சோசுவன் வெற்றிப் படலம்
 
 
1426“பார் அஞ்சின அஞ்சின பாரினொடு
நீர் அஞ்சினிர் நித்தன் அடைக்கலம் வந்-
தீர். அஞ்சிலிர், அஞ்சிலிர்!‘ என்றனன் ஆல்,
போர் அஞ்சில கைப் புகழ் எஞ்சிலனே.
21
   
பிறநாட்டார்,காபனரைப்பகைத்துப் போருக்கு எழுதல்
 
1427“எஞ்சா உறவு ஆயினர் என்று, உள மற்று
அஞ்சா மறம் ஆர் பல நாடர் எலாம்,
நஞ்சு ஆடிய நாணி வில் வவ்வி, அறா
நெஞ்சு ஆடு இகல் ஆட நினைந்தனர் ஆல்.
22
   
 
1428“வேறாய் உரையும் உறையுள் விதமும்,
வேறாய் முறையும் விதியும் குலமும்,
வேறாய் இறையும், விழையும் மறையும்
வேறு ஆய், உறவாட விரும்புதல் என்!“
23
   
 
1429“பகையார்க்கு உறவோர் பகையார் எனலே,
தகையார்க்கு உள தம் முறை ஆம்‘ எனவே,
நகை ஆர்க்க நகைத்து, நடுங்கிய அவ்
வகையார்க்கு இகல் செய்திட வந்தனரே.
24
   
காபனர் சோசுவானிடம்முறையிடுதல்
 
1430“வஞ்சித்து உயிர் உண் அயில் வவ்வினர், போர்
விஞ்சித் திரள் ஆக மிடைந்தனர் என்று,
அஞ்சித் திரி காபனர் வந்து அலறி,
எஞ்சித் தொழுது, இற்றை இயம்பினர் ஆல்:
25
   
 
1431“ஒன்னாரின் உரத்தில் உலாவி உண் ஊன்
மின்னோடு உமிழும் கத வேல் அடலோய்,
உன்னோடு உறவாடினம் என்று, உள மற்று
அந் நாடர் எலாம் பகை ஆடினர் ஆல்.
26
   
ஐந்து அரசரும்பிறரும்பெரும் படையும்கூடிப்
போருக்கு புறப்படுகின்றனர்
 
1432“மஞ்சு எஞ்சுக மா முரசு ஆர்ப்ப, அரா
நஞ்சு எஞ்சுக எய் படை ஞாஞ்சிலொடு
நெஞ்சு அஞ்சுக, நீள் நிலம் அஞ்சுக வந்து,
அஞ்சு அஞ்சில மன்னர், அடுத்தனர் ஆல்.
27
   
 
1433“விது வீசிய வில்லில் வெலற்கு அரியான்,
மது வீசும் எருசல மண்டிலம் ஆள்,
அதுனீசதன் என்னும் அடல் பெயரான்,
பொது ஈசர் பிரான், பொர எய்தினன் ஆல்.
28
   
 
1434“நாவால் அடையா நயன் ஆபிரம் ஆள்,
மேவார் பணி வேல் எறி கை மிடலோன்,
கா ஆரும் மதத்த களிற்றின் உயர்,
ஓவான் எனும் நாமனும் உற்றனன் ஆல்.
29
   
 
1435“ஏர் ஆடிய ஏரிம நாட்டு இறையோன்
பாரான் எனும் நாமன் அகல் படியின்
வேர் ஆடிய மூ இலை வேலுடன் ஓர்
சீர் ஆடிய தேர்மிசை சென்றனன் ஆல்.
30
   
 
1436“கணையோ வலியோ கதிர்க் கார் மினலோ
துணை ஓர் துரகத்து, உயர் வாள் சுழல,
பணை ஓம்பு அயிலக்கின பாழியினான்,
இணையோ தவிர் யாப்பியன், எய்தினன் ஆல்.
31
   
 
1437வாசத்து அலர் பூம் வயல் ஏகில நல்
தேசத்து அரசாய், சிகி வாகையனாய்,
பாசத்து இணை பால் மதி ஆழியனாய்,
பூசத்தியில் தாபிர் பொலிந்தனன் ஆல்.
32
   
 
1438“இன்னாரும், எவேயரும், எந்தையரும்,
பொன் நாடு அமுறேயரும், வண் புகழ் சேர்
நல் நாடு எபுசேயரும், நச்சு அயில் வேல்
மன் ஆர் பிரசேயரும் மண்டினரே.
33
   
 
1439“மடையைக் கடல் வாரி திறந்தது என,
புடையில் புவி யாவும் புழக்கம் உற,
இடை எக்கணும் உள்ள யாவருமே,
படை உற்று எமை இன்று பகைத்தனர் ஆல்.
34
   
பகைவரின் சேனைப் பெருக்கம்
 
1440“மலை நேர் கரியும், வளி நேர் பரியும்
முலை நேர் தனுவும், உறை நேர் கணையும்,
சிலை நேர் உரமும் திளை சேனைகளே
நிலை நேர் இல நேமி நிறைந்தனவே.
35
   
 
1441“போர் கீறிய வெய்ப் புணரித் திரையோ,
நீர் கீறிய நீண் கலமோ, சிறகால்
கார் கீறிய கல் திகிரிக் குலமோ,
பார் கீறிய கால் படர் தேர்த் திரளே?
36
   
 
1442“வளியோ, கடலோ, மழையோ, உருமோ,
விளியோடு அதிர் கூற்று இனமோ, எவையோ,
தெளியோம், உயிர் உண்டு சினந்து அதிரும்
களி ஓடு கடத்த கரித் திரளே.“
37
   
 
1443“மேல் மன்னிய வீரியர் வில்லில் உகும்
கோல் முன்னின, கொல்லு குளம்பின, மேல்
வான் மின் என ஒல்கின, வாவின, போர்ப்
பால் மன் மனம் உற்ற பரித் திரளே.
38
   
 
1444“சுழல் காலினர், கல் திரள் தோளினர், பொன்
நிழல் தாரினர், போர் பல நீந்தினரே
அழல் கோலினர், கூற்றது தோழர், அலைச்
சுழல் கார் இணை துன்று அபயர் திரளே.
39
   
 
1445“கோல் பேர் படை, தேர்க் கொடி மா படை, மால்
தோல் பேர் படை, ஓர் தொகை இன்றி வரும்
கால் பேர் படை மா கடல்! அக் கடை போய்,
வேல் பேர் படையோய், எவர் வெல்வர்?“ என்றார்.
40
   
சோசுவன் காபனரைத்தேற்றிப் பெருக்கம்எழுதல்
 
1446“ஊன் முகந்து அழன்ற வேலோன்,
  ஓர் நகை சினந்து கொட்டி
தேன் முகம் தந்து கொல்லும்
  தீ வினைப் பகை ஒன்று அன்றி,
வேல் முகம் தந்த வெம் போர்
  வெருவவோ? இரங்கி நாதன்
தான் முகம் தந்த காலை,
  சயம் நமக்கு அரிதோ?“ என்றான்.
41
   
 
1447“கூற்று எனச் சினந்து அங்கு இன்ன
  கூற்றினை முடியா முன்னர்,
‘ஏற்று இனத்து உடன்ற தானை எழுக!‘
  என்று, உயர் தேர் ஏறிக்
காற்று எனப் பறந்து, ஞாலம்
  கலக்கு உறீஇக் கூச, செந் தீ
ஊற்று எனச் சுடரைப் பில்கி
  ஒளிர் படை, படர்ந்தது அன்றே.
42
   
 
1448“கால் என விசையில் தேர்கள்
  காலொடு பறந்து செல்ல,
கோல் எனப் பரிகள் செல்ல,
  குளிறி வேம் இடிச் சூல் மேகஞ்
சால் எனக் கரிகள் செல்ல,
  சமர்ப் புலி வெள்ளம் மொய்த்த
பால் எனப் பதாதி செல்ல,
  பகைவர் வெம் படையைக் கண்டார்.
43
   
ஆபனைத்தூதனுப்புதல்
 
1449“கண் புலன் அழலைத் தும்மக்
  கதத்து, எதிர் கடலைக் கண்டான்;
உள் புலன் அழற்றும் சீற்றம்
  ஒடுக்கிய சீலம் உள்ளி,
மண் புலன் மொய்த்த வாரி
  மறித்து எனப், படையைப் போக்கா,
‘புண் புலன் தேய் வேல் ஆபன்
  புணர்க!‘ என்று அறைந்தான், வல்லோன்.
44
   
 
1450ஐவரும் இடைத் தூது ஏகி,
  அனைத்தையும் பொது அற்று ஆளும்
மெய் வரும் சுருதி நாதன்
  விரைந்து அடைக்கலம் வந்தாரை,
கை வரும் படையின் சால்பில்
  கலக்கு உறீஇப் பகைத்தது என்னோ?
மொய் வரும் பகையின் ஊங்கு
  முதலவன் பகை தீது, என்பாய்.
45
   
 
1451“பார் பெற ஆசையானும்,
  பானு முன் பனியின் நீங்கும்
சீர் பெற ஆசையானும்,
  செகுத்து உயிர் வித்திக் கொள்ளும்
பேர் பெற ஆசையானும்,
  பிறர்க்கு, யான் செருப் போர் செய்யேன்;
போர் பெற, நாதன் வேண்டி,
  பொறுக்கவும் செய்யேன் என்பாய்.
46
   
 
1452“ஒருப் பட உறவு நன்று என்று,
  உடன்று தாம் செருக்கு உற்று, இன்றே
செருப் பட வேண்டின், இன்றே
  செரு வரம் தருவல் என்பாய்.
மருப் பட மலர்ந்த தாரோய்,
  மருள் படாது அறைதி‘ என்றான்.
நெருப்பு அட வெய்ய ஆபன்,
  நிருபனைத் தொழுது போனான்.
47
   
