எசித்துசேர் படலம்
 
திருக்கும்பத்தைக் கவிஞர் வாழ்த்துதல்
 
1970அருள் உலாவும் இதயத்தில் இருந்தே
  அன்பு இயற்றி அரிதாய் எனை ஆளும்,
இருள் உலாவும் உயிர் யாவும் அளிப்ப
  இன்பு இயற்றி உலகு எய்திய மூவர்
தெருள் உலாவும் அவர் பூ அடி சூடித்,
  தெள் இயற்றி அவர் பா இசை கூற,
பொருள் உலாவிய எசித்து எனும் நாடு
  புக்கு இயற்றியவை யான் புகல்கிற்பேன்.
1
   
எசித்து நாட்டில் சுற்று வழியாய்ச் செல்லுதல்
 
1971மீ மலிந்த சுடர் மூன்று அணி மீன் போல்,
  விண் மலிந்த தளம் மூவரை நண்ண,
கா மலிந்த மணம் வீசிய தீம் தண்
  கள் மலிந்த மலர் ஏடினை விள்ள,
தேன் மலிந்த கனி ஆர் தரு யாவும்
  செல் மலிந்த தலை தாழ்ந்து வணங்க,
பூ மலிந்த நெறி மூவரும் ஏகிப்
  புரை மலிந்த வினை தீர்க்குவ போனார்.
2
   
 
1972மிக்கு அடங்கிய திறம் தரு
  வேந்தன் வெருவினால் என ஒளிக்குபு வந்து,
தொக்கு அடங்கிய எசித்து உயிர் யாவும்
  துகள் ஒழிப்ப அவண் எய்திய நாதன்,
திக்கு அடங்கிலும் அறாத அருள் செய்ய,
  செல்வன் ஆய வழி கூட்டு இலர், நாடு
புக்கு, அடங்கிய புரம் பல சேரும்
  புடை, வளைந்த வழி காட்டினர் வானோர்.
3
   
மூவரும்சென்றதால்எசித்து நாடு மேன்மையுற்றது எனல்
 
1973விண்மேல் எழு வைகறை வெங் கதிரோ,
மண் மேல் எரி கோடை வரும் துளியோ,
பண் மேல் உரையோர், பனி மேல் அருளோர்,
எண் மேல் எழ நாடு, அவண் எய்தினர் ஆல்.
4
   
 
1974ஈனம் தவிர் ஈர் அறம், ஈரம், அருள்,
ஞானம், தகவு, ஊக்கம் நயம் புகழ் சீர்
தானம் தவம் நூல் பொருள் தந்தன பின்
வானம் தரு வாழ்வு உக எய்தினர் ஆல்.
5
   
 
1975கனை மஞ்சு, பொய்யாது கயம், பொழிய,
நனை விள் வயல் நான்கு பயன் விளைய,
வினை நொந்து அழ, வெம் பகை நீங்கி அழ,
வனையாதவர் ஆங்கு அடி வைத்தனர் ஆல்.
6
   
மலர்த்தேன்,மழைத்துளியாய்ப் பெய்தல்
 
1976அடி வைத்தன அன்பினொடு, ஆங்கு எவணும்
கடி வைத்தன பூ மலர் கான்ற மது,
பொடி வைத்த வழிப் புடை சேறு உலவ,
இடி வைத்தன கார் இணை தூறினதே.
7
   
மயில்களும் மற்றப்பறவைகளும்மகிழ்தல்
 
1977கான் ஏந்திய காவுகள் தோறும், மயில்
மீன் ஏந்திய தோகை விரித்து உலவி,
ஊன் ஏந்திய நாதன் உறப்பறவை
தேன் ஏந்திய தீம் புகழ் பாடுவன.
8
   
வயல்களில்தாமரை முத்தும் செந்நெல்முத்தும்s
 
1978கயல் பாய்ந்து உகளக்கமலம் கிழிபட்டு,
அயல் பாய் ஒளி முத்து அறலோடு ஒழுகி,
வயல் பாய்ந்து, நெல் முத்தமொடே மருளி,
இயல்பாய் நிலம் இன்பு உறீஇ நக்கு எனவே.
9
   
வண்டுகள்மொய்த்தல் போல்மூவர்மேலும் வீழ்ந்த பார்வை
 
1979கண்டார் எவரும் கனி கண் வழியால்
உண்டார் நிறை இன்பம் உளத்தில் என,
தண் தார் மிசை சாய் அளி மொய்த்தன போல்,
மண்டு ஆர் அறவோர் மிசை மல்கிய கண்.
10
   
மூவரும்தம்அருளால்,தீங்குகளைத் துடைத்தனர்எனல்
 
1980நீர் மேல் எழு மாலி நெடுங் கதிர் முன்,
பார் மேல் எழு நீள் இருள்பட்டு ஒழியும்
சீர் மேல், எழு மூவர்கள், சிந்து அருளால்,
சூர் மேல் எழு தீது துடைத்தனரே.
11
   
திருமகன் பேய்களை ஓட்டுதல்
 
1981நீள் நெறி கடந்து, அங்கு உய்ய
  நினைத்த வான் பயனை நல்க
கோள் நெறி முகத்து நாதன்,
  கூர்ந்து அருள் தளிர்த்தல் உள்ளி,
சேண் நெறி இறங்கிக் காத்த
  தேவராய்த் தொழுத பேய்கள்,
மாண் நெறி சிறந்த நாட்டின்
  வயின் தொறும் ஓட்டினானே.
12
   
 
1982புரந்த அரும் தயையைக் காட்டிப்,
  புரை தரும் நரகில் உய்ப்ப,
வரம் தரும் தேவர் ஆக
  வணங்கிய அலகை ஈட்டம்,
உரம் தரும் திறத்தில் தம்மை
  உதைத்தனன் அறியாது எஞ்சி,
தரம் தரும் வேகத்து ஓடி,
  நரகிடைப் புதைத்த அன்றே.
13
   
 
1983கொன் ஒளித் திறத்தின் நின்ற குணுக்கு இனம் நரகில் வீழ,
பொன் ஒளிக் கோயில் யாவும், பொதிர் மணி உருவும், தேரும்
மின் ஒளிச் சாயல் கெட்டு வீழவும் கண்ட யாரும்,
மன் ஒளித் திறத்த நாதன் வழி உறா, வியந்து நின்றார்.
14
   
சூசை பேரின்பம்கொள்ளுதல்
 
1984நம்பிய உயிரைக் கொல்ல,
  நாட்டிய தேவராக,
வெம்பிய பகையின் தீய
  வினை விளைத்து இருந்த பேய்கள்,
பம்பிய முகத்தின் முன்னர்
  பதைப்ப வீழ்ந்து ஒளிப்ப, நோக்கி
அம்பியல்மலர் வாய்க் கோலான்
  அகத்து உணும் சுவையின் விள்ளான்:
15
   
 
1985“பொய்த் திறத்து அரசற்கு அஞ்சிப்
  போதல் போல், ஒளிப்ப எய்தி,
அத் திறத்து உணர்ந்த சூழ்ச்சி
  அருட் பயன் இதுவோ? இங்கண்
இத் திறத்து அன்பின் மாட்சி
  எய்துவர் உண்டோ?“ என்னக்,
கைத் திறத்து அலர்த் தாள்
  நீவிக்கண்ணின் நீர் ஆட்டினானே.
16
   
