புரோகிதப் படலம்
 
மூவரும் சென்ற வழியின் சிறப்பு
 
3201மேக மாலை மிடைந்த உறைமேல் வரை,
மேக மாலை மிடைந்து, அரைக் கீழ், உறை
நாக மாலை நடந்து என, நீள் நகர்,
நாகம் மாலை நடந்து, அகன்றார் அரோ.
1
   
 
3202காலின் ஆடிய கான் அலர் ஆடுகள்
காலின் ஆடிய கால் மணம் ஆடும் ஆல்,
பாலி நாடிய பொற் பறவைக் குலம்,
பாலின் ஆடிய பொற்பு அறப் பாடும் ஆல்.
2
   
 
3203சேது அகம் தரும் மாசு அயில் சென்ற அச்
சேது அகம் தரும் ஆசையின், செந் தழல்
சேது அகம் தரும் செவ் ஒளி நீத்த வான்,
சேது அகம் தரும் செவ் ஓளி நீர்த்ததே.
3
   
 
3204தெண் கள் நாடிய சந்திரம் சேர் வனத்து,
எண் கண் ஆடிய சந்திரன் இன்றி, மீன்
மண் கண் ஆக மலர்ந்த, அருட் காணியார்
மண் கண் ஆக மலர்ந்து உறக் காணும் ஆல்.
4
   
 
3205பல் இயம் கனி பாட, விண் ஓங்கிய
பல் இயம் கனி பாட விண்ணோர் செயும்
எல் இயங்க இலங்கு மண் பான்மையே,
எல் இயங்க இலங்கும் விண் பான்மையே.
5
   
மாலைப் பொழுதில் இடையர் வீதியில் தங்குதல்
 
3206உளரி அங்கு ஒலி ஓதி உலாவு விண்
உளர் இயங்கு ஒளி சோதி ஒளி எனா,
விளரி பங்கய மாலையில் விள்ளவே,
விளரி பங்கய மாலையில் விள்ளும் ஆல்.
6
   
 
3207கைப் படங்கு அமரும் தகக் காந்தனும்,
கைப்பு அடங்க மருந்து அகக் காந்தையும்,
செப்பு அடங்க இருந் தவச் சேடனும்,
செப்பு அடங்க இருந்தனர் சேடியே.
7
   
விடியலில் மூவரும் புறப்படுதல்
 
3208தீத் தன் பள்ளியை நீத்து எழீஇச், செய் துயில்
தீத்து, அன்பு அள்ளி, ஐ நீத்து எழில் சேய், உயிர்த்
தீத்தன், கை பணியப் படி சேர்ந்த கால்,
தீத் தன் கை பனியப் படி சேர்ந்தவே.
8
   
 
3209ஈர நீர் அவிழத் துணரே, வரை
ஈர நீர விழத் திரையே, வனத்து
ஈர நீர எழச் சிகியே, அறத்து
ஈர நீரர் எழீஇத், தடம் ஏகினார்.
9
   
 
3210ஆதி மாலை அகற்றி அழற்றும் என்று,
ஆதி மாலை அகற்றி அளிப்பட,
சீத மாலை செறிந்தன மேல் எலாம்;
சீத மாலை செறிந்தன கீழ் எலாம்.
10
   
நசரேத்தூரை அடைதல்
 
3211சுனைய நீலமும், கமலமோடு ஆம்பலும், துளித் தேன்
நனைய நாகமும், நாறிய கோங்கமும், நறும் பூஞ்
சினைய சாந்தமும், செண்பகமும், கனி விருந்து ஆங்கு
இனைய யாவும், இட்டு இமிழில் வந்து உறை பதி அடைந்தார்.
11
   
வானவர் சூசைமரியை மகிழ்வித்தல்
 
3212வேல் செய் ஆகுலத்து இருவர் முன் பட்ட நோய்
  விழுங்கிச்.
சால் செய் ஓகையின் தளிர்த்து உளம் உவப்ப, வான்
  தளங்கள்,
பால் செய் ஆவியின் பைந் துகில் உடுத்து ஒளி
  பரப்பிக்,
கால் செய் ஆவியின் கவரிகள் கமழ
  வீசினரே.
12
   
 
3213எரி மணிப் புகை எடுத்தனர், மலர் மழை பொழிந்தார்,
அரி மணிக் குரல் யாழ் எடுத்து உளர்ந்து இசை ஏற்றி,
உரி மணிக் குரல் ஒருப்படப் பா இசை கூட்டி,
விரி மணிக் கதிர் விண் திரு விழாவினை விளைத்தார்.
13
   
 
3214வினை விளைத்தன வெப்பு அறக் குளு முகத்து உதித்தோன்
தனை, விளைத்தன தயை வழி அளவு அறப் புகழ்ந்து,
கனை விளைத்தன களிப்பில், ஓர் ஆயிர நாமம்,
நினைவு இளைத்தன நெறி வரும் கனி நயம் அளவோ?
14
   
சூசை மகிழ்ந்து திருமகனை துதித்தல்
 
3215முருகு வாய்ச் சுளை முட் புறக் கனியோடு,
  பூங்கா
அருகு வாய்க் கனி பலவும் ஊழ்த்து
  அளித்த தீம் தேனும்,
உருகு வாய் இறால் உடைந்து
  உமிழ் தேனும் ஆர்ந்து ஒழுகிப்
பெருகு வாய்ப் புனல் பெற்றியோடு
  ஓங்கினன் வளனே.
15
   
 
3216“வினை கெடப், பெரும் வெறுக்கையர்,
  பொழி நிதிக் குப்பை
தனை கெடத், திருத் தாள் மிசை
  நவ மணி கூப்பின்,
நனை கெடக் கவின் நந்தன,
  சால்பு அதோ?“ என்றான்,
சுனை கெடக் கலுழ்ந்து, ஊற்று அது ஆய்த்
  துளித்த கண் சூசை.
16
   
 
3217“முற்றி வேம் அழல் பாலையில், காய்ந்த எரி முள்ளின்
நெற்றி மேல் நறை நீலமும் கமலமும் பூப்ப,
உற்றியே என, ஒழுக்கம் ஒன்று இல்ல நான், உயர் வான்
பெற்றியே உன்னால் பெற்றனன், இதற்கு மாறு உளதோ?
17
   
 
3218“உன்னைச் சேர்ந்த நான் உம்பருள்
  ஒருவனே ஆனேன்.
எனனைச் சேர்ந்த நீ இயலும்
  இல்இல்லன் ஆயினையோ?
தன்னைச் சேர்ந்த கால் தாழ் வினை
  விளைவு இதே“ என்ன,
பொன்னைச் சேர்ந்த கால் போற்றினான்,
  அன்பு அளவு அற்றான்.
18
   
