பிணிதோற்று படலம்
 
திருமகன் தன் கைத்தாதையைப் பொறுமையின் அரசனாக்கப்
பிணிக்களை அனுப்பினான் எனல் நோயின் கொடுமை
 
3309வேல் முகத்து, அசடர் கையால்,
  வீழ்ந்து இறப்பு அரிது என்கேனோ?
நால் முகத்து உறு நோய்க்கு, எஞ்சா
  நயத்து அமைவு அரிது என்கேனோ?
கோல் முகத்து ஈண்டே சாதல்
  குணம் எனப், பல நாள் வெந் நோய்ப்
பால் முகத்து, அவலம் ஆற்றாப்
  பலர், தமைக் கொல்வார் அன்றோ?
1
   
 
3310“தீங்கு இயன்று ஆய துன்பம்
  திரிந்து, அறம் விளைவு காண,
ஈங்கு இயன்று உதித்த நாதன்,
  எளியன் ஆய்த்தனக்கு மற்றை
ஆங்கு இயன்று அமை கைத்தாதை,
  அனைத்திலும் அரிய துன்பப்
பாங்கு இயன்று அரசு கொள்ளப்
  பல பிணி படச் செய்தானே.
2
   
நோயின் கொடுமையும் சூசையின் நோன்மையும்
 
3311மேன்மையே பொருளால் ஆகி,
  மிக்கு அவை இங்கண் உண்டேல்,
கோன்மையே மனிதர்க்கு ஆகும்.
  குன்றும் அஃது என்று, வான்மேல்
நோன்மையே அரசு ஈந்து, அங்கண்
  நுண்தகை மேன்மை ஆகும்
பான்மையே, சூசை புன்கண்
  பட்டது ஓர் நிலையில் கண்டோம்.
3
   
 
3312வெவ் வினை அனைத்தும் பாவ
  விளைவு தான். மீண்டு, அத் துன்பம்
செவ் வினை வளர்வு காட்டத்
  திருவுளம் என நல்லோர் கண்டு,
அவ் வினை நுகர்ந்து மாழ்கா,
  அருந் தவன் தானும் பல் நோய்
மொய் வினை கொண்டு, உள் எஞ்சா,
  முற்று இவண் திலதம் ஆனான்.
4
   
 
3313இறைக்கு ஒரு தாதை ஆக
  எழுந்து, எலா அறங்கள் பூத்து,
மறைக்கு ஒரு கொழு - கொம்பு அன்னான்
  வருந்தி நோய் உற்ற பாலால்,
பொறைக்கு ஒரு நிலைச் சார்பு அல்லால்,
  புலம்பி நாம் எய்தும் பீடை
முறைக்கு ஒரு மருந்தும் ஆகி,
  முற்றும் நாம் உவப்ப நொந்தான்.
5
   
 
3314விரை கிடந்து அலர்ந்த பைம் பூ
  வெந் தழல் பட்டதே போல்,
நரை கிடந்து இரிந்த மூப்பின்
  நைந்து உடல் தளர்ந்து வாட,
வரை கிடந்து அதிர்ந்து மல்கும்
  வாரியின், மலிந்த நோய்கள்
சிரை கிடந்து இழுத்து, என்பு எல்லாம்
  சினம் கொடு குடைவ தாம் ஆல்.
6
   
 
3315போர் முகத்து அஞ்சா வீரப்
  புழைக் கையோ, புணரி மோத
நீர் முகத்து அசையாக் குன்றோ,
  நெடும் பிணி முகத்து எஞ்சாதான்?
கார் முகத்து அலர்ந்த முல்லைக்
  கா எனத், திரண்ட பல் நோய்
சேர் முகத்து, அலர்ந்து, தேவ
  திருவுளம் துதித்தல் விள்ளான்:
7
   
சூசை தன்னைத்தானே தேற்றுதல்
 
3316“தீய் வரும் துகள்கள் வெஃகித்,
  தீயவோ அருந்தல் ஆற்றோம்?
மாய்வு அரும் புரை தீது அல்லால்,
  வழுவும் ஒன்று உண்டோ?“ என்பான்.
“மீய் வரும் துன்பம் இன்பம்,
  வீற்று வீற்று ஆகக் கொள்ளார்
ஆய்வு அரும் திரியாத் தேவ
  அன்பு உணர் நீரார்“ என்பான்.
8
   
 
3317“பொய்க்கும் ஓர் இன்பம் மாந்திப்
  புரை எனும் நஞ்சு உட்கொண்டால்,
கைக்கும் ஓர் மருந்து உண்ணாதோ,
  கடுத்த நோய், ஒழியும்? என்பான்.
தைக்கும் ஓர் அம்பின், பீடை
  தகை கெட மிகுங்கால், வான்மேல்
மொய்க்கும் ஓர் இன்பம் உள்ளி,
  முற்று எலாம் அவியும்“ என்பான்.
9
   
