மீட்சிப் படலம்
 
நன்மையிற் பொலிந்த எசித்து நாடு
 
2941ஏழ்பட வருடம் இவ்வாறு
  இயல் பட ஒழுகிற்று ஆகி,
போழ் படக் கல்லும் செந்தீய்ப்
  புழுங்கிய வனம் போல், பாவத்து
ஆழ் பட அழன்ற அந் நாடு,
  ஆரண அருவி பாய,
கேழ் பட மலர்ந்த சோலைக்
  கிழமையின் எழுவிற்று அன்றோ.
1
   
 
2942தீவு இற்று ஆய், அலைந்த முந்நீர்த்
  திரையினுள் அலைவு இலாதான்,
ஓவிற்று ஆய், ஓவல் செய்தார்க்கு
  உளத்து நைந்து அருளின் பேணி,
காஇற்றா ஆய், எவர்க்கும் நீழல்
  காத்த மா முனிவன,் தானே
ஆவிற்று ஆய்த் தெய்வ மைந்தன்
  அருள் நிழற்கு ஒடுங்கி வாழ்வான்.
2
   
 
2943உள் உற விண்ணோர்க்கு ஆற்றா
  உயர் அருட் கடல் ஆம் மைந்தன்,
தெள் உற அகன்ற மார்பில்,
  சித முடித் தாயும் தானும்
அள் உற அன்பின் மூழ்கி,
  ஆங்கு அவர் அருந்து ஞானம்
எள் உற எஞ்சும் என் சொல்,
  இயம்பிடத் துணியுங் காலை.
3
   
 
2944கூர்த்து உராய், உவப்பின் மூழ்கிக்
  கொழுந்தவன் உண்ட ஞானம்,
போர்த்து உராய் உமிழ்வதே போல்,
  பெரும் பயன் எவர்க்கும் ஆக,
சீர்த்து உராய் நாட்கள் தோறும்
  தே மொழி வாயால் கூற,
நீர்த்து உராய் எழீஇய, அந் நாடு
  நிகர் இல கேழ்த்தது, அம்மா!
4
   
சொந்த நாடு திரும்ப சூசைக்கு வானவன் அறிவித்தல்
 
2945வினைப் பகை ஒழிந்த யாரும்,
  மெய்ம் மறை விளைவு காண,
எனைப் பகல் தோறும் வீயா
  இன்பம் உற்று உவந்த போழ்தில்,
சுனைப் பகைக் கோடை முற்றி,
  துதைந்த பைங் கூழ் காய்ந்து அன்ன,
முனைப் பகைத் தன்மைத்து, அன்னார்
  முரிய உற்றது, சொல்வாம்; ஆல்.
5
   
 
2946வான் இருந்து எவணும் ஆள்வோன,்
  வளனிடத்து ஏவுகின்ற
தேன் இருந்து அலர் சொல் வானோன்,
  “திரு மகற் கொல்ல ஓர்ந்தான்
தான் இருந்து ஒழிந்தான். ஈண்டே
  தாயொடு மகவும் கூட்டிக்
கான் இருந்து அலர் கோலோய்!
  முன் கடிந்த நாடு அடைதி“ என்றான்.
6
   
 
2947பணி மொழி பனிந்து, தாயும்
  பாலனும் உறையுள் சென்று,
மணி மொழித் தேவ தூது
  வகுத்தவை, வளனே கூற,
அணி மொழி இளவல், “நன்று“என்று,
  அயனம்-ஓர்ந்து, எவர்க்கும் கூறா,
துணி மொழி உறுதியாகச்
  சொல்லினான் மதுப் பெய் கோலான்.
7
   
 
2948“வரை எனத் துயரில் போல்மின்;
  வாருதி நாடி ஓடும்
திரை என இறைவற் சேர்மின்;
  தீ என அகல்மின் தீய;
நுரை என வாழ்க்கை காண்மின்;
  நோய் என உயிரைக் காமின்;
கரை எனக் கதியை வெஃகுமின்;
  கசடு அறு நெறி இது“ - என்றான்.
8
   
இரவிமாபுரத்தார் துயரம்
 
2949பண், தீண்டில் ஏங்குதல் போல்,
  அன்பும் பூசல் பரவும் எனா,
கண் தீண்டி மருட்டிய கார்
  இரவின் நாப்பண், கரந்தது போல்,
விண் தீண்டி ஆடு கொடி
  மாட நல் ஊர் விட்டு அகன்று,
புண் தீண்டி ஆற்றும் மருந்து
  ஒத்த நீரார், போதல் உற்றார்.
9
   
 
2950நதி தள்ளி, நீந்து அறியா,
  சுழி பட்டார் போல், நைந்து, எசித்தார்
பதி தள்ளிப் போவது அறிந்து,
  ‘அயர்வார்‘ என்று உள் பரிந்து இரங்கி,
‘கதி தள்ளி நடு நிற்பார்,
  கயவர் என, பின் தேறி, வளன்,
‘மதி தள்ளி இடும் அன்பின்
  பகை, நன்று‘ என்றே, வழி நடந்தான்.
10
   
மக்களின் புலம்பல்
 
2951ஊர் ஆழி அகன்று இவர் போம்
  துயர்த் தீப் பட்டு என்று உருச் சிவப்ப,
நீர் ஆழி அகன்று இரவி
  தோன்றி, மூவர் நீங்கினர் என்று
ஈர் ஆழி உள் கவிழ்ந்த
  கலம் ஒத்து, “அந்தோ!“ என்று அலறி,
பேர் ஆழி ஒத்த நகர்
  புலம்பும் ஓதை பெரிது அன்றோ.
11
   
 
2952“பொய் மறுத்தீர்; புரை மறுத்தீர்,
  மொய்த்த கொன் நூல் புகைந்து உளம் கொள்
மை மறுத்தீர்; மறை உரைத்தீர்;
  பிள்ளையைத் தாய் மறுத்து என்னக்
கை மறுத்தீர்; போய் ஒளித்தீர்;
  அந்தோ! என்னக் கை மறுத்து,
மெய் மறுத்து ஈர் துயர் ஆற்றாது
  உயிர் நீத்து அன்ன மெய் மறந்தார்.
12
   
 
2953“இன்று ஒளித்த சுடரொடு, முச்
  சுடராம் நீவிர், இரா இருட்கண்
நின்று ஒளித்த திறம் என்னோ?
  எம்கண் தீதின் நிலை தானோ?
குன்று ஒளித்த மணி ஒத்தீர்,
  அந்தோ!“ என்னக் குழைந்து அலறி,
கன்று ஒளித்த கறவை அனார்
  உளைந்து, விம்மிக் கலுழ்கின்றார்.
13
   
 
2954“வரை நாட்டி நீர் கடைந்து, ஆங்கு
  அமுதும் நஞ்சும் வந்தன என்று
உரை நாட்டி, உண்டு என முன்
  கதையில் கேட்டேம். ஒண் தவம் செய்
கரை நாட்டி, அறக் கடலாம்
  இவர்தம் அன்பின் கனிவு உண்டாய்,
விரை நாட்டில் அகன்று, இடரால்
  உண்டாம் நஞ்சின் விளைவு“ என்பார்.
14
   
 
2955“கான் சுரக்கும் இள முல்லை
  நட்டு, பொன்னால் கடை கோலி,
வான் சுரக்கும் பனி மாலைப்
  பந்தர், முத்த மணல் பாய்த்தி,
தேன் சுரக்கும் நீர் ஊட்டி
  வளர்த்த பூங்காத் தீய்ந்து அறவோ
மீன் சுரக்கும் இரா ஒளித்துப்
  போதீர் நம்மை விட்டு? என்பார்.
15
   
 
2956“தாள் எழுந்த கஞ்சம் எஞ்சக்
  கதிர் போய், நாளைத் தான் உவப்பக்
கோள் எழுந்த தேர் எழுமே;
  நீா,் போய் நெஞ்சும் குடைந்து அழுந்தும்,
வாள் எழுந்த புழை புழுங்கும்
  பெரும் புண் ஆறி மகிழ்வதற்கு, எந்
நாள,் எழுந்த நுமைக் காணக்
  கடவேம்? அந்தோ! நாம்!“ என்பார்.
16
   
 
2957“அன்பு உகுக்கும் கண்ணீரே
  அன்பிற்கு ஆற்றாப் பெருந் தளை என்று,
இன்பு உகுக்கும் ஓர் இரு செல்
  கூறாது, அந்தோ, இராவு ஒளித்தீர்.
துன்பு உகுக்கும் கான் துறும் கால்,
  துணை இல் மஞ்ஞைத் துயர் கண்டு,
நன்பு உகுக்கும் நெஞ்சு உருகி,
  இரங்கீர் கொல்லோ நமக்கு!“ என்பார்.
17
   
திருக் குடும்பத்தாரைத்தெடிச் செல்லுதல்
 
2958“கூண்டு உண்டாம் குஞ்சு அகலாது
  ஓம்பும் பல் புள் குலமும், கார்
கீண்டு உண்டாம் இடிக்கு அஞ்சும்
  பிடியைத் தாங்கும் கெழுங் கரியும்
ஆண்டு உண்டாம் கான் துறுங்கால்
  காண்பீர்; காண்கில், ஆதரவு அற்று
ஈண்டு உண்டாம் நமை நினைமின்“
  என்பார்; ஆஅ! தகாது என்பார்.
18
   
 
2959சீல நீர்க் கரு முகில்கள்
  மின்னி ஆர்த்துச் செய் அரவும்,
நீல நீர்க் கடல் அரவும்
  எஞ்ச எஞ்சி நெடிது அழுதார்;
சால் நீர்க் கடல் மடையைத்
  திறந்தாற் போல, தணந்தாரை,
கோல நீர்க் கடலாம் அந்
  நகர் நீத்து, ஈட்டம் கொடு தொடர்ந்தார்.
19
   
சோலையில் ஓலம்
 
2960தேன் ஆர் தெளி ஆர் திரு ஆர் மொழியார்
போனார். உயிர் பின் உடல் போவது என,
கான் ஆர் வழி போவம் என, கடலும்
வான் ஆர் கனமும் கலி மங்குவன.
20
   
மயிலும் குயிலும் அழுதல்
 
2961மிக்கார் துயர் கண்டு, அன மேன்மை இலார்
நக்கார் என, முல்லைகள் நக்கு அலரப்
புக்கார் பொழில்; தோகை மயில், புடையில்
தொக்கார் அனை அத் துயர் ஆலுவன.
21
   
 
2962பயில் உண்ட நரம்பு இளகும் பரிசின்,
மயிலும் அகவ, சிறை வண்டும் அழ,
அயிலும் துயர் ஆய்ந்து, தகாதது என,
குயிலும் குயில்கின்று குரங்குவன.
22
   
மக்கள் இயற்கையை விளித்துப் புலம்பல்
 
2963“மயில்காள், அளிகாள், வரிகாள், சிவல்காள்,
குயில்காள், கிளிகாள், கொடிகாள்! உரையீர்,
எயில் காள வனத்து இணை எஞ்ச, நல்லோர்
வெயில் காளம் மறைந்து என மேவு இடமே.
23
   
 
2964வரை ஈர் புனலே, மழை ஈர் வரையே,
விரை ஈரம் அறா விரி பூந் தடமே,
சுரை ஈர மலர்த் தொடை சூழ் பொழிலே,
உரையீர் உயிரின் உயிர் உள் உழியே“ .
24
   
மூவரின் திருவடித்தம் கண்டு மகிழ்தல்
 
2965உருள் தேர் வழி ஒண் கொடி ஆடும் என,
மருள் தேர் வழி அற்று மனம் தளர,
அருள் தேர் வழி ஆயினரை, எவணும்,
பொருள் தேர் வழி தேடினர் போல் துறுவார்.
25
   
 
2966விண்டார் அது விள்ளிய ம் பொழில் போய்,
‘தண் தார் தகை தேர் தயை தாங்கிய மார்பு
உண்டார் அவர் போம் உழியோ இது‘ என,
கண்டார் கமலக் கழல் அம் சுவடே.
26
   
 
2967“எல்லோ, விதுவோ, உடுவோ இவை ஓர்
வில்லோடு உறும் ஓர் நகையோ விரி நூல்
சொல்லோடு அடையாச் சுடர் செய் சிறுவன்
புல் ஓர் அடி போம் சுவடே இது!“ என்பார்.
27
   