திருமகன் வருங்கால நிகழ்ச்சி யுரைத்தல்
 
3219ஆசு அவா அறும் அருந் தவன்
  அறைந்த சொல் கேட்டு,
வாச வாய்த் தென்றல் தீண்டிய
  முல்லைகள் மதுவை
வீச வாய் மலர்ந்து என நகை
  காட்டிய விமலன்,
பேச வாய் மலர்ந்து, எதிர்த்த கால்
  பெரும் பயன் விரித்தான்:
19
   
 
3220“தேன் அருந்தினர் தீய வேம்பு இன்பம் என்று அருந்தார்
வான் அருந்திய வளத்த நான், வாழவோ, மண்மேல்
ஊன் அருந்திய உடலொடு தோன்றினேன்? மிடி நோய்
நான் அருந்திட நண்ணி, உன் மனை தெரிந்து உதித்தேன்.
20
   
 
3221“மனை செயும் தகம் தேடுவர் தகவு இலார். மலர்ந்த
நனை செயும் கடி நறை வனத்து எழில் என நண்ணி,
வினை செயும் பகை வீழ்த்த நான் தெரிந்த இம் மனையே,
தனை செயும் திறன் தவிர்ந்து எழும் தகுதி கேள்“ என்றான்.
21
   
இத்தாலிய நாட்டினைப் புகழ்தல்
 
3222“செல் நாகம் நீர் பொழியத், தேன் பொழியும்
  புன்னாகம் திருவின் பூப்ப,
கல் நாகம் நீர் உமிழக், கவி நாகம்
  வெருண்டு அஞ்ச, கல் ஊடு ஊர்ந்த
கொல் நாகம் ஒப்ப மணி கொழித்து அருவி
  பாய்ந்து ஓடக், கொழுஞ் செய் வாய்ப்ப,
பொன் நாகம் ஒப்ப வளர் புகழ் இத்தா
  லிய நாட்டுப் பொலிவு இது அன்றோ.
22
   
 
3223“விரை வாய்ப் பூந் தாழை உலாம் வெள் வளை ஈன்ற, பூ
  வயல் ஊர்ந்து மிளிர் முத்து ஈன்ற
கரை வாய்ப் பூஞ் சுனை பூப்பக், கனி யாழ் வண்டு
  இமிர்ந்து, ஒகரம் களி கூர்ந்து ஆடும்
சுரை வாய்ப் பூம் பொழில் காய்ப்ப, ஈர் அறமும்
  முச் சீரும் சுகம் ஓர் ஏழும்
நிரை வாய்ப் பூங் குடியாக நிமிர் இத்தா
  லிய நாட்டு நிலை இது அன்றோ.
23
   
 
3224“பொருள் ஈன்ற பெருஞ் செல்வப் பொலிவு ஒழிக்கும்
  வளம் புணரப் புகன்ற நாடு,
மருள் ஈன்ற அவா ஒழிப்ப வையகத்தில்
  நான் உதித்து, மறை என்று ஓதும்
தெருள் ஈன்ற நூல் ஒருங்கே திரு விளக்கு என்று
  ஏற்றி, எலாத் திக்கும் தானே
அருள் ஈன்ற விளக்கு ஆகி, அவனி எலாம்
  ஆளும் இத்தாலிய நாடு அன்றோ.
24
   
 
3225“ஓர் ஆழி உருட்டிய நான், வீற்றிருக்கும்
  கோயில் எனக்கு உலகில் ஆகிப்,
பார் ஆழி ஒன்று இணையாப் படர் செல்வ
  நாட்டு இயல் யான் பகர்வது என்ன?
நீர் ஆழி கடந்து அங்கண் இம் மனை சென்று,
  அடைக்கலமே நிலத்தில் செய்து, ஆங்கு
ஓர் ஆழி இரவியின் இவ் இல் இலங்கச்
  செயும் இத்தாலிய நாடு அன்றோ.
25
   
சிறுமனைக்கு உண்டாகும் சிறப்பு
 
3226“பிறை தந்த கொடி உயர்த்தோர், பின்பு இங்கண்
  ஆண்டு, எவரும் பெரிது அழுங்க.
மறை தந்த நெறி நீத்து, இம் மனைக்கு அழிவு ஆம்
  என்று, இதனை வானோர் ஏந்திச்,
சிறை தந்த விசையோடு போய்த், தெண் கடலைக்
  கடந்து, இத்தாலிய நல் நாட்டில்,
இறை தந்த விளக்காக, மலை நெற்றி
  இரவியைப் போல், இலங்க உய்ப்பார்.
26
   
 
3227“ஓங்கியது ஓர் உடல் முகமோ, முகக் கண்ணோ,
  கண் மணியோ, ஒளி செய் மார்பில்
தூங்கியது ஓர் பூண் கலனோ, சுடர் முடியோ,
  முடி மணியோ சொல்லும் தன்மை
நீங்கியது ஓர் வனப்பு இவ் இல், நிலத்து எல்லை
  நிகர் இல்லா, நேமி தன்னில்
வீங்கியது ஓர் பேரின்ப வீடு அதுவே;
  மேல் வீட்டு வாயில் அஃதே.
27
   
 
3228“அடி கோடி தாங்கி எழுந்து, அந்தர மேல்
  மணிச் செகரத்து அகன்ற நெற்றி
கொடி கோடி ஆடிட, உள் குழல் கோடி
  குரல் கோடி குயின்று பாட,
முடி கோடி கீழ் பணிய, முன் விளக்கு ஓர்
  கோடி பகல் முற்றி மின்ன,
துடி கோடி சூழ் முழங்க, துணை அறும் ஆங்கு,
  இம் மனையின் தோற்றம் அன்றோ.
28
   
 
3229“மிடி சென்ற வீடு என்ன விருப்புடன் நான்
  இவண் சென்றேன். மேவி என் தன்
அடி சென்ற வீடு என்ன, ஆசை எழுந்து
  அனைவரும் போய், அவனி எல்லாம்
குடி சென்ற வீடு என்னக்கொழு மணி பொன்
  பூந் தொடைகள் குவித்துப் போற்ற,
படி சென்ற வீடு என்ன வளம் பெறும் இம்
  மனை“ என்றான் படர் நூல் வல்லான்.
29
   