எருமுமாபுரம்அடைதல்
 
1986சோலையின் நிழல் வாய் அன்பு
  துளிர்த்த பூ முகத்தின் நாதன்,
மாலையின் தாமத்து
  அங்கண் வயின் தொறும் நிரைப்ப ஈந்த
வேலையின் நிறைந்த நன்றி
  விளைத்து, நாடு உலவிப் போன
காலையின், ஏரும்என்று ஓர்
  கடி நகர் அண்மினாரே.
17
   
நகர்வாயிலில்தெய்வமாய்வழிபடப் பெற்ற மரம்
 
1987மி் முகம் புதைத்த கொண்மூ
  விரும்பி மேல் தவழ, வானின்
நல் முகம் புதைத்த மீன் போல்,
  நறை முகத்து அலர்ந்த பைம் பூத்
தன் முகம் புதைத்த பாலால்
  தயங்கும் ஓர் மரமே, அங்கண்,
பொன் முகம் புதைத்த வாயில்
  புறத்து, எழில் பொழிந்தது அன்றோ.
18
   
 
1988பேர் நல மேன்மையானும், பெயர் அறியாமையானும்,
ஆர் நல மரத்தின் சாயற்கு ஆங்கு வேறு இலாமையானும்
கூர் நலம் வியந்த பின்னர், கொழும் புகை காட்டி, நல் நூல்
சீர் நலம் ஒழிந்த அன்னார், தேவன் என்று இறைஞ்சினாரே.
19
   
மரத்தில்குடிகொண்ட பேய்ப் பாம்பு விடை கூறுதல்
 
1989மட நடை கண்ட பேயும்,
  வடு வளர் அமைதி என்னத்
தட நடை வளர்ந்த பைம் பூந்
  தருவிடைக் குடியாய் வைகி,
பட நடை பொறித்த நச்சுப்
  பாந்தளின் உருவில், கான்ற
விட நடை, நெடு நாள் யார்க்கும்
  விடை மொழி கூறிற்று அன்றோ.
20
   
பேய்நீங்கிய அம்மரம், மூவரையும் வணங்குதல்
 
1990கொழுந் தன முகத்து நாதன் குறுக, ஒன்று அறியா, செந் தீ
விழுந்து அன பேயும் நீங்கி, வினை அரிந்து உவந்ததே போல்,
எழுந்து அன மரம், தன் நெற்றி இறைஞ்சிய திறத்து மூவர்
செழுந் தன அடியில் செல்லச் சிறப்பொடு வளைத்தது அம்மா.
21
   
மரம்பெற்ற வரம்
 
1991மை வகைத் திறப் பேய்,
  மாக்கள் வளம் கெடத் தெரிந்த சாகி,
உய் வகைத் திறத்தில் வாய்ப்ப
  உயர் வரம் கடவுள் ஈந்த
மெய் வகைத் திறத்தில், உண்ட
  விரிந்த பாசு இலை நோய் யாவும்
கொய் வகைத் திறத்து, இந் நாளும்
  குன்று இலா விளங்கிற்று அம்மா.
22
   
மூவரும்நன்மையை வெள்ளமாய்வழங்கினர்எனல்
 
1992நடையொடு விளக்கி வான் மேல்
  ஞாயிறு நடப்பதே போல்,
புடையொடு வானோர் மல்கப்
  போய் இவர், திறந்த அன்பின்
மடையொடு பாய்ந்த நன்றின்
  வரைவு இல நீத்தம், எங்கும்,
தொடையொடு வளர்ந்த பா போல்,
  தொடர்பு அறா வழங்கிற்று அன்றோ.
23
   
மூவரும் இரவிமாபுரத்தில ஒரு சிறு மனையில்தங்குதல்
 
1993வான் முகத்து வந்து அன்னம் வட்டம் இட்ட பின்,
தேன் முகத்து அலர்த் தடம் சேர்ந்த பான்மையால்,
கான் முகத்து அலர்ந்த நாடு உலவி, காசு அணி
நால் முகத்து ஒளி நடு நகர் சென்றார் அரோ.
24
   
 
1994தாமம் சூழ் மணி நிரைத்து, அரிகள் தாங்கு அணை,
வாமம் சூழ் முடி அணி மன்னன் வீற்று உறை
ஏமம் சூழ் எயில் பொலி இரவிமாபுரம்
நாமம் சூழ் அழகு எழு நகர் அது ஆம் அரோ.
25
   
 
1995கார் செயும் குழல் நலம் கவிழ்ந்த கோபுரத்து
ஏர் செயும் முகம் மலர்ந்து, எயிலின் தூசு மேல்
சீர் செயும் பயோதர ஞாஞ்சில் சேர்த்து, அகழ்
நீர் செயும் மேகலை அணிந்து நீர்த்ததே.
26
   
நீல நதி அந்நகரைச் சுற்றி ஓடுதல்
 
1996கேழ் முக நகர் அடிக்கிளர் சிலம்பு என
ஏழ் முகம் பிரிந்த நீல் என்னும் தீம் புனல்
கூழ் முக நிலம் கெடப் பேய் முன் கொண்ட ஏழ்
காழ் முக அரவு எனக் கவர் கொண்டு ஓடும் ஆல்.
27
   
கொடிய ஆடிய தோற்றம்
 
1997வரை உயிர்ப்பு எனப் புகை மாட நெற்றி மேல்,
நுரை உயிர்ப்பு என விடா நுடங்கும் பூங் கொடி,
உரை உயிர்ப்பு உறாது என, ஒளிர் கை நீட்டியே,
விரை உயிர்ப்பொடும் இவர் விளித்தல் போலும் ஆல்.
28
   
மூவரும் நகருட் புகுதல்
 
1998நீர் அகம் பொதிர் மணி நிறத்த கார் என,
பார் அகம் குளிர்ப்ப வான் பயன் பெய்து ஏகி, அன்பு
ஆர் அகம் துகைத்து இவர் நடந்து, எல் ஐம்பது ஆய்,
ஏர் அகம் கிளர் பதி தங்க ஏகினார்.
29
   
 
1999சீர் வளர் அறம் தவம் தியாகம் மற்ற நல்
நீர் வளர் மறை புடை புக்கு, நீள் நகர்
வார் வளர் முரசு ஒலி வழங்கப் புக்கனர்,
ஏர் வளர் முகத்தினும் இலங்கும் மாண்பினோர்.
30
   
 
2000பால் வழி சுவை என, படத்தைத் தீட்டிய
கோல் வழி அழகு என, குறை இல் கேள்வி செய்
நூல் வழி புகழ் என, நுழை அன்னார், புடை
மேல் வழி வளம் எலாம் விளையப் புக்கனர்.
31
   
 
2001கொடியொடு குடை பொரும் கொள்கைத்து ஆர் இருள்,
முடியொடு பொதிர் மணி முனிந்து அங்கு ஈர்த்தலால்,
வடிவொடு பகல் செயும் மாடம் நீங்கிப்போய்ஓர்
மிடியொடு குறு மனை விரும்பிப் புக்கனர்.
32
   
ஒரு சிறு மனையை வாழுமிடமாகத்தேர்தல்
 
2002தான் வளர் கதிர் அழல் தாங்கி நை தரு,
கான் வளர் நிழல் கொடு எவரும் காத்து என,
வான் வளர் வாழ்வினை வகுப்ப நாதன் வந்து,
ஊன் வளர் பாசறை உவந்து நாடினான்.
33
   