ஆபன்பகையரசர்பால் வென்று அறிவுரை பகர்தல்
 
1453“வில் முகத்து அம்பின் சென்று,
  வேந்தர் ஐந்து இறைஞ்சி, சொல்வான்:
சொல் முகத்து அடங்காச் சீர்த்திச்
  சோசுவன் தூது என்று உற்றேன்;
வன் முகத்து ஒவ்வா நாதன்
  வணங்கு காபனரைச் சீய்க்க,
செல் முகத்து உறையின் வை வேல்
  செருப் படை மிடைந்தது என்னோ?
48
   
ஆபன்அறிவுரை
 
1454“மண் முழுது அன்றி வானும்
  வணங்கும் ஒப்பு எதிர் ஈறு இன்றி
எண் முழுது இழந்த சீலத்து
  இறைவனைத் தொழுதல் தீதோ?
உள் முழுது அறிவு மாழ்க
  உடற்றலே வேண்டா என்றான்,
புள் முழுது ஏற்றும் வேலோன்
  பொருநரும் சினந்து நக்கார்.
49
   
 
1455வேற்று அலாது, அவரும் நீரும்
  விரும்பி ஒன்று ஆய போழ்தில்,
மாற்றலார் எமக்கு,‘ என்று, அன்ன
  மன்னவர் உரைப்ப, மீட்டும்,
கூற்று அலாது இணையா வேலோன்,
  கூறுவான்: படையின் வெள்ளம்
போற்றலால், உளத்தில் ஏமம்
  பொங்குபு மருளல் வேண்டா.
50
   
 
1456“பிரம்பினால் எசித்து நாட்டில்
  பெருந் துயர் விளைந்த ஆறும்,
கரம்பின் ஆர் அடியே காணக்
  கடல் திரை பிரிந்த ஆறும்,
வரம்பு இராது எழுந்து இந் நாட்டில்
  வரும் புனல் நின்ற ஆறும்,
பரம் பிரான் வலியைக் காட்டும்
  பலவையும் கேளீர் கொல்லோ?
51
   
 
1457“இத் திறத்து அனைத்தும் செய்த
  இறைவன் நம் இறைவன் ஆகி,
அத் திறத்து அடலோன் நம்மை
  அமர் செய வெகுண்ட காலை,
கைத் திறத்து உடன்ற வெள் வேல்
  கடல் படை அரணம் ஆமோ?
மெய்த் திறத்து இறைஞ்சி அன்னான்
  விரி நிழல் பெறல் நன்று‘ என்றான்.
52
   
அரசர்கள்ஆபனைக்கடிதல்
 
1458“போற்றிய தேவர் நீக்கி,
  புதுப்பட ஒருவற் போற்றச்
சாற்றிய தூதோ? போதி
  சடுதியே! நீரும் நீவீர்
ஏற்றிய தெய்வம் தானும்,
  எம் படை ஆண்மை நும்மைத்
தூற்றிய பின்னர், வாழ்த்திச்
  சொற்றுவீர்‘ என்றார் அன்னார்.
53
   
ஆபன்அரசர்களைப்போருக்கு அழைத்தல்
 
1459“போரிடத்து அஞ்சித் தூது
  புகலவோ வந்தேன்? ஒன்றாய்ப்
பாரிடத்து எதிரா நாதற் பழித்த
  போது, இன்றே இவ் வேல்
சீரிடத்து உரிமை சொல்வேன்,
  செருப் பட வம்மின்‘ என்ன,
காரிடத்து அசனி கூசக்
  கதத்தில் ஆர்த்து, ஆபன் மீண்டான்.
54
   
விண்ணில்ஆசிமொழி கேட்டு சோசுவன் போருக்கு விரைதல்
 
1460“சுளி முகத்து அனைத்தும்
  கேட்ட சோசுவன் உருமின் சீற,
வெளி முகத்து அமலன் சொல்லும்,
  ‘வெல்லுவாய், வென்று, என் ஆண்மை
தெளி முகத்து எவர்க்கும் தோன்றத்
  தெளிக்குவாய்‘ என்னக் கேட்டு,
வளி முகத்து அழலின் பொங்கி,
  வயப் படை எழுக!“என்றான்.
55
   
 
1461காரின் மேல் முழங்க யானை,
  கடலின் மேல் முழங்கத் திண் தேர்
தேரின் மேல் முழங்க மன்னர்,
  திசைகள் மேல் முழங்கப் பம்பை,
போரின் மேல் முழங்கப் பாய் மா,
  புரவி மேல் முழங்க வீரர்,
பாரின் மேல் முழங்க யாவும்
  பகைவர் மேல் முழங்கி மொய்த்தார்.
56
   
சோசுவன் போர்த்திறம்
 
1462“யானை எழும் கடல், ஏந்திய தேர் பரி கால்
சேனை எழும் கடல் சென்று, செழுங் கடல் மேல்
ஏனை எழும் கடல் மோதல் என, பகைவர்
தானை எழும் கடலோடு தலைப்படும் ஆல்.
57
   
 
1463“செல் உகும் மாரி என, சினம் முற்றிய நீள்
வில் உகும் மாரி மிடைந்து, மிடைந்தனர் வாய்ச்
சொல் உகும் மாரி சுளித்த முழக்கம் எழீஇ,
அல் உகும் மாரி அகத்தினர் அஞ்சினர் ஆல்.
58
   
 
1464“நெஞ்சு உறை நீள் கவசத்தொடு, நேரலர் தம்,
நஞ்சு உறை நெஞ்சு அற நஞ்சு உறை வெஞ் சரம் மொய்த்து,
எஞ்சு உறை விஞ்சிய குஞ்சரம் இற்றது; அதின்
மஞ்சு உறையும் சினர் வஞ்சகர் துஞ்சினர் ஆல்.
59
   
 
1465“அற்று இழிவார்; பிரிவார், அதிர்வார், இரிவார்;
மற்று இகல்வார், மருள்வார்; வரையா மடிவார்;
முற்றிய மாதவம் ஆர் முனிமார் முனிவை
உற்று இரி கோல், உயிர் உண்டிலது ஒன்று இலை ஆல்.
60
   
 
1466“தாரொடு தானைகள் சாய்ந்து மடிந்திடவும்,
நீரொடு நூறிய வீறு உடல் நீறிடவும்,
பாறொடு பல் சிரம் மீது பறந்திடவும்,
ஆறொடு மாறு உதிரத் திரை ஆர்ந்தன ஆல்.
61
   
 
1467“தோலொடு தோல் பொர, மீமிசை துள்ளி எழீஇக்,
கோலொடு கோல் பொரு கொள்கையின் வாசி பொர,
காலொடு கால் பொர நேமி கலந்து, உலகின்
நாலொடு நால் திசை நாதம் நரன்றனவே.
62
   
 
1468“மேகம் நிகர்த்தன வேழ மருப்பு மிதித்து,
ஏகம் அறுத்தலின், ஆணை எனப் புயல் பாய்
வேக இனப் பரி, மேகம் உகுக்கு உரும் ஒத்து,
ஆக வரைத் துகளாக உழக்கின ஆல்.
63
   
 
1469“வேலொடு வாள் எடு வீரர்கள் மேல் அதிர,
கோலாடு கோலிய கொல் கரி சாய்ந்து பொர,
சூலொடு சூழ்ந்து, சுளித்து, இடி மின்னொடு உக,
காலொடு காய்ந்து, அதிர் கார்த் திரள் ஒத்தனவே.
64
   
 
1470“கோடை எழுந்த பதங்கன் என, கொடி நீள்
ஆடை எழுந்து, அகல் ஆகவ நீள் அடவி
பீடை எழுந்து பெரும் படை வாடி அற,
மாடை எழுந்து உயர் தேர், வரு சோசுவனே.
65
   
 
1471“மிடலொடு வேகம் மிகுந்து எறி வெங் கணைகள்
படலொடு, மேகம் மலிந்த பருப்பதம் ஒத்து
உடலொடு வேழம் உருண்டு, உகு வெங் குருதிக்
கடலொடு தீவு கிடந்து அன காட்சியதே.
66
   
 
1472“படு கணை அல்லது பட்டிலது ஒன்று இலதால்,
விடு கணை யாவையும் வீழ்த்தலில், வில் விசையால்
தொடு கணை மாரி துளித்தன; பின் தொகை அற்று
அடு கணை வாரி அனைத்தையும் வாரினவே.
67
   
 
1473“ஈர் இரு தேரினர், ஈர் அறு யானையினர்,
ஓர் இருநூறு உகள் மா உயர் வில்லினர் வந்து,
ஆர் இரு பாலினர் ஆர்த்து இவனைத் துதைய,
பார் இரு நால் திசை அன்று பதைத்தனவே.
68
   
 
1474“இத் தகவு உற்றது என, கடி நக்கு, இடி வில்,
அத் தகவோன், அவர் மீது வளைத்தமையால்,
மத்தக மாவொடு பாய் பரி மாவொடு வெண்
முத்து அகம் நாறு இரதங்கள் முரிந்தனவே.
69
   
 
1475“ஓர் அறு பத்தும் இரட்டியும், ஓர் தொடையால்,
சீர் அறு வேகமொடு, அம்புகள் சேர்த்தி விட,
பார் அறு வாரி எனப் படர் சோரி விழ,
ஈர் அறு பேர் பிணம் இற்றது ஒரோர் கணையால்.
70
   
 
1476“வேல் அற, வாள் அற, வில் அற, வீரர் அற,
கால் அற, கூம்பு கவிழ்ந்து அற, நேமி அற,
தோல் அற, மீமிசை துள்ளிய வாசி அற,
மேல் அறம் மேவினன் வில் உகும் மாரி அறா.
71
   
 
1477“துறுவன வாளி துமிந்தன யானைகள்; தேர்
இறுவன தாரொடு எரிந்தன; இன்னது எலாம்
அறுவன கால் தொடை அம் கை உரம் தலைகள்;
உறுவன, யாரும் ஒழிந்து நடந்தனனே.
72
   
