கிலாக் கொடியோன்,
அறம் கொடு புக்க யூதரைத் தடுப்ப,
  ஐ எனத் தானையும் தானும்,
புறம் கொடு பிரிந்த புணரி செய் வழியே,
  புக்கு உறீஇக் கடல் நடு அடைந்தான்;
திறம் கொடு சினமும் ஆசையும் பெருக,
  சேர் இழிவு அறிகுவர் எவரோ?
47
   
மாற்றார்படையின் அழிவு
கடல் நடுவில்வானவன்மாற்றாரை வதைத்தல்
 
1312நெடு மா கடல் நிகர் மா படை,
  உறி மா கடல் நெறியே,
நடு மா கடல் அடை காலையில்,
  நமை ஆள்பவன் நவில் சொல்-
லொடு, மா கடல் மிசை, வானவன்
  அரு ஆயின ஒருவன்,
வடு மா கடல் எனுந்தானையை
  மதியா வதை வகுத்தான்.
48
   
 
1313“உரம் அற்றனர் கவசத்தொடும், உறழ் அற்றன உழவர்,
சரம் அற்றனர் சாபத்தொடு, சமம் அற்றன சமிதக்
கரம் அற்றனர், கருவிக் கொடு கழல் அற்றனர், கவிழச்
சிரம் அற்றனர், படை விட்டு எதிர் செரு உற்றனர்த் தெரியார்.
49
   
 
1314“கோல் இல்லன, புதையோடு உள குதை இல்லன, கொடிய
வேல் இல்லன, வளையோடு இரு மழு இல்லன, விரி நீள்
தோல் இல்லன, வசியோடு உயர் கதை இல்லன, சுளி வில்
கால் இல்லன வடமோடு ஒரு கடை இல் என மடிவார்.
50
   
 
1315“உருள் பூட்டிய நெடும் அச்சு இல,
  உருள் கால் இல உகளி
மருள் பூட்டிய பரி மா இல,
  வரு பாகரும் இல, மேல்
பொருள் பூட்டிய உயர் கூம்பு இல,
  பொலி நீள் கொடி இல பொன்
தெருள் பூட்டிய விரி பார் இல சிதை
  தேர் பல பலவே.
51
   
 
1316“பிரிவார், தமில்நெரிவார், கறை பிளிர்வார், வதை பெறுவார்,
முரிவார், அலை புகுவார், உளம் முனிவார், துயர் முதிர்வார்,
எரிவார், உடல் கரிவார், இறந்து இழிவார், இடை இடையே
ஒரு வாளி எய் அரு ஆயின ஒரு வானவன் உரனால்.
52
   
 
1317“வலம் ஆயினும் இடம் ஆயினும் வரு
  வாளிகள், அளவு உண்டு
இலது ஆயினும், வரு வாளிகள்
  படும் அல்லதும் இலை ஆல்;
பல வாளியில் ஒரு வாளியும்
  பறிப்பார் இலர், உயிர் உண்டு
அலது, ஆறு உயிர் உணும் ஓர் சரம்
  அலது, எல்லையும் இலையே.
53
   
 
1318“அழலக் குயவு, அழலக் கரி, அழலப் பரி, அயிலோடு
அழலக் கதை, அழலத் தனு, அழலச் சரம், அசியோடு
அழலக் கிடுகு, அழலப் புதை, அழலப் படை எவையும்,
அழலக் குடை, அழலக் கொடி, அழல் அத்திரம் விடவே.
54
   
 
1319“அழி தாரொடு கடல் ஆழியின் அடி வீழ்வன உயர் தேர்,
ஒழி பாயொடு கவிழ்கின்றன உரு ஒத்தன மதமே
கழி மால் கரி கழறிக் குளிர் கடலுள் புகல், கதிரோன்
எழில் வான் உற அலை புக்கன இருள் ஒத்தன எனவே.
55
   
 
1320“முடி வான் உறும் இரதத்து
  உளர் சிரம் அற்று உகும் முடிகள்,
வடி வாளியொடு உரம் அற்று உகும்
  வடிவு உற்ற அணி மணிகள்,
அடியோடு இரு கரம் அற்று உகும்
  அழகு உற்ற அவிர் அணிகள்,
கடிதாய் உலகு ஒழி நாள்
  உகும்கணம் ஒத்தன எனவே.
56
   