எசித்தின் பேய்கள்நரகில் வீழ்தலும்
பேய்க்கரசன் பேரவை கூட்டுதலும்
 
2003மின்னாது இடித்து ஏறு இரிந்து அன்ன,
  வெருவிப் பதறிப் பாய்ந்து உருண்டு, அன்று,
இன்னா விளைக்கும் பேய் இனங்கள்
  எசித்து நீங்கித் தீ நினரயம்,
பல் நாள் துயரில் எண் மடங்காய்ப்
  பனிப்பு உற்று, ஆர்ப்ப வீழ்ந்தன கால்,
தன் நாடு அயர்வு உற்று, அயர்ந்து அரசன்,
  “ தருமின் உற்ற கொடிது“ என்றான்.
1
   
 
2004“தெள் உண்ட அமுது ஆர் எசித்து இறைஞ்சும்
  தேவர் யாமே, மேல் வயத்தால்,
தள்ளுண்டு, எரி வாய் நரகு இடத்தில்
  சரிந்தோம் என்ன அறிந்தது அலால்,
வள் உண்டு எம்மைச் சிதைத்து அழித்த
  வலத்தை அறியோம், மன்ன!“ எனா,
உள் உண்டு உமிழ்ந்த சினத்து அலறி
  உரை செய்தன, அக் குணுங்கு இனமே.
2
   
 
2005“பின்றா வஞ்சத்து அரிது உண்டோ?
  பெயர்க்கும் திறம் காணாது இரிந்து,
குன்றா வஞ்சத்து என் வலியும்
  குணிக்கிலீரோ?“ எனச் சினந்து,
“பொன்றா உணர்வில், திறம் காணப்
  போவல் யான்!“ என்று ஆர்த்து, எசித்தில்
சென்றான், சிதைவு எங்கணும் சிந்தச்
  சிந்தை சிந்தாக் கொடுங் கோனே.
3
   
 
2006அண்டாதன யாவையும் அண்டி
  ஆய்ந்தான்; கண்டான், தே உருவும்
பண்டு ஆயின தேவ ஆலயமும்
  பணிப் பொன் தேரும் துகள் என்னக்
கண்டான்; பலர் ஓர் கடவுள் தனைக்
  கருதி வணங்கக் கண்டான்; கண்டு,
உண்டாயின ஓர் காரணமும்
  உணராது, எரி தீ வீழ்ந்து அயர்ந்தான்.
4
   
 
2007இரு வாய் உருவும் பேய் இனத்திற்கு
  இல்லாது எனினும், வேண்டு நிலைக்கு
உருவாய்த் தோன்ற உள வயத்தால்
  உரு ஆங்கு எடுத்த கடிக்கு அரசன்,
பொருவா உருமின் ஆர்த்து அலறிப்,
  பொருக் கென்று அலகைப் பொருநர் எலாம்,
வெருவாய் உளை தன் மனம் எரிக்கும்
  வினை தீர்ப்பதற்கு, விளித்தனன்ஆல்.
5
   
 
2008திருகி மேட மருப்பு ஈர் ஏழ
  செறி, செஞ் சடை நீட்டு, ஏழ் சிரத்தான்;
பருகி எரியை கால் இரத்தப்
  பருதித் தடத்த விழிக் கண்ணான்;
உருகி ஒழுகும்நஞ்சு உமிழ் மால்
  ஓங்கல் நெடுங் கைத் துண்டத்தான்;
பெருகி அழலோடு ஊன் பிளிரும்
  பிறைக் கூன் எயிற்று வாய் உருவான்.
6
   
 
2009வேல் நேர் நிறுவி, வேசரி நேர்
  விரிந்து, திளைத்த மயிர்ச் செவியான்;
ஊன் நேர் ஒழுகி, பிணக் குப்பை
  உதட்டு நாறும் பகு வாயான்;
கான் நேர் நெருங்கி, தெங்கு இலை நேர்
  கழு நீள் சிவந்த தாடியினான்;
தான் நேர் இல மாசு ஒருங்கு அனைத்தும்
  தரித்த குரக்கு முக வடிவான்.
7
   
 
2010விண் திக்கு இழந்த பழி உளத்தான்;
  வியன் தீக் குடி ஏற்று அருங் கதத்தான்;
மண் திக்கு உயிரைச் சிதைத்து உண்ண
  வஞ்சம் விளைக்கும் நெஞ்சகத்தான்;
எண் திக்கு அசைக்கும் ஆணையினான்;
  இப் பார் நடுக்கும் சூலத்தான்;
பண்டில் போர்த்த உரு என, வெம்
  பகு வாய்ப் பாந்தள் கேதனத்தான்.
8
   
 
2011இன்னான் இன்ன உருக் காட்டி,
  எரி சூழ் பீடத்து எழுந்து ஓங்கி,
உன்னாதன யாவையும் உன்னி,
  ஒத்த உருவோடு இடை சூழ்ந்து,
துன் ஆழுவம் போல் கடிக் குழுவைச்
  சுளித்து நோக்கி, சூளையின் வாய்
அன்னான், கொழுந்து விட்டு எரிக்கும்
  ஆர்ந்த அழல் கான்று, ஆர்த்து அறைந்தான்.
9
   
பேய்க்கரசன் பேயாட்சியின்வலிமை குறைந்தமை கூறி, மேற்செய்ய வேண்டுவன வினாதல்
 
2012பீடு உடை வரத்தில் ஒவ்வாப்
  பெருந் தகை நாம், வான் வாழ்ந்த
வீடு உடைப் பெருஞ் சீர் மாட்சி
  விட்டு இழந்து, எரி தீத் தாழ்ந்தும்,
கேடு உடை அஞர் என்று எண்ணாக்,
  கிளர் வயத்து உணர்வின் பாலால்,
ஈடு உடை அரசும் பேரும்
  எடுத்து வீற்றிருந்தேன் அன்றோ!
10
   
 
2013“ஓர் என்பான் பகை செய்தாலும்,
  உலகின்பால் கொற்றம் கொண்டேன்;
சீரின் பால் வணக்கம் கொண்டேன்;
  திரு மணிச் சிகரம் கொண்டே,
காரின் பால் மின்னின் மின்னும்
  கனக ஆலயமும் கொண்டேன்;
பாரின் பால் இன்று என் ஆண்மை,
  பகை இலாக்குறையக் கண்டேன்.
11
   
 
2014“கதிர் உண்ட மணியின் சீர்த்துக்
  களி உண்ட எசித்து நாட்டில்,
எதிர் உண்ட பகை ஒன்று இன்றி,
  இயல் உண்டு ஆண்டு, ஒருவன் நின்றேன்;
முதிர் உண்ட இறைவராக
  முயல் உண்ட வணக்கம் கொண்ட
பொதிர் உண்ட எனது சேனை
  பொருக்கு என இரியக் கண்டேன்.
12
   
 
2015“கார் தவழ் வரைகள் தோறும்,
  கடி மலர்ப் பொழில்கள் தோறும்,
ஏர் தவழ் புரங்கள் தோறும்,
  எண்ண அரும் இடங்கள் தோறும்,
சீர் தவழ் சிகரத்து ஓங்கிச்
  சிறந்த ஆலயங்கள் யாவும்,
போர் தவழ் களங்கள் தூவும்
  பூழி என்று ஆகக் கண்டேன்.
13
   