சோசுவனை எதிர்த்த தாபிரன்படைகளுடன்அழிதல்
 
1478“திருத் தகு புயக் கிரி வளர வீக்குபு
  செருக் களம் உழக்கு இவன், உலவல் நோக்கிய,
மருத் தகு தடத்து அணி எகில நாட்டினை
  வயப்பட அளித்தன அரசன் ஏற்று, எரி
கருத் தகு முகில் குரல் மெலிய ஆர்த்தன
  கதத் தொடு கடுத்தன களிறு போக்கியும்,
உருத் தகு புயத்து எழ வளையை ஓச்சியும்,
  உருக்கினன் இரட்டினன் உருமில் தாக்கியே.
73
   
 
1479“மிகப் படு பசித் தகு வளை இது ஆய், பல
  விதத்து உயிர் வெறுத்து, உனது உயிர் அலால், பசி
தகப் படு சுவைக் கொடு நிறைய ஆற்றில
  தருக்கொடு வர, பசி அருளி நீக்கு‘ என,
நகப் படு சினத் தொடு கரியில் ஊக்குபு,
  நகைத் தகு மதிக்கு இணை பருதி வாய்த்து, இழை
பகப் படு குறிக் கையில், எழுக தீய்த் திரள்,
  பயப்படு சமர்க் களம் இரிய ஓச்சினான்.
74
   
 
1480பசிப் பட வரின், பசி இனிதில் ஆற்றிய
  பருக்கை இது! என, குனி தனுவின் வாய்க்கு ஒரு
வசிப் பட வளைத்தன விசிகம் ஏற்றலும்,
  வயப்பட வகுத்தலும் அறிகு இலா, கழு
சசிப் பட அறுத்து இரு பிறைகள் ஆக்கிய
  சமத்து எரி வளைப்படை அறவும் நோக்கு இலா,
சுசிப் பட அறுத்தன துணிகள் மேல் திசை
  துடிப்பன பறப்பன வெருவ நோக்கினார்.
75
   
 
1481பொருக்கென, மனச் சினம் அனைய தீக்கிய
  பொறிப் படு சிலைப் படை வளைய மாற்றினான்;
முருக்கின சினத்து, இரு புடையின், நூற்றுவர்,
  முறுக்கென வளைத்திட ஒரு கை தாக்கினர்;
கருக் கனம் இடித்து என வருக தீக் கணை,
  கணைக்கு ஒரு கணைப் பட எழுதி, மீட்டு அவர்
வெருக் கனம் உளத்து உற, இடைவிடாச் சரம்
  விடுத்தனன், மறைக்கு அரசு, ஒரு வில் கோட்டியே.
76
   
 
1482“திளைத்தன சினத்து இரு புடையின் நூற்றுவர்
  சிலைக் கொடு பனித்தன கணைகள் தாக்கலின்,
முளைத்தன பொறிச் சிறகு உடைய தேர்க்கிரி,
  முனைக் கொடு பறப்பு என நடவு பார்த்திபன்,
வளைத்தன தனுப் புயல் இடைவிடாச் சர
  மழைத் திரள் களிற்று உயர் மலையின் மேல் பட
விளைத்தன களத்திடை உதிர நீத்தம் உள்,
  விறல் கயல் எனக் குறை உடல்கள் ஈட்டமே.
77
   
 
1483“என் இச் சிலை பனித்து எதிர் உறைகள் நீக்கியும்,
  இழைக் கொடு அகத்து அணி கவசம் நூக்கியும்,
நுனிச் சிலை அடிச் சிலை சிலையை வீக்கிய
  நுனிக் கரம் அடிக் கரம் எவையும் வீழ்த்தியும்,
தனிச் சிலை வளைத்தன ஒருவன் ஆக்கிய
  சயச் சமர் நலத்தினை வெருவ நோக்கினர்,
இனிச் சிலை அமர்க்கு அரசு இவனை நீத்து எவர்?
  எனச் சிலர் வியப்பு உறி, அளவு இல் வாழ்த்தினார்.
78
   
 
1484“இளைத்தனர்; இளைத்து அமர் முரிய, ஆர்த்தனர்
  எதிர்த்தனர், கணைத் திரள் எழுதி ஓட்டினர்
திளைத்தனர்; புடைப்புடை படு புண் வாய்க் கறை
  சிதர்த்தனர், சினத் தொடு, சின வில் பூட்டென
வளைத்தனர்; வளைத்த வில் ஒடிய, மீட்டு ஒரு
  வயச் சிலை பிடித்தனர், முனியு தாக்கு என
விளைத்தனர் சினச் சமர்; ஒரு வில் வாய்க்கு உயிர்
  விடுத்தனர் ஒருப்பட, இடையின் நூற்றுவர்.
79
   
 
1485“பரப்பின நிணப் பிணம் எழுக நூற்று வர்
  பட, தனி இபத்து உயர் திரியு பார்த்திபன்,
நிரப்பின சிலைக் கொடு தொடையொடு ஈட்டிய
  நெறிக்கணை, தடுத்தன கவசம் மேல் பட,
வரப்பு என அழல் பொறி தவழ மீச் சுடர்
  வனப்பு என இமைத்தவன் அடியின் மேல் கணை
இரப்பு என நிரைத்தன, வரம் இது ஆய், கடிது
  எடுத்து, அமர் எதிர்த்தனன் அயர, ஓச்சுவான்.
80
   
 
1486“வெறுத்தன பொறித் தவர் முனிவு போல், பிறர்
  விலக்கு அரும் வடிக் கணை விசையில் ஓட்டலோடு,
இறுத்து என மறைக்கு உயர் இரதம் நீர்த்தனன்,
  இருள் பொறி அகிக் கொடு இரு நிலாப் பிறை
அறுத்து என, மருப்பு இணை கரமொடு ஈர்ந்தனன்;
  அடல் கரி முழக்கொடு விழு முன் மீட்டு இமன்
உறுத்து என, மறுத்து ஒரு கணையை ஓச்சியும்
  உருப் படு முடித் தலை அடியில் வீழ்த்தினான்.
81
   
நுகோதரனுடன்பொருது தகஞ்சணன்அழிதல்
 
1487“கார் எழுந்து இடித்ததே போல்,
  கதத்த பல் பறை ஆர்த்து, இன்ன
போர் எழுந்து ஆய போது, ஐம்
  பொருநர், ‘நீடு உவப்ப!‘என்ன,
தார் எழும் தலைவன் ஆய
  தகஞ்சணன் புரவி மேல் ஆய்,
நீர் எழும் திரையின் பொங்கி
  ஞெகிழி வேல் ஏந்தி நின்றான்.
82
   
 
1488“நூல் வரும் மறையை வாழ்த்தி
  நுகோதரன் எதிர்ப்பக் கண்டு,
கோல் வரும் விசையின் பாய்ந்து,
  குந்தம் விட்டு, ‘உனது இது!‘என்றான்.
மேல் வரும் நிரையின் சாய்ந்து
  விலகி நின்று, ஒலி கொண்டு உற்ற
கால் வரும் அழல் பெய் வேலைக்
  கவ்வி, மீட்டு எறிந்தான் வல்லோன்.
83
   
 
1489“உழி அறிந்து எறிக. பாராய்:
  உனது இது!‘என்று எறிந்த வை வேல்,
வழி அறிந்து ஓடினாற் போல்,
  வளியினும் முடுகி, மார்பில்
குழி அறிந்து இனிதின் மூழ்கி,
  கொன்று உயிர் உண்டு, அந் நெஞ்சின்
பழி அறிந்து, அங்கண் நில்லா,
  பறந்து எனப் போயிற்று அன்றே.
84
   
யாப்பியனால்நுகோதரன்மடிதல்
 
1490“காய் எரி சீற்றத்து எல்லாம்
  கண்ட யாப்பியன், ஆர்த்து எய்ய,
தீ எரி அசனி ஊழ்த்துச்
  சினந்து வீழ் விசையில் வீழ்ந்த
வாய் எரி கொடும் வேல், தைத்த
  மார்பினில் பறித்து எய்யுங் கால்,
நோய் எரி கையும் சோர்ந்து,
  நுகோதரன் உயிரில் சோர்ந்தான்.
85
   
ஆபன்யாப்பியனை அழித்தல்
 
1491“களி முகத்து அரசன் ஆர்ப்ப, கதமுகத்து எதிர்ந்த ஆபன்
சுளி முகத்து, அழலைத் தும்மும் துரக மேல் இருவர் தோன்றி,
தெளி முகத்து எரிந்த மின் போல் தீ எரி இருவாள் வீசி,
வளி முகத்து அன்ன தூளி மலிந்து எழ உழக்கிப் பாய்ந்தார்.
86
   
 
1492“வாள் தக விசையோடு ஆபன்
  வலத்து இடத்து ஒல்கி வீச,
ஆடக முடியின் செல்வன்
  அதற்கு உடல் கரந்து தந்த
கேடக விளிம்பில் பட்டு,
  கீழ் சரிந்து, எருத்தின் மூழ்கிக்
கோடகத் தலையைக் கொய்து,
  கோன் நிலத்து உருமின் பாய்ந்தான்.
87
   
 
1493“கோளொடு, பரியின் தானும்
  குதித்து, உடன்று ஆபன் தீப் போல்
வாளொடு பிரிந்து, துன்னி
  வதிந்து பாய்ந்து, இயல்பில் வீச,
தோளோடு குரிசில் ஏந்தும்
  சுடர்ந்த பொற் கிடுகு, நீண்ட
தாளொடு முளரி வீழ்ந்த
  தன்மையின், வீழக் கொய்தான்.
88
   