 
2968“உண்மைச் சுருதிக் கொழு கொம்பு உருவாள்,
பெண்மைப் பெரிது ஆய விளக்கு அனையாள்,
தண்மைக் கனம் நேர் தயையாள் அவள் போய்,
மண் வைத்தன மன் அடியே இது“ - என்பார்.
28
   
 
2969“அருள் வீங்கிய மார்பு அணி ஈர் அறனே,
தெருள் வீங்கிய நூல் துறையே, திரு நூல்
பொருள் வீங்கிய போதகன் ஏகி, மலர்ச்
சுருள் வீங்கிய கால் சுவடே இது,-என்பார்.
29
   
 
2970அடி காண் உளி ஆர் உயிர் கண்டது என,
கொடி காண் மலரும், குளிர் கொம்பர் உயர்
முடி கான் மலரும். முளி நீர் மலரும்,
கடி கான் மலர் அம் கழல் மேல் அணிவார்.
30
   
 
2971“பூக் காவலன் ஆய பொலம் தவனே,
நீக்காது உனை நேடிய எம் தொடர்பைத்
தூக்காமையினோ, தொடராமையினோ,
நோக்காது எமை நூக்குபு போதி என்பார்.
31
   
 
2972“இனி யார் உயிர் தேற்றுவர்? ஈர்த்து உயிர் கொல்
துனி ,யார் புரிவு ஓர்ந்து துடைத்திடுவார்?
தனி ,யார் வினை வென்று தகை பெறுவார்?
‘கனி ஆரும் இந் நாடு, எரி காயும்‘என்பார்.
32
   
 
2973“திரை போல் இடர் வந்து திரண்டன கால்,
வரை போன்மினிர் என்று, வகுத்தனையே;
நுரை போல் உயிர் பொங்க, நுகர்ந்த அழற்கு
இரை போல் உருகும் கல்லும்!“ என்று அயர்வார்.
33
   
 
2974அயர்வார், உரும் ஏற்றின் அரற்றினராய்த்
துயர்வார்;; இரு கண் மழை தூவி அழ
மயர்வார்; மெலிவார்; மனம் ஓங்கிய பின்,
பெயர்வாா,் நசை உள் பெயரா தொடர்வார்.
34
   
மக்களின் துன்பத்தை மூவரும், காட்சியிற் காணுதல்
 
2975பேர் வளர் அன்பின் மிக்கார்,
  பிரியுங் கால், தம்மில் தேறின்,
கூர் வளர் அழலைத் தூண்டிக்
  கொந்தல் போல், உரையில் பொங்கும்
சூர் வளர் தன்மைத்து உள்ளம்
  சுடும் என ஒளித்த மூவர்,
ஆர் வளர் துயர் கொண்டு, இஃது
  ஆங்கு ஆகி, நீடு அகன்று போனார்.
35
   
 
2976மாண் நெறி வளர்ந்த அன்பின்
  மனம் ததை அருள் மிக்கார்க்கும்,
சேண் நெறி உணர்வினார்க்கும்
  சேண் நிலை; ஆக. அன்னார்
வாள் நெறி குடைந்த நெஞ்சில்
  வருந்தி ஆங்கு ஆய யாவும்,
சேண் நெறி அகன்ற மூவர்,
  சென்று கண்டு அன்ன கண்டார்.
36
   
திருமகணை வேண்டுதல்
 
2977தேன் அக மலர்ந்த கோலான், தெளி உளத்து இரங்கி, “ஐயா,
கானகம் அன்னார் நண்ணின், காய் துயர் காமின்“ என்ன,
வானகம் மிளிர் மீன் வாகை, மணி முகில் ஊர்தி கொண்டு,
பால் நக அருள் கொள் தெய்வப் பாலனை, வேண்டினானே.
37
   
திருமகன் அரசியால் மக்கள் தேறுத் திரும்புதல்
 
2978முச் சகம் முழு வெண் திங்கள்
  முக் குடை நிழற்றி ஆளும்
எச் சகம் அனைத்தும் ஏத்தும்
  இளவல் செய் ஆசி தன்னால்,
கச்சு அகம் வீக்கினாற் போல்,
  கான் நெறி உணர்வு அற்று, அன்னார்
நச்சு அகம் அமிர்தம் ஆக,
  நயக் கடல் அமிழ்ந்தினாரே.
38
   
 
2979கரை உடைத்து அரவு உய்த்து ஓடும்
  கடல் கரை இட்டதே போல்,
புரை உடைத்தவன் செய் ஏவல்
  புணர்ந்த நீள் கூலம் ஆக,
திரை உடைத் தொடர்பின் வந்தார்
  திறன் உணர்கிலராய் நின்றே,
உரை உடைத்து உயர்ந்த ஞானத்து
  ஒளி எழீஇத் தேறினாரே.
39
   
 
2980“தீயவும் நல்ல ஆமே திருவுளம் ஆக வந்தால்;
தூயவும் தீய ஆமே துகள் வழி வந்தால்“ என்னா,
காய உள் மெலிந்த நெஞ்சார் கருத்திடைக் குளிரத் தேறி,
பாய உள் மலி இன்பால் தம் பதி நகர் மீள்தல் சூழ்ந்தார்:
40
   
 
2981“அம்மையே, மகவே, வாய்ந்த
  அருந் தவத்து இறைவ, சூசை!
நும்மையே உயிர் என்று ஆக
  நுதலி, நும் நிழலில் வாழ்ந்த
நம்மையே அகன்று போதீர்;
  நட்பு இடை அகலாது, அன்பின்
செம்மையே பேண்மின்!“ என்னா,
  சென்று மீண்டு எவரும் போனார்.
41
   
மூவரும் எசித்து நாட்டைக் கடந்து செல்லுதல்
 
2982இப் புறத்து இனையன இவரும் எல்லையின்,
முப் புறத்து இணை இல மூவர், எங்கணும்
ஒப்பு உறத் துணை இல உவகை செய்து, எசித்து
அப் புறத்து அமரர் சூழ் அணுகிப் போயினார்.
42
   
 
2983தீயினர் உறவு எனச் சிறுகும் பல் நெறி
போயினா,் அமரர் சூழ் புடை புடைப் புணர்ந்து
ஆயினர், அருத்தியோடு, ஈர் ஐயாயிரர்,
தூயினர், துயர்க்கு அறத் தொடர்பின் போயினார்.
43
   
மருத நிலக்காட்சி
 
2984விண் உளே பிறந்தது ஓர் தளத்தின், விண்ணவர்,
பின் உளே பிறந்தது ஓர் இசைகள் பாடிய,
மண் உளே பிறந்தது ஓர் வடுவை மாற்றினர்,
தன் உளே பிறந்தது ஓர் தடத்தின் நண்ணினார்.
44
   
 
2985மைக் கொடு குவளைக் கண் நோக்கி, வாரிசக்
கைக் கொடு விளித்த பூம் பொய்கை கண்டு உளி,
“பொய்க் கொடு மருட்டவோ?“என்று போயினார்
மெய்க் கொடு சுருதி நூல் விளைத்த விஞ்சையார்.
45
   
 
2986தூவி அம் சிறை அனம் தொடர் குடை செய,
கூவி அம் குயில் யாழ் குளிற, மஞ்ஞைகள்
ஓவியம் சிறை விரித்து உவப்பில் ஆட, முன்
பூவியம் துணர்த் தடம் பொருந்திப் போயினார்.
46
   
 
2987ஆவி நோய் செயும் புரை அழிக்கும் மூவர் போய்,
காவி நோய் செயும் தம கழற்கு நோய் செயா,
பூவில் நோய் செயும் அளி, குடைந்த பூ மதுத்
தூவி நோய் செயும் தடம், துணரிற்று ஆயதே.
47
   
முல்லைக் காட்சி
 
2988தனம் கிடந்து எனக் கிளி தாங்கு இலாத் தினைப்
புனம் கிடந்தன பரப்பு அகன்று போய், துளிக்
கனம் கிடந்து எனக் கரி கிடந்த காடும் போய்,
வனம் கிடந்தன வழி மருவிற்று ஆயதே.
48
   
பாலை நிலம் பன்மலர் பூத்தல்
 
2989தீர் அருஞ் சிலையின் நாண் முறுக்கின் சீர்மையால்,
பேர் அருந் தவத்தொடு பிறந்த ஞானம் போல்
சோர் அருங் கருத்தினோர் தொடர்ந்த தம் கதி
நோ,் அருஞ் சுரத்திடை நெகிழ்வு இல் ஆயினார்.
49
   
 
2990நீர் முகத்து இரவி கை நீட்டி, பொற்பு உறப்
பார் முகத்து இரவு இருள் படத்தை நீத்து என,
சூர் முகத்து அழல் துயர் துடைத்து, மூவர் வந்து,
ஏர் முகத்து எழுந்த கான் இலங்கிற்று ஆயதே.
50
   
 
2991புடம் புனைந்து இரும்பு செம் பொன்னின் தன்மை ஆம்
இடம் புனைந்து இட்டது ஓர் இரதத்தால் என்பார்;
தடம் புனைந்து இவர் வர, தழன்ற கான், அலர்ப்
படம் புனைந்து எழுதிய பரப்பிற்று ஆயதே.
51
   
 
2992சொல் திறத்து ஒரு கணத்து உலகம் தோற்றி, முன்
பல் திறத்து எழில் நலம் படைத்த பான்மையால்,
முன் திறத்து அழன்ற கான், மூவர் கண்டு உளி,
பொன் திறத்து அரிதினின் பொறித்தது ஆயதே.
52
   
 
2993மை மறுத்து அலர் அணி வனம் கண்டு, ‘ஆ!‘எனக்
கை மறுத்து அதிசயித்து அலர்ந்த காந்தளை,
பை மறுத்து அவிழ் அரா என்று பாய் மயில்,
பொய் மறுத்து இனம் நக, நாணிப் போயதே.
53
   
 
2994தோகையின் எருத்து எனத் துணர் விள் காசை கண்டு,
ஆகையின், மயில் ஒளித்து ஆக உட்கு உறீஇ
ஏகையின் வண்டு கண்டு, இளைய முல்லைகள்
ஓகையின் நக்கு என, எயிறு உடைந்தவே.
54
   
 
2995“மிகை உடைத் தகவினார் மெலிவு கண்டு உளி,
பகை உடைத் தகவு இலார் பரிசின் நக்கதோ?
நகை உடைத்து உகுக்குவம்!“ என்ன நண்ணி, மென்
முகை உடைத்து உதிர்த்தன மொய்த்த வண்டு அரோ.
55
   
இயற்கை் களிப்பின் இடையே மூவர்
 
2996பைச் சுடர் மரகதப் பலகை பாய்த்தி, மேல்
ஐச் சுடர் மணிப் பரப்பு ஆக, பைம் புல் மேல்
நொய்ச் சுடர் அலர்த் தடம் நொய்து என்று ஏகினார்
முச் சுடர் நடந்து என நடந்த மூவரே.
56
   
 
2997உள் முழுது அருள் முகத்து உகளத் தோற்றிய
விண் முழுது இறைஞ்சு எழில் காண வேட்கையால்,
கண் முழுது உடல் பெறக் கலாப மஞ்ஞைகள்
தண் முழுது அலர்ந்த கான் ததும்பி ஆடும் ஆல்.
57
   
 
2998கற்று எனத் தகாது உரைத்து அன்பு கைக் கொள
பற்று எனப் பொருளினைப் பற்றும் பூரியர்
அற்று என, தும்பிகள் அலர்க்கண் நட்பினைச்
சொற்று எனக் கனைந்து, சூழ் துணர் குடைந்தவே.
58
   
 
2999சாற்றின உரைகள் பொய்த்து, அன்பின் தன்மையால்
போற்றின பொருள் அறப் புலம்பும் புல்லர் போல்,
ஊற்று என வடிந்த தேன் உண்டு, மாறலின்
தூற்றின அருகு அளி துவைப்பப் போயினார்.
59
   
 
3000வல் உருத் தகவினார் கடந்த வாய் எலாம்
தொல் உருத் தகவனம் சுட அழன்றது ஆல்,
வில் உருக் கணவனை விழித்த கண்ணினால்
பல் உருக் காண்டு இல பாவை பான்மையே.
60
   
பாலை வனத்தில் வாழ்ந்த முனிவர்களைத் திருமகன் குறிய படுதல்
 
3001நண்பு அகம் மலர்ந்த மூவா,்
  நடு வனம் சென்று, ஓர் நாளில்,
ஒண் பகல் நெற்றி போதில்,
  உயர் திடர் அகட்டில் வேய்ந்த
சண்பக நிழலின் வைகி,
  தரணி ஆள் இளவல், நல் யாழ்
பண்பு அகல் உரை கொண்டு, அம் பூப்
  பதும வாய், மலர்ந்து சொன்னான்.
61
   