 
2016“பொன் முகத்து ஒளியைத் தும்மும்
  பூஞ் சுதை உருவம் பூண்ட
மின் முகத்து எறிக்கும் கற்றை
  விரி மணி முடியும், தாரும்,
மன் முகத்து அணிப் பொன் தேரும்,
  மற்று அணி சிறந்த யாவும்,
கொன் முகத்து அலகை யோடும்
  குழைந்து அழிந்து ஆகக் கண்டேன்.
14
   
 
2017“நரம் தரும் குலைவின் நைந்து,
  நாடு ஒழிந்து ஓடினாரை
வரம் தரும் தேவராக
  வணங்கவோ?‘ என்ன, யாரும்,
சரம் தரும் பூவும் சாத்தா,
  சாந்தமும் புகையும் காட்டா,
பரம் தரும் கமழ் நீர் ஆட்டா,
  பணிதல் ஒன்றினையும் காணேன்.
15
   
 
2018“பணி முகத்து உயிர்கட் கேடாய்,
  பண்டு உளி எருமு போற்றி
அணி முகத்து அலர்ந்த சாகி,
  அரிது எலாப் பிணிகள் தீர்ப்ப,
மணி முகத்து இறைவன் தந்த
  வரத்து, உறைந்தன பேய் ஓடி,
துணி முகத்து இவை ஓர்ந்து அன்னார்
  தொழுதல் விட்டு இருப்பக் கண்டேன்.
16
   
 
2019“இத் திறத்து, எவணத்தாரும்
  எனை நகைத்து இகழ்ச்சி கூற,
மைத் திறத்து உயர் என் கோன்மை
  வசையினோடு அழியக் கண்டே,
அத் திறத்து அனைத்தும் ஆக்கி
  அடும் பகை அணுகிப் பார்க்கின்,
மெய்த் திறத்து உயர் என் காட்சி
  மெலிதர, ஒன்றும் காணேன்.
17
   
 
2020“காட்சியால் தெளிந்து பார்க்கில்,
  காரணம் யாதோ நாடி,
மாட்சியால் உயர் அந் நாட்டில்,
  வந்து இரு யூதர்க் கண்ட
சூட்சியால், நவம் இது ஒன்றே;
  துளங்கு அறத்து உயர்ந்தோரேனும்,
பூட்சியால் உளைந்தோர் ஆகிப்
  புரியும் ஓர் கருமம் உண்டோ?
18
   
 
2021“நான் விளை வஞ்சத்து ஒல்கா,
  நஞ்சு என இன்பம் வெஃகா,
ஊன் விளை துயரின் குன்றா,
  உரை விளை புகழின் நேரா,
கான் விளை தவத்தில் ஒவ்வா
  காத்த மாண்பு இருவரேனும்,
வான் விளை பகைக்கும், தேவ
  வயத்து அலால், அஞ்சேன் நானே.
19
   
 
2022“ஆயினும், அன்ன யாவும்
  ஆயின வழியும் வாயும்,
ஆயினும் அறிகிலா நான்,
  அனைவரும் அழைத்தல் செய்தேன்,
வீயினும் கொடிய நெஞ்சீர்,
  விளைந்த இத் துயர் வீயாதும்,
வீயினும், புரியும் தன்மை
  விளம்புதீர்“ என்றான் வேந்தே.
20
   
சிடாவியன் கூற்று
 
2023கடாவிய அசனி அன்ன
  கவலை கொள் அரசை நோக்கி,
தடாவிய சரணம் ஏத்தி,
  தரணி யாவையும் ஏய்த்து, ஏய்க்கப்
படா வியந்தரத்துள், வஞ்சம்
  பழுத்த கூர் அறிவின் வல்லான்,
சிடாவியன் என்னும் கூளி,
  தீ உமிழ்ந்து, உரை முன் கொண்டான்.
21
   
சிடாவியன்தான்பொய்த்தேவரை ஏற்படுத்தி
மனிதரை ஏய்த்த விதம் கூறுதல்
 
2024“குய்யம் கொண்டார், கண்டவை எண்ணிக்குறை எண்ணார்.
அய்யம் கொண்டால், ஆர் அறிவு எஞ்சி அரிது உய்வார்.
மொய் அங்கு உண்டாய், வான் இழி நாளின் முரிவு என்னோ?
வய்யம் கொண்டார் ஏற்றிய கோலின் வலி கொண்டாய்.
22
   
 
2025“மையின் வாயால் தம் அறிவு எஞ்ச, மயல் உய்க்கும்
மெய்யின் வாயால் ஈனம் மலிந்த வினை மாக்கள்,
பொய்யின் வாயால் பொங்கு அடலால் நாம் புரிகின்ற
மொய்யின் வாயால் நிற்பவர் கொல்லோ முரியாதார்?
23
   
 
2026“ஆய்ந்து ஆய்ந்து எல்லாம்,
  நீ அறியாது ஒன்று அறைவேனோ?
மாய்ந்தான் மைந்தன் என்று,
  அரிது ஐயன் மனம் வாட,
காய்ந்து ஆர் துன்பம் தீர்ப்ப,
  மகன் தன் கவின் ஒப்ப,
வேய்ந்தான், வாய்ந்த ஓர் நல்
  உரு அன்பின் வினையால், தான்.
24
   
 
2027“கைக் கண்டு ஏவல் செய்பவர், தாதை
  கடிது உற்ற
மைக் கண்டு, உள்ளம் தேறும் எனத்தாம்
  வழிபாடாய்,
பொய்க் கண்டேனும், பூவொடு வாசப்
  புகை சாத்தி,
‘ஐக் கொண்ட ஓர் நல் தெய்வதம்!‘என்றார்,
  அறிவு அற்றார்.
25
   
 
2028“செல்லும் தன்மைத்து ஆயவை கேட்டுத் திரு வல்லோன்,
வெல்லும் தன்மைத்து, ஐயனை ஏத்த, விரி பார் மேல்
சொல்லும் தன்மைத்து அர்ச்சனை விஞ்ச, துகள் ஆக்கம்
ஒல்லும் தன்மைத்து, ஓர் இறையோனை ஒழிகின்றார்.
26
   
 
2029“எய்யா மாக்கள் தீ உற, நானே எளிது இவ் வாய்
மெய் ஆம் நாதன் தன்னை மறுத்தே, வினை உய்க்கும்
பொய்யா வஞ்சத்து உய்த்தன பொய்யம் பல தேவர்,
கொய்யா வண்ணத்து எங்கணும் ஏத்தும் குழு கண்டாய்.
27
   
 
2030“ஊன் தோய் மாக்கள் தம் குணம் இஃதேல்,
  உளைவு என்னோ?
கான் தோய் பைம் பூஞ் சோலை எசித்தார்
  கசடு உற்று,
வான் தோய் மின் போல் ஒல்குபு, நின் தாள்
  வலி ஏத்த,
நான் தோய் வஞ்சம் சால்பு“ எனச் சொன்னான்
  நவை மிக்கான்.
28
   