 
1494“ஏமமே தானும் நீங்கி, இருவர் ஈர் ஊழித் தீப் போல்
தூமமே மல்கப் பொங்கி, ‘தூதின் நீ நகைத்த தெய்வ
நாமம் ஏய் வலி இது!‘ என்ன, நல் வினை உலந்த கோமான்
வாமம் ஏய் முடியின் சென்னி வாளொடு வீழ்த்தினானே.
89
   
போர்க்கள நிலை
 
1495“வார் எழுந்த முரசு, எதிர் எழுந்த பரி,
  மதம் எழுந்த கரி, வளியினும்
தேர் எழுந்த விசை, விசை எழுந்த வசி,
  திரள் எழுந்த கணை, கணை உகும்
போர் எழுந்த தனு, புகை எழுந்து அபயர்
  பொர, எழுந்த வெரு.- ஒலி.- மருள்,
கார் எழுந்த இடி, இடி எழுந்த ஒலி,
  கடல் எழுந்த அலை மெலியும் ஆல்.
90
   
 
1496“அணி உடன்ற பரி, பரி உடன்ற கரி,
  கரி உடன்ற கொடி அணியு தேர்,
மணி உடன்ற தனு, தனு உடன்ற கணை,
  கணை உடன்ற கறை மலிதர,
பிணி உடன்ற அமர்; அமர் உடன்ற உடல்;
  உடல் உடன்ற உயிர் பிரி தர,
பணி உடன்ற குயவு உயர் உடன்று, படை
  பட உடன்ற மறை அரசன் ஆல்.
91
   
 
1497“முனி வெகுண்ட முனிவு இணை புகைந்து, முனி
  முனி வளைந்து விடு முனிவு அறா;
நனி வெகுண்ட கணை குறி தவிர்ந்தது இல;
  நனி எழுந்த பிணம் இரு கரை,
தொனி வெகுண்ட நதி என எழுந்த கறை
  துணை எழுந்த கரையொடும் எழ
தனி வெகுண்ட நரபதி பொழிந்த சர
  மழை ஒழிந்தது இல; தணிவு இலா.
92
   
சோசுவனின்விற்போர்கண்டு பகைவர்மயங்கல்
 
1498“நீர் ஓர் வாரி முனர் நீள் ஓர் கூலம் என,
  நீல் ஓர் மேனியர் ஓர் நூறு எதிர்த்து,
ஓர் ஓர் வாளி விட ஓர் ஓர் ஆகம் அற
  ஓர் ஓர் ஆவி உக ஏகி, அப்
போர் ஓர் சோசுவனும் ஓர் ஓர் ஆயிரர்கள்
  ஓர் ஓர் ஆயிர வில் போலும் என்று,
‘ஆர் ஓர் சாபம் உளன் ஆயினான் எதிர
  ஆவி வாழ்வன்‘ என மாழ்குவார்.
93
   
சோசுவனை ஓர்இராக்கதன் எதிர்த்தல்
 
1499“மலை இரண்டு மிசை மலை எழுந்தது என,
  மலி புயங்கள் மிசை தலை எழ,
உலை இரண்டு மிசை அழல் அழன்றது என,
  உயிர் எரிந்த எரி விழி விட,
அலை இரண்டு மிசை எழ முழங்கும் என,
  அதிர் எழுந்து அவுணன் ஒருவன், நீர்க்
கலை இரண்டு மிசை அமர் நிகர்ந்து, இருவர்
  களம் நடுங்க அமர் நடவினார்.
94
   
விற்போரில்இராக்கதன்மடிதல்
 
1500“கொடி சுமந்த உயர் குயவு இரண்டும் உயர்
  கொலை மலிந்த மத கரி எனா,
இடி சுமந்த முகிலொடும் எதிர்ந்த முகில்
  என எதிர்ந்து விடு கணை, இருள்
கடி சுமந்த முகில் என மறைந்து வெளி,
  கடை முடிந்த உகம் இது எனா,
படி சுமந்த பல உயிர் அடங்கல், மருள்
  பட, வளைந்த இரு தனு பொர.
95
   
 
1501“தேர் இரண்டு வலம் இடம் இரிந்து, அகல
  அருகு எதிர்ந்து தம்முள் திரியவே,
ஓர் இரண்டு சிலை அளவு இறந்த கணை
  உக, அடைந்து படு கணை இலா,
நேர் இரண்டு படை என, எதிர்ந்த சரம்,
  நெறியின் நின்று, உரக இனம் என,
ஆர் இரண்டு படை வியவ, மண்டி, விரி
  படம் மலர்ந்து மிசை ஆடவே.
96
   
 
1502‘சுசி முகந்து சுடும் என சரங்கள், தம
  தொழில் மறந்தன கொல்? என ஒளி
வசி முகந்து கதிர் அளவு இறந்து, இரவி
  மலியு கங்குல் அட, விடும் எனா,
நிசி முகந்து கரி நிறம் மலிந்த அவுணன்
  நிணம் அருந்த உரி விட நுனி
உசி முகந்து பல முக முனிந்த கணை
  ஒர் ஓர் அலங்கல் அளவு இல எய்தான்.
97
   
 
1503“அற நிமிர்ந்த கொடி, அற உயர்ந்த உருள்,
  அற உகண்ட பரி அலவனோடு,
அற எதிர்ந்த சிலை, அற முனைந்த கரம்,
  அற அணிந்த கழல், கழல்களோடு,
அற உடன்ற உரம், அற விடைந்த சிரம்,
  அறம் உலந்த அவுணன் உயிர் அற
அறம் மலிந்த சிலை, நிகர் அடங்கல் அற,
  அறம் உணர்ந்து பொரும் அமரினால்.
98
   
பகலவர் படையின்பேரழிவு
 
1504“பொன் பொதுளும் கதிர் பூண் மகுடப்
  பொருநன் புனை வாகையினான்,
மின் பொதுளும் புயல் ஆர்ப்பு
  மெலிந்திட வீங்கு ஒலி யூதர் எழீஇ,
வென் பொதுள் உண்ட தழும்பு
  மிடைந்த பொருந்தலர் மேல் முடுகி,
முன் பொதுளும் பகையார்
  முரியக் கணை மாரி முடுக்கினர் ஆல்.
99
   
 
1505“வளைய முழங்கின வண் சிலை, தேர் உருள்
  வளைய முழங்கின, நொந்து
உளைய முழங்கின மாள் கரி; மாள் பரி
  உளைய முழங்கின; போர்
விளைய முழங்கின பல் பறை; செம் புனல்
  விளைய முழங்கின; மெய்
களைய முழங்கின வெம் படை; ஒன்னலர்
  களைய முழங்கினரே.
100
   
 
1506“துண்டு படப் படும், உந்தி படப் படு
  தூசி கொள் தேர்; சுடர் வாள்
கொண்டு பட, படு பல் சிரமும்
  கரமும் குவியும் பிணமும்;
தண்டு பட, படு வாளியும் வாளொடு
  சாபமும் வை அயிலும்;
வண்டு படப் படு யானைகள் பாய் பரி
  வண்டு படப் படுமே.
101
   
 
1507“கீழ் கடல் மேல் கடல் மேல் முடுகிக்
  கிளர் ஓதை கிளைத்தது எனா,
ஆழ் கடல் மான் அடல் தானை இரண்டும்
  அதிர்ப்ப, அமர்க் களம் ஓர்
தாழ் கடல் மான் உதிரங்கள்
  தரங்கம் எழுந்து ததும்ப, நிலம்
சூழ் கடல் தீவுகள் என்று கிடந்தன
  துஞ்சிய தோல் இனமே.
102
   
 
1508“இடித்தன ஏறு என ஆர்ப்பு எழ,
  இன்னணமே எதிர் யூதர் பொரத்
தடித்தன கைப் படை தந்தன வாய் வழி
  தாவிய தம் உயிர் போய்,
மடித்தன மேனி வடிந்தன
  சோரி மலிந்தன ஆர்கலியுள்
துடித்தன குன்றுகள் என்று, உயர்
  தோலொடு துஞ்சுவ தூசிகளே.
103
   
 
1509“போரில் எழுந்து, அதிர் போரினை
  ஆடினர், பொங்கிய ஓதையினால்,
மூரி எழுந்த முரண் கரி தூசி
  முரிந்து துடித்தமையால்,
சோரி எழும் துமிதம் படவோ,
  சுடரச் சுழல் ஒற்றை உருள்
தேரில் எழும் சுடர் மேனி
  சிவந்ததின், மாலை சிவந்ததுவே.
104
   
சோசுவன்சூரியனை நிறுத்திப்போர்புரிதல்
 
1510“அல் இருள் தோன்றி அடுத்தன காலை,
  அடங்கலும் ஒன்னலரை
வெல்லிட எல்வை இலாது, ஒளி
  வேந்தன் இழிந்து அலை வீழும் எனா,
எல்லினை நோக்கி, எழுந்த மனத் திறல்
  ஏந்திய சோசுவனே,
‘நில்!‘என, நின்றனன் நேமி விளக்கிய
  விண் தவழ் நேமியினான்.
105
   
 
1511“மாலையில் மாலி பெயர்ந்து
  அகலாது வதிந்து அவண் நின்று ஒரு நாள்
காலையில் ஆகையில் ஆகிய
  காட்சியில் ஆய களிப்பொடு, அறச்
சாலையில் ஆரிய சோசுவன்,
  மாலை தகாது தடுத்தன அவ்
வேலையில், வேலையை வெல் அடல்
  தானையை வென்றன ஆறு அரிதே.
106
   
 
1512“மருள் தரு நெஞ்சிடை அஞ்சின
  எஞ்சு இல வஞ்சனர் வெஞ் சமருக்கு,
இருள் தரும் ஆதரவாக எதிர்ந்த
  இரா எனும் மேல் படையை,
தெருள் தரும் மாலி, செகுத்து
  மறித்திட, வான் திரி தேர் முடுகாது,
அருள் தரும் அன்பொடு, வெங் கதிர்
  அம்பு என வல் எதிர் ஏவினன் ஆல்.
107
   