 
3318“முக் குடை நிழலில் யாவும்
  முற்றும் ஆள் இறைவன் பாரில்
புக்கு உடைப் புரைகள் தீர்த்துப்
  பொன்றவே உதித்த பின்னர்,
‘இக்கு உடை இன்பம் அல்லால்,
  எமக்கு இடர் தகாது, என்பாரோ?
மிக்கு உடைச் செல்வ வல்லோன்
  விரும்பிய நன்று இது“ என்பான்.
10
   
 
3319அத் திறத்து இன்பம் ஆக அழுங்கிய துன்பம் தாங்கி,
கைத் திறத்து இயற்றல் இன்றி, கால் திறத்து இரிதல் இன்றி,
மெய்த் திறத்து உருகி வாடி, மேல் திறத்து ஊக்கம் வாடா,
எத் திறத்தாலும் ஒவ்வா இருமையின் பொலிந்தான் சூசை.
11
   
வானவர் சூசைக்கு வீட்டின்பம் விளைத்தல்
 
3320வரிந்த மாமை உருக் கொடு வானவர்
இரிந்த ஓகையில், ஏந்திய வீணைவாய்
சொரிந்த ஓதை தொடர்ந்து இசை பாடலில்,
விரிந்த வாம விழா அணி ஆயதே.
12
   
 
3321ஆடுவார், திரு நாமங்கள் ஆடுவார்,
பாடுவார், பிணியோன் துதி பாடுவார்,
தோடுவார் வெறித் தொங்கல் இட்டு ஓடுவார்,
வீடுவார் நயம் செய்குவர், வீடு இலார்.
13
   
 
3322ஆய இன்பம் அருமை அருந்தவும்,
நேய வண் தவன், நேர் இசை பாடவும்,
காய வெந் துயர் காண்டலன், அத் துயர்
ஓய, உம்பருள் உம்பன் என்று ஆயினான்.
14
   
 
3323துனி வரும் துயர் ஆக்கை துகைத்துளி,
நனி வரும் களி நல் உயிர் உண்டலால்,
முனி வரும் தழல் முய்த்து எரி பாலையில்
பனி வரும் துணர் பூத்து அன பான்மையே.
15
   
மரியாள் வேண்டுதல்
 
3324துகைத்த நோய், தணிவும் தொகையும் படாப்
பகைத்த பான்மை, பணிப் பத மங்கை கண்டு
உகைத்த ஏவலில், ஓர் இரு போது அது
தகைத்த பின்பு சினம் கொடு தாக்கும் ஆல்.
16
   
மரியன்னையின் பணிவிடை
 
3325விதுப் படும் பத மென் மலர்ச் சுந்தரி,
மதுப் படும் கொடி வாட்டு இடர் முற்று அற,
பொதுப் படும் தனிக் கோல் சுதன் போற்றினள்;
புதுப் படும் பனித் தேன் உரை போக்கினாள்:
17
   
நோய் தனிக்க மகனிடம் வேண்டுதல்
 
3326“வேண்டும் என்பதும், வேண்டுவது ஆக்கலும்,
யாண்டும் ஒன்று என யாவும் இயற்றினோய்,
நீண்டு நொந்து நின் தாதை படும் துயர்
காண்டு, உளம் கனியாது கொலோ?“ என்றாள்.
18
   
 
3327“துவர்க்கும் வெம் பகையோர்க்கு அருள் சூட்டி, மற்று
எவர்க்கும் நோய் ஒழித்து, இன் உயிர் ஈய வந்து,
அவர்க்கும் செய்தவை ஈங்கு அளியாய் கொலோ,
உவர்க்கும் வேலை ஒவ்வா அருளோய்?“ என்றாள்.
19
   
 
3328“அல்லது, அன்பு உடை ஆவருக்கும் ஆகுலம்
நல்லது என்று, இவற்கு இத் துயர் நல்கினேல்,
வல்ல நந்தனே, வந்த இந் நோய்கள் நான்
புல்ல அன்புடன் ஈக“ எனப் போற்றினாள்.
20
   
திருமகன் திருவுளம்
 
3329மீனில்நின்று ஒளி மேய் முடியாட்கு, அவன்,
“வானில்நின்று இவண் நான் வந்து தேடிய,
ஊனில்நின்று உறும் துன்பம் நன்று ஆயினும்,
தேனின் இன் துயர்ச் செய்தியைக் கேள் என்றான்.
21
   