 
2031என்றான் அன்னான். என்றவை கேட்டார், இனிது என்றார்.
வின்றான் என்பான், விஞ்சிய மாயை வினை வல்லான்
நின்றான்; முன்பான் என்றது இகழ்ந்து, நிறை நக்கு,
பொன்றா இன்னா பூண் அரசு ஏத்திப்புகல் உற்றான்:
29
   
வின்றான்என்னும்பேய்,தான்றாக
வழிபாட்டினை உண்டு பண்ணிய விதம்கூறுதல்
 
2032கார் நடந்தஉளி வாவியைக் காத்த புள்,
நீர் அகன்றஉளி நிற்பது காண்பரோ?
சீர் அடைந்தஉளி மானிடர் செய் அறம்,
சூர் அடைந்தஉளி தோமொடு மாற்றுவார்.
30
   
 
2033“மைத் திறத்து உயிர் ஏய்த்தது வண்மையோ?
மெய்த் திறத்து இறையோன் விறல் ஏய்த்து என,
கைத் திறத்து உயிர் காத்திடத்தான் செய்யும்
ஐத் திறத்து, உயிர்க் கேடு உற ஆக்கினேன்.
31
   
 
2034“நிழன்ற சோலை எசித்தினை நீக்கி வந்து,
அழன்ற கான் உறீஇ யூதர், அறைந்த தீத்
தழன்ற சொற்கு, இறையோன் தரும் ஏவலால்,
சுழன்று அரா உயிர் துய்த்தன சால்பு அரோ.
32
   
 
2035“ஓவி ஏங்கி உளைந்து இறை வேண்டினார்,
மேவி வேண்டினர் மேவுகின்ற ஆண்டகை
ஏவி, மோயீசன் ஈண்டு ஒரு பாந்தளைச்,
சாவு இல் ஆம்படி, தாம்பிரத்து ஆக்கினான்.
33
   
 
2036“ஆக்குகின்ற அரா ஒரு கம்ப மேல்
தூக்குகின்றனன்; தூக்கிய பாந்தளை
நோக்குகின்றனர் நோய் அஃகி, நஞ்சினை
நீக்குகின்று, உயிர் நீங்கிலர் உய்வரே.
34
   
 
2037“வாய்ந்த நன்றி மறப்பது தீது என
ஆய்ந்த தன்மை, அரா அழியாது, பின்
வேய்ந்த தம் மகர்க்கு, ‘ஆண்டகை மேவி முன்
ஈய்ந்த நன்றி இது‘ என்று, அவர் சாற்றுவார்.
35
   
 
2038“புரை தரும் தடம் ஈது எனப் புக்கு நான்,
‘நிரை தரும் கடன் நீதி இது‘என்று, அவர்
விரை தரும் புகையும் வெறி மாலையும்
உரை தரும் புகழோடு இட நாட்டினேன்.
36
   
 
2039“முன் இருந்தனர் காலம் முடிந்த பின்,
பின் இருந்தனர், பேர் எழில் பாந்தளுக்கு,
என் இரும் தனிச் சூட்சியின் ஏவலால்,
மன் இருந்தன மந்திரம் ஆக்கினார்.
37
   
 
2040“மாக நாதன் வனைந்தவை மாற்றி, அந்
நாகம் ஆக்கிய நன்றி அது என்று, நான்
நாக நாதன் எனும் பெயர் நாட்டிக்கேடு
ஆக, நாகத்து அருச்சனை ஆயதே.
38
   
 
2041“நாக நாதனை நம்பலின், நாக வாய்
ஆக மாறும் என்று, ஆகமம் போன்று, நல்
பாகம் மாய் விடம் மூடிய பல் கதை
ஆக, மா நிலத்து அர்ச்சனை நாட்டினேன்.
39
   
 
2042“ஆண்டு அங்கு ஆயிரத்து ஐம்பத்திரண்டு போய்,
மாண்ட கோன் எசைக்கீயன் மனம் பொறா,
பூண்ட பாந்தளைப் பூழியா ஆக்கினும்,
ஈண்டு அவ் அர்ச்சனை பற்பலர் விட்டு இலார்.
40
   
 
2043“அறம் வழங்கிட அன்பொடு நாதன் அப்
புறம் வழங்கிய இன்னவை, பொய்யொடு
மறம் வழங்கிட மாற்றிய பின்னர், என்
திறம் வழங்கு இல சீரும் உண்டோ?“ என்றான்.
41
   
 
2044பித்தன் ஆகமம் பேசிய தன்மையில்,
அத்தனாது உரை கேட்டு, அரும் பட்டிமை
மொய்த்த நாளி முகத்து அரில் முற்றிய
சத்தனாசு எனும் பேய், இவை சாற்றினான்:
42
   
சந்நனசு என்னும்பேயின்கூற்று
மனிதர்கள்நிலையில்லாத இயல்புடையவர்
 
2045நீரில் தவழ் மொக்குள் என, நேர் பொருத கால்முன்
தேரில் தவழ் சித்தி என, ஏறு திளை சீற்றக்
காரில் தவழ் மின்னல் என, நேர் கருதி நில்லாப்
பாரில் தவழ் மன் உயிர்கள் தம் பரிசு, இது அன்றோ?
43
   
இனி நம்பொய்வழி செல்லாது
 
2046“இப் பரிசின் ஆயிர மனத்தவரை ஏய்த்து,
மைப் பரிசின் எம் குடில மாயை அடல் பொய்யா,
பொய்ப் பரிசின் நாம் உலகு புக்கு இனிது ஆண்டோம்;
அப் பரிசின் இப் பொழுது அமைப்பது அரிது, ஐயா!
44
   
வஞ்சனையை இனிநரகிலேயே நடத்துவோம்
 
2047‘நோ மலிய வந்த பல நூதனமும் நோக்கில்,
வீ மலி அகன்ற தலை மேதினியில் அண்டா,
தீ மலி இருள் செறியும் இத் திசையில் ஆண்டு,
நீ மலி நின் வஞ்சனை நிகழ்த்தல் நலது“ என்றான்.
45
   
திரங்கரன் - சினந்து கூறுதல்
 
2048நாய் முகன் நவின்றவை நகைத்து, இவனை நாளும்
காய் முகனொடும் கஞலி நோக்கிய கதத்தான்
போய், முகம் உடன்று, எரி புகைந்து எழுவ, திங்கள்
தேய் முக எயிற்று எதிர் திரங்கரன் உரைத்தான்:
46
   
 
2049“வஞ்சினர் ஒருங்கு தொழு மன் அரச, மாயை
எஞ்சினன், இளைத்தனன், இளைத்த ஒரு கைமைக்கு
அஞ்சினன் அறைந்தவை அமைந்து அயர வேண்டா;
துஞ்சினர் துளங்குவர் கொல்? என்று உரை துவைத்தான்.
47
   
சந்தனாசு திரங்கனைக் கடிதல்
 
2050என்றலொடு நொந்து, முகில் ஈன்ற உரும் என்னா
நின்றவன் இகழ்ந்து, “எனை நிகர்த்த பிணம் நீயோ?
குன்ற வெறி கொள் ஒளி, குணுங்கு என முளைத்தாய்!
வென் தர வளர்ந்த மிடலோய்!“ என உரைத்தான்.
48
   