 
1513“நூல் மறை ஆதி சினம் தரும்
  நூக்கு அரிது ஆம் வலி காட்டிய போர்,
வான் மறையாது வழங்கி, மலர்ந்து
  அகல் வையம் அறிந்து, அதனைக்
கால் மறையாது, கதிர்க் குணிலோடு
  கறங்கு கடல் பறையைத்
தான் மறையாது, புடைத்து என,
  மாலி தரித்தன தோற்றம் அதே.
108
   
சோணனும்நிசிதரனும்போர்புரிதல்
 
1514“கதிர் எதிர் உருட்டும் ஆழி அகல்வு இல,
  கருதலர் பதைத்த தானை புறம் இட,
எதிர் எதிர் கடுத்த வீர நிசிதரன்
  இரதம் உயர் உற்று வேக உரையினால்,
பொதிர் எதிர் சினத்து மீள முகம் இடு
  பொருதனர்முடுக்கி, வேதம் மலிக!‘ என,
முதிர் எதிர் கதத்த சோணன் அமர் செய,
  முகில் இடி மறைத்த சல் விளையுமே.
109
   
 
1515“அழல் எழ வளைத்த சாப இரு முகில்
  அளவு இல பனித்த பாண மழையொடு
நிழல் எழ மறைத்த வானம் வெரு உற
  நிறை நிறை எதிர்த்த தானை முரிதர,
புழல் எழ உரைத்த வாளி வழி வழி
  புனல் என இரத்தம் ஓட, இருவரும்
சுழல் எழ உருத்த வாரி என அமர்
  தொடு முறை உரைக்க நூலின் அளவதோ?
110
   
 
1516“கொடை இல தின் மக்கள் நாமம் என, உயர்
  கொடி முழுது ஒழித்து நீற, நிசிதரன்
கடை இல சினத்த வாளி எழுவினன்,
  கணம் என இடித்த சோணன், அளவு இல
தொடையில் அழல் உற்ற பாணம் இடுதலின்,
  துரகமோடு, அறுத்த பாகன் மடிதர,
நடை இல நிலைத்த தேரின் நிசிதரன்
  நணுகு இறகு அறுத்த நாகம் நிகருவான்.
111
   
 
1517“உகம் உக முடித்த நாளின் வளி என,
  உருள் உருள் முடுக்கு சோணன் அலமர,
நிக முகம் உகுத்த தேரின் நிலை மிசை,
  நெய்யும் அவர் பிடித்த நோழிகையின், அவன்,
முக முகம் எதிர்த்து வாளி இடை இடை
  முறை முறை தொடுத்து, மீள, வய மலை
பக முகம் முனைத்த சூலம், ‘உனது இறைப்
  பழி இது!‘ எனக் கடாவ எழுதினான்.
112
   
நிசிதரன்மடிதல்
 
1518“முதிர் வினை விளைத்த காலம் என, இவன்
  முதல்வனை நகைத்தன் ஆதி, எறி அழல்
கதிர் வினை பழுத்த சூலம், வழியிடை
  கதிர் முனர் இருட்டு மாரி என அழிந்து,
எதிர் வினை விளைத்த சோணன் எறி கணை,
  இழிவு உற உரைத்த வாயில் நிறைவன,
பொதிர் வினை பழுத்த மார்ப நிசிதரன்
  புகை கணை புதைத்த தூணி நிகரவே.
113
   
சோசுவனும்பாரானும்போர்புரிதல்
 
1519“மடிவு உற்ற தலைவன் எனும் மறம் உற்ற நிசிதரனை
  மனம் உற்ற வெகுளியொடு கண்டு,
இடி உற்ற விசையினொடு, எரி ஒத்த இவுளி வரு
  மலை ஒத்த இரத மிசையான்,
கடி உற்ற மதுவின் அவர் எரிமத்தின் அரசன், எதிர்
  கதம் முற்றி முடுகு விசை காண்
அடி உற்ற சுருதி அரசு, அனிலத்து விசையில் உறீஇ,
  அமர் முட்ட எதிர் அணுகினான்.
114
   
 
1520“விரதத்தின் நெடிது உறி, உன் உயிர் துய்ப்ப வரமொடு, அமர்
  மழை விழைவு உற்ற மழு இது!‘ எனா,
பிரதத்தின் இரிய இடை அமர் உற்ற எவரும், மழை
  பிரிவு உற்ற இடியில் எறிய,
சுரதத்தின் எதிரு வெளிறு என, விட்ட கணையில் அது
  துகள் இட்டு வெளியில் எழ, மற்று
இரதத்தின் அணியு முடி எரி உற்று மடிய, மறைடி
  இறை, மொய்த்த கணை எழுதினான்.
115
   
 
1521“சிரகத்தின் உழுவை முகன், உரும் ஒப்ப உறுமி, மதி
  தெளிவு உற்ற வளை விட எடுத்து,
உரகத்தின் எயிறு படு மதி ஒப்ப, விரலில் உள
  ஒளி உற்ற வளை எறியும் முன்,
நரகத்தின் வெருவு விடு தருமத்து விசயன், ஒரு
  நகை உற்ற பிறை எழுதினான்,
விரதத்தின் விளையு வினை விசை உற்ற கணையினொடு
  விழ வட்டமொடு கரமுமே.
116
   
பாரானும்படைகளும்அழிதல்
 
1522“அடி அற்ற வலது கையை, வதை முற்றி, இடது கையில்
  அணி வட்டமொடு விட எடுத்து,
இடி அற்ற முகிலின் ஒலி எழ மற்ற விருதர் நக,
  இடைவிட்ட விசை இல விழ,
கொடி அற்ற இரதம் அற, உரம் அற்ற வலவன் அற,
  அடி அற்ற குதிரை அற, மின்
முடி அற்ற சிரமும் அற, முனை உற்ற பகைவன் அற,
  முடிவு அற்ற கணை, அரசு, எய்தான்.
117
   
 
1523“இறை உற்ற இறுதலொடு, வெரு உற்ற படை
  முடுகி, எதிர் உற்ற கரி மதம் இலா,
பிறை ஒத்த எயிறும் இல; கயவு அற்ற, பரியும் இல,
  பிரிவு உற்ற உருளையும் இலா;
சிறை உற்ற பறவை என விசை உற்ற அயமும் இல;
  செரு உற்ற படைகளும் இலா,
கறை உற்றது இணையும் இல, செயம் உற்ற அரசு படை
  கடை அற்ற கணை எழுதவே
118
   
சோசுவன்- ஓவான்போர்
சோசுவன்ஓவானை எதிர்த்தல்
 
1524“புயலினொடு மாறும் உயர் கரிய கரி மேல், சபலை
  பொழியும் அயில் ஏந்தி, அதில் ஓவான்
பெயரினொடும், ஓவ முனை முடுகு மிடல் வேந்து, இவுளி
  பெல கரி பதாதி உருள் திண் தேர்
இயலினொடு நால்வகையும் உவணம் எனும் யூகம் உறி,
  இரணம் முறியாது உறுதி நிற்ப,
குயவினொடு சோசுவனோடு அசனி எறி சாபம் உளர்
  குழுமி அவன் மேல் முடுகி மொய்த்தார்
119
   
 
1525“முடுகி வரும் வேகமுடன் உவண இரு வண் சிறகும்
  முரிய வரு தாக்கில் அவர் தாக்க,
கிடுகில் வரும் வாளி புடை விலக அழல் மீது எழுக,
  கிடுகிடென மாரி பொழி நாளில்
வடுகி வரும் வாரி விசை மறைய மறையோர் எதிர,
  வய இரதம் யானை பரி வீழ்ந்தே,
கடுகி வரு சாப மழை கருடன் இறகு ஈர்ந்து, இகல்வர்
  கடிது எவமம் ஓர் ஓர் அணி வீழ்ந்தார்.
120
   
 
1526“வருடல் என யூக இரு புடையில் உள யாவும் அற,
  வய விருதர் வீழ்ந்த பினர், மீள,
கருடன் அகல் மார்பு உலவு கணையில், அவர் மாற்று அரசு
  கரியில் உறை பேரணி எதிர்த்தார்,
புருடனினும் விஞ்சு அரிவை அனைய, இகல் எண்ணம் இல
  பொருநன் இவை கண்டு மனம் நோக,
குருடன் ஒரு காட்சி உறின் அதிசயித்து, மலைக்
  குவடு அதிர ஆர்த்த அசனி ஒத்தான்.
121
   
 
1527“கொடிகள் அற, வானில் தவழ் குடைகள் அற, மேகம் அறு
  கொடிகளொடு தேரும் அற யானை
அடிகள் அற, வாசி அற, நெடிய சிலை நாணி அற,
  அரணமொடு மார்பும் அற, மற மன்னர்
முடிகள் அற, முங்கம் அற, அணிகள் அற, மள்ளர் அற
  முனையும் ஒரு சோசுவனொடு, ஆர் ஆர்,
இடிகள் அற வேகு அமரில், எழுது கணையோடு கணை
  எழுத எதிர்கின்றவருள், உய்ந்தார்!
122
   
 
1528“கடிய கணை சென்ற விசை, கடுகும் இடி மின்னல் இணை
  கவசம் அற மீதில் அழல் பொங்க,
கொடிய கரு வஞ்சர் உரம் உலவி, உறை என்று நிறை
  குருதி உக, விண்டு அனையர் வீழ,
நெடிய வரை விண்டு பக உருவும் உரும் என்று, நெடு
  பகழி கரி மார்பு உலவி வீழ்த்த,
இடிய முகில் மின்னில், இவன் இரதமுடன் ஒல்கி, உயிர்
  இறுதி உற எங்கும் அமர் செய்வான்.
123
   