 
1321“கார் ஆர் ஒலி, கடல் ஆர் ஒலி, கறை பாய் ஒலி, கடிது ஊர்
தேர் ஆர் ஒலி, கரி ஆர் ஒலி, பரி ஆர் ஒலி, சிதறும்
போரார் ஒலி, முரசு ஆர் ஒலி, புகைவார் ஒலி, புரை செய்
நேரார் ஒலி, மடிவார் ஒலி, நிறை பார் ஒலி நிகரா.
57
   
 
1322“மாறா மத கரி பட்டன; வதை பட்டன வயமா;
வேறாய் உருள் அழிபட்டன; அழிபட்டன மிளிர் தேர்;
கூறாய் உடல் குறைபட்டன, குறைபட்டன குருதி
ஆறாய், அலை கிழிபட்டு என அதிர்பட்டு, உறும் அகடே.
58
   
செங்கடல்என்னும்பெயர்வரக்காரணம்
 
1323“செப்பு ஆறு இலது அடல் தானைகள்
  திரள் மாள்தலில், திரளும்
துப்பு ஆறு என உதிரத் திரை
  தொடர் ஆழியின் விரவ,
அப்பால் திகழ் அலை சேப்பலின்
  அது செங்கடல் எனவே,
ஒப்பு ஆறு இல கதை யாவரும்
  உணரப் பினர் உரைத்தார்.
59
   
பகைவரின்திகில்
 
1324“நால் நேர் உள திசை எங்கணும் நானா படை நணுக,
மேல் நேர் உள முகிலின் துளி மேல் நேர் கணை விழவே,
கால் நேர் உள படை கண்டிலர் காணார் விடு கரமும்;
மான் நேர் உளம் அழி வஞ்சகர், மானாது உளம் மருள்வார்.
60
   
 
1325“முன் நேரினர்; பின் நேரினர்; புடை நேரினர்; முகிலின்
அந்நேரினர்; இன்ன நேரினர்; அன்ன நேரினர்; அலை மேல்,
என் நேரினர்; என் நேரினர்!“ என்றே அவர் எனினும்
கொன்னே, படை கொண்டு ஆர் உயிர் கொன்றான் கரம், குறிப்பார்.
61
   
மயங்கி அம்பெய்து புறங்காட்டி ஓடல்
 
1326“கண் துற்று எழு கனல் துற்றிய
  கதம் முற்றிய கயவர்,
உள் துற்று எழு பகை ஒத்தன,
  உற, விண் திசை உயர் நேர்
பட்டு உற்று எழு முகில் ஒத்து,
  எழு பகழித் திரள் விடுவார்
விட்டு, உற்று எழு சரம்
  விட்டனர் மிசை பட்டு உருவிடும் ஆல்.
62
   
யூதர்கள்கரையேறல்
 
1327“அண்டத்து உயர் உலகு
  ஆள் இறையவனோடு எவர் பொருவார்?
மண்டத் துயர், வலி அற்றனம்!“
  என, மற்று அவர் மத மா
கண்டத்து உயர் பொலி வேந்தொடு
  கடிது ஓடிய கடையில்,
சண்டத்து உயர் கரை யூதர்கள்
  தனி உற்றனர் ஒருங்கே.
63
   
செங்கடலுட்பகைவர்நிலை
 
1328“கரை மேல் இவர் சென்றனர்
  என்று, கதத்து இறையோன், ‘கடல் தெண்
திரை மேல் அடல் சூரலை நீட்டு!‘
  என, நீட்டிய சீர், திரண்ட
வரை மேல் வரை வீழ்ந்து என, ஆங்கு
  அலை, வீழ்ந்து அவர் மேல் கவிழ்ந்து,
குரை மேல் எழ உள் குளித்து ஆழ்ந்து,
  கொடும் பகைவர், மடிந்தார்.
64
   
 
1329“கடை நாள் கடல் நீர் குடைந்து
  கழறிப் பொங்கும் கதம் போல்,
உடை மால் கரிகள், பரிகள்
  உருள் தேர் உழவர் உள மன்
படை நால் வகையும் குடையப்
  பட, மேல் பட, கீழ்ப் படவே,
புடை வாங்கு அலையோடு அலைய,
  பொலி ஆர்ப்பு உலகில் பொருவா.
65
   