 
3002“நேர் அலர் மறுத்துச் செந் தீ
  நிறைகினும், பல கால் வைகி,
நேர் அலர் வனத்தில் நாமே
  நிகழ்ந்து அடி வைத்த பாலால்,
நேரலர் நேரும், நேரா
  நீள் நிதி துஞ்சும் கோயில்
நேர், அலர் இக் கான், துஞ்சும்
  நெடுந் தவத்து அறங்கள் தாமே.
62
   
 
3003“பேர் நலம் பொறித்த கான,் தேன்
  பெயர்க்கும்-ஓர் ஊற்றது ஆகி,
ஆர் நலம் பொலிதல் நோக்கீர்;
  ஆய இவ் வனப்பும் வாட்டி,
பார் நலம் துறந்து, இங்கு ஆர்ந்த
  படிவர் எண் இன்றி வைகி,
சேர் நலம் விரும்பி, வானோர்
  சென்று, வான் ஒக்கும் கானே.
63
   
 
3004“கா உளன் ஆகி, என் மேல்
  கருத்தில், வான் குடியன்; வேத
நா உளன்; தவத்தின் வாய்ந்த
  நல்வு உளன்; வினை நீர் நீந்தி,
மேவு உளன் வளர்ந்து, எந் நாளும்
  வேண்டும்-ஊண் காகம் உய்ப்ப,
பாவுளன் என்பான், நீடப்
  பறம்பு அடி முழை உள் வாழ்வான்.
64
   
 
3005“இவாவு இயல் அடியின் நீழல்
  என,அடும் கசடு நீங்கா
அவா இயல் அரிந்த தன்மைத்து,
  அமரர் ஒத்து என, கடாம் பெய்
உவா இயல் முதல் பல் மாவும்,
  உவந்து அவற்கு ஏவல் செய்ய,
தவா இயல் முனிவர்க்கு எல்லாம்
  தலைவன் என்று, ஒளி மிக்கு, ஆவான்.
65
   
 
3006“வேள் அரிது அமர் போர் வென்று,
  வியன்ற கான் எய்தி பேய்கள்
கோள் அரி உழுவை மற்றக்
  கொடிய மா உருவில் தோன்றி
நீள் அரிது யுத்தத்து எஞ்சா,
  நெடிய அம் மலைக்கண், நோன்பின்
வாள் அரிது ஏந்தி வெல்வான்
  வரம் கொள் அந்தோனி என்பான்.
66
   
 
3007‘நீரின் பால் இரவி மூழ்கி,
  நினைத்தது ஓர் தியானம் விள்ளா,
தேரின் பால் இரவி மீண்டும்
  தீர்கிலன,் உணர்ந்த காட்சி,
காரின் பால் உயர்ந்த வீட்டில்
  கனிந்து உறை காட்சி ஒப்ப,
பாரின் பால் வரை முகட்டு ஓர்
  படர் விளக்கு ஆக நிற்பான்.
67
   
 
3008“மீ இரவு அரசற் சூழ்ந்த
  மீன் என, முனிவர் ஓர் மூ -
வாயிரர் தொடர, நெஞ்சத்து
  அவா அறத் தணித்து நிற்ப,
பாயிர உரையின், நாதற்
  பார்த்து அவண் இலரியோனே
தேய் இரவு அரசின் வெற்றிச்
  சிலையின்-நாண் முறுக்கின் போல்வான்.
68
   
 
3009“உரி வளர் தவத்தின் சால்பின்
  உறுத்த மெய் உருவம் தானே,
எரி வளர் உலை கொன்று ஈன்ற
  இலைப் பலியாக மாறி,
அரி வளர் அங்கண், கொன்ற
  ஐம் பொறி புதைத்து, பல் கால்
சொரி வளர் வானும் காணாச்
  சோண மா முனிவன் நோற்பான்.
69
   
 
3010“உறப் பகை நுழை வாய் என்று,
  ஐந்து உட் பகை தவமே காக்க,
புறப் பகைப் பகழி தாங்கும்
  பொற் பரம் ஆகச் சீலம்
பெற, பகை செகுக்கும் வை வாட்
  பெற்றியின் விரதம் ஓச்சி,
அறப் பகை வெறியை வென்று ஆங்கு,
  அயோதரன் நெடிது நோற்பான்.
70
   
 
3011“அவா என மதத்தின் சீற்றத்து,
  அறிவு என் எப் பாகன் வீழ்த்த,
உவா என உடலைக் கைக்கொண்டு,
  ஊக்கம் நல் தோட்டி மாற்றி,
இவா அன தவக் கவட்டை
  இட்டு இறா விரதத் தூணின்
மவாவன முனிவன் சேர்த்தி,
  வானமும் வியப்பச் செய்வான்.
71
   
 
3012“வீட்டு அரு நாட்டிற்கு ஏற்ற
  விழுப் பொருள் ஆக நாடி,
ஈட்டு அருஞ் சீலக் குப்பை
  ஏற்றி, நல் உயிரோடு ஆக்கை
பூட்டு அரும் ஏராய்ப் பூட்டிப்
  புரை நசைச் சேற்றுள் செல்லா,
வாட்டு அருந் தவத்தின் பண்டி,
  மதித்தகன் கதியில் சேர்ப்பான்.
72
   
 
3013“தேன் நிமிர் முல்லையாகத்
  திருந்து அறத் தொகுதி நட்டு,
நூல் நிமிர் தவத்தின் காத்த
  நொறில் பொறி வேலி கோலி,
மேல் நிமிர் ஒழுக்க நீரை
  விட்டு, அருள் மணலைப் பாய்த்தி,
வான் நிமிர் உலகில் நாறும்
  வனத்தின், ஆங்கு, அசோரன் பூப்பான்.
73
   
 
3014“ஆற்றிய தவச் செந் தீயில்
  ஐம் பொறி இரும்பு இட்டு ஊதி,
ஏற்றிய தெருளின் ஞான
  இரதம் இட்டு, ஆய பைம் பொன்,
தேற்றிய மறை அச்சு ஆக,
  சீல நல் மணிகள் சேர்த்தி,
போற்றிய தேவ மார்பில்
  புரோதரன் அணிப் பூண் ஆவான்.
74
   
 
3015“மீன் என விளங்கி, துஞ்சும்
  மின் என வாழ்க்கை நோக்கி,
‘யான் எனது‘என்னும் பற்றல்
  யாவும் அற்று, எண் ஒன்று இன்றி,
வான் என விளங்க இக் கான்
  வருந்தி என் அடியை வைத்தேன்
நான் என உணர்ந்து, மொய்ப்பார்
  நல் தவத்து உயர்ந்த நீரார்.
75
   
 
3016“போர் பொருள் பலவும் நாடிப்
  போதல் ஆண் தொழிலாய், போகில்,
ஏர் பொருள் நாணம் நாடு இல்
  இருத்தல் பெண் தொழில் அது ஆகி,
தேர் பொருள் அறங்கள் நாடிச்
  செய்த ஆண் துறவின் ஊங்கும்,
பேர் பொருள் வாழ்க்கை நாடாப்
  பெண் துறவு, அரியது அன்றோ?
76
   
 
3017“தீயவும் நலமும் உள்ளின்,
  தேறிய பெண்ணின், தேறல்
ஆயவும் அரிதே; முன்னர்
  அழிந்த நாண் வேலி தாவி,
ஏயவும் காமத்து ஆழ்ந்த
  எசிசிய மரியாள், பின்னர்
தூயவும் அரிதில் ஓர்ந்து,
  துறந்து இவண் நெடு நாள் நிற்பாள்.
77
   
 
3018“கண் மையின், மற்று யாரும்
  கண்ட தன் பிழை, காண்பார் ஆர்?
நுண்மையின் உற்ற பாவம்
  நுதலி, உள் தானே கண்ட
உண்மையின் உணர்ந்த ஊக்கம்
  உளத்து இறகு ஆக எய்தி,
பெண்மையின் போர்வை நாணம்
  பிரிவு இலள் போர்த்து நிற்பாள்.
78
   
 
3019“காமமே பறவைத் தேர் மேல்
  கசடு எனும் பாலை சேர்ந்தாள்,
வீமமே பறவைத் தேர் மேல்
  விளை தவக் குறிஞ்சி, ஞான
வாமமே பறவைத் தேர் மேல்
  வளர் அற முல்லை சேர்ந்து, என்
நாமமே பறவைத் தேர் மேல்
  நயப்ப வான் நாட்டைச் சேர்வாள்.
79
   
 
3020“இனைவரும் பலரும், எண் இல்
  ஈட்டமும் வேறும் ஆகி,
நனை வரும் பொழிலின் நிற்பார்.
  நயப்பொடு நெடுங்கால், எஞ்சாக்
கனை வரும் திரண்ட தீயின்
  கனன்ற கான் நோற்று, ஈங்கு என்னை
அனைவரும் புகழும் ஓதை
  அலையும் நீல் முகிலும் ஆற்றா.
80
   
தவநெறி நின்றார் பெருமை
 
3021“துறவினால், உடலின் ஆக்கை
  துறந்தது ஓர் உயிர்கள் ஒப்பார்;
உறவினால், அன்பின் மிக்கோர்,
  உயிர்க்கு எலாம் உடல்கள் ஒப்பார்;
அறவினா எழீஇய தன்மைத்து
  அருள் மலி அமரர் ஒப்பார்;
நறவினால் அலர்ந்த கானும்
  நலத்தில் வான் உலகு ஒப்பு ஆமே.
81
   
 
3022“உள்ளிய தவ நவ்வு ஏறி,
  ஊக்கம் நீள் மரத்தை நாட்டி,
விள்ளிய அன்பும் உட்கும்
  வியன் இரு பாயும் பாய்த்தி,
தெள்ளிய வரக் கால் வீச,
  தியானம் மீகாமன் ஆக,
அள்ளிய வினை நீர் ஈர்ந்து ஊர்ந்து,
  அரிதில் வீட்டு உலகில் சேர்வார்.
82
   
 
3023“வவ்விய தவம் கெட்டு அம் மா
  மரக்கலம் கவிழ்ந்ததே போல்,
அவ்விய முந்நீர் மூழ்கி
  அழுந்துவர் பலர்; இவர்க்குள்
கவ்விய உணர்வின் தெப்பம்
  கண்ணின் நீர்க் கடலை நீந்தி
செவ்விய கதியின் வீட்டைச்
  சேர்வர் ஓர் இருவர்“என்றான்.
83
   
 
3024மெய்க் குடத்து அமிர்து உண்டு அன்ன
  விரித்த சொல் செவியின் மாந்தி,
“பைக் குடத்து அனைய தீயார்
  பான்மை என்றாலும், சுட்ட
அக் குடத்து அழிவு தீர்த்தல்
  அரிது என, தவம் நீத்தாரும்,
இக் குடத்து அனைய தேற்றார்“
  என்றனன்-மதுப் பெய் கோலான்.
84
   
வணவர் திருமகனை வணங்கிப் பாடுதல்
 
3025உரைத்தன மதுத் துறை உரைகள் கேட்டலும்,
  உளத்து எழும் உவப்பொடு, வரைவு இலா, புடை
நிரைத்தன இருள் கெட வெயிலை ஆக்கிய
  நிறத்து, அணி உருக் கொடு அமரர் கோக் கணம்
வரைத்து அன குருக் கதிர் இரவி நீர்க், கடல்
  மறுத்து எழ உடுக் கணம் விழுவ போல், திரை
இரைத்தன கடல் கலி மெலிய ஆர்த்து, உடல்
  எடுத்து உலகு அளித்தவன் தொழுது சாற்றினார்;
85
   
 
3026தகைத் தகு வனப்பு எழ மணிகள் ஈட்டுபு,
  தளிர்த்தன திருத் தகு நகரின் வாழ்க்கையும்
நகைத் தகு, வனத்து உரி வளம் இது ஆக்கலின்,
  நசைக் கொடு பகைத்தன பொறிகள் மாய்த்து உளி,
மிகைத் தகு தலத்து உரு வெருவு காட்டினும்,
  விளைத்தன வரத்து அருள் மலிய, வீட்டு உயர்
திகைத் தகு நலத்து எழு வனம் இது ஆய், புகழ்
  திளைத்தன, கவித் தொடை நிகரும் மாட்சியோ.
86
   
