தூதுரைப் படலம்
 
பத்தாம் நாள் சூசை இறைமையைக் காணுதல்
 
3341சுக முகத்து இன்ன ஆய் தொடர் ஒன்பான் பகல்
நிக முகத்து ஆய், வளன், நிகர் இலா வயத்து
அக முகத்து ஒரு மறைவு இன்றி, அன்று, ஒளி
முக முகத்து, இறைமையை முழுதும், கண்டு உளான்.
5
   
 
3342உரை கடந்து உணர்வு அரும் இறைமை ஒள் முக
வரை கடந்து ஒழுகு ஒளி மகிழ்ச்சி நீத்தம் உள்,
தரை கடந்து என அருந் தவன் குளித்து, எலாக்
கரை கடந்து உறு நயம் கருதும் தன்மையோ?
6
   
 
3343தோடு செய் கொடி நலோன் துலங்க, நாயகன்,
வீடு செய் நயத்தொடு விரும்பி நோக்கினன்;
சேடு செய் கமல வாய் துளித்த தேன் உரைப்
பாடு செய்து இன்னவை பரிவின் கூறினான்:
7
   
சூசைக்கு ஆண்டவன் உ,ரைத்தவை
 
3344“உன் உயிர் தன்னினும் ஓம்பித்தாய் மகன்
இன் உயிர், காத்தனை, இனிப்பயன் கொளீஇ,
மன் உயிர் பெறும் கதி வானில் வந்து உறீஇ,
நின் உயிர் வாழ்தலே நீதி ஆம் அரோ.
8
   
 
3345“ஆயினும், அரிதின் நீ வளர்த்த ஆண்டகை,
தாயினும் அன்பொடு தரணி காக்குப
வீயினும் அன்றி, மேல் வீடு உறாது, உடல்
ஓயினும், நீ செய்வது ஓம்பிக் கேட்டி ஆல்.
9
   
 
3346“ஈடு அடைந்து, அருந் தவம் இயன்ற முந்தையார்,
நீடு அடைந்து உறையும் என் தயை நிழற்றிய
நாடு அடைந்து, இறை இறந்து அளிக்கும் நாள் உறீஇ
வீடு அடைந்து உவப்பர் என்று, அருள் விளம்புவாய்.
10
   
 
3347“உடல் கடிந்து, உவந்து உயிர் உறையும் நாடு என,
மடல் கடிந்து எரி பட வாடும் பூ இணை
அடல் கடிந்து, இளைத்த நின் ஆக்கை நீக்கி, இவ்
இடன் கடிந்து அங்கண், நீய் விரைவில் ஏகு என்றான்.
11
   
 
3348என்றலோடு, உயிர் தனில் இனிய மைந்தனும்
மன்றலோடு இயைந்த மா மரியும் நீக்கலே
பொன்றலோடு உலைக்கினும், பொலி திரு உளத்து
ஒன்றலோடு இனிது இல் என்று, உணர்வில் தேறினான்.
12
   
சூசை திருமகனோடு உரைத்தவை
 
3349களி முகத்து இணங்கி, அன்னான்,
  கடவுளைப் பணியும் வேலை,
வெளி முகத்து உற்ற காட்சி
  மின் என மறைந்து, தானே
ஒளி முகத்து இலங்கிச்சூழ
  உவப்பு உற மகனும் தாயும்
அளி முகத்து இருப்ப நோக்கி,
  அறைதல் பேர் உயிர்ப்போடு உற்றான்:
13
   
 
3350“ஓர் இயல்பு ஆக, உன்னோடு
  ஓர் என்பான் பணித்த ஏவல்,
பேர் இயல்பு அறிவின் கண்டாய்,
  பிரிதலே வேண்டும். இஃதே,
சூர் இயல் துன்பத்து எல்லாம்
  துன்பமாய் வருத்தும் ஆகில்,
சீர் இயல்பு இயற்றும் தேவ
  திருவுளம் நன்றின் நன்றே.
14
   
 
3351“மைந்தனே, மைந்தன் என்ப
  வரம் எனக்கு அளித்தி நீயே,
தந்த நேர் அகன்ற நன்றி
  தனக்கு என்னால் கைம்மாறு என்னோ?
சிந்து நேர் எனக்குச் செய்த
  சீர் அளவு, இடுக்கண் யாவும்,
கொந்தல் நேர், விளையக் கொய்தி;
  கொய்து அருள் விளைத்தி, நல்லோய்!
15
   