முனிவர் தம் ஐயந் தீர விளக்கங்கேட்டல்
 
3230“எனை ஈன்ற இணையா இத்தாலிய நாடு
  அளவு இன்றி இயலும் மாட்சி,
சுனை ஈன்ற மலர் வாயான், துளி மதுப் போல்
  இன்பம் உகும் சொல்லால் சொன்ன
வினை ஈன்ற வியப்புடன், உள் மிக ஏய்ந்த
  ஐயம் அற வினவித், தண் தேன்
நனை ஈன்ற நறுங் கொடியோன், நளினம் அடும்
  தாள் தொழுதே நவின்றான் மாதோ:
30
   
 
3231“ஏம் உற்றுக் காத்தன கால், எவன் நில்லா,
  மற்று அடிகள்? இடை நீகாய்ந்தால்,
பூ முற்றும் பெயர்ப்பது அரும் பொருள் உனக்கோ?
  ஆயினும், நீ புகழ்ந்த நாடர்,
காம் உற்றுக், சீலம் அறச், காசினி முற்றும்
  சுழிந்து இறைஞ்சும் கடவுள் எல்லாம்
தாம் உற்றுப் போற்றுவராம்; பின்பு, உரைத்த
  தகுதி உறும் தடம் ஏது?“என்றான்.
31
   
திருமகன் தான் உலகை இரட்சிக்கும் முறையைக் கூறுதல்
 
3232செவ் வழி உளத்துச் சான்றோன் செப்பிய உரைகள் கேட்டு,
எவ் வழி அனைத்தும் தாவி எல்லையைக் கடந்த காட்சி
அவ் வழி அணுகி, யாவும் அணுகு முன் முன்னு நூலோன்
மெய் வழி விதிப்ப, மென் பூ விள் என விளம்பல் உற்றான்.
32
   
 
3233“கண் கடந்து, அறிந்த யாவும்
  கடந்து, நான் அரூபியாய் நின்று,
எண் கடந்த ஏதம் கொண்ட
  இவ் உலகு அனைத்தும் காத்து,
விண் கடந்து எவரும் வீட்டை
  மேவுதற்கு உருவாய்த் தோன்றி,
மண் கடந்து, அரசு ஆம் ஆறு
  வகுத்தலே கேள்மோ“ என்றான்.
33
   
 
3234“மழைக் குலம் பொழியும் மாரி
  வழங்கு இலா நாளில், உண் நீர்
உழைக் குலம் கண்டு வீழும்
  ஒத்து, எலாத் துகள் மேல் வீழ
பிழைக் குலம் ஆக, மாக்கள்
  பேர் உயிர் வினை கொண்டு எஞ்சித்,
தழைக் குலம் வளி நாள் வீழும்
  தன்மையே, நரகில் வீழ்வார்.
34
   
 
3235“தீயவை விழைந்த மாக்கள் தீய் எரி வீழ்வர் என்னா,
தூயவை, இரங்கிக், காட்டத் துன்னி நான், துன்பம் இன்பம்
ஆய், அவை விழைந்து, வேதத்து அரு நெறி ஓதி, சீற்றம்
காய் அவை இயற்றும் யாவும் காதலித்து, இரியா நிற்பேன்.
35
   
 
3236“தாய் வினை இயற்றி, யாரும்
  தமரின் ஊங்கு இனியர் ஆக,
தீய் வினை நோயும் சாவும்
  தீர்த்து நான் ஒழுகும் வேலை,
தூய் வினை செய்த பாலால்
  சுடு வினை தீயோர் செய்ய,
நோய் வினை மகிழ்ந்து நானே
  நுகர்கிற்பேன் அளவு இற்று அன்றே.
36
   
 
3237பொருந்தலர்த் தடிந்து வீழ்த்து,
  புள் குலத்து இனிது எஞ் ஞான்றும்
விருந்து அமர் அமர் செய்கிற்பார்
  வெற்றியே, இங்கண் கொள்வார்,
வருந்து அலர் யாரும் உய்ய
  வருந்தி, நான் ஒருவன், தெய்வ
மருந்து அமர் இரத்தம் சிந்தி
  மாண்டலில் கொற்றம் கொள்வேன்“ .
37
   
மனிதரை அறத்தில் நிலைக்கச் செய்யும் வகையாதென வினாதல்
 
3238என்றனன் இளவல், என்ன
  இவை எலாம் சூசை கேட்டு,
“பொன்றனன் என நீ பொன்று
  பொன்று இலா வெற்றி கொள்வாய்;
வென்றனன் என்ன ஏகி,
  விலக்கு அரும் இடுக்கண் பாரில்
நின்றனர், உறுதி நிற்ப
  நெறி எனோ? உரைத்தி“ என்றான்.
38
   
வேதபோதகரும் ஏழு வரங்களும் பற்றித் திருமகன் கூறுதல்
 
3239தேன் செயும் மாலையின் வாடுபு, நீர் செயும்
  திரையின் ஆடித், திறன் இல்லாது,
ஊன் செயும் ஈனம் உற்று எஞ்சிய தன்மையின்,
  உளத்து ஓர் நிலையும் இல மாக்கள்,
நான் செயும் நல் அருள் பெற்றனரேல், அவர்
  நலம் நிற்பதுவோ அரிது? என்னத்,
தான் செயும் நல் முறையின் தயை காட்டிடத்,
  தனயன், மீண்டு இவ் உரை கொண்டான்:
39
   
 
3240“நூல் நலம் வான் பொருள் செய் நலம் இன்றியும்,
  நுனி வேல் சூழ்ந்து நிலம் ஆளும்
கோல் நலம் இன்றியும், ஈங்கு எனக்கு ஒத்தனனர்
  குறும் பாட்டு இல்லோர் தமைத் தேர்ந்து,
வான் நலம் நான் தரத், தந்தன நூல் மறை
  வையத்து எங்கும் வகுத்து ஓத,
சூல் நலம் கொள் முகில் ஒத்து அவர் ஏகி, என்
  சுருதி பரவு உற்று, உலகு ஆள்வேன்.
40
   
 
3241“இத் திறத்தோர் தமை வேந்தரும் போற்றுப,
  எல்லை இல்லாக் கலை வல்லோர்,
பொய்த் திறத்து ஆய்ந்த தம் நூல் மறுத்து, ஏத்துப,
  புவனம் யாவும் வியந்து அஞ்ச,
மெய்த் திறத்து அற்புத நாவொடு, நூல் எலாம்
  விண் நின்று எய்தி, வரத்து ஓங்கும்
அத் திறத்து, எத் திறத்து அற்புத மாட்சியும்,
  அன்னார் காட்டி, நிலம் மீட்பார்.
41
   