 
3027“கொலைப் படு செருப் படை கொடுமை போல், கொலை
  குணித்து உயிர் செகுத்து அன, பொறிகள் ஆக்கிய
உலைப் படு நெருப்பினும் அழலு வேட்கையை,
  உறுத்திய தவத்தினோடு அவிய மாற்றலின்,
நிலைப் படு வனத்து அழல் திரளும் மாற்றுபு,
  நிரைப் பட அறத் தொகை வளரும் மாட்சியோடு,
இலைப் படு நிழல் கொடு, மலரு பூத் திரள்
  இசைத்தது ஓர் பொழிற்கு இணை வனம் இது, ஏத்தவோ?
87
   
 
3028“உடுத்து அன உடல் கொடு உலகு காத்து அருள்,
  ஒளி கெழு நிலத்தினர் தொழுத பார்த்திப,
எடுத்தன மலர்ப் பத நலம் இது ஆய், திரள்
  இருட்டு இரவு ஒளிப் பகல் அனைய நீர்த்தலும்,
கடுத்தன பொறித் தழல் குளிர மீட்டலும்,
  கடுத்து அடும் விடத்தினை அமிர்தம் ஆக்கலும்,
விடுத்தன கடல் திரை நிலையின் வாய்த்தலும்,
  விருப்பு எழ அடுத்த நின் அடியின் ஆக்கமே.
88
   
 
3029விதுப்பட உருப்படும் அமரர், பாத் தொடை
  விளைத்து, இவை இசைத்து, அடி தொழுது வாழ்த்து உளி,
சதுப்பட வகுப்பொடு பரவு அது ஆய், பல
  சதத்து அணி ஒருப்பட, எம வினா பட,
புதுப்பட வனப்பொடும் அரிதில் ஆக்கிய
  புழைக் குழல் குரல் கலம் உளரி, வாய்த்தன
மதுப்பட இசைப்படும் இனிய பாப் புகழ்
  வகுத்தனர், துதித்தனர், தொழுது வாழ்த்தினார்.
89
   
 
3030வலித்தன கலக் குரல் தொனிகள் மாற்றிட,
  மலர்த் துறை அடுத்து அளி இனிதில் ஆர்த்தலும்,
ஒலித்தன மடக் குயில் இசைகள் நீர்த்தலும்,
  ஒளிச் சிறை புடைத்து எனை பறவை பார்த்தலும்,
பொலித்தன விழித்தழை விரிய நோக்கிய
  பொறிக் கெழு மயில் திரள் அரிய கூத்து எழ,
கலித்தன இடைத் தொறும் உவமை நீக்கிய
  களிப்பொடு, வனப்பு எழு வனம் அது ஆக்கமே.
90
   
மூவரும் கானகத்தைக் கடத்தல்
 
3031“எழுக“என்றனன் ஏழ் உலகு ஆள்பவன்
மெழுக விட்டு அன மென் மலர்ப் பூந் தடம்
ஒழுக, மூவரும் உள் உவப்பின் கடல்
முழுக ஏகுபு, மொய் வனம் நீங்கினார்.
91
   
 
3032நீங்கினார் என, தம்மை நினைத்திலார்,
ஏங்கி ஆகுலத் தீயில் எரிந்து என,
பாங்கினார் இவர் பாதம் அகன்ற கான்,
வீங்கி ஆர் அழல், தொல்லையின், மேய்ந்ததே.
92
   
 
3033நெட்டு இடைத் தடம் பற்பல நீந்தினர்,
மொட்டு இடைக் கனை வண்டு இனம் மொய்த்த தண்
மட்டு இடைக் குளிர் காட்டினுள், வான் கதிர்
பட்டு, இடைக் கடல் பாய்ந்து எனப் போயினார்.
93
   
காட்டுவழி
 
3034பகையது உள் என, பாந்தளின் செல்வு என,
நகைய மின் என, நங்கையர் நெஞ்சு எனத்
தகையது ஓர் நெறி செம்மை தகாது உறும்
திகை அது எய்தினர், செம்மை உளத்தினார்.
94
   
 
3035தேம் கொள் பூ மலி நீண் திமிசு உச்சி மேல்
தூங்கு ஒள் வாவல் இறால் அற, தூய் மடல்
ஓங்கு ஒள் பூகம் நல் முத்து உதிர் ஓங்கலை,
தாம், கொள, தடம் சாய்ந்து, அருகு அண்மினார்.
95
   
 
3036ஆலம் விற்பன கண் பொது ஆட்டியார்
ஞாலம் விற்பன வாய்த் துகிர் நட்பு என,
ஏலம் விற்பன வெற்பு அடி ஈட்டிய,
கோலம் விற்பன காஞ்சிரக் கொள்கையே.
96
   
 
3037வல அகம் கிரி வைத்து நடந்து போய்,
கலவ மஞ்ஞை களிப்பு உற தீம் குழல்
உலவ, ஆயர், நிரைக் கொடு, உழைக் குலம்
குலவ, முல்லை நிலம் கொள ஏகினார்.
97
   
 
3038கரவ நெஞ்சு உணர் காமம், ஓர் மூரலே
பரவக் காட்டின பான்மையில், அங்கணில்
குரவம், நீண்ட குடங்கை கரந்த, பூ ,
விரவ நக்க முல்லை, விரை காட்டும் ஆல்.
98
   
 
3039முகை அணிந்து அளி மொய் புவி கூந்தலின்
வகை அணிந்த முல்லைப் பினர், மற்று அதன்
தகை அணிந்த முகம் தரும் யூதர் தம்
திகை அணிந்த சிலம்பு எதிர் எய்தினார்.
99
   
சோலை மணலில் இளைப்பாறுதல்
 
3040புக்க யாவரும் போக்கு அரிதாய், எழில்
தக்கது ஓர் பொழில், சாய்ந்து, அடி நோய் அற,
மிக்க தேன் துளி செய் நளிர் மேவி வந்து,
ஒக்க வெண் மணல் திண்ணையில் ஓங்கினார்.
100
   
மோரியாமலை கண்டதிருமகன்
 
3041பொதிர் தரும் பூந் தரு பொலிந்து நாறி, ஆங்கு,
எதிர் தரும் மோரியம் என்னும் வெற்பு கண்டு,
உதிர் தரும் மலர் மது ஒப்பக் கண்ணின் நீர்,
கதிர் தரும் முகத்து, உக, இளவல் காட்டினான்.
101
   
 
3042தீ உமிழ் உலையில் அம் கோதை தீந்து என,
நோய் உமிழ் நீர் என நுதலி, நொந்த தாய்,
“வீ உமிழ் தேனினும் விழைந்த தீம் சொலாய்,
நீ உமிழ் நீர் உக நிலைமை யாது என்றாள்.
102
   
 
3043“மின்னிய கார் குழல் தாங்கி, வீழ் புனல்
துன்னிய கலை எனச் சூட்டி, ஆங்கு எதிர்
கன்னிய திரு மலை காண்மின்; அம் மலை
உன்னிய திறத்து அழுது உயிர் நொந்தேன்“ - என்றான்.
103
   
ஆபிராம் பலி கொடுத்த செய்தி
 
3044நொய்ய ஆய் மது மலர் நொதுத்த கோலினான்,
வெய்ய ஆய் முகில் தவழ் வெற்பில் யாது என,
உய்ய வாய் நமக்கு இட உதித்த நாயகன்,
செய்ய வாய் அம்புயம் திறந்து, செப்பினான்:
104
   
 
3045“தேன் நலம் தோய் தயை சேர்த்தி, ஆபிராம்,
கான் நலம் தோய் தவத்து ஈன்ற காதலன்,
வான் நலம் தோய் மகிழ்வு உய்த்த மைந்தன் ஆய்,
‘நால் நலம் தோய் திரு நகுலன்-என்பவே.
105
   
 
3046“கலை புறங் கண்ட சேய் கனி வளர்ந்த பின்,
‘கொலை புறங்கண்ட வாள் கொண்டு கொல் என,
அலை புறங்கண்ட நோய், தாதைக்கு, ஆண்டகை,
உலை புறங்கண்ட தீ ஒப்பச் செப்பினான்.
106
   
 
3047“அப் பணி உயிர் அறுத்து அருந்திற்று ஆயினும்,
வெப்பு அணி பணி பணிந்து இயற்ற, வெய்துஎன,
இப் பணி இல்லவட்கு இசைக்கு இலா, ஆபிரான்
செப்பு அணி மலை, மகற் சேர்த்தி, நாடினான்.
107
   
 
3048“நாக மேல் ஏறினர், நாதற்கு அப் பலி
ஆக, மேல், இருவர், ஓர் பீடம் ஆக்கினர்.
வேக, வேல் விறகு அழல் மெய்யன் ஏந்துபு,
சாகவே பலி எவண்?‘ என்று சாற்றினான்.
108
   
 
3049“பொன்னையே காட்டிய தழலைப் போன்று, நோய்
தன்னையே காட்டிய தருமன், இப் பலிக்கு
உன்னையே காட்டினன்‘ என்று உடைப் பிதா,
மின்னையே காட்டிய மகனை விள்ளினான்.
109
   
 
3050“அயிர் தந்தால், உளம் அறுத்து அமுங்கக் கைப்பு உறும்
துயர் தந்தால், அரிய ஓர் தொடர்பைத் தோற்றுவித்து,
உயிர் தந்தான் அவற்கு நான் உயிர் தந்தால் எனோ,
அயர் தந்தாய்! என மகன் வலித்துச் சொல்லினான்.
110
   
 
3051தாதை பெய் கண் மழை ஓம்பி, தாள் மிசை
கோதை பெய்து இறைஞ்சி, ‘என் குறை பொறுப்ப!‘என்று,
ஓதை பெய் முகில் அறும் உச்சிப் பீட மேல்
மேதை பெய் திறத்து எழீஇ, விழுக் கை கூப்பினான்.
111
   
 
3052‘செவ்விய திரு உளம் என்று தேறி, உள்
அவ்வியம் அறுத்து, அரிது ஓங்கும் ஆபிராம்,
கவ்விய சிகைத் தலை கவிழ்ந்து வீழ்ந்து அற,
வவ்விய வாள் கொடு மகனை வீசினான்.
112
   
 
3053“வீசின வாளொடு வினைக் கை தாங்குபு,
கூசின உலகு எலாம் களிப்ப, கோது அறுத்து,
ஏசு இல மகிழ்வு உறல் இருவர் சால்பு என
ஆசியை இறைவன் அன்று அளவு இல் நல்கினான்.
113
   
ஆபிரகாம் பலி தேவ பலியின் முன்னடையாளம்
 
3054“மன் உயிர் அளிப்ப, நான் மற்று ஓர் வெற்பு மேல்
என் உயிர் அளிப்பல் என்று, இவை அங்கு ஆயவே,
பின் உயிர் அளிக்கும் கால் பெற்று அலாது எனக்கு
இன் உயிர் இலை“ என அழுது இயம்பினான்.
114
   
சூசையின் துன்பம்
 
3055கரை கொன்ற தயை கண்டு,
  கலுழ்ந்து இரங்கி, தவத்து இறைவன்,
“புரை கொன்ற அவ் இருவர்
  புணர் துணிவே சால்பு என்றால்,
நிரை கொன்ற மன் உயிர்கள்
  நீ அளிப்ப இறப்பான் ஏன்
திரை கொன்ற அருள் விளைக்கும்
  திரு வல்லோய்?“ என்று அழுதான்.
115
   
திருமகன் தன் பலிபிடமாகிய சிலுவையை நினைத்தல்
 
3056“துப்பும், காய் எரி என்றால்,
  சுடுங் கொல்லோ? சொற்றிய ஓர்
ஒப்பும், காட்டிய பொருளும்
  ஒன்று எனவோ? அவன் நிகராய்த்
தப்பும் காசினி அளிக்கச்
  சாகுதல் என்பால்“ என்னச்
செப்பும் கால், எமக்கு இரங்கித்,
  திரு மைந்தன், மீண்டு உரைத்தான்.
116
   
 
3057“அந் நாளும் வந்து ஒழிய,
  அக மகிழ்வு ஈங்கு எனக்கு உண்டோ?
பல் நாளும் நான் இறப்பப்
  பற்றிய நீள் மரந் தன்னை
இந் நாளும் காணாதால்,
  இடர்க்கு எல்லை இலை“ என்றான்,
பின் நாளும் துணை அற்றுப்
  பெருகு தயைக் கடல் அன்னோன்.
117
   