 
3352“நிந்தை என்று உடை நான் ஓங்க,
  நிமிர்ந்த வான் வியப்ப, என்னை,
‘எந்தை!‘என்றனை நீ, உந்தைக்கு
  இரங்கி, நல் ஆசி, தேவ
தந்தையின் பணியைச் செய்யத்
  தருதி“ என்று அடியில் வீழச்
சிந்தையின் எழுந்தது ஆற்றாத்
  திருமகன், தாங்கினானே.
16
   
சூசை உயிர் விடுங்காட்சி
 
3353மூ உலகு அனைத்தும் தாங்கும்
  முதலவன் ஒரு பால், ஓர் பால்
தே உலகு அனைத்தும் ஏத்தும்
  தேவதாய், தாங்க, சூசை
மே உலகு உள்ளி யாக்கை
  விடும் உயிர் தனை அன்பு ஒன்றே
பூ உலகு இருத்தினாற் போல்,
  பூங் கரம் கூப்பி நின்றான்.
17
   
 
3354“பன்னலால் நிகரா வண்ணம்,
  பயன் உன்னால் பெற்றேன் நானே;
மின்னலாய், உனக்கு ஈங்கு என்னால்
  விளைந்த பல் கசடு உண்டு ஆமே;
நின் அலால், பொறுப்பார் யாரே?
  நீத்து இவை, அருளின் ஆர்வம்
உன்னலால், ஆசி செய்க“ என்று,
  உயர் தவன், தொழுது நின்றான்.
18
   
 
3355இருவரும் இரு பால் ஆசி இட்டு அருள் உரையின் தேற்ற,
உரு வரும் வானோர் சூழ, ஒலிக் குழல் இசையின் பாடி,
மரு வரும் மலரைச் சிந்தி, வயவையில் விளித்து முன்ன,
திரு வரும் ஆக்கை நீக்கித்தெள் உயிர், போயிற்று, அம்மா!
19
   
கல்லறையில் அடக்குதல்
 
3356மெய் இலார் நாட்டில் தூது விளம்ப,
  மெய் உயிர் விட்டு ஏகிப்,
பொய் இலா உயிராய் அன்பு உள்
  புக்கு எனக் கிடந்த யாக்கை,
மை இலா மலர்ந்த கொம்போ,
  வரைந்த நல் படமோ தோன்றி,
நை இலாத் துயில் கொண்டு என்ன,
  நளி ஒளி வீசிற்று அம்மா!
20
   
 
3357விது வளர் பத நல்லாளும், விண் வளர் அரசர் கோனும்,
பொது வளர் முறைமேல், அன்ன பூட்சியைப்பேணி, வானோர்
சது வளர் அணியின் சூழ்ந்து, தனி வளர் புகழ்ச்சி பாடி,
மது வளர் மலரைச் சிந்தி, மலர் வனத்து அடக்கினாரே.
21
   
திருமகன் பூமிக்கு இட்ட கட்டளை
 
3358“தூது உற உயிர் போய், மீண்டு
  தோன்று அளவு உடலை, பூவே,
பாது உறக் காமின்“ என்னப்
  பரமனே பகர்ந்த ஆசி,
காது உற மகிழ்ந்த பூமி,
  கைக் கொண்ட நன்றி மூட,
போது உற விரித்த பைம் பூம்
  போர்வை மேல் போர்த்தது, அன்றே.
22
   
சூசையின் உயிர், பிதாக்கள் வாழ்ந்த அருள்
நிறை நாடு செல்லுதல்
 
3359மடல் கடிந்து நறா மது வாகையான்,
உடல் கடிந்து, உடலம் கடிந்தோர் இடை,
கடல் கடிந்து கனிந்த சொல் கூற, மெய்
அடல் கடிந்த, தன் ஆவியோடு எய்தினான்.
23
   
 
3360நிந்தை ஆகுலம் நீத்து, அற நீர்மையால்,
தந்தை ஆம் இறை, தாழ்வு இலா, தாள், தொழுது,
எந்தையால் கதி எய்துப நம்பிய
முந்தையார் உறை, முற்று அருள் நாடு அதே.
24
   
 
3361மை இழந்து, மயக்கம் இழந்து, அவாப்
பொய் இழந்து, புரைகள் இழந்து, தோல்
பை இழந்து, உறு பாடும் இழந