 
3242“பாடிய ஓதையும் வீணை செய் ஓதையும்,
  பகை அற்று உவப்ப, எவர் கேளார்?
ஆடிய நூல் மறை ஒத்து அற நல் நெறி
  அன்னார் நீங்கா ஒழுக்கத்தால்,
கோடிய உள்ளமும் இன்பு உறீஇச் சொன்னது உள்
  கொண்டு, குன்றாத் தெளிவு எய்தி,
நேடிய நன்று உற, உற்றவை நீங்கு இல
  நிலையே பெற, ஏழ்வரம் ஈவேன்.
42
   
 
3243“வெண் நிறத் தூசு கொள் மாசு அற, வெண் மதி
  கதிருள் தோய்த்த வினை என்னப்,
புண் நிறத்து ஆர் புரை போக்கி, உள் தே அருள்
  பொழி நீராடல் முதற்கு ஈந்து,
தண் நிறத்து எய்தினும் உள் சுடும் ஆசையில்
  தவறி மீண்டே தளர்ந்து உள்ளம்
தெள் நிறத்து ஆசு கொள்ளா நிலை ஆண்மை செய்
  திரு நெய்ப் பூசல் இடச் செய்வேன்.
43
   
 
3244தாய் விளை அன்பு இணையாது எனப் பின்பு உறத்,
  தயையின் மிக்க ஓர் முறை உள்ளி,
மீய் விளை இன்பொடு யாவரும் வாழ்ந்து உண
  விரும்பி, நானே விருந்து ஆவேன்.
நோய் விளை நஞ்சு உறழ் தீயவை இன்பு என
  நுகர்ந்து, மீண்டே புரை கொண்டால்,
தீய் விளை அப் பிணி தீர்க்கும் மருந்து எனச்,
  சிறந்த ஓர் தேவ முறை செய்வேன்.
44
   
 
3245“துஞ்சிய கால், பழிப் பேய் அமர் வென்று எழத்
  தூய் நெய் பூசல் திறன் தந்து,
விஞ்சிய மா இருள் நீக்கு விளக்கு என,
  விதி செய் அத்தர் விளைவு ஈந்தே,
அஞ்சிய கோது இல வாழவும் மன்றலை
  அருள் செய் யாக்கை எனச் செய்வேன்.
எஞ்சிய மாக்களும் இத் திறத்து ஏழ் வரம்
  எய்திக், குன்றத்து இணை நிற்பார்.
45
   
 
3246“கார் உரு என் உடல், மா மலைக் கோட்டு, உயர்
  கருணைச் செந்நீர் மழை பெய்யப்,
பேர் ஒரு வெள்ளமும் ஓடலில், இவ் வரம்
  பிரிந்த ஏழு ஆறு என ஓடி,
தேர் ஒரு நன்றி இல்லாமையில், தீவினை
  தீக்கும் பாலை என வைகும்
பார் ஒரு பூங் குளிர் சோலை என்று ஆக்கலும்,
  பரிவு அற்று உய்வார் நரர்“ என்றான்.
46
   
 
3247வான் உகும் வாமையில் தோன்றிய வானவர்,
  மகிழ்ந்து யாவும் மனத்து உள்ளி,
தேன் உகும் தீம் குரல் யாழ் இசை ஏற்றுபு,
  திருச் சேய் நாமப் புகழ் பாட,
கான் உகும் பூங் கொடியோனும், அத் தாள் மிசைக்
  கமழ் பூ ஏற்றித் தொழ, தானும்
ஊன் உகும் ஆக்கையை ஏந்திய
  நாதனை உணர்ந்து பாடத் தொடங்கின்றான்.
47
   
சூசை, நாதன் அருளைத் துதித்தல்
 
3248“ஒன்று இல்லாது, எல்லாம் உள ஆக்கினோன் அல்லால்,
நன்று இல்லா வையத்து, இந் நன்றி செய்வான் யாரே?
நன்றி செய்வார் இல்லா, நாம் வாழத் தான் இறந்து
வென்றி செய்வான் எமக்கு நீ அல்லால் வேறு யாரே?
48
   
 
3249“அன்பு உடையர் என்பும்
  அரிந்து அளிப்பார், தன் உயிரோடு
என்பு உடைய மெய் எல்லாம்
  ஈந்து, ‘உண‘என்பான் யாரே?
ஈய்ந்து உண என்று, எவ் உயிர்க்கும்
  எவ் உணவும் ஈட்டி இவண்
வேய்ந்து, உணத் தான் ஊண்
  இரந்த நீ அல்லால் வேறு யாரே?
49
   
 
3250கைம்மாறு இவண் வெஃகாக்காம் உற்று,
  இவை எல்லாம்
மெய் மாறு எனக்கு அளிப்ப, விஞ்சு அருட்
  கொண்டேன் யாரே?
விஞ்சு அருட் கொண்டு, ஆசு அற நாம் மீ வாழ,
  தான் நொந்து,
நெஞ்சு அருட் கொண்டு ஈங்கு இறக்கும்
  நீ அல்லால், வேறு யாரே?“
50
   
மேன்மைந் பொலிந்த அரசர்கள் கூட்டம்
 
3251இனையவும் பலவும் ஆங்கு இயல நாள் தொறும்,
வனையவும் புவி நிகர் மடிய, வான் உலகு
அனையவும், அம் மனை, அரிய தேவ நூல்
புனையவும், மா முனி பொருவு அற்று ஓங்குவான்.
51
   
 
3252பூ அது கொடியினோன் பொலிய, மீட்டு ஓர் நாள்,
ஆவதும் ஆயதும் ஒன்றும் ஆய், எலாம்
தாவு அது உணர் பிரான் தந்த காட்சியை,
நாவு அது வருந்தினும் நவிலும் பான்மையோ?
52
   
 
3253மண் இடத்து இருள் அறும் மாலி நாணவும்,
விண் இடத்து உலாவி, வில் விளங்கு வேந்தரை
எண்ணிட இடமும் ஒன்று இன்றி, எண் திசை
கண்ணிடத் தகவு இல, கனிவிற் கண்டு உளான்.
53
   
 
3254பொன் நெடுங் குடைகளும், பொன் அம் ண்களும்,
வன் நெடும் இரதமும் மணிக் கொடிஞ்சியும்,
துன் நெடுங் கொடிகளும், தொகுதி ஒன்று இல்லா,
மின் இடும்; வெயில் இடும்; மீனின் வில் இடும்.
54
   