திரங்கரன் குத்துதல்
 
2051அரங்கவும், இவற்கு அவன், அவற்கு இவன் எள் ஒத்து
தரங்கம் என ஓங்கி, விழி தத்து தழல் தாக்க,
திரங்கரன், உடன்று திருகும் சினமோடு ஆர்ப்ப
உரம் கடிது குத்தினன், ஒருங்கு உடல் பதைப்ப.
49
   
சத்தனாசு உதைக்கத்திரங்கள்கடித்தல்
 
2052பதைத்த உடல் பத்து இரு பனைக்கும் உயர் பாய்ந்தான்;
துதைத்த அரி தோர்ப்ப எதிர் துள்ளி, இரு காலால்
உதைத்தனன், உதைப்ப, உரும் ஒப்ப அவன் ஆர்த்து,
புதைத்தன எயிற்று இரிவ புண் புனல் கடித்தான்.
50
   
இருவரும்எதிர்த்துப்பொருதல்
 
2053கடித்த உடல் செங் கறையின் மாரி நிறை கால
இடித்த இரு கார் என எதிர்த்து இருவர், தம்மை
துடித்து எழ உடல் குவடு, அழல் துற, இறுக்கிப்
பிடித்தனர்; கடித்தனர்; விழுத்தினர்; புரண்டார்.
51
   
 
2054பிரண்டனர் சுழன்றனர்; பிரிந்திலர் பிரிந்தார்;
திரண்டனர் திரிந்தனர்; சிதைந்திலர் செறிந்தார்;
மிரண்டிலர், வெதிர்ந்திலர், மெலிந்திலர் முனைந்தார்;
இரண்டு அனல் விசும்பும் என மீண்டு, எதிர் எழுந்தார்.
52
   
இருபேய்களும்தம்கொம்புகளை இழத்தல்
 
2055எழுந்து இருவர், வவ்விய மருப்பு இணை கை விள்ளா,
அழுந்து இரு அடிக் கொடு அகத்தினை உதைப்ப,
கழும் திருகு கொம்பு இருவர் கையொடு பெயர்ந்தே
விழுந்து, இருவர் வீழ்ந்தனர்; உள் வெள்கினர்; வெகுண்டார்.
53
   
பேய்க்கரசன்இருவர்பேரையும்நீக்க, சத்தானசு
பேசத்தொடங்குதல்
 
2056நக்கன கண்ட பேய்கள் நக்கன என்று, வேந்தன்,
மிக்கன சினந்து நோக்கி, வளைந்த போர் கையால் நீக்கி,
தொக்கன பிணங்கள் அஞ்ச தொகை இல இடி போல் ஆர்த்து
தக்கன வினைகள் கக்க, சத்தனாசு, உரை கொண்டான் ஆல்:
54
   
சத்தானசு தன்வஞ்சனைத்தொழிலைக்கூறுதல்
 
2057“வெலத் தொழில் எஞ்ச, அஞ்சி,
  விதவையின் இளைத்தேன் என்றான்;
குலத் தொழில் வஞ்சம் பொங்க,
  கூவிடத்து அவன் நான் செய்த
வலத் தொழில் இருவர் கூற,
  வலியன் ஆர் என்பீர்“ என்ன,
சலத் தொழில் அரசன் மூரல் தந்து,
  மீண்டு அவன் சொன்னானே:
55
   
 
2058“காசு உலாம் கடலின் நீரும்
  கார் உலாம் வரையும் சூழ்ந்து
தேசு உலாம் சிந்து கீறும்
  தேயமே எனக்குத் தந்தாய்;
ஆசு உலாம் குடிலத்து, அங்கண்,
  அறிவு அற இருளை உய்த்து,
மாசு உலாம் தேயம் ஆக்கி,
  வணக்கமே உனக்குக் கொண்டேன்.
56
   
 
2059“ஏற்றிய தேவர் எண்ணில், எண்ணுவர் கலங்கு வாரும்;
போற்றிய தேவர் ஒப்பப் புரிகுவர் புகர் கொள்வாரும்;
ஆற்றிய தேவர் காதை அறைகுவர் வெள்குவாரும்;
சாற்றிய தேவர் பூண்ட தகவு உளோர் தமைக் கொல்வாரும்.
57
   
 
2060“புனை நிலா அணி இல்லாளைப்
  போக்கலால் அரற்றி மாழ்கல்
மனைவியால் அடி பட்டு ஓடல்,
  மனைவியைத் தலையில் தாங்கல்,
அனையள் கால் பினிற்றுச் செந்நீர்
  அணி என நுதலில் பூசல்
இனை எலாம், பூசித், தேவர்க்கு
  இயலும் ஓர் விளையாட்டு என்றேன்.
58
   
 
2061“பொது முறை மகளிர் நாடல்,
  புற மனை விழைதல்,தண்ண
மதுமுறை மலருள் புக்கு,
  மதுசகன் கணை வெப்பு ஆற்றல்,
விதுமுறை குனிவிற்கு அஞ்சி
  வென் தர ஒளித்து நாணல்-
இது முறை மறையின் நாட்டி,
  இறையவர்க்கு இலீலை என்றேன்.
59
   
 
2062“குய்யமே விழியாத் தாங்கல்,
  குய்யத்துள் ஒளித்தல், கோசம்
வையவே ஊழ்த்து வீழ்தல்,
  மருவிய குறி இரண்டும்
கையமே ஆகப் பூணல்,
  காட்டு அரும் பலவும் நாட்டி,
ஐயமே இன்றி, தேவர்க்கு
  ஆனது ஓர் முறைமை என்றேன்.
60
   
 
2063“ஈமம் சேர் மாலை ஆக
  இழி படக் கழுதை சேர்ந்தோன்,
காமம் சேர் சங்கத்து ஒன்றில்
  கடந்த ஆயிரம் ஆண்டு உள்ளோன்,
ஏமம் சேர் மனையார் எண்
  ஈர் ஆயிரர் இமிழின் கொண்டோன்,
சேமம் சேர் வலியில் ஓங்கும்
  சிறப்பு எழும் தேவர் என்றேன்.
61
   
 
2064“அன்னையே மனைவியாக
  அமைந்தவன் தேவன் என்றேன்,
பின்னையே, சுதையைப் புல்லப்
  பெட்டவன் தேவன் என்றேன்,
தன்னையே அழித்துக்காமம்
  தணித்தவன் தேவன் என்றேன்.
‘என்னையே அறைவேன்!‘என்ற
  யாவுமே வழங்கச் செய்தேன்.
62
   
 
2065“உடல் விளை ஈன மாக்கள்
  உணர்கவும் நாணும் காதை
மிடல் விளை களிப்பின் செய்தோர்
  விண்ணின் வாழ் தேவர் என்னக்
கடல் விளை அரவத்து அன்னார்
  களி விழா அணி கொண்டாட,
அடல் விளை வஞ்சத்து அங்கண்
  அரு முறை நாட்டினேனே.
63
   
 
2066“சேண் முகம் புதைத்த கோயில்
  தீட்டிய தேவர் காதை
வாள் முகம் புதைத்த நீண் கண்
  மடந்தையர், கண்ட காலை,
நாண் முகம் புதைத்த பின்றை,
  நாணம் அற்று அதைச் செய்தோரைப்
பூண் முகம் புதைத்த மையல்,
  பொலிவொடு வணங்கச் செய்தேன்.
64
   