 
1529“உருளும் உயர் காலும் இல, கடவு பல பாகர் இல,
  ஒளிரும் உயர் பாரும் இல, பாய்ந்து
மருளு சுழி வாசி இல, வடிவின் நிமிர் கூம்பும் இல
  வயிர உயர் தேர் பலவும் நிற்ப,
வெருளு பரி காலும் இல, அணிகள் ஒரு வேலும் இல,
  விசை உறவில் நாணி இல, வெம்போர்
அருளும் இவர் ஈறும் இல நடுவிலுள பேரணியும்
  அழிய, முனை சோசுவன் உள் நுழைந்தான்
124
   
ஓவான்சோசுவனை நெருங்குதல்
 
1530“தீய்ப் புறம் வளைப்ப நடு வயிர அரண் ஒத்து, அபயர்
  செறிய இடை நின்ற அரசு ஓவான்,
காய்ப்பு உற வயத்த படை கடவி நுழை வீரர் முனர்
  கடுகி வடி செம் புனல்கள் அத் தீகள
ஏய்ப்பு உற அவித்தது என, எரியை விழி வாய் பொழிய,
  இழியும் மத மால் களிறு தூண்டிப்
போய், புறம் அழித்து நுழை தருமன் எதிர் வந்து,
  அசனி பொருவும் அயில் ஏந்தி நணுகின்றான்.
125
   
 
1531“கடவும் அழலோடு கடம் வடியு கரி நாண நனி
  கதறி, இப மேல் பொலிய, வெந் தீய்ச்
சுடவும் அழலோடு விடம் வடியும் அயில், நின்று, இரு கை
  துறுவி, எதிர் கோ உரம் உரைத்துப்
படவும் அழல் தாவு விசை எறிய, எறி வேல் அசனி
  படு முன் இவன் நாகு மதி வாளி
விடவும், அழல் மேல் பறிய வெளியில் உயர் பட்ட துணி
  விழி அகல ஓச்சினன், வில் வல்லோன்.
126
   
 
1532“நீறு பட நெட்டு அயில் துணித்த அரசனோடு இவனும்
  நீண் தனு எடுத்து, எவரும் அஞ்ச
வீறு பட ஆர்த்து, நிமிர் கார் முகம் மலிந்த மழை
  விண் தலமும் மண் தலமும் மொய்ப்ப,
மாறு பட முட்டு சரம் மாறுபடுகின்ற விசை
  வன்னி எழ மின்னி விழி கூச,
ஊறு பட ஓர் கணை படாது, புவி ஊறு பட,
  ஓர் இரு வில் போர் படும் உடன்றே.
127
   
ஓவான், சோசுவ்ன அம்பால்மடிதல்
 
1533“உரைத்த கணை மேல் கணை தடுப்பது, தடுப்பு இலதும்
  ஒண் கவச மேல் உதிர எங்கும்
விரைத்த நிலை சோசுவன் உணர்ந்து, ஓர் அறு பத்து இருபது
  ஐம்பது அரும் வெம் பகழி, வேகத்து
இரைத்த சிலைக் கால் எரிய, ஓர் ஒர் தொடை, ஏவினன்,
  இகல் சிலையும் மால் களிறும் அம் பொன்
வரைத்த வயிரக் கவசமும் துணிபட, படு பல்
  வாளி உரம் மூழ்கி விழ ஓவான்.
128
   
 
1534“வெருவி முரியாத படை முரிய, முரிதற்கு உலகில்
  வெருவு தரு நான் விளிய, நீய் கொள்
பெரு விலது, செய் தொழில், கொல்? உவமை இல நின் கடவுள்
  பெறு வலி இது! என்று அலறி ஓவான்
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு, இவன் ஓர்
  சிலையொடு பொர, புவியில், ஆர் ஆர்
மருவி எதிர் வாளி தொட மடிவர் அலது உய்வர்?‘ என
  மருளி, எவரும் கடிது அகன்றார்.
129
   
அதுனீசதன், சோசுவனை எதிர்த்தல்
 
1535“அகல அவர், யூதர் எதிர் அகலம் உற வந்து, அரிகர்
  அகலம் உலவச் சுருதி வாய்மைப்
புகல் அனைய வாடு அரிய கொடிய கணை ஏவலொடு,
  புரவு கரி தேர் விரி பதாதி
இகலவரின் நால் வகைகள் சிவையொடு அற ஈர்ந்த அளவு,
  எதிர் அமரின் நால் அரசர் வையம்
நகல மடிவு ஆய பழி அழல, உளம் முந்து இரதம்
  நடவி அதுனீசதன் எதிர்ந்தான்.
130
   
படைத்தலைவர்க்குள்போர்
அதுனீசதன் வருத்தம்
 
1536“சிறை பதி தேரினன், தீப் பெய் வில்லினன்,
பிறை பதி முடியினன், பெயர் செய் வாகையன்,
நறை பதி தொடையினன், நளி பல் மன்னவர்
இறை பதி அடியினன் நொந்து அன்று எஞ்சினான்.
131
   
 
1537“ஓர் இருநூறு உறழ் ஒரு முந்நூறு உடை
ஈர் இரு வகைப் படை ஈட்டினான்; பினர்
பேர் இரு சிறகெனப் பிரித்து, அதற்கு வெம்
போர் இரு வரி என இருவர்ப் போக்கினான்.
132
   
அதுனீசதன்இடவல அணிவகுப்புப்படைத்தலைவர்- இகுலன்நிகலன்
 
1538“இடச் சிறைத் தலைவன் என்று இகுலன் ஆய், வலம்
படு அச் சிறைத் தலைவனாய் நிகலற் பார்த்திபன்
விட, சிறைக்கு உயிர் நடு அணியில் வேய்ந்து தான்,
தடச் சிறைத் திகிரி மேல் சினந்து தாக்கினான்.
133
   
சோசுவன்இடவல அணிவகுப்புப்படைத்
தலைவர்- கனையன்ச்ச்சுதன்
 
1539“பெரியவர் கேண்மை போல் பீடையில் திளைத்து,
அரியவை கண்டு எழும் அடலின், சோசுவன்,
கரிய வல் யானையர் கனையன் சச்சுதன்
உரி இரு வகுப்பில் விட்டு, உருமின் முட்டினான்.
134
   
போர்முழக்கம்
 
1540“கார் விளை முழக்கமும், காலொடும் கடல்
நீர் விளை முழக்கமும் நிகர் இலாத வெம்
போர் விளை முழக்கம் மேல் பொருமிப் பொங்கலின்,
பார் விளை கலக்கம் நால் திசை பரந்ததே.
135
   
 
1541“போர் முகம் காண்டலும் புனைந்த வாகையின்
சீர் முகம் கோடலும் சேர்ந்து ஒன்றாய், புகழ்
ஆர் முகம் தகும் மறைக்கு அரசன், அன்று, தன்
கார் முகம் குனி முகத்து எதிர் கண்டான் அரோ.
136
   
 
1542“ஆர் இருள் நெடுமையார் ஆடும் ஊசல் போல்,
பேர் இரு படை தமுள் பிரிந்து சேர்ந்து, வெம்
போர் இரு முகம் முறிவு இன்றி, போர் செய்வார்,
ஓர் இரு புனல் என உதிரம் ஓடவே.
137
   
இட முகத்தில்இருலனும்கனையனும்எதிர்த்தல்
 
1543“இட முகத்து இகுலன், ஆர்த்து, எரித்த சூளையின்,
தட முகத்து எழும் படை தாக்கும் தன்மையின்,
பட முகத்து எதிர்த்தனர் முரியப் பார்த்து, மால்
கட முகத்து இபத்து உயர் கனையன் சீறினான்.“
138
   
 
1544“நூல் நலம் குல நலம் நுனித்த போர் நலம்,
தான், நலம் படச் சொலி, தானை மீட்டு, வேய்க்
கான் நலம் சினந்த தீக்கனன்று மேய்ந்து என,
வேல் நலம் பகைவரை வெம்பித் தூற்றினான்.“
139
   
 
1545“எரி கெடச் சினந்த வில் எறிந்த மாரி முன்
பரி கெட, பரி புனை பறந்த தேர் கெட,
கரி கெட, படை எலாம் கலங்கிப் போர் கெட,
நரி கெடச்சினத்து அரி நலத்தின் கோறினான்.
140
   
 
1546முரிந்த தன் தானையை முனிந்தும் மீட்டிலான்,
கரிந்த கை கடித்து, இடித்து, இகுலன், காற்று என
வரிந்த வில் கனையனை நோக்கி வந்து எதிர்
சொரிந்த மும் மத கரி தூண்டினான் அரோ.
141
   
கனையன் -இகுலன் போர்
 
1547“பொன் நாணினர், மணி வில்லினர்,
  பொறி அம்பினர், புகையும்
சொல் நாவினர், சய நெஞ்சினர்,
  சுடு கண்ணினர், சுடர் பூண்
மின் நாறினர், புலை நாறினர்,
  விறல் வாளினர், மதம் ஆர்
கொன் ஆளியின் இரு மா உயர்
  கொலை ஈர் எமர் பொருதார்.
142
   
 
1548“சொல் வாய் உகு சுடு தீயொடு
  சுளி கண் அழல் உக, நீர்ச்
செல் வாய் உகு இடி ஆர்ப்பொடு
  சின வாய் உயிர் உண, நீள்
வில் வாய் உகு கணை மாரியின்
  விரி போர் இரு முகமும்
கொல் வாய் உகு கறை தாறு இல,
  கொடி தாய் அமர் எழும் ஆல்.
143
   
 
1549“தடவித் திரி இயமற்கு இணை தட வில் குனி கனையன்
நடவித் திரி மத அத்தியின் நடு மத்தகம் நுழையக்
கடவித் திரி கணை தைத்து எனக் களி உற்றனன் இகுலன்,
சுட வில் திறல் கணை மட்டு இல தொடை விட்டனன் அவனே.
144
   