 
3255அரி இனம் பூட்டிய அணி விமானமும்,
வரி இனம் பூட்டிய இரத வையமும்,
பரி இனம் பூட்டிய திகிரி பான்மையும்,
கரி இனம் பூட்டிய தேரும் கண்டு உளான்.
55
   
 
3256பைம் மணிப் பசுங் குடை, பவளச் செங் குடை,
ஐம் மணிச் சிதம் குடை, தரள அம் குடை,
செய்ம் மணிக் குருங் குடை, திங்கள் வெண் குடை,
மைம் மணிக் கருங் குடை மயங்கித் தோன்றின.
56
   
 
3257மயில் அகல் தோகையும் மணியும் வில் செய,
வெயில் அகல் நிழல் செயும், வெயில் செயும், குடை.
துயில் அகல் ஒளி மணி தொடுத்த பான்மையால்,
வெயில் அகல் வளி செயும், வெயில் செயும், கொடி.
57
   
 
3258பேர் ஒலி முரசொடு, பிறங்கும் பல் இயத்து
ஆர் ஒலி, பரி ஒலி, அதிர் கைம்மா ஒலி,
தேர் ஒலி, கொடி ஒலி, தியங்கும் பூண் ஒலி,
கார் ஒலி ஒளித்து, ஒலி கலந்து ஒலித்தவே.
58
   
 
3259மீன் நிகர் வெயில் திரள் எறிக்கும் மேனியார்,
வான் நிகர் மகிழ்வ உறீஇ, மகர யாழொடு,
தேன் நிகர் தொனிக் குழல் திளைத்த ஓதை செய்
பால் நிகர் இசைக் கொடு இசைகள் பாடுவார்.
59
   
 
3260நள் நிலவு அனிகமே நயந்து சூழ் வர,
ஒள் நிலவு எறித்த பூண் உலாவும்மார்பினார்,
தெள் நிலவு இமைத்த பொன் மகுடச் சென்னியார்,
எண் இல குருசிலர் இரிந்து உலாவுவார்.
60
   
 
3261மேகம் ஒத்து இழி மத வேழம் மீ சிலர்;
நாகம் ஒத்து எழுந்த தேர் நவிரம் மீ சிலர்;
ஆகம் ஒத்து அகன்று பாய் அயங்கள் மீ சிலர்;
யூகம் ஒத்து அணி அணி உலவி ஏகுவார்.
61
   
 
3262மின் நிறத்து உருச் சிலர், விரி வில் வீசிய
பொன் நிறத்து உருச் சிலர், பொறி செய் தூய் அழல்
நல் நிறத்து உருச் சிலர், அலர்ந்த நாள் மலர்
இன் நிறத்து உருச் சிலர் ஏந்தி ஏகுவார்.
62
   
விண்ணழகு வாய்ந்த அரிவையர் காட்சி
 
3263தோட்டு அழகு அலர்ந்த பூந் தொடை தொடுத்து, ஒளி
தீட்டு அழகு அமர்ந்த பூண் தியங்கிச், செஞ் சுடர்
காட்டு அழகு உருக் கொடு, கலந்து அன்னார் உடன்,
வீட்டு அழகு அரிவையர் விளங்கக் கண்டு உளான்.
63
   
 
3264பால் நுரைத் தகுதியைப் பழித்த ஆடையும்,
தேன் நுரைத்து அலர் தொடை, செறிந்த பூண்களும்,
மீன் உரைத்து ஒளி மணி மேனி மாமையும்,
யான் உரைத்து இணைசெய இயலும் பான்மையோ?
64
   
 
3265வாவி சேர் முளரி சேர் வதன வாமமும்,
காவி சேர் வடிவு சேர் களித்த நாட்டமும்,
நாவி சேர் குழலும் சேர்ந்து இலங்கும் நங்கையார்,
ஆவி சேர் அழகும் சேர்த்து, அனுக்கம் சேர்க்கிலார்.
65
   
 
3266முடி மணி துளங்கவும், மார்பின் மொய்த்து உலாம்
கடி மணி விளங்கவும், கை அம் காந்தள் சூழ்
தொடி மணி இலங்கவும், எழில் முகத்தினார்,
வடிவு அணி உடுவில் ஊர் மதியம் மானுவார்.
66
   
 
3267உந்து கேழ் மதிய வெண் குடைகள் ஊர்ந்து உயர்
வந்து, கீழ் அணி வரும் மணி முகத்து ஒளி
சிந்து கேழ் இன மணி திளை பொற் பாவையார்,
இந்து கீழ் இந்து வந்து இரியல் மானுவார்.
67
   
 
3268வன் மலை சிறைக் கொடு வான் பறந்து எனா,
மின் மலை உருக் கொடு விளங்கு தேர் மிசை,
சொல் மலை பழித்து எழீஇத் தோன்றும் மங்கையர்,
பொன் மலை முடி உறை சுடரைப் போலுவார்.
68
   
காட்சியை விளக்குமாறு சூசை திருமகனைக் கேட்டல்
 
3269எண் திசை இரிந்து வந்து, இன்ன ஆறு, எழில்
கொண்டு இசை அரசரோடு, எழிலிக் கூந்தலார்,
விண் திசை நெருக்கு உற மிடையக் கண்ட, பூஞ்
செண்டு இசை கொடி நலோன், வியந்து, செப்பினான்:
69
   
 
3270“மின் இனம் என நனை விரித்த கொம்பு அனார்,
மன் இனம் என நிமிர் வயிரக் குன்று அனார்,
பொன்னின் அங்கு அண்ட மேல் போவது ஏது எனா,
என் இனம் புரக்கும் நீ இயம்பு“ என்றான் அரோ.
70
   
 
3271மைத் திறத்து ஒளித்து, எதிர் வருவது ஆதியே,
மெய்த் திறத்து அனைத்தையும் விழுங்கும் காட்சியான்,
அத் திறத்து அவர் எவர் என்ன, ஆம்பல் வாய்
இத் திறத்து அலர்ந்து, இவை இயம்பினான் அரோ:
71
   
‘வருங்காலத்தில் என் திருமறை போற்றும் வண்மை மிக்க
வேந்தர்களே அவர்கள்‘என விளக்குதல்
 