 
2067“என் வலத் தொழில் இது, அய்ய!
  இவனும் வந்து, அமைத்த யாவும்,
தன் வலத் தொழில் என்று, ஓத,
  தாவு அரும் வலியோன் என்றும்
புன் வலத் தொழிலோன் என்றும்,
  பொருத்தலின், தோன்றும்; தோன்றி,
மன் வலத் தொழிலோன் உன்னால்
  வரிசை பெற்று உய்வான்“ என்றான்.
65
   
திரங்கன்தன்வல்லமை கூற முன்னே பாய்தல்
 
2068“கூடு உடை மாக்கள்,
  காமம் குணம் என நாடி, நாடும்
கேடு உடை காமம் மூடக்
  கெழுமிய தேவர் காமப்
பீடு உடையார் என்று உன்னல்,
  பெரும் புகழ் பெற்ற ஆண்மை
ஈடு உடைத் தொழில் என்பாயோ?“
  என திரங்கரன் முன் பாய்ந்தான்.
66
   
பேய்க்கரசன் அவனை விலக்கல்
 
2069முகில் கிழித்து இடித்த ஏற்றின்,
  முகத்து அழல் கதத்த வேகத்து
உகிர்க் கிழிக் கணிச்சி காட்டி
  உற்ற அச் சவத்தை, பாந்தள்
துகில் கிழிக் குணுக்கு வேந்தன்,
  சுளித்து அதிர்த்து அதட்டிப்பாய்ந்த
சிகிக் கிழித் தடத்த கண்ணான்
  செப்பலும் விலக்கினானே.
67
   
பேய்க்கரசன்சத்தனுசுக்கு ஒரு கொம்பு அளித்தல்
 
2070“இற்றை நீ செய்த போதே,
  எமது பேர் இனத்துக் கோன் நான்,
மற்றை நீ தலைவன் ஆகி
  வாழி, சத்தனாசே! வஞ்சத்து
ஒற்றை நீர் உடையன்நீ என்று,
  ஒற்றைக் கொம்பு அளித்தேன்“ என்ன,
அற்றை நீள் தலையின் நாப்பண்
  அமைத்து நாட்டினன், பேய் வேந்தே.
68
   
்பூவுலகில்இனி நம்கோல்செல்லாது என்று சத்தனாசு கூறியதற்கு அரசன்காரணம் கேட்டல்
 
2071எப் புறத்து அனைத்தும் முன்னர்
  இயன்ற தன் கோல், அந் நாட்டிற்கு
அப் புறத்து இயலாது என்னும்
  அதற்கு, உளத்து உணர்ந்த தன்மை
செப்பு உற, தானே கண்ட
  சிறப்பு என அரசன் கேட்ப,
தப்பு உறத் தனித் தீ வஞ்சச்
  சத்தனாசு அறைதல் உற்றான்.
69
   
சத்தனாசின்மறுமொழி
 
2072“வான் விளை வாழ்வு இழந்து இங்கண்
  மருண்டு எரி நாம் விழும் காலும்,
தேன் விளை கான் முதல் மகனே
  தீது உற நாம் செயும் காலும்,
‘ஊன் விளை யாக்கையில்
  உம்மை ஒழிப்பல்‘ என உரைத்து இறைவன்
தான் விளை ஆகுலக் காலம்
  தான் இது எனத் தோன்றும், அய்யா!
70
   
 
2073ஈர் ஏழு வெண் திங்களும் முன்,
  ஈர் இரு தண் திங்களும் முன்,
போர் எழு வெம் பகை செய்த
  பொருந்தலரைக் காணா, நாம்
கார் எழு வெங் கதத்து இடிபோல்
  கடிது இங்கண் வீழ்ந்து அடைந்த
சூர் எழு வெங் காரணமும் தோன்று
  இலது உட்கு உற்றனமே.
71
   
 
2074“மீண்டு எழுந்து, நால் மதி
  முன் மேதினியில் போய், அங்கண்
மாண்டு எழுந்து வந்த நவம்
  மதித்து ஆய்ந்தே, அன்று இரவி
ஈண்டு எழுந்து, மும் மடங்காய்
  இலங்கி, நிசி இருள் அஃகி
ஆண்டு எழுந்து, வையம் எலாம்
  அழகு உறீஇக் கேழ்த்தது கண்டோம்.
72
   
 
2075“தேன் வயிறு ஆர் மலர் பூத்த
  செழுஞ் சோலை, பருவம் இல,
கான் வயிறு ஆர் கனி நலமும்
  கலந்து, அன்று, களிப்பு எய்தி,
வான் வயிறு ஆர் சுவை அமிர்தம்
  மண் உலகில் தொக்கது என,
மீன் வயிறு ஆர் உலகு ஒப்ப,
  மேதினி, அன்று, எழக் கண்டோம்.
73
   
 
2076“அருள் காட்டி அவதரித்தான்,
  ஆண்டகையோ, அன்று,‘ என்றோம்.
‘தெருள் காட்டிப் பெத்திலத்து ஓர்
  சிறுவன் உதித்தனன்‘ என்றேன்.
இருள் காட்டி மல்கு இரவில்
  ஒளித்து எய்தான் இறை‘ என்றீர்.
வெருள் காட்டி, மீண்டு இவை
  ஆய்ந்து, ‘அம் மகன் வான் வேந்து‘என்றான்.
74
   
அகத த்தன் ஆதரித்தலும்சீதய்வு மறுத்தலும்
 
2077நாய் முகத்து நின்றன பேய்
  நவின்றவை கேட்டு அகீதத்தன்,
வீய் முகத்து வியப்பு எய்தி,
  “விளம்பியதே திடம்“என்றான்.
தீய் முகத்து நகை காட்டி,
  சீதாய்வு, மறுத்து உரைக்கும்:
“நோய் முகத்து, விலங்கு உறையுள்
  நுழைந்து இறையோன், பிறப்பானோ?
75
   
 
2078“மிடி கொண்டான்; உளைந்து அழப்
  பல் வினை கொண்டான்; நிந்தையொடும்
படி கொண்டான்; பகை கொண்டான்;
  பகர்வு அரிய அஞர் கொண்ட
குடி கொண்டான்; புற நாட்டில்
  கூர் இடுக்கண் கொண்டானே;
முடி கொண்டான், மூ உலகு ஓர்
  மூ விரலால் கொண்டானோ?“
76
   
 
2079என்றான் ஒத்து, இசைத்து இசைப்ப
  எரிப் பல பேய், பேய்க்கு அரசன்,
“கன்றா நல் கன்னி வயின்
  கடவுள் உலகு உதிப்பன் எனக்
குன்றா மெய்ச் சுருதியது ஆய்,
  கொழுநன் உள மரி என்பான்
அன்று ஆவற்கு ஈன்ற மகன்
  ஆண்டகையோ? அன்று“ என்றான்.
77
   
கவிக்கூற்று
 
2080“கலை புறங் கண்டு ஒளிர் ஞானம்
  கடந்த இறையோன், கன்னித் தாய்க்கு
இலை புறம் கண்டு அலர் உயர்த்தோன்
  கணவன் என ஈந்தன கால்,
கொலை புறம் கண்ட இகல்
  குணுங்கிற்கு இவை ஒளிப்பக் குறித்தனனே
நிலை புறங் கண்ட ஆண்டகை, முன்
  நினைத்த பயன் இன்று உளது ஆல்.
78
   