வானவர் சிலுவையைக் காட்டுதல்
 
3058மண் விளக்கும் சுடர் அன்னோன்
  வருத்தம் அற, வானவர் தம்
விண் விளக்கும் கதிர் திரட்டி
  மேல் வனைந்த ஓர் சிலுவை
கண் விளக்கும் பகலினும் செங்
  கதிர் பரப்பக் காட்டினர் ஆல்
பண் விளக்கும் தே மொழியான்,
  பரிவு அற்று, உள் உவந்து, உரைத்தான்.
118
   
திருமகன் சிலுவையைப் புகழ்ந்து தாவிப் பற்றுதல்
 
3059“ஏர் அணியே, என் அன்பே,
  என் அன்பிற்கு இரதம் இதே,
சீர் அணியே, உயர் வீட்டைத்
  திறக்கும் கோல் இதே; இன்பத்து
தார் அணியே, எங்கணும் நான்
  ஆண்டு ஓச்சும் செங்கோலே
பேர் அணியே, எனது உயிரின்
  பேர் உயிரே, வாழியவே!
119
   
 
3060என்றான் தான்; அன்பு விசை
  ஏந்திய தன் உடலும் எழீஇச்
சென்றான் தான், அச் சிலுவை
  திருமார்பில் சேர்த்து அணைத்தான்;
நின்றான் தான், அமுது ஆழி
  நீர் முழுகி இன்பத்துக்
குன்றான் தான், சுடர் குன்றக்
  கொழுங் கதிர் சூழ் பரப்பினான் ஆல்.
120
   
துயர்த்தவிர்ந்து மூவரும் வழிநடத்தல்
 
3061அலை ஈன்ற செஞ் சுடர் போல்
  ஆங்கு எழும் சேய் உயிர் செல்ல,
கொலை ஈன்ற வெற்று உடம்பாய்,
  கூற்றும் இலாது, அசைவும் இலாது,
இலை ஈன்ற பூங் கொடி கொள்
  எழும் தவனும், தாயும், அழுது
உலை ஈன்ற தீ உருகும்
  ஓவியங்கள் என, நின்றார்.
121
   
 
3062அழுத அன்னார் துயர் நோக்கி,
  அருள் கடலோன் மீண்டு இறங்கி,
முழுது அன்னார் உவப்ப ஒரு
  மூரலை இட்டு, “இயங்க“எனத்,
தொழுது அன்னார், தடம் கொண்டு,
  துதி பாடி, நெடும் வழி போய்,
பழுது அன்னார் மனத்தின் இருள்
  பாய் சுரம் செல் வெற்பு அடைந்தார்.
122
   
மலைக் காட்சி
 
3063தூசு அனை மின்னி ஆடும் துளி முகில் தவழ்ந்து சூழக்,
காசு அனை முகைத்த சாந்தம் கலந்த நீண் திமிசு பூத்து,
பூசனை எனக் கற்பூரம் புழுகுடன் நானம் மற்றது
ஓசனை கமழ் அக் குன்றத்து உதய மேல் ஏறினாரே.
123
   
 
3064சால் வளர் முகிலின் வேழம் சந்தனம் மேய்ந்து சீற,
வால் வளர் கலாபம் நீட்டி மயில் இனம் உலவி ஆல,
நூல் வளர் கலனின் தூங்கி நுரை வளர் அருவி ஓடக்,
கால் வளர் உழைகள் பாயக் காவதம் ஒலிக்கும் குன்றே.
124
   
 
3065வருக்கையின் கனிகள் தோறும்
  வானரம் உலவிப் பாய,
செருக் கையின் குருதி போலச் சிந்து தேன்
  பெருக்கு உற்று ஓடி
பருக்கையின் விளங்கும் தெண் நீர்
  பரப்பும் ஆறு இடத்து இட்டு ஏகி
தருக் கையின் வனைந்த மாலைச்
  சாரல்கண் போயினாரே.
125
   
 
3066சண்பகம் மலர்ந்த சோலை
  சந்தனம் நிழற்றும் சோலை
விண் பகல் ஒளிப்பச் சூழ்ந்து,
  விழைந்து இவர் எவரும் பேணும்
நண்பு அகம் மலிதல் போல,
  நாள் மலர் பொதுளும் வாவி,
ஒண் பகல் நெற்றி போதில்
  ஒத்து ஒளிர் மூவர் போனார்.
126
   
 
3067விண் முழுது இறைஞ்சும் தக்கோர்
  விரி கரை வதிந்த போழ்தில்,
பண் முழுது ஒழிக்கும் தீம் பாப்
  பறவை சூழ் இமிழின் பாட,
மண் முழுது அன்றி, வானும்,
  ஆற்று அரும் வனப்புக் காண,
கண் முழுது உடம்பு உற்று அன்ன
  கயம் எலாம் பூத்தது அன்றோ.
127
   
வேடவர்கள் வரவேற்றல்
 
3068எல்லினைக் காண மாலைக்கு
  இருள் குணக்கு எதிர்ந்ததே போல்,
வில்லினைச் சுமந்த கையால்
  வேடரும் தழைத் தூசு ஏந்தி,
அல்லினைப் போல் நல்லாரும்
  அடைந்து, அரிது அருள் மீக் கூற,
செல்லினைப் பொறுக்கும் குன்றின்
  தீம் கனி பரப்பினாரே.
128
   
 
3069சூழ் அகத்து அன்பு காட்ட,
  சூசை, வந்தவரை நோக்கி,
“வாழ் அகத்து, எவர், இக் குன்றில்
  வைகும் நீர்?“ என்று கேட்ப,
காழகச் சேற்றுள் தீம் பால்
  கலந்து என நரை கொள் மூப்பன்
மேழகக் குரலில் சொன்னான்,
  வெண் மணல் திண்ணை சேர்ந்தே:
129
   
வேடர்களின் மூப்பன் மக்கபேயரைப் பற்றிக் கூறுதல்
 
3070“களித்தன முகத்தின் பொய்யாக்
  கனிகள் தந்து எழும் இக் குன்றத்து
ஒளித்தன மக்கபேயர்க்கு
  உதவிய குலத்தினாரைத்,
துளித்தன மதுவின் தண் அம்
  சுள்ளியின் நிழல் கீழ் சாய்ந்து ஆண்டு
அளித்தன தலைவன் நானே,
  அவிர் முகத்து இரவி போன்றீர்!
130
   
 
3071“பாங்கு, ஒளித் துணர் விட்டு ஓங்கும்
  படர்ந்த பல் காவு கவ்வி,
ஆங்கு ஒளித்து அலர்ந்த பொய்கை
  அடுத்து, அகல் பரப்பு நோக்கீர்;
ஈங்கு ஒளித்து, உளத்தில் ஓங்கி,
  எதிர் பகை செகுத்துப், பின் நாள்,
வீங்கு ஒளித் தடக் கை வீரர்
  வென்றன இடம் அது ஆமே.
131
   
 
3072“வானில் நின்று இழிந்த வாளால்
  மன்னவன் பொருங் கால், வான்தன்
பானில் நின்று இழிந்த வில் போல்
  படர் சுடர் செயப், பாய்மா மேல்,
மேனி நின்று இழிந்த கற்றை
  விண்ணவர் ஐவர், வில்லால்,
ஊனில் நின்று இழிந்த செந்நீர்
  உகக், கடல் படையை, வென்றார்.
132
   
மூப்பனின் ஐயவினா
 
3073“பன்னிய படலையாய், மேல்
  பண்பு எலாம் அடைந்த நாதன்
துன்னிய காலை, துன்னாத்
  தோன்றிய அரிது ஒன்று உண்டோ?
கன்னிய குலத்தோர் ஏற்றும்
  கடவுளைப் பணிந்த போழ்தே,
பின்னிய முறையால் இங்கண்
  பிணிகள் நாம் பெறல் ஏது?“ என்றான்.
133
   
சூசையின் மறுமொழி
 
3074இன் வளர் உவப்பின் கேட்ட
  இவை மறுத்து உரைக்கும் சூசை:
“கொன் வளர் பொருளின் செல்வம்
  கூ இடத்து எறிந்ததே போல்,
பொன் வளர் திரு மிக்கு ஊர்தல்
  பூரியர் கண்ணும் கண்டால்,
மின் வளர் உருவின் தோன்றி
  விளி நலம் விரும்பல் வேண்டா.
134
   
 
3075“சலத்து எலா நிலையும் ஒன்றோ?
  தருக்கு எலாம் கனியும் ஒன்றோ?
நிலத்து எலாம் விளையும் ஒன்றோ?
  நிலை பல நமக்கும் உண்டு ஆய்,
குலத்து எலாம் பொதுவாய் நிற்கும்
  கொழுந் தகவு அறத்தின் மாட்சி
புலத்து எலாம் ஒல்லும். ஒல்லின்,
  பொருள் இலாக் குறை ஒன்று உண்டோ?
135
   
 
3076“கார் முகத்து அலரும் முல்லை,
  கதிர் முகத்து அலரும் கஞ்சம்
சீர் முகத்து அலரும் நெஞ்சின்
  சிலர் துணிந்து அறத்தைச் செய்வார்.
சூர் முகத்து அலரும் ஊக்கத்
  துணிவொடு சிலரே நோற்பார்.
பார் முகத்து ஆசு ஒன்று அல்லால்,
  பயன்படாது இல்லை ஒன்றே.
136
   
 
3077“மெய் மறந்து உணர்வைக் கொல்லும்
  வெறி மது உண்ணா, கள்வைக்
கை மறந்து, ஒழுகி, காதல்
  கசடு உறப் பொறிகள் காட்டும்
பொய் மறந்து, இன்னாது எல்லாம்
  போக்கி, நல் அறமே பூண்டு,
மை மறம் தவிர்ந்தீர் ஆகில்,
  வானில் மேல் குலமாய் வாழ்வீர்.
137
   
 
3078“பிறந்த கால் குலமும் செல்வப்
  பெற்றியும் தெரிந்தார் உண்டோ?
மறம் தகாது ஒழுகும் சீரால்
  வான் திரு தகுவது என்றே
இறந்த கால், இங்கண் தேர்ந்த
  இயல்புடன், எவரும், வாழ்வார்.
சிறந்த கால் வேண்டின், வேண்டும்
  தீது அகன்ற அறத்தின் மாட்சி.
138
   
 
3079“வருணமே மக்கள் பேதம் வகுத்திடும் இங்கண் அல்லால்,
அருணமே இறந்த பின்னர் அவரவர் தமில் வேறு ஆக்கும்.
கருணமே திரியும் குன்றில் கடிது உறை நீரும் ஓர்ந்து,
தருணமே காத்துச், சீலம் தவிர்கிலீர்“ என்றான் சூசை.
139
   
வேடர் பெண்டிர் மலர் கொண்டு வருதல்
 
3080கழை இடைக் குளித்த தேன் வடிந்து என்ன,
  கனிந்து இவை வளன் விதித்திடும் கால்,
தழை இடைக் குளித்த நீல் நிற மேனித்
  தையலார் பொருக்கென ஓடி,
குழை இடைக் குளித்த குளு மது முகைகள்
  கொய்து கொய்து, இமிழ்த்த ஓர் கண்ணி
மழை இடைக் குளித்த மின் எனத் தோன்ற,
  மழை ஒத்தார் அதைக் கொணர்ந்து உய்த்தார்.
140
   
திருமகன் சிரிப்பு
 
3081“வாடும் ஓர் மலரைச் சேர்த்திய படலை
  மாலையைக் கொணரவோ, ஓடிக்
கூடும் ஓர் பயன், இதோ?“ என நக்கான்,
  குழவியாய்த் தோன்றிய நாதன்,
‘கூடும் ஓர் இணை அற்று இலங்கும் நீ ஐயா,
  கூ இல் வாடு இல மலர் அல்லால்,
வாடும் ஓர் மலரும் அன்றி, ஈங்கு, உண்டோ
  மலர்?“ என, ஒருத்தி நக்கு உரைத்தாள்.
141
   
வாடும் மலரும் வாடா மலரும்
 
3082“கோடிய கொம்பில் பூ அதோ, படரும்
  கொடி மலர் தான் கொலோ, நீரில்
ஆடிய பூவோ, வாடு இல மலர் எங்கு
  ஆவது என்று அறைதி நீ என்றாள்.
“ஆடிய தவம் என்று அடவியில் பூத்த
  அரிய கற்பு ஆதியே, மற்றக்
கோடிய குறை தீர் சீலமே வாடாக்
  கொழு மலர் ஆயின“ என்றான்.
142
   