3272மீன் செய்த சுடர் ஏய்க்கும் மேனியொடு ஆங்கு
  ஒளி செய் அவ் வேந்தர் ஈட்டம்,
கான் செய்த மலர் மொய்க்கும் கடி நாடு
  பல ஆண்டு, கசடு அற்று, இங்கண்
யான் செய்த மறை நலம் ஓர்ந்து, இனி வரும் பின்
  காலையில் தாம் என்னைச் சேர்ந்து,
வான் செய்த மறை முறையின் மனம் வழுவாது,
  எஞ் ஞான்றும் வான் வீட்டு ஆள்வார்.
72
   
 
3273“இருள் பாய்ந்த நிசி பருகும் இரவி எனச்
  சுடர் வெள்ளம் இமைத்துப்பைம் பொன்
பொருள் பாய்ந்த முடி சூடி ஆகிலப்புள்
  விருது ஏந்திப் பொலிந்து ஆங்கு உள்ளோர்,
தெருள் பாய்ந்த மணி கொழித்த தெண் திரை யாய்ச்
  செழுங் கழனி திருவின் பூப்ப,
அருள் பாய்ந்த உரோமை நாடு ஆண்டு அளிக்கும்
  பல் அரசர்க்கரசர் ஈட்டம்.
73
   
 
3274“வாமம் சால் ஓடை நுதல் மா எருத்தம்
  மீது இங்கண் வரும் இவ் வேந்தர்,
காமம் சால் விளை செல்வம் கவர் உங்கா
  ரிய நாட்டைக் காக்கும் ஈட்டம்.
ஏமம் சால் அணி தியங்க எறி வேல் கொண்டு
  அங்கண் பாய் இவுளி மேல்ஓர்,
நாமம் சால் வெற்றி தர, நண்ணர் தொழும்
  புலோனிய நல் நாடர் ஈட்டம்.
74
   
 
3275‘மேய்ந்த கதிர் உயிர்த்து இமைக்கும் விருது என வேல்
  முன்னி, இவண் மிடைந்த வீரர்
வாய்ந்த கதிர்ப் படை ஒன்னார் வணங்கு அயில் கொள்
  பாவரர் தம் மன்னர் ஈட்டம்
பாய்ந்த கதிர் உண்ணும் குடையால் பாய் இருள் உண்
  முடி சூட்டிப் பகல் அங்கு உய்ப்போர்,
தோய்ந்த கதிர் எறி மணி கொய் சுவேசிய நாடு
  இனிது ஆள்வார் தொகுதி ஈட்டம்.
75
   
 
3276“செய் பரந்த மணிக் கொடிஞ்சித் திண் தேர் மீது
  ஆங்கு அரி போல் திறத்த வல்லார்
மை பரந்த நிழற் சோலை மது மலர் கொய்
  தானியம் ஆள் மன்னர் ஈட்டம்
மெய் பரந்த கலன் மின்ன, மீன் பரந்த
  விசும்பு உளர் போல் வேய்ந்த அன்னார்,
ஐ பரந்த வெற்பு அருவி அதிர்ந்து அரி கொய்
  ஆச்சிய நாட்டு அரசர் ஈட்டம்.
76
   
 
3277“மீன் முழுகும் கொடித் திண் தேர் மீ வரிமா
  விருது ஏந்தி வேய்ந்த வேந்தர்,
கான் முழுகும் குன்றம் சால் கவவு முடி
  முராவியமே காக்கும் ஈட்டம்
ஊன் முழுகும் ஒளி முழுகும் உவணியைக் கொண்டு,
  உவந்து இப்பால் உறைந்த கோமார்
தேன் முழுகும் பூம் பொழில் வாய்ச் சிலீமுகம் ஆர்
  சிலேசியம் ஆள் செல்வர் ஈட்டம்.
77
   
 
3278“செல் தாறு கடந்து, அனில விசை கடந்த
  தேர் எழும் அச் செல்வ வல்லோர்,
பற்று ஆறு கடந்து, இரு சீர் பயந்து,
  இணையா புவேமியர் தம் பதிகள் ஈட்டம்.
சொல் தாறு கடந்த சினம் சூட்டு ஆளி
  ஏந்தி, அவண் தோன்றும் மன்னர்,
கல்தாறு கடந்த உரத்துக்கருணை மிகும்,
  சசோனியமே காக்கும் ஈட்டம்.
78
   
 
3279“சினம் பழுத்துச் சீறி விரி சிறைச் சிங்கம்
  உயர்த்து இங்கண் செல்லும் செல்வர்,
தனம் பழுத்துத்திரு வாய்ப்பத், தாழ் கடல் சூழ்
  வினேசியர் தம் தலைவர் ஈட்டம்
மனம் பழுத்துக்களி ஆர்ந்த வடிவு உற்று, ஆங்கு
  இவுளி மிசை வாய்ந்த மன்னர்,
கனம் பழுத்துப்பனி வரை சூழ், கலை மிக்க, எத்
  திறூதியரைக் காக்கும் ஈட்டம்.
79
   
 
3280“மை ஒக்க மின்னல் என, மத கரி மீது
  ஒளி வயிர மணிக் குன்று அன்னார்,
பொய் ஒக்க வளர் கருப்பம் பொழில் மொய்க்கும்
  சசீலியம் ஆள் பொருநர் ஈட்டம்
நெய் ஒக்கக் கதிர் தும்மும் நீடிய வாள்
  ஏந்திய அந் நிருபர் தாமே
மெய் ஒக்கத் திருவொடு அறம் விசித்து ஒளிகொள்
  நாப்புலி ஆள் வேந்தர் ஈட்டம்.
80
   
 
3281“கண் கடந்த கவின் காட்டிக் கமழ் கமலக்
  கண்ணி அணி களி மார்பு அன்னார்,
பண் கடந்த குரல் அன்னம் கண்படும் வயல் கொய்
  மாந்துவம் ஆள் பரிவோர் ஈட்டம்.
விண் கடந்த பூங் கொடியை விரித்து ஆர்க்கும்
  தேர் நடவி மிளிரச் செல்வோர்,
எண் கடந்த நிரைத் தீம் பால் இனிது ஒழுகும்
  பார்ம நிலத்து இறைவர் ஈட்டம்.
81
   
 
3282“திரை புறம் காண் கடல் பவளச் சிலுவை விருது
  உயர்த்தி, இவுளி செலுத்தும் அன்னார்,
புரை புறம் காண் துகிர்க் கொடியே புணரியில் கொய்
  சேனுவம் ஆள் பொருநர் ஈட்டம்
விரை புறம் காண் தொடை மார்பில் வெண் புறவு
  கதிர் பரப்ப வேய்ந்த அன்னார்,
வரை புறம் காண் கோ நதி சார் வளம் பெற வாழ்
  சாவோய மன்னர் ஈட்டம்.
82
   