 
1330“ஓர் ஆயிர மால் கரிமா ஓர் ஆயிர நூறு அய மா,
ஈர் ஆயிரம் ஓர் எழு நூறு உருள் தேர், எரி தும்மிய வே-
லார் ஆயின பல் கோடி அமிழ்ந்தி, இமைப்பில் அனைத்தும்,
பேர் ஆயின நீர் வலை இட்ட பிரான், நிறை வாரினன் ஆல்.
66
   
 
1331“போர் மீது ஏந்தும்
  புரவி கரி தேர் பொருநர், பொருவாச்
சீர் மீது ஏந்தும்
  செருக்கு உற்று, எவையும் தெளியா நெஞ்சில்,
நேர் மீது ஏந்தும் திறன் கொள்
  நிமலற்கு அஞ்சாக் கொடுங்கோன்,
ஏர் மீது ஏந்தும் படையோடு
  இமைப்பில் சிதைந்தான் அழிந்தான்.
67
   
 
1332“கரை மேல் நின்றார், கொடிஞ்சி
  கழி தேர்த் திரள் பல் தீவின்
புரை மேல் மிதக்க, ஆமைப்
  புரையில் கிடுகு மிதக்க,
நுரை மேல் எழும் போல் குடை வெண்
  கொடி வெண் கவரி மிதக்க,
திரை மேல் மகரத் திரள் போல்
  செரு மா மிதக்கக் காண்பார்.
68
   
 
1333“அல்லின் வண்ணத்து உடலோர்,
  அணியாத் திரண்டு பிரியாது,
எல்லின் வண்ணத்து எரி வாள் தணவாது
  இணைந்து திரிய,
வில்லின் வண்ணத்து ஒளிர் தெண் திரை மேல்
  மிளிர் மின்னொடு மேய்
செல்லின் வண்ணத்து எவணும் திரண்டு
  மிதக்கக் காண்பார்.
69
   
தீவினைப்பயன்காண்மின்என யூதர்கள்கூறுதல்
 
1334“மிகப் பட்டு உயர் வல் இறையோன்
  விறலால் கரை சேர்ந்தவரே,
நகப் பட்டு ஒருங்கே நவைப்பட்டு,
  உடன்ற நண்ணர், கடலுள்
அகப்பட்டு அமிழ்ந்தி அலை மேல்
  மிதக்க, அனைத்தும் கண்டே,
புகப் பட்டு அழிக்கும் வினையின்
  பொலிசை காண்மின்!“ என்பார்.
70
   
 
1335“பரியே காவா; உயிரைப் பருகி ஊன் பெய் மருப்பின்
கரியே காவா; வளி முன் கடிது ஊர் இரதம் காவா;
எரி வேல் காவா; எவையும் காவா, இறையோன் அருளில்
புரிவே காவாதன கால். புரையின் விளைவு இது‘ என்பார்.
71
   
ஆண்டவனைத் தொழுது பாலை வழி நடத்தல்
 
1336“நல்லது இலதேல், அமுதே நஞ்சு ஆம்; நஞ்சே அமுது ஆம்,
அல்லது இலதேல், வினையே அமர் செய்து உதைப்ப, நிற்பார்
இல்லது; இலதேல் வினையே, இகல் செய்து அவரைக் கெடுக்க
வல்லது இலதே“ என்பார்; வரையாத்தொழுது மகிழ்வார்.
72
   
 
1337“சொல் வாய் தவிர், சிறை தீர்
  சூதர், உவந்து அப்புறம் போய்,
எல் வாய் முகிலும் அல் வாய்
  எரித் தூண் உருவும் இவர் முன்
செல் ஆய், இவர் சென்று, எரி
  வாய் திளைத்த பாலைத் திணை வாய்
ஒல் வாய், அழலும் ஆற்றாது,
  உணும் நீர் இன்றி, உளைந்தார்.
73
   
மோயீசன்கல்லில்நீர்எழச்செய்தல்
 
1338“தொடையே, நின்ற தயையும்
  நீதித் தொகையும் பிரியா
மிடையே நின்ற இறையோன்
  பணிப்ப, வேத்திரத்தால்
புடையே நின்ற கல்லைப்
  புடைப்பப், புனல் பாய்ந்து, அக் கல்
இடையே நின்று தொடர, இனிது
  எண் இலர் சால்பு உண்டார்.
74