பேய்க்கரசன் பேசத்தொடங்குதல்
 
2081தேற்றாதோர் அரும் பொருளை
  இருட்டு அறையுள் தேடுவர் போல்,
ஆற்றாத ஓர் மந்திரத்தின்
  அலகை இனம் நிலை காணா,
மாற்றாத ஓர் வெருட் கடலை நீந்து
  அறியா மருண்டு அலைய,
போற்றாத ஓர் துயர் விள்ளா
  புகைந்து, அரசன், புகல் உற்றான்.
79
   
பேய்க்கரசன்கூற்று
 
2082“ஐயம் மீட்பதன் பொருட்டு
  அகத்து அலை நினைவு அகல்மின்,
வையம் மீட்பதன் பொருட்டு
  எம்மால் மலிந்தன வஞ்சப்
பொய்யை மீட்பதன் பொருட்டு,
  இறை பிறந்திலன். இன்ன
மெய்யை மீட்பதன் பொருட்டு
  ஒரு விளக்கமும் இலது ஆல்.
80
   
 
2083திடம் கொடு ஆர் புலன் தெளிந்த
  நாம் அறிகு இலா, மனு ஆய்த்
தடம் கொடு ஆண்டகை தரணியில்
  உதிப்பனோ? இதுவே
மடம் கொடு ஆயின வழுது
  என, வந்த நோய் மறுப்ப
இடம் கொடு ஆகுவது யாது
  என இயம்புதீர்“ என்றான்.
81
   
விரகவாயுவு என்னும்பேயின்கூற்று
 
2084சிரகமாய் இரு மருப்பு இடை பைத்து, உயர் செத்த
உரகம் ஆடிய உருக் கொடு, மேழக முகத்தான்,
நரக மாதிரம் நயப்பு உற விரக நோய் நல்கும்
விரக வாயுவு, வெடிப்ப நக்கு, இயம்புதல் கொண்டான்:
82
   
காமம்நன்கு விளைப்போம்
 
2085“தூமம் நாடிய உருவும் ஒண் கோயிலும் துகள் ஆய்,
சேம நாடு என் அச் செழும் எசித்து இழந்தன சிதைவால்,
வீமம் நாடிய வெருக் கொடு மயங்குவது என்னோ?
காமம் நாடிய கால், அரிது எமக்கு உளது உண்டோ?
83
   
 
2086“சிலை வல்லார்களும், சிறப்பு எழு நெடும் புகழ் திளை நூல்
கலை வல்லார்களும், கடி நிதித் திருக் கொடு பெருங் கோல்
நிலை வல்லார்களும், நிறுவிய மற்ற வல்லாரும்
முலை வல்லார்களின் முயலினால் முரிவு இலார் உண்டோ?
84
   
 
2087“கார் இழந்து இழி துளி என, நாள் தொறும் கனவில்,
பார் இழந்து, இழி பல் உயிர் யாவையும் பார்க்கில்
நீர் இழந்து, இழி நிறை தவிர் காமுகர் அல்லால்,
சீர் இழந்து இழி செயிரினார் எண்ணுவது அரிதோ?“
85
   
 
2088“என் இயம்புவன் யான் இனி? இவர் எலாம் ஒருங்கு
முன் இயம்பிய முரண் தொழில் யாவையும் நோக்கில்,
கொன் இயம்பினர்; காமம் நாட்டினர் எனக் கூறப்,
பின் இயம்பிடப் பிழை செயும் தொழில், யாது உண்டோ?
86
   
 
2089“வேட்பது ஓர் வினை விலக்கினர்
  மானிடர் ஆயின்,
மீட்பது ஓர் வினை விழைந்து,
  உலகு அழிக்கும் பல் தொழிலைக்
கேட்பது ஓர் வினை, கிடத்திடப்
  பயன் இலா ஆசை
கோட்பது ஓர் வினை குணிப்ப நாம்,
  கொற்றம் ஆம்“ என்றான்.
87
   
பேய்க்கரசன்விரகவாயுவைத் தழுவுதல்
 
2090மெய் எஞ்சா உரை வியந்து கேட்டு அலகைகள் ஆர்ப்ப,
மை எஞ்சா வரை வரையினைத் தழுவிய வண்ணம்,
பொய் எஞ்சா இறை, புகன்றவன் பொறைப் புயம், தழுவி,
மொய் எஞ்சா நிறை வஞ்சக முயல்வினை மொழிந்தான்:
88
   
பேய்க்கரசன் சற்று - நாணத்தை ஒழிப்போம் எனல்
 
2091“தாங்க அரும் பொறை தறை மடுத்து எடுத்து என, வஞ்சத்து
ஓங்கு அருந் தொழில் உதவி கொண்டு, ஒளித்த வேல், எறிந்த
நீங்கு அரும் பகை நிறை உயிர் உண்டு என, நீயும்
தீங்கு அரும் படை ஒளித்தியேல், செயிர் புக வெல்வாய்.
89
   
 
2092“கொல்வதற்கு அருங் குணத்து உளத்து இறையவன் புதைத்த
வெல்வதற்கு அரு நாணம் அது ஒன்றினை வென்றால்,
ஒல்வதற்கு அரும் உளம் உனக்கு அமைந்து, பா முகத்தில்
சொல்வதற்கு அருந் தொடை எனத், தொடர்வன துகளே.
90
   
காம்ம் விளைக்கும் வகை கூறல்
 
2093“நங்கை நம்பியும் நாடிய அன்பு என நாட்டி,
சங்கையம் பல சாதி நல் முறை எனப் புகுத்தி,
அம் கை அங்கனை பழகின், நீ அகலினும், அரிது உன்
வங்கை இன்பு உற, வன்னி முன் வை என அழல்வாள்.
91
   
 
2094“மால் கலந்த அவா வளர, என் பணியினால் கவிஞர்
நூல் கலந்த வாய், நுனித்த தேன் எனத் தகும் காமம்
சால் கலந்த பாச் சாற்றவும் கேட்பவும் செய்வாய்;
பால் கலந்த கால், பருகிய நஞ்சு மீட்பு அரிதே.
92
   
 
2095“ஒருவரும் செயிர் உரைப்பவும் கேட்பவும் செய்தால்,
இருவரும் செயிர் இன்றியும், நாணமே வெல்வாய்;
மருவ அரும் புகர் பழகவே வழங்கிய முறை ஆம்.
தெரு வரும் புலி சீறினும், சிறுவரும் வெருவார்.
93
   
 
2096“அஞ்சினார் எனில், ‘அமைதி ஓர் முறை‘
  என்பாய். வஞ்சத்து
எஞ்சு இலாய் எனில், இணங்குவர்.
  இணங்கிய பின்றை,
நஞ்சு இலா நவை நறுமை என்று உணர்ந்து,
  நிற்பவரோ,
மஞ்சில் வாழ் உயர் வரை பெயர்ந்து
  இழிந்த கல் போன்றே?
94
   
 
2097“நம்பியோடு எழில் நல் மணத் துணைவியும் தம்முள்
வெம்பி, ஓர் பகை விளைந்த கால், காமமும் விளைவு ஆம்;
தும்பி சூழ் அலர்த் தொல் கொழுகொம்பு இழந்து, அடுத்த
கொம்பில் ஏறிய கொழுங் கொடி போல்வது காண்பாய்.
95