 
3283“மீன் நலம் கொள் மணித் திண் தோள் வீங்கி, அரித்
  தேர் ஏறி, வேய்ந்து ஆங்கு அன்னார்
வான் நலம் கொள் படம் உயிர் பெற்று என்ன வளர்
  கல்லியம் ஆள் மன்னர் ஈட்டம்.
தேன் நலம் கொள் அலங்கல் வேல் சேவகர் சூழ்ந்து
  தாங்கு, உலவும் திண் தேர்ச் செல்வார்,
நீல் நலம் கொள் கடல் பிரித்த நிலம் சேர்த்து ஆள்
  இசிப்பாஞ நிருபர் ஈட்டம்.
83
   
 
3284“போர் எல்லை கடந்து உகளும் பொற் கலின
  மா ஏறிப் பொலி உம் கோமார்,
சேர் எல்லை வாழ்வு உறச் சீர் எல்லை இல
  விபெரியம் ஆள் செல்வர் ஈட்டம்.
நேர் எல்லை இல்லை என, நிமிர் கவிகை
  நெடுஞ் செங்கோல் கொற்ற மன்னர்,
பார் எல்லை அல்லது இல படர் இலுசித்
  தானியம் ஆள் பரிவோர் ஈட்டம்.
84
   
 
3285“கொக்கு ஒக்கும் தேரின் எழீஇக், குணக்கு ஒக்கும்
  சுடர் ஒத்தக் குணத்து அக் கோமார்,
இக்கு ஒக்கும் மலர் மணி சேர் இழை ஒக்கும்
  அங்கிலியத் தீவு இறைவர் ஈட்டம்
புக்கு ஒக்கும் புயல் ஒக்கப் பொழி மத மால்
  களிறு ஒக்கும் பொலி கோல் அன்னார்,
திக்கு ஒக்கும் செல்வம் எலாம் திரண்டு ஒக்கும்
  ஈர்லாந்த தீவுஆள் ஈட்டம்.
85
   
 
3286“கோல் உண்டே விசயம் கொள், கோல் உண்ட
  அப் பசும் பொற் கோல் கை உண்டோர்,
பால் உண்டே பூந் துகில் தம் பால் உண்ட
  பார்த்தவர் ஆள் பதியர் ஈட்டம்
கால் உண்டே விசை கடுத்த கால் உண்ட
  இரத மிசை களித்த அன்னார்
நூல் உண்டே நீதி வழா நூல் உண்ட
  நொர்வெற்கர் தலைவர் ஈட்டம்.
86
   
 
3287“விண் தீண்டி ஆடு கொடி விமான மிசை,
  விரி கதிர்ப் பூண் வேய்ந்த அன்னார்,
மண் தீண்டி உலாம் கடல் சார் வயம் எஞ்சாப்
  பிறூசியர் தம் மன்னர் ஈட்டம்
பண் தீண்டி, எழும் குரலின் பாடினர் சூழ்
  வர, வானோர் பரிசு ஒத்து அன்னார்,
கண் தீண்டி இன்பு உகுக்கும் கவின் தீட்டும்
  பவோனியரைக் காக்கும் ஈட்டம்.
87
   
 
3288“துப்பு அப்பால் உருச் சிவப்பத் தொக்கு, உம்பர்
  என விருதாய்ச் சுடர் மீன் கொண்டார்,
ஒப்பு அப்பால் உலகு அணி கொள் ஒளிச் செப்பு ஆம்
  சிப்புரு தீவு உடையர் ஈட்டம்,
வெப்பு அப்பால் ஒளி எறிக்கும் வெண் மணி மார்
  பிடைத் தூங்க வெயில் செய் அன்னார்,
தப்பு அப்பால் தீம் கனிகள் தந்து உவக்கும்
  கான்றிய தீவு அதிபர் ஈட்டம்“ .
88
   
 
3289ஐ அறும் ஓர் வகுப்பு அப்பால், அலகு இல நாட்டு
  அரசரைத் தான் அங்கண் காட்டி,
“மை அறும் ஓர் விளக்கு என்ன வந்து இவண், நான்
  மனத்து இரங்கி, வையத்து ஓதும்
பொய் அறும் ஓர் மறை நல் நூல், பொற் சுடரோன்
  கதிர் பட்ட புவனத்து எங்கும்,
மொய் அறும் ஓர் முறை தானும் முற்று உலவி
  வழங்கும்“ என்றான், முருகுச் சொல்லோன்.
89
   
சூசை, வானின்பம் உறல்
 
3290பண் கடந்து இனிய சொல்லான்
  பகர்ந்து காட்டிய அக் கோமார்,
கண் கடந்து இயலும் மாமை
  கண் கடவாமை நோக்கி,
“எண் கடந்து அரிய இன்பம் ஈதி!“
  என்று அடியைப் போற்றி,
மண் கடந்த அமரர் ஒத்தான்,
  மதுக் கடந்து அலர்ந்த கோலான்.
90
   
ஒருநகர பூதம் சேவகர் புடைசூழத் தோன்றுதல்
 
3291கனி வரும் இனைய ஆகிக்கதம் கொடு
  கடலும் காரும்
தொனி வரும் முழக்கத்து, இப் பார்
  துணுக்கெனப்பிளந்த வாயால்
நனி வரும் புகை மொய்த்து, எங்கும்
  நடுக்கு இருள் பரவச், செந் தீ
முனி வரும் நரக பூதம்
  முழங்கி மேல் தோன்றிற்று அன்றோ.
91
   
 
3292நோய் விளை சினம் கொடு ஆவி
  நுகர வந்து எதிர்த்த கூற்றோ?
தீய் விளை நரகப் பேயோ? அவற்றினும்
  தீயது ஒன்றோ?
மீய் விளை தலை ஏழ், கொம்பு ஏழ்,
  விரி சிறைச் சற்பம் ஏறி;
வாய் விளை அழல் விட்டு ஆர்ப்ப,
  மண் பிளந்து எழுந்தது அன்றே.
92
   
 
3293நேர் ஒன்றும் இலது, இவ்வாறே, நினைப்பினும் பனிப்ப உள்ளம்,
கார் ஒன்று முழக்கத்து அஃதே கதத்து அரசு ஆக எய்த,
பார் ஒன்றும் திசைகள் எஞ்சப் படர்ந்ததற்கு ஒத்த வீரர்
சீர் ஒன்றும் அலகு இல்லாத சேவகர் மருங்கின் சென்றார்.
93
   