புலனடக்கம் பற்றிய உரையாடல்
 
3083“காவி பட்டு ஒளிருங் கண்ணினார் காணி
  கற்பு; அதே, பளிங்கினும் நொய்தாய்,
ஆவி பட்டு அழுக்கு உற்று ஒழியும் என்று அறைவர்
  அரிய நூல் புலமையோர்“ என்றாள்.
ஆவி பட்டு ஒழியும் கற்பு அதே ஆகில்,
  ஆண்மை கொண்டு உறுதியே நிற்பக்,
காவி பட்டு ஒளிரும் நீண்ட கண் ஆதி
  காமின் நீர் ஐந்தையும்“ என்றான்.
143
   
 
3084“நகை எழ எதிர்ந்த இன்பம் ஐம் பொறிகள்
  நாடலின் காவலே ஆற்றாப்
பகை எழ, ஐந்தும் பரமனே முன் நாள்
  படைத்து எமக்கு அளித்தது ஏது? என்றாள்.
“பகைஎழ முனிந்து, பழுது உற எவையும்
  பருகு அழல், உமக்கு வேண்டாதோ?
நகை எழ உதவும் திறத்து அவை பேணி,
  நவை உறாக், காமின நீர்“ என்றான்.
144
   
 
3085இனையவும் பலவும் கூறிய தன்மைத்து,
  எவரும் வேறாய் மன ஊக்கம்
புனையவும் உணர்வில் தெளியவும் ஓங்கி,
  புதிது உயர் பொருப்பு எலாம் பூத்தது
அனையவும் மலர்ந்த நெஞ்சு அறம் வெஃகி,
  அடி தொழுது அனைவரும் அழப், போய்,
வனையவும் அரிய மாட்சியின் மூவர்
  வாய்ந்த அவ் வரை கடந்து அகன்றார்.
145
   
மூவரும் சோலை வழிச் செல்லுதல்
 
3086நாவியின் நறையும் பூம் பொழிலின் நாற்றமும்
வாவியின் வாசமும் மல்கி, வாய் தொறும்
மேவி, இன்பு எழ எதிர் எதிர் விருந்து செய்து
ஏவி, இன்பு உற இவர் ஏகினார் அரோ.
146
   
 
3087தேன் விளை மலர் விழி திறந்து நோக்கிய
கான் விளை கா எலாம் களிப்ப, அன்று இவர்
தான் விளை திரு எழத் தகும் தம் நாடு உறீஇ,
வான் விளை மகிழ்ச்சி உள் மலியப் போயினார்.
147
   
எரோதன் இறந்ததை இடையர் கூறுதல்
 
3088தகை மலி நாடு உறீஇத் தளிர்த்த ஓகையில்,
பகை மலி கோ மகன் ஆளும் பான்மையை
முகை மலி முல்லையார் மொழியக் கேட்டலும்,
மிகை மலி சூசை உள் வெருவினான் அரோ.
148
   
வானவர் உரையால் தேறி நசரேத்தை நெருங்குதல்
 
3089“நிலத்தில் ஆள் அரசரை ஆளும் நீதியோன்
வலத்தில், ஆள்பவன் அருள் வழங்கும்“ என்று, விண்
தலத்தில் ஆள் விடலை தூது அணுகிச், சாற்றிய
நலத்தில், ஆழ் துயர் வளன், நயப்ப, நீக்கினான்.
149
   
 
3090மாலையாய் நயம் துயர் மயங்கிச் சேர்ந்து உற,
காலை ஆய் இரவி காண் கஞ்சம் போல், அறச்
சாலையாம் நாசரெத்து என்னும் தம் நகர்
பாலை ஆய், மலர்ந்து எழப், பற்றி அண்டினார்.
150
   
நகரத்தார் வரவேற்பு
 
3091ஆடிப் பல கொடி ஆக அசையவும்,
நேடிப் பல கரம் நீட்டி, “வருக“என,
ஓடிப் பல துயர் ஓயக், கடி நகர்,
நாடிப் பல வரம் நல்கக், குறுகினார்.
151
   
 
3092வான் ஆர் குடை கொடி மல்கக், புடை புடை
வானார் வருவது காணார், அனைவரும்;
கான் ஆர் துயர் இவர் காப்பக், கடி நகர்
கான் ஆர் மலர் அடி கண்டார் புகுதுக.
152
   
 
3093தேன் தோய் முகை முகச் செல்வன் புகுதுக,
மீன் தோய் மிளிர் முடி வேய்ந்தாள் புகுதுக,
கான் தோய் கொடி வளர் கையான் புகுதுக,
வான் தோய் மகிழ்வொடு கண்டார், வடு அற.
153
   
நகரின் வரவேற்ப்பு முழக்கம்
 
3094“அறமே புகுதுக, அருளே புகுதுக,
திறமே புகுதுக, தெளி நூல் புகுதுக,
புறமே மொழி நலம் எவையும் புகுதுக
உறவே!“ என, நகர் எதிர்கொண்டு, உறுமுமே.
154
   
 
3095வளை கொள் ஒலி எழ, வயிர் கொள் ஒலி எழ,
துளை கொள் குழலொடு தொணி யாழ் ஒலி எழ,
உளை கொள் முரசொடு பலவும் ஒலி எழ,
இளை கொள் ஒலி நகர் எதிர்கொண்டு, உறுமுமே.
155
   
 
3096துன்னும் திரை அலைத் தொனியே ஒழி தர,
மின்னும் கரு முகில் ஒலியே மெலி தர,
பொன்னும் கெழு மணிப் பொலிவும் கிளை கடல்
என்னும் திருநகர் எதிர் கொண்டு உறுமுமே.
156
   
 
3097“கான் நீர் மலர் வனம் காய்ந்தால் என, முனர்
நாம் நீர் அழுது உக நம்மைப் பிரிதரப்
போனீர்; மெலி பயிர் போற்றும் துளி என,
வான் நீர் அருளிட வந்தீர் உயிர் என!
157
   
 
3098“எரி சேர் சுர வழி, எஞ்சா மதம் இழி
கரி சேர் மலை வழி, காவாது உயிர் அடும்
வரி சேர் வன வழி வந்தே, மெலிவு இல
புரி சேர் உமது அடி கண்டோம் பொலிவு உற,
158
   
 
3099“பண் தேர் மொழி உறப், பல் மாப் பணிவன;
கண் தேர் அழகு உறக், காய் கான் மலர்வன;
மண் தேர் உமது அடி வந்தே, வடு இல,
வெண் தேர் ஒழுகு இடம் விண்ணோர் ஒழுகுவார்.
159
   
 
3100“நகர் நீத்து அகலவும், நாமே, மெலிவு உறீஇ,
நிகர் நீத்து அரசு இடு நீங்காப் பகையொடு
மகர் நீத்து, அழ அழ, வாழ் நீர், அரு மகன்
புகர் நீத்து உடையினிர்!“ என்றே புகழுவார்.
160
   
முன்னுரை
 
3101ஆழி சூழ் உலகு அனைத்திலும் ஆழி ஒன்று உருட்டி,
வாழ் யாவரும் வளம் பெறத் தோன்றிய நாதன்,
ஏழ் யாக்கையோடு ஈங்கு, இரும் அருள் எழும் தன்மை
சூழ் யாப்பு உள தொடையினுள் யாப்பு உறும் பாலோ?
1
   
 
3102வளி கொண்டு ஓடிய மரக்கலம் போயின வழியும்,
களி கொண்டு ஓதிமம் ககன மேல் பறந்தன வழியும்
உளி கொண்டு ஓதினும், உலகு இடை வதிந்த நாள் நாதன்,
அளி கொண்டு, ஓகையில் அயர்ந்தவை அடைந்தவர் உண்டோ?
2
   
நசரேத்தூர்ச் சிறுமனையில் திருக்குடும்பம்
 
3103மதி எழுந்த தாள் மடந்தையும், மலர்க் கொடித் தவனும்,
கதி எழுந்த வான் கணங்களும் அன்றி, ஈங்கு உண்டோ?
நிதி எழுந்த மேல் நிலம் நிகர் சிறந்த அம் மனையின்
பதி எழுந்த கால் ஆயவை கண்ணிய பாலார்?
3
   
 
3104ஏமம் சால் உலகு இணை மனை மல்கிய கருணைத்
தாமம், சால்பொடு தான் அதில் அடங்கு இல புரண்டு.
நாமம் சால் அருள் நாடு எலாம் வெள்ளமாய் மொய்ப்ப,
வாமம் சால் நில மன்னவன் தோன்றினான் புறத்தே.
4
   
 
3105ஒளிப் படப் படும் கேவணம் நிறை மணி ஒப்ப,
இளிப் படப் படும் எம் குறை தீர்ப்ப, ஈங்கு உதித்தோன்
வெளிப் படப், படும் விழி மழை வழி இழி கருணைத்
துளிப் படப், படும் சுட்டு எரி துகள் துயர் ஒருங்கே.
5
   
மூவரும் எருசேலம் கோவிலுக்குச் செல்லுதல்
 
3106அருளின் முற்றிய பன்னிரு வயது உளன், அம் பொன்
பொருளின் முற்றிய புரிசை சூழ் எருசல நகரில்,
தெருளின் முற்றிய திரு மணிக் கோயில் தான் செல்ல,
இருளின் முற்றிய இரவு அறக் கதிர் என எழுந்தான்.
6
   
 
3107பூவும் வாசமும், பொதுளிய தாமமும் மணியும்,
காவும் நீழலும், காயமும் உயிரும் போல், பிரியா
மேவும் கேண்மையின் மிடைந்த கைத்தாதையும் தாயும்,
நீவும் தாளினை நீங்கிலர், பின் செலச் சென்றார்.
7
   
 
3108விண் உளோர் இவண் மிடைந்து
  உற அருத்தி செய்து, அங்கண்
மண் உளோர் உற வழி என நின்ற
  அக் கோயில்,
புண் உளோர் மருந்து ஒத்தன
  புதல்வன் காண் பொழுதில்,
பண் உள் ஓதையின், பனி மொழி
  மது உகப் பணித்தான்;
8
   
யாகோபு கனவிற்கண்ட ஏணி பற்றித் திருமகன் கூறுதல்
 
3109“மண் மேல் அடியை வைத்து, எந்தை, வலக் கையால்
விண் மேல் விருப்பொடு தாங்க விண்ணவர் வந்து
எண் மேல் இழிந்து எழுந்து உலவ, இயாக்கோபன்
கண் மேல் அறிவில் இங்கு ஏணி கண்டனன் ஆல்.
9
   
 
3110“சீர் மீது ஆடிய காட்சிச் சிறப்பு உள்ளி
கார் மீது ஆடிய கொடி கொள் கவின் சிகரத்து,
ஏர் மீது ஆடிய எரி வாய் மணி குயிற்றி,
பார் மீது ஆடிய, படர் இவ் ஆலயமே.
10
   
 
3111“முன்னான் இவை இவண் காண்கால், ‘முற்று உவப்ப,
பின் நாள் உனது இனத்து உதிக்கும் பிள்ளை அருள்
தன்னால் உனக்கு ஒளி தளிர்ப்பக், கண்டது எலாம்
அன்னான் முடிக்குவன்“ என்றான் அன்று இறையோன்.
11
   
 
3112“அன்ன பிள்ளை நான்; அன்ன ஏணியும் நான்
இன்ன நகரிடை இறக்கும் மரம் தானே;
சொன்ன முறையில், ஈர் உலகும் தொடர்ந்து ஒன்றாய்
மன்ன, மகிழ்வு உற மாள்வேன் நான் என்றான்.
12
   
 
3113வேல் நேர் நுழைந்த சொல் விளைத்த புண் இடு நீர்
போல், நேர் இல அயர்ந்து இருவர் புலம்பி அழ,
தேன் நேர் மலர் எனச் சிறுவன் நகைத்து, “உலகம்
வான் நேர் மகிழ்வது ஆகாதோ வளர்ந்து?“ என்றான்.
13
   
கோவிலில் வேண்டுதல்
 
3114எஞ்சாத் திருஉளம் இது என்று உளம் தேறி,
மஞ்சு ஆர் வரை என மணிப் பூம் புகைக் கோயில்,
துஞ்சாத் தயை மகன் தொடர்ந்து, புக்கு, நம்மை
நெஞ்சு ஆர் அருளொடு நினைத்தே வேண்டினர் ஆல்.
14
   