 
1550“இசை உண்டு உறு கணையும் பட இகுலன் தனு ஒடிய,
கசை உண்டு உறும் உரமும் பக அளவு ஒன்று இல கணைகள்
விசை உண்டு உற, வளையம் பட விசை அம் தனு வளைய,
வசை உண்டு உற ஒலி பொங்கின மடி வில் முகம் அறவே.
145
   
யாடைப்போர்
 
1551“பதம் ஏற்பட, பவளத்தொடு பதி முத்து என இருவர்,
இதம் ஏற்பட, எயிறு உய்த்தனர் எறி பல் படை இலராய்க்
கதம் ஏற்பட, வய நெட்டு இரு கதை இட்டு, இரு கனல் போல்
மதம் ஏற்பட உறும் அத்திகள் மறலத் தமுள் விடுவார்.
146
   
 
1552“இரு கார் பல எரி ஏறு உக விளையாடின எனவே,
செரு ஆர் களம் இடை ஆடுக, திரள் தீ எழ அலறிப்
பொரு யானைகள் கதை வீசிய பொருவா விசை படலோடு
அருகு ஆயின படை யாவையும் அடி நூறின பொருதே.
147
   
 
1553“திரிகின்றன இரு தீ நிகர்; திரிகின்றன எவணும்
எரிகின்றன எதிர் யாவதும்; இரிகின்றனர் எவரும்,
பிரிகின்றன எதிர் சீறின; பிளிர்கின்றன அழலை
விரிகின்றன, கதையே மிசை விசை வெங் கதை படவே.
148
   
 
1554“அழலக் கதை, அழலக் கரி, அழலக் கரி மிசையார்,
சுழலக் கதை, இகுலன் கரி சுழல் தன் கதை, பறிபட்டு
எழ விண் திசை உறீஇ, மற்றது எதிர் பட்டு இடு கதைமேல்
விழ, மத்தகம் அடியில் பக, விழும் அக் கரி படவே.
149
   
இகுலன்படுதல்
 
1555“கிரி நின்று இழி புலி என்று, எரி
  கிளர் வெஞ் சின இகுலன்,
கரி நின்று இழிதர, மின் தவழ்
  கனல் மண்டு அசியொடு பாய்ந்து,
எரிகின்ற இழி கதை முன் விழ,
  எயிறு உள் உரம் உருவி,
சொரிகின்ற இழி கறை சிந்துகச்
  சுழல் கொண்டு எறிதருமே.
150
   
நிகலன்- சச்சுதன்போர்
வலமுகத்தில்பெருமுழக்கம்
 
1556“இடி முழங்கின முகிலொடும் கடல்
  இணை முழங்கின ஒலி எனா,
துடி முழங்கின தொனி எழுந்து இவர்
  துறுவி வெஞ் சமர் பொருத கால்,
படி முழங்கின ஒலி நிகர்ந்தில,
  பருபதங்களும் அதிரவே,
கடி முழுங்கின வல முகம் சமர்,
  கனல் சினந்து என, விளையும் ஆல்.
151
   
 
1557“கரி அதட்டிய சினம் இரட்டிய
  கடிய சச்சுதன், இடைவிடாது
எரி அதட்டிய கொடிய அத்திரம்,
  இடையிடைக்கு அளவு இல விட,
பரி அதட்டிய இரத வெற்புகள்
  பரிகள் அத்திகள் சிதற, வெய்
அரி அதட்டிய கரி இனத்து, எதிர்
  அரிகள், உட்கு உறீஇ முறிவர் ஆல்.
152
   
 
1558“பணையில் ஆடிய பரிகள் யானைகள்
  பரவு தேர்களும் இவை எலாம்
இணை இலாது அற, உயர் உவா மலை
  இடையில் ஓடிய அளவு இலாக்
கணையின் வாரி முன் அடையல் சாய்வன
  கறை அளாவிய பிணம், இரண்டு
அணையின் ஏறின; குருதி நீர் நிறை
  அருவி ஓடின எவணுமே.
153
   
 
1559“எதிர் எழுந்து உயர் இரதம் நின்று
  அமர் இட உடன்றன நிகலனும்,
கதிர் எழுந்து எரி கனல் அழுந்திய
  கதம் மலிந்து, அடும் உழுவை பாய்ந்து,
அதிர் எழுந்து, உயர் வரை நடுங்குப
  அரிது உடன்று என, இடி இடித்து,
உதிர் எழும் தழல் உமிழ் சரம் கொடு
  உயிர் விழுங்கினன் எவணுமே.
154
   
 
1560“சொரி இரத்தமொடு எரி பிலிற்றிய
  களி எயிற்று அடல் அதிரும் ஓர்
அரி இரட்டிய அமர் முகத்து, எதிர்
  அழல் உடற்றிய வதை வளர்
வரி எதிர்த்து என, வலிய சச்சுதன்
  வரு முகத்து எதிர் நிகலன் வந்து,
எரி எரித்தன, உலறும் முள் கழை
  இரு சுரத்து, என அமர் செய்வார்.
155
   
 
1561“இரு முகத்து எதிர் படைகள் சிந்திட
  இருவர் வெஞ் சமர் பெருகலின்
வரு முகத்து, எதிர் நிகலன் நின்று எறி
  வளை உடன்று உறி, இடி முகில்
கரு முகத்திடை மதி நுழைந்து
  என, எதிரவன் கடவிய கரி
செரு முகத்திடை உரம் நுழைந்து,
  உயிர் சிதைய உண்டது திகிரியே.
156
   
நிகலனை ச்ச்சுதன்வெட்டி வீழ்த்துதல்
 
1562“கரிய உச்சிய முகிலின் மின்னொடு
  கனல் உமிழ்ந்து இழி இடி எனா,
அரிய சச்சுதன் இபம் இழிந்து, அழல்
  அசி சுழன்று, அவன் இரதமேல்,
உரிய நஞ்சு அரவு என, இவர்ந்து, அவன்
  உடல் பிளந்து, எதிர் படை எலாம்
இரிய அச்சமோடு, உளம் உடன்று, அவன்
  இரதம் உந்தினன் நடவினான்.
157
   
சோசுவன் - அதுனீசதன் போர்
 
1563“இரு முகத்து இவை இவரலின், நடு உள
  எரி முகத்து இரு நிருபரும் எதிர் எதிர்
பொரு முகத்து எழும் முரசு ஒலி, வளை ஒலி,
  புரவி மிக்க ஒலி, கரி ஒலி, குயவு ஒலி
செரு முகத்து இவை மருளிய வெருவொடு,
  சிலை வளைத்து ஒலி எழ விழும் மழை ஒலி
ஒரு முகத்தினும் நிகர் இல, முரிவு இல, உரை முகத்து அடை
  அளவு இல அமர் செய்வார்.
158
   
 
1564“சுழல் எழத் திரி இடிகளொடு இரு முகில்
  சுளி முகத்து என வர இரு இரதமும்,
அழல் எழக் குனி இரு சிலை முடிவு இல
  அழல் பனித்து என விடுகணை மழை விழ,
புழல் எழப் படு கணி கணை வழி வழி
  புனல் எனக் கறை குமிழிகள் எழ விழ,
நிழல் எழப் புயலொடு குயில் இனம் என,
  நிரை நிரைத்து எதிர் இரு படை, மெலியவே.
159
   
 
1565“வலம் இடத்து உறும் விசையொடு வளி என,
  வரும் இடத்து எழும் ஒலியொடு கடல் என,
நிலம் இடத்து இடும் வெருவொடும் இடி என,
  நிறை பனித்திடு கணையொடு முகில் என,
பல இடத்து இடு கொலையொடு நமன் என,
  படை முகத்து இவர் இருவரும், நெடிது அமர்,
சலம் இடத்து அடும் வினை என, மலிவன
  சவம், மிதித்து, எழும் மலைமிசை, மலைகுவார்.
160
   
 
1566“வெளி முகத்து எழு கணை மழை இருள் இட,
  விளி முகத்து எழு கொடிது ஒலி செவி அட,
வளி முகத்து எழு நதிபதி அலை என
  வதை உடற்றிய நரபதி இருவரும்
சுளி முகத்து எழு வயவரும் முரிவு இல
  துணை அறச் சமர் பொருதலின், ஒருவன் வந்து,
‘இளி முகத்து எழு சிறை முரிவன‘என,
  இள மதிப் பிறை முடியினன் அலறினான்.
161
   
 
1567“கதம் மிகப் படர் இரதமும் அதிர்குப
  கழல் புடைத்தனன் அழல் எழ அளவு அற
பதம் மிகத் தனு வளையவும் இரு துணி
  பட, மறுத்து அடல் ஒரு சிலை வளையும் முன்,
சதம் மிகப் பதி மறை அரசு இடு கணை
  சடுதி தைத்தன அளவு இல உடல் எலாம்.
மதம் மிகக் கரி என ஒலி இட அவன்
  மருளி முள் கிரி கிடி உரு நிகருவான்.
162
   
 
1568“குருதி மிக்கு உக, மலை மிசை துகிர் அது
  கொடி முளைத்து என, உயரிய இரத மேல்
கருதி, மிக்கு உறு நிலை பல பயன் இல,
  கதறி நிற்பவன் விழி வழி அழல் எழ,
விருதின் உய்த்தன பிறை உண்ணும் அரவு என
  விடு சரத்தொடும் அற விழ, மறு கணை,
பருதி மொய்க் கடல் முழுகு என ஒளி முடி
  பரிய விட்டனன் அறம் உணர் இறைவே
163
   
 
1569“பிறை புதைத்தன முடி விழ, உளம் அறு
  பிணி புகைத்தன இறையவன் அலறி, நல்
நறை புதைத்தன சிகழிகை மெலிதர
  நனி உரத்து அழல் எழ மிகு வெகுளியின்,
‘கறை புதைத்தன விட நுனி வசி மிகு
  கணை எடுத்து, உனது உயர் முடி புனைவல்‘ என்று,
உறை புதைத்தன முகில் என உறுமி, வில்
  உடல் புதைத்து எழ விசையினொடு எழுதினான்.
164
   