 
3294நாய் இனம் என்னச் சீறி, நலது எலாம் பகைத்த அன்னார்,
பேய் இனம் உவப்ப, வேதப் பெயர் அற வெகுண்டு தாக்கி,
தூய் இனம் ஒருங்குங் கோற, சூழ் எங்கும் அரவம் பொங்கி,
வேய் இனம் அழிப்பப் புக்க வெந் தழல், கதத்தில், ஒத்தார்.
94
   
பேயின் செயலால் நல்லோர் சிலர் மாய்ந்ததும்,
பலர் தோன்றுதல்
 
3295இடத்து இடத்து, அலகு இல் நல்லோர்,
  இறந்து, உயிர் எஞ்ச மாய்ந்து,
சுடச்சுடப் புதுக் கலத்தில்
  சுவைய பால் பொங்கல் போல
படப்படச் சிலர், எண் இன்றிப்
  பலர் எதிர்த்து, உவப்பில் ஆவி
கெடக் கெடத் தந்து, வான்மேல்,
  கேழ் முடி சூடி, நிற்பார்.
95
   
 
3296பேர் பகை எஞ்ச, எஞ்சாப் பெருமையோர்
  வாய்ப்பக் கண்டு,
“சேர் பகை யாது என்று ஐயா,
  செப்புதி என்னச் சூசை,
“ஆர் பகைக் காதை கேண்மோ, அருந் தவ“,
  என்று சொல்வான்,
நேர் பகை மறுப்ப, நேரா நிமிர்
  நெடுங் காட்சி நீரான்.
96
   
துன்பத்தின் நன்மை
 
3297“கூவில் வந்து நான் குணுங்கு அரசு எங்கணும் பறிப்ப,
பூவில் வந்து தான், நமர் எலாம் பகைத்து, அதிர் புலிகள்
காவில் வந்து மான் கடுத்து என, மக்களும் அப் பேய்
ஏவி வந்து, மா பகை விளைந்து எங்கணும் ஆம் ஆல்.
97
   
 
3298“கடையர் என்பவர், கசடர் என்பவர், கலை கடிந்த
மடையர் என்பவர், மறை முறை குலம் திரு இழந்த
புடையர் என்பவர், புரை துயர் இழிவு நோய் ஒருங்கே
உடையர் என்பவர், தூய என் சுருதி நூல் உடையோர்.
98
   
 
3299“தாயும் தந்தையும் தமர் எலாம் பகை செய, என்றும்
ஓயும் தன்மையும் ஒன்று இல நகைத்து அடித்து அகற்றி,
நோயும் துன்பமும் நுகர்ந்து, எமர் யாவரும், செம் பொன்
காயும் தன்மையின் கதிர் செயல் போல், வளம் கொள்வார்.
99
   
 
3300“கோலும் கோடிய கோக் கணமும்
  பகைத்து, அன்ன
நூலும் கோடு அரும் நூல் இடை
  யாவரும் மடிய,
வேலும் கோலும் மற்று அரும் படை கொடு மிக
  வெகுண்டு எப்
பாலும் கோது இலர் குருதியோடு உயிர்
  நலம் பறிப்பார்.
100
   
 
3301“கொடிய வேலினர் கொடுமை செய்து அயருவார், அயரார்
நெடிய வேதனை நீர்த்த இன் அமுது என நுகர்ந்தோர்,
‘கடியரே, உமக்கு உரியது ஓர் கருமம் இத் துணையோ?
மடியவே உடல், மடியுமோ உயிர்?‘ என நகைப்பார்.
101
   
 
3302“எரிந்த வெந் தழல் இக்கு உகும் பனி மலர் என்பார்,
அரிந்த வெம் படை அணிந்த பொற் பணி நலம் என்பார்,
பிரிந்த நல் உயிர் பருகும் நஞ்சு அமுது என்பார், பெருகப்
புரிந்த வெந் துயர் புரி மண இன்பமே என்பார்.
102
   
 
3303“இத் திறத்து அவர் இறத்தல் காண் பலரும், அம் மறை செய்
மெய்த் திறத்தில் இவ் வீரம் ஆம் என உளம் தேறி,
அத் திறத்தில் அங்கு ஒருவர் மாய்ந்து ஆயிரர் தெளிந்து,
பொய்த் திறத்த நூல் போக்கி, மெய்ச் சுருதி கைக்கொள்வார்.
103
   
 
3304“விரைத்த வேலியே விளைவு உறப் பாய் புனல் போன்றே,
நிரைத்த சோரியால் என் மறை விளைவு நீள்வதும், மற்று
உரைத்த ஓகையால் உலந்தவர் அரசு உறீஇ, வான்மேல்
வரைத்த மாமையால் விரைவு இல வாழ்வதும் நோக்காய்.
104
   
 
3305“பொன்னைக் காட்டிய பொறி அழல் போல்வதே அல்லால்,
கொன்னைக் காட்டிய கொடுமை நொந்து எஞ்ச, நல் மறையோடு
என்னைக் காட்டிய ஈடு உளோர் பகை வெல்வார்“ என்றான்,
மின்னைக் காட்டிய விரி மணி மேக வாகனத்தான்.
105
   
சூசையின் வேண்டுதல்
 
3306“என்னைப் பற்றி நீ இறந்து உலகு அளிப்ப,
  மற்று, உமர் தாம்
நின்னைப் பற்றி மாய்ந்து இகல் வெல,
  நினக்கு இனி நிகர் யார்?
உன்னைப் பற்றி, நான் உதிரம் தந்து அரசு
  உற இரங்கிப்,
பின்னைப் பற்றி நீ தருக“ எனப் பெருந்
  தவன் தொழுதான்.
106
   
திருமகன் சூசை முனிவர்க்கு அளிக்கும் பரிசு
 
3307களிப்ப வானமும், நாய்கன், ஓர் புன்னகை காட்டி,
அளிப்ப, ஆர்வமும் ஆவியும் ஒன்று உறத் தழுவி,
“துளிப்ப ஆதுவம் துணர் விரி கொடி நலோய், உன்னைத்
தெளிப்ப, ஆசையின் செப்பிய தகுதி சால்பு“ என்றான்.
107
   
 
3308“தீய் வரும் படை சிந்து செந்நீர் அரசு எனக்கு ஆய்,
நோய் வரும் துயர் நுகர் பொறை அரசு உனக்கு என்றான்.
மீய் வரும் திருவுளம், வளன், மேவி உள் வலிப்பத்,
தூய் வரும் படும் துயர் அற, இவன் பிணி சொல்வாம்.
108