திருமகன் பிரிவு
 
3115விரிந்தன கடல் திரை மயங்கி வீழ்ந்து எனத்
திரிந்தன மனுத் திரள் செறுத்துப் போகையில்,
அரிந்து அன மனத்து அஞர் அழுங்க, ஆங்கு இவர்ப்
பிரிந்தனன், யாண்டையும் பிரிவு இலான் அரோ.
15
   
சூசையும் மரியும் திருமகனைத் தேடி அழுதல்
 
3116ஏர் வழி மாதருள் இவள் சென்று, ஆடவர்
சேர் வழி அருந்தவன் செல்ல, வேறு போய்,
ஓர் வழி சேர்ந்த பின், “உயிர் எங்கு, எங்கு!“என,
நீர் வழி முகம் கெட நேடி, அஞ்சினார்.
16
   
 
3117“உன்னிடை இலைகொல்?“என்று இவளும் ஓதினாள்
“நின்னிடை இலைகொல்?“என்று அவனும் நேடினான்
“என்னிடை இலை“என இருவர் சாற்றினார்;
மினிடை அசனி பட்டு என வெந்து ஏங்கினார்.
17
   
 
3118பத்திய மணிவிழப் படர்ந்த கேவணம்
ஒத்து, இயல் உயிர் மணி மகன் ஒளித்தலால்,
நித்திய நய நலம் நீங்கி வாடினார்,
தத்திய உயிரில் வெற்று உடம்பின் தன்மையார்.
18
   
 
3119குன்று ஒளித்து அகல் கதிர் ஒத்த கொள்கையான்,
அன்று ஒளித்தவன் தனைத் தேடற்கு ஆங்கு வேண்டும்
என்று, ஒளித்தன உயிர் யாக்கை மீண்டு உறீஇ,
கன்று ஒளித்து உளி கரை கறவை மானினார்.
19
   
 
3120செல் அகத்து அனைத்திலும் சென்று தேடினார்;
தொல் அகத்து உறவினோர் தொடர்ந்து நாடினார்;
வல் அகத்து உலகம் ஆள் மகவைக் காண்கிலார்!
கல் அகத்தாரும் உள் கலங்க விம்மினார்:
20
   
 
3121“தாயும் நீ, சேயும் நீ, தவறி நாம் செயும்
தீயும் நீ பொறுப்பவன், சிறுவ, எம் விழி
பாயும் நீருடன் உயிர் பறிப்பவோ, இதோ,
போயும் நீ அறாத் துயர் புகுத்தினாய்“ என்பார்.
21
   
 
3122“எல்லை இல் எங்கணும் இருந்து, அடங்கு இலோய்!
ஒல்லையில் வரும் பொழுது ஒன்று இலோய்! எலாம்
தொல்லையில் அறிந்து உளோய்! துதைந்த எம் துயர்
வல்லையில் அறாது, எமை மறந்தியோ?“ என்பார்.
22
   
 
3123இனையவும் பலவும் ஓர்ந்து இரிந்து உறும் துயர்
சினையவும் பொறாது, ஒளி திரையில் தாழ்ந்து இருள்
புனையவும், இரா எலாம் இசலிப், பொங்கு அலை
அனையவும் பட வளர் அஞரில் விம்மினார்.
23
   
மரியாளும் சூசையும் மாறி மாறிப் புலம்புதல்
 
3124“கருணாகரனே, களி ஆலயனே, கவின் ஆர் மகனே,
மருள் நான் அஞர் மா கடலில் வருந்தக், கரையேற்றிட நீ
அருள் நாடி, அகன்று உறைகின்ற அகமே அருளாய் கொல்லோ?
தெருள் நாயகனே!“ என்றாள், திறம்பா அருவிக் கண்ணாள்.
24
   
 
3125“இறந்தான் கொல்லோ, முதல் ஈறு
  இல்லோன்? தனது ஆர் தயையை
மறந்தான் கொல்லோ, மறவா அன்போன்?
  கடல் சூழ் வையம்
துறந்தான் கொல்லோ, உன்னை என்னைத்
  துறந்தோன்? இதுவே
அறம் தான் கொல்லோ? மகனே! அறைக“ என்று
  அழுதான் வளனே.
25
   
 
3126“மெய் ஆர் தவமே திருவின்
  திருவே ஆம் என்போன், வெந் தீ
மொய் ஆர் வனமே முடுகி,
  முனி ஆயினனோ?“ என்றாள்.
‘பொய் ஆர் புரையே துடைப்பப்
  பொன்றல் காதலித்தோன்,
ஐ ஆர் உயிரே, அவன், இன்று
  அளித்தான் கொல்லோ?“ என்றான்.
26
   
 
3127“தேறா அன்போன் தேறச்,
  சிலுவை கொணர வானோர்,
‘ஆறா மொய்ம்பால் நான் ஈங்கு
  ஆண்டு ஓச்சிய கோல் இதுவே;
மாறா நலம் செய் இதன் மேல்
  மாய்ந்தால் அல்லால், வாழ் நாள்
ஈறாக வருந்தினனே‘ என்றான்
  அன்றோ?“ என்றாள்.
27
   
 
3128“வையத்து அடி வைத்து, உயர் வான்
  மன்னன் கையில் சாய,
பொய் அற்ற அருந் தவன், முன்,
  பொலியக் கண்ட ஏணி,
உய்யத் தரணி, நானே
  உலக்கும் சிலுவைக்கு ஒப்பு ஆய்,
மெய் அற்று இவணே விளிவேன்‘
  என்றான் அன்றோ?“ என்றான்.
28
   
 
3129“பற்றார் பழையம் பழியைப்
  பரிவான் படுவாய் என்னாக்,
கற்று ஆரணம் காட்டிய காட்சி
  அறிந்து அன்றோ, உன்னைப்
பெற்று ஆயினதே? பிரியா
  அன்போய், பெயரா முன் வந்து
உற்று, ஆசி எனக்கு உரைத்தால்
  ஆகாதேயோ?“ என்றாள்.
29
   
 
3130“இன்றோ, அன்றோ, என்றோ
  ஒருநாள், எம்மைக் காக்க,
மென் தோடு ஒன்று ஒள் உடல்
  வீவு உற வேண்டியதேல், இருவர்க்கு
ஒன்றோடு ஒன்று ஒத்தன அன்பு
  உளதேல், மகன் நீய் பிரியாது,
உன் தோள் என் தோள் மரம்
  ஒன்று உறல் ஆகாதோ?“ என்றான்.
30
   
 
3131“மடவாரில் அனந்தம் மலிந்து
  மகிழ்ந்த மடந்தை‘ என,
தட வானில் உயர்ந்த தளங்கள்,
  தணிந்து மொழிந்தனிரே:
நடவா முறையால் நடலை
  நரலை நடுவே, அடியாள்,
கடவாமல் அலைந்து கலங்குப
  கண்டிலிரோ?“ என்றாள்.
31
   
 
3132“அம் சேர் அம் சீர் அடை இத் தலம்
  அண்டியகால், அடியேற்கு
‘அஞ்சேல், அஞ்சேல், நயம் ஆம் என
  ஆடின வானவனே,
அஞ்சு ஏழ் அஞ்சு ஏழ் கடலான் ஒவ்வாத
  அஞர்க் கடல் ஆழ்ந்து,
அம் சேர் எஞ்சா நயன் இங்கண்
  அகன்றதுவே!“ என்றான்.
32
   
வானவர் தேற்றுதல்
 
3133“என்றான் இவனும், மென் தாள் அவளும்
  என்றாள்; என்று, ஆங்கு
ஒன்றா உரை கொண்டு புலம்பினர்
  உள் துயர் கண்டதனால்,
குன்றா நய வானவரும் குழைந்து, ஆ
  குலித்தால் என நின்று
அன்று ஆர் இடர் ஆற, இவற்கும்
  அவட்கும் அறைந்தனர் ஆல்:
33
   
 
3134“துயர் ஏன்? அஞர் ஏன்? உளம் ஆழ்ந்து உறு
  தொல் நய மாக் கடலின்
பெயரேல், பெயரேல். பெயராப்
  பெருமைத் தனையன் பிரிவால்
மயர் ஏன், மயர் ஏன்? வளனே,
  மரியே, மருள் நெஞ்சு உருகி
அயரேல், அயரேல். மகன் மாண்டிலன்,
  மாண்டிலன்“ என்று அறைந்தார்.
34
   
 
3135ஐயன் போக, அவர் எய்திய ஆகுலம், அச் சொல்லால்
ஐயம் போகத், தணிவு ஆம் எனினும், அன்று ஆங்கு இரவி
மையல் போக வரினும், “மனமே விளக்கும் சுடர் ஆம்
மெய்யன் போக, ஒளி போய், விழி போயிற்று!“ என்று அழுதார்.
35
   
நகருக்கு அப்பால் சூசை திருமகனைத் தேடி அழுதல்
 
3136செம் மா மணியின் செல்வனைத் தாய் தேடி, அகல்
அம் மா நகர்க்கண், அழுது அன்றே அலையும் கால்,
பை மா மலர் பெய் கா வழியில், பரிவு ஓங்க,
தம் மா மகனைத் துருவுகின்றான்த்தவ வல்லான்.
36
   
 
3137புள்ளும் புலம்ப, வண்டும் அழப், பூவும் நைய
விள்ளுங் காவும் வினை கொண்டு உள் மெலிந்து இரங்க,
கொள்ளும் துயரில், கண்டது எலாம், கொழுந் தவன், தான்
உள்ளும் தன்மைத்து உருகி அழ வினாவினனே:
37
   
ஆற்றங்கரையில்
 
3138“என் தன் சிந்தை போல் நிலையாது இரி சிந்தே,
நின் தன் சிந்தை போல், கடல் நான் நேடி அலைந்து,
இன்று என் சிந்தை எஞ்ச, இவண், அருள் கடலோன்,
உன் தன் சிந்தை எழ, உற்றானோ?“ என்றான்.
38
   
பூங்காவனத்தில்
 
3139“கண்ணோ மணியோ கமழ் மதுப் பெய் மலர்க் காவே,
பண்ணோ தேனோ பணிந்து இணையாக் கனி சொல்லான்,
உள் நோய் அருந்து என் உளம் வாட, அருள் பூத்து,
விண் ஓர் மலர் போல், வேய்ந்தனனோ இவண்?“ என்றான்.
39
   
சோலையில்
 
3140“என் நெஞ்சு ஒப்ப இரு பொழுதும் இருள் பொழிலே,
உன் நெஞ்சு ஒப்ப உயிர் எல்லாம் நிழற்றி, அருள்
தன் நெஞ்சு ஒப்பத் தந்து ஓம்பும் தயைப் பெருமான்
நின் நெஞ்சு ஒப்ப நிறுத்தினையேல், காட்டு“ என்றான்.
40
   
தடாக்க் கரையில்
 
3141“இரவில் குன்றும் இதழ்க் கஞ்சம் அணி தடமே,
இரவிக்கு ஒப்பான், இரு பொழுதும் மலர் மரைத் தாள்
விரவிற்கு இங்கண் வைத்து, உன்னை மேவி, அருள்
புரவித், தெண் தீம் புனல் உண்டானோ?“ என்றான்.
41
   
மலையருகில்
 
3142“மனம் ஒத்து உயர் மா மலையே, நீ தலையில் அணி
கனம் ஒத்து இருள் என் மனம் கரியக், கனைத்து இழி உன்
புனம் ஒத்து இழி சீர் துறந்து, உன் கண் புக்கனனோ,
இனம் ஒத்து இலன், நேர் இலன், ஓர் என்பான்?“ என்றான்.
42
   
பறவைகளை நோக்கி
 
3143“பொன் ஆர் சிறகால் புட்கரம் சேர் புள் குலமே,
என் ஆர் உயிரே, என் நெஞ்சத்து ஆள் அரசே,
ஒன்னார் மனம் நேர் வனம் சேர உற்ற வழி,
அன்னான் நாட, அறையீரோ எனக்கு?“ என்றான்.
43
   
 
3144“குயிலே, கிளியே, வெண் குருகே, கோ அனமே,
மயிலே, இணைந்து, என் மனம் குளிர்ப்ப, அன்னான் கொள்
எயிலே வனமே இயம்பீரேல், போய், அவற்கே,
துயிலே இல நான் துஞ்சுவன் என்பீர்“ என்றான்.
44
   
இயற்கையும் இசைந்து அழுதல்
 
3145கிளியோடு அன்னம் அழக், குயில்கள் கெழுமி அழ,
அளியோடு அலரும் அழப், புனலும் விம்மி அழ,
வளியோடு அம் கா வருந்தி அழ, வளன் அழுவான்,
“களியோடு அகன்றான் என் காவலன்“என்ற ஓதையினான்.
45
   