அதுனீசதன்நெற்றி பிழந்து வீழ்தல்
 
1570“தனை உதைத்து அன தனு முழுது அகல் முனர்,
  சரம் உதைத்து அற எதிர் சரம் எழுதினன்
முனை உதைத்தன அரி என எதிர்இவன்
  மொழி மறுத்து, ‘இது முடி புனைக!‘என, மறு,
கனை உதைத்தன பிறை என வளைவு உள,
  கணை உதைத்திட, நுதலொடு தலை பக,
வினை உதைத்து அன உயிர் விடும் இறையவன்
  விழ, உழைத்து என முரிவன படைகளே.
165
   
யூதர் அம்பு மாரியால்பகைவர்படைகெட்டழிதல்
 
1571“உழை எனப் படை முரிதர, அரி என
  உடறி மொய்த்தன மறையினர் இடை இடை
மழை எனத் தொடு கணையொடு பல படை
  வழி வகுத்து, உயிர் அளவு இல அனிலம் முன்
தழை எனப் பட, உதிரமும் அலையொடு
  ததைய விட்டு, இசை இறையவன் வெகுளி முன்
பிழை எனப் படை வகை வகை மடிவன
  பெருகுதற்கு ஒரு நிகர் இட அளவதோ?
166
   
சோசுவன், போரை நிறுத்தியபின, ஓடிய
பகைவரை இறைவன் அழித்தல்
 
1572“வினை முடுக்கிய பகையவர் இரிதர,
  விசயம் உற்றன களி எழும் இறையவன்,
முனை முடுக்கிய தமர் அமர் தொடர்கு இல
  முனை நிறுத்திய பொழுதினும், அரிது அமர்
தனை முடுக்கிய கடவுள், தன் வய வலி
  தகு சினத் திறம் அறிகுவர் வெரு உறீஇ,
கனை முடுக்கிய கடல் உடை அகல் புவி
  கடி நடுக்கு உற, விரி படை கொலை செய்தான்.
167
   
பகைவர்படைஇறைவன்பொழிந்தெல்மழையால்அழிதல்
 
1573“முரி தரு பகையவர் முழுது அட, அவர் மிசை
விரி தரு வலை கவிழ்வன என, வெகுள் இடி
எரி தரு கரு முகில், இடை இடை, ஒரு கணம்
பரி தரு முனர், உயர் பரவின வெளி எலாம்.
168
   
 
1574“முனை முதிர் படை எழ முரசு அதிர் ஒலி என,
சினை முதிர் இடியொடு செரு முதிர் சினம் எழ
கனை முதிர் அரவொடு கரு முகில் பரவலின்,
வினை முதிர் உளம் என வெளி முதிர் இருள் அதே.
169
   
 
1575“முடியொடு முடி பட வரை முனைவன என,
இடியொடு சினம் முதிர் எரி முகில் எதிர் பொரும்.
படியொடு பிரி பருப்பதம் என விழுவன, அசனியின்
வெடியொடு, மழை என விழுவன உபலமே.
170
   
 
1576“துறுவன வலிய கல் துகள் எழ இரதமும்
இறுவன; கரி பரி இனம் இனம் மடிவன;
அறுவன படை இனம்; அழிவனர் பகையவர்.
உறுவன இடிகளொடு உடன் அவை எரிவன.
171
   
 
1577“கடி ஒலி எழ விழு கல்லின் உறை படும் ஒலி,
இடி ஒலி, இடியினும் இறும் இரதமது ஒலி,
மடி கரி எழும் ஒலி, மடி பரி எழும் ஒலி,
முடிவு இல விளிகுவர் முதிர் ஒலி நிகர் இல.
172
   
 
1578“சிந்தின சிலை மழை, சிந்தின சிலை கணை,
சிந்தின பல படை, சிந்தின கரதலம்,
சிந்தின இரு கழல், சிந்தின தலைமுடி,
சிந்தின உடல் உயிர் சிந்து எரி நரகு உற .
173
   
 
1579“தப்பு இல களிறுகள், தப்பு இல புரவிகள்,
தப்பு இல அபயவர், தப்பு இல தலையவர்,
தப்பு இல குருசிலர், தப்பு இல அனையவர்,
தப்பு இல எமது இறை தப்பு இல அமர் செய.
174
   
வானவரும்மானிடரும்இறைவனின்வல்லமையைப்புகழ்தல்
 
1580“வானவர் அனைவரும், அலை மலி உலகு உள,
ஏனையர் அனைவரும், இதயம் உள் வெரு உறீஇ,
ஆனவை அறிதலொடு, அளவு இல இறையவன்
மேல் நிவர் அரு மிடல் விழைவொடு புகழுவார்.
175
   
 
1581“வில்லொடு வயவரும் மிடல் இடும் அமர் அலது,
எல்லொடு பிரிகு இல இரவியும் அமர் செய,
வல்லொடு தவிரின சில உயிர் மடி தர,
கல்லொடு மழை பொருது, இறையது கதம் என.
176
   
 
1582“கைவரும் ஒரு சிலை கனை எழ வளை முகத்து
ஐவரும் ஒரு பகல் அழியின பினர், இனி,
மொய் வரு சினமொடு முதலவன் அமர் செயின்,
உய்வரும் எவர்? என வெரு உறீஇ உருகுவார்.
177
   
 
1583“வலியவர் பகை முனர் மடிவு இலர் உளர் எனின்,
மெலியவர் எதிரினும், வெகுளிய பல நவை
மலி அவர் எனின், இறை வய அமர் சின முனர்
பொலி அவர் எவர்?‘ என, அளவு இல புகழுவர்.
178
   
வானவரும்மரியும்சூசையும்திருக்குழந்தையை வணங்குதல்
வானவர் பணிதல்
 
1584“ஊன் முகம் செறித்த வெம் போர்
  உடன்று இவை அனைத்தும் செய்தோன்,
வான் முகம் செறித்த வாழ்க்கை
  வகுப்ப, ஈங்கு இளவலாகத்
தேன் முகம் செறித்த பைம் பூந்
  திரு முகை முகத்தில் தோன்றி,
தான் முகம் செறித்த அன்பின்
  தகவு உகும் இவன் தான்!“ என்றான்.
179
   
 
1585புண் கனிந்து ஆற்றினால் போல்
  புன்கண் நீத்து உவப்பச் சூசை,
பண் கனிந்து இசைத்ததே போல்,
  பாகினும் இனிய சொல்லால்,
கண் கனிந்து உவப்பத் தெள் ஆர்
  கதிர்க் கிழி பொறித்ததே போல்,
விண் கனிந்து ஆய காதை,
  விரித்து அடி பணிந்தான், வானோன்.
180
   
மரியும் சூசையும்வணங்கி மகிழ்தல்
 
1586நாமம் சால் உயர்ந்த வீர
  நாயகன் எளிய கோலம்,
காமம் சால் உருத்த அன்பில்
  கனிந்து, எடுத்து உதித்த பாலால்,
வாமம் சால் பொறித்த பைம் பூ
  மலர் அடி வணங்கி, உள்ளத்து
ஏமம் சால் இன்பம் மூழ்கி,
  இருவரும், வியப்பின் மிக்கார்.
181
   
 
1587மரு மணித் தொடை யாழ் ஏந்தி,
  மரகத மணித் தாள் வைத்த
பரு மணிக் காந்தள் கையால்
  பயிர் அளி கிளி போல் கீதம்
தரு மணி நரம்பின் மேல் எண்
  தரும் இசை கிளப்ப, வானோர்,
திரு மணிச் சாயல் தாய்
  தன் சிறுவனைப் பாடினாளே.
182
   
திர்மகனைப்புகழ்தல்
 
1588“மருள் தரு வலி உருவே, மருள் அறு சின உருவே,
அருள் தரு தயை உருவே, அளவு அறு திரு உருவே,
தெருள் தரு கலை உருவே, செயிர் அறு மனு உருவே,
பொருள் தரு மணி உருவே, பொழி மண அடி தொழுதேன்.!
183
   
 
1589“உரை இல கலை நிலையே, உயர் அறம் அடை உரையே,
கரை இல படர் கடலே, கதி உயிர் பெறு கரையே,
வரை இல சுக நிலையே, வளர் தவம் அடை வரையே,
புரை இல மனு மகனே, பொதி மலர் அடி தொழுதேன்,
184
   
 
1590“மரு மலி மலர் நிழலே, மறை மலி உயர் பயனே,
திரு மலி கர முகிலே, சிவம் மலி தனி முதலே,
இரு மலி உலகு உளரே இணரொடு தொழும் அடியே,
குரு மலி அற நெறியே, கொழு மலர் அடி தொழதேன்!
185
   
களரிமாபுரம் சேர்தல்
 
1591காய் முகத்து உறை நீர் போலும்,
  கங்குலின் விளக்குப் போலும்
நோய் முகத்து உலன்ற நெஞ்சார்
  நுனித்து எழ, இவை அங்கு ஆகி,
சேய் முகத்து உயிரின் கான்ற
  செழுங் கதிர் தெளிப்ப மாந்தி,
போய், முகத்து எதிர்ந்த நாடு
  புக்கு நீள் நெறியே போனார்.
186
   
 
1592ஒழித்து எனச் சுடர் நீர் மூழ்க,
  உலகு இருள் போர்ப்ப, கஞ்சம்
தெழித்து எனக் கதவு அடைப்ப,
  செழும் பொழில் பறவை ஆர்ப்ப,
விழித்து எனக் கண்களாக
  மீன் நலம் வானம் பூப்ப,
கழித்து என நெடுஞ் செலவு
  அப்பால் களரிமாபுரத்தில் சேர்ந்தார்.
187