 
3330“நோய் அருந்தல் இவற்கு என, நொந்து உடல்
காயம் உண்டல் எனக்கு எனக், கண்டு உளம்
தீ அருந்தல் உனக்கு எனச், சீர்த்த ஓர்
தூய் அருந் தயைச் சூட்சி இது ஆம்“ என்றான்.
22
   
மரியன்னையின் பணிவிடையால் சூசை மகிழ்தல்
 
3331இனைய கேட்டலும் தாயே,
  இது திருவுளம் என இணங்கித்,
தனையன் ஏற்றினள், தணியாத்
  தலைவன் நோய்க்கு இனைந்து அழுது, ஆற்றாச்,
சுனைய தாமரை இரு கண்
  சுட்டு எரி அழல் திரள் உண்டது
அனைய வாடினள்; அந் நோய்
  ஆற்றவும் வருந்தினள் மாதோ.
23
   
 
3332இனிய தேனினும், இனிய யாவிலும் இனிய தீம் சொல்லைக்
கனிய ஆடுவள.் உயிரைக் காத்த மெய் என, இரு பொழுதே,
நனி அவாவொடு, பிரியா, நயந்து செய் ஏவலால், உடலை
முனிய வந்த நோய், முத்தி முற்று உகும் வாழ்வினும் இனிதே.
24
   
 
3333தேன் கலந்ததோ? சுவையில்
  சீரிய தெளிந்த பாகு அதுவோ?
வான் கலந்த நல் அமுதோ?
  வான் மலர் மது அதோ? யாதோ?
மீன் கலந்த நீள் முடியாள், விளைந்த
  தன் அன்பு கூட்டியது ஓர்
கான் கலந்த தீம் விருந்தைக்
  கனிவில் எந் நாளும் ஓம்புவள் ஆல்.
25
   
தாயுடன் திரும்கனும் பணிவிடை செய்தல்
 
3334ஆவல் செய் அருள் தாயும்,
  அனைத்தையும் தொக்கு உள ஆக்கிக்
காவல் செய் திரு மகனும்,
  கண்ணினைக் காத்த கண் இமை போல்,
ஓவல் செய் பிணி மாறா
  உளைந்த மா தவனைக், காத்து, இருவர்,
ஏவல் செய்தனர், வானும்
  இயம்பு அரும் வியப்பு உற மாதோ.
26
   
எது செல்வ உணவு
 
3335உண்டு வாழ் உயிர்க்கு எல்லாம்
  உணவு எலாம் அளித்தவன், உண்ப,
பண்டு தான் உழைத்து உணவு
  பகுத்தலே செல்வம் என்கேனோ?
வண் துளாய்க் கரத்து ஏந்தி
  வான் தொழும் அரசு, இடும் உணவு
கொண்டு, தான் உயிர் வாழ்ந்த
  கொள்கையே செல்வம் என்கேனோ?
27
   
 
3336நடலை யோடு அருந் தேவ நயங்களும், இன்னணம், மாறாப்
படலை மாலையாய்ப் புணர, பகைப் பிணி சுடச் சுட துகைத்த
உடலை வாட்டிய தன்மைத்து உயிர் எழச் சூசையே
விடலை ஆயின தகுதி விளம்பவோ புலமையின் வல்லோர்?
28
   
ஒன்பது நாட்களுக்கு வானவர் சூசை
முனிவர்க்கு வானின்பம் தருதல்
 
3337நீடிய பிணிகள் எண் வருடம் நீங்கு இலா,
வாடிய உடற்கு உயிர் வாடு இலா வளர்ந்து,
ஓடிய மீன் மிதித்து உயர்ந்து, வான் நலம்
சூடிய தன்மையின் சூசை ஆயினான்.
1
   
 
3338கண் புலம் கடந்து உருக் கடிந்த வானவர்,
உள் புலம் தகும், தகவு ஒத்த மாட்சியான்,
மண் புலம் தணந்து இனி உரிய வாழ்வு உற,
விண் புலம் தணந்தனர் விளிப்ப எய்தினார்.
2
   
 
3339பணி வளர் மாமையின் பளிக்கு மேனி கொண்டு,
அணி வளர் மகர யாழ் ஆதி மற்றையும்
மணி வளர் மலர்க் கையால் தடவி, வாய்க் குரல்
பிணி வளர் துயர் அறப் பேணிப் பாடுவார்.
3
   
 
3340மீ மழை பொழிந்து என, விண்ணில் பூத்தது ஓர்
பூ மழை மண மழை பொழி நல் நீர் செயும்
தே மழை துதி மழை செறிந்த பாடல் செய்
நா மழை பகல் இரா நயந்து நல்குவார்.
4