 
3146பொய்யா வரத்தோன் போய்ப் பூங்காத் திரியும் கால்,
கையால் நையும் கஞ்சம் என வாடிய தாய்,
உய்யா வண்ணத்து உருகி, நகர்த் தெரு எல்லாம்
நையா அன்பால் நாடிக், காணாது அழுவாள்.
46
   
தாமரைத் தடாகத்தின் அருகில் சென்று
மகனை நினைந்து மரியன்னை மறுகி அழுதல்
 
3147படமே எழுதிப் படர் பங்கயம் நீண்
தடமே அணுகி, தடம் மேவிய பூ
வடமே இணையா மகவு உள்ளினள், அவ்
இடமே, மது இன் இசை தாய் அறைவாள்:
47
   
 
3148“தேன் தோய் மலர் தீட்டிய சேடு உலவிக்
கான் தோய் தடமே, களி கூர்ந்து உனை நேர்,
வான் தோய் எழில் தோய் மது மாறு இல பூத்
தான் தோய் எனது உள் தடம் ஓங்கினதே.
48
   
 
3149“பூ மாறினதோ? பொருவாப் பகையோர்
தாம் மாறு இல தாது எழில் கொய்தனரோ?
தேம் மாறு இல பூ இல தேம்பி உளம்,
வேம் ஆறு இல வெப்பொடு காய்ந்ததுவே!
49
   
 
3150“துளி மாரி இழந்த உளி காய் சுனையோ,
நளி வாசம் இழந்து அழி நை நனையோ,
களி நான் உள் இழந்து அயரக், கடிது இவ்
உளி, நீயும், இழந்து உறைவாய் மகனோ?
50
   
 
3151அன்னச் சிறை நீ, அலர் தாமரை நான்
என்னச், செறி இன்பொடு இருந்தனமே;
முன் நச்சிய தேன் முருகு இல்லது எனா,
மன்னச், சவியோய், வனம் ஏகினையோ?
51
   
 
3152“இன்பு ஈரம் அருந்தி இருந்தனையே;
அன்பு ஈரம் அகன்றொடு அகன்றனையோ?
முன்பு ஈரம் உலாம் முளரித் துணரே
பின்பு ஈரம் இலாது, அது பேர்குவதோ?
52
   
 
3153“மடல் ஒத்து அடி வாட நடந்து செலேல்,
அடல் உற்று, எனது ஆவியில், ஆண்டு, உறைவாய்!
கடல் ஒத்து, உயிர் கெட்டன, கால் அலை கொள்,
உடல் ஒத்து, இனி நான், உளையப் பெயர் ஏன்?
53
   
 
3154“தருமத்து அழலும் தகுதி தகுமோ?
உருமத்து அழலும் தழல் ஒப்பு அற, நீ
மருமத்து அழலும் வதை செய்தொடு, இதோ,
இரு மத்திரி கொண்டு எரி பற்றியதே!
54
   
 
3155“வெண்ணைக் கிரி வெந்தன போல் அழுது, என்
கண்ணைக் கிழி நீர் கடிது ஓட, நெடும்
புண்ணைக் கிழி தீயை உள் ஊற்றிய பின்
விண்ணைக் கிழி மின் என ஏகினையோ?
55
   
 
3156“இன்பு ஓதம் அமிழ்ந்தி இருந்தன கால்
உன் போது, அவியாது எரி என் உளமே
துன்பு ஓதம் உறிஇச், சுழியின் முழுக
அன்பு ஓதம் அகன்றொடு, அகன்றனையோ?
56
   
 
3157“கதிர் ஆய மணிக் கலம் ஏந்திய பால்
எதிர் ஆய அருள் கிளர் என் மகனே,
பொதிர் ஆய இருள் கதிர் போக்கு என வந்து,
அதிர் ஆய அகத் துயர் ஆற்று இலையோ?
57
   
 
3158“கயல் ஆம் விழியே, கடல் ஆம் அவனை
அயல் ஆடல் இல் ஆகி, அகன்றனனே;
இயலாத இடுக்கண் இயைந்து, இனி நான்
உயல் ஆம் வழி ஒன்று உளதேல், உரையீர்.
58
   
 
3159“மஞ்சே மருளா மதுவே குறையா
விஞ்சு ஏடு அவிழ் வீ அனை விள் முகனை,
நெஞ்சே, நனி பேண் இல, நீங்கினனே;
நஞ்சே இனி உண்டு, உண நைந்து, அழல்வாய்“ .
59
   
 
3160என்று, அத் தடம் ஓங்க இனைந்து அழுவாள்,
குன்றத்து அருவித் திரள் குன்றும் கண்ணாள்,
பொன்றத் தக நொந்து, பொறாமலும், மீண்டு
அன்று அத் தெரு யாவிலும் ஆய்ந்தனளே.
60
   
பெண்ணொருத்தி மரியன்னையிடம் துயர்க் காரணம் கேட்டல்
 
3161மீ உலாவிய மீன் முடியாள், நகர்
போய் உலாவிய போழ்து, ஒரு கோதையாள்,
“தீ உலாவிய புண் எனத் தீந்து உளத்து-
தாய், உலாவியது ஏது?“ என, அண்மினாள்.
61
   
மரியாளின் மறுமொழி
 
3162“தேசிகத்து உயர் சேடு அமைந்து, ஓதிய
தேசிகத்து உயர் சேடனைத் தேடி நான்
தேசிகத்து அயர்வேன்“ எனச், செஞ் சுடர்
தேசிகத்து உயர் செங் கலையாள் அரோ.
62
   
அடையாளம் யாதென அப்பெண் கேட்டல்
 
3163“தனையர் ஈன்றனள் நான் எனத், தாய் படும்
அனைய யாவும் அறிந்து அகத்து ஏங்குவேன்;
நனை அலர்ந்து என ஈன்ற நின் நந்தனன்
எனையனோ எனச் சாற்றுதி நீ“ என்றாள்.
63
   
திருமகன் அடையாளங்களைத் தேவதாய் உரைத்தல்
 
3164“அரியது ஓர் வினை கேட்டி, அந்தோ!“எனா,
பெரியது ஓர் உயிர்ப்பு இட்டனள்; பின் தனக்கு
உரியது ஓர் நசை ஊங்கு உளம் தூண்டலால்,
சரி அது ஓர் மதுப் போல் உரை சாற்றினாள்:
64
   
 
3165“பாவி தந்த மகற்கு உரி பான்மை கேள்:
வாவி தந்த தண் தாமரை வாயினான்,
காவி தந்த களிப்பு உமிழ் கண்ணினான்,
ஆவி தந்த அறா அருள் சொல்லினான்.
65
   
 
3166“பானு உயிர்த்த கதிர்ப்படப் பங்கியான்,
வான் உயிர்த்த மதிப்பட நெற்றியான்,
தேன் உயிர்த்த முல்லைச் சிறு மூரலான்,
கான் உயிர்த்த மலர் முகக் காமரான்.
66
   
 
3167“பொருளில் வீங்கிய பொச்சைப் புயத்தினான்,
அருளில் வீங்கிய ஆர்கலி மார்பினான்,
தெருளில் வீங்கிய சீர் முகில் கையினான்,
சுருளில் வீங்கிய தோடு அலர்த் தாளினான்.
67
   
 
3168“ஈர் அஞ்சு ஆம் வருடத்து இரண்டு ஆண்டு உளான்,
நீர் எஞ்சா அருளால் நிறை மாட்சியான்,
கார் அஞ்சா ஒளி காட்டிய காட்சியான்,
சீர் எஞ்சா, உரை வெல் உயர் சீர்த்தியான்.
68
   
 
3169“முகத்தின் தாமம் முகிழ்ந்து எனப் பார்த்த கால்,
அகத்தின் தாமரை உள் அவிழ் கண்ணினான்,
செகத்தின் பாசறை தேய்ந்து உளம் இன்பு உற,
சுகத்தின், தாய் வினை, துற்றிய அன்பினான்.
69
   
 
3170“நளி முகத்து அலர் நல்கிய தேன் எனா
அளி முகத்து அவன் சொல் அறைந்தால், பகல்
ஒளி முகத்து இருள் ஓடிய ஆறு போல்,
விளி முகத்து உறும் வெந் துயர் நீங்கும் ஆல்.
70
   
 
3171“உனக்கு இசைத்து இனி என் உரைப்பேன்? இவண்
தனக்கு எதிர்த்து இணை தான் இலன் ஆகையால்,
நினக்கு எதிர்த்து நின்றால் அறிவாய்“ என,
எனக்கு இயற்று அருள் தாய் இவை சாற்றினாள்.
71
   
நின் பாலனைக் கண்டேண் என அப்பெண்க் கூறுதல்
 
3172இனைய கேட்டலும், இன்பு உறக், கோதையாள்,
“வனைய வேட்டு, உறும் மாண்பொடு காட்டின
அனையன் ஈங்குக் கண்டேன்; அருள் அன்னை, நின்
தனையன் ஆம் அவன் தான்“ எனச், சாற்றினாள்.
72
   
மரியாளின் வினா
 
3173மண் தழன்று உளி வாடிய பூந் தரு
உண்ட நல் உயிர் உற்ற நீர் ஒத்த சொல்
கொண்ட தன்மையில் தாய் களி கூர்ந்து, “அவன்
கண்டது எவ் இடம்? கண்டது எப்போழ்து?“ என்றாள்.
73
   
பெண்ணின் மறுமொழியும் மரியாள் விடைபெறலும்
 
3174“மின்னலே, நனி கேள் என வேட்பு உறும்,
கன்னலே கடந்து இன்பம் செய் காதலன்,
நென்னலே, இருள் நேரிய கால், எனது
இன்னலே அற, என் மனை எய்தினான்.
74
   
 
3175“புரிந்த தாம முகச் சுடர்ப் பொற்பினால்,
விரிந்த தாமரைக் கையை விரித்து, மேல்
எரிந்த மீன் விழி தாழ்ந்து, இணையா அருள்
சொரிந்த தான், உணும் துப்பு இரந்தான் அரோ.
75
   
 
3176“அன்ன தன்மையினாற்கு இரவு ஆவது ஏது
என்ன, உண்டியை ஈந்து அளித்தேன். அவன்
மன் அமிர்தம் மனத்து அளித்து ஆதலால்
முன்னம் அன்று முகிழ்ந்து என ஓங்கினேன்.
76
   
 
3177“அள் அம்பு ஆடிய வாசமோடு ஆடிய
கள் அம்பு ஆடு இயை கட்டுரையானும் போய்,
புள் அம்பு ஆடியது ஒத்து, அவன் பூ முகம்
விள் அம்பு ஆடிய என் விழி பேர்கிலேன்.
77
   
 
3178“மாசு அறுத்து மனத்து, இவை ஆக்கிய
ஆசு அறுத்து இணை அற்றனன், ஐயம் அற்று,
ஏசு அறுத்த நின் தன் மகன்“ என்றனள்,
காசு அறுத்த சங்கு ஏந்திய கையினாள்.
78
   
 
3179பருகிவாழ் உயிர் பற்றிய ஊண் எலாம்
பெருகி ஈந்த பிரான் இரந்தான் எனா
உருகி, ஆசி அவட்கு உரைத்து, அன்னை, போய்
மருகு யாண்டிலும் மைந்தனைத் தேடினாள்.
79
   
மரியாளும் சூசையும் திருக்கோவிலுக்குச் செல்லுதல்
 
3180கழீஇயின மணியில், அன்னை,
  களித்து இவை ஓர்ந்து, போகில்,
விழீஇயின உயிரைக் காணா
  வெய்து உறும் உடலின், சூசை
எழீஇயின நகரிற் சேர்ந்து, ஆங்கு
  எதிர்பட, உயிர்ப்பு வீக்கி,
“குழீஇயின துயர் தீர்பாலற்
  கொணர்ந்தனை, இலையோ?“ என்றான்.
80
   
 
3181ஆயவை உரைத்து, “ஈங்கு உள்ளன் ஆய்,
  அவற் காணேன்“ என்ன,
தாய், அவை வருந்திச் சாற்ற,“
  தமனியக் கோயில் சேர்ந்து,
தீயவை துடைக்கும் நாதன்
  செம்மலைக் காட்ட வேண்டின்,
நோய் அவன் நீப்பன்“ என்றான்,
  நுண் மறை வடிவம் பூண்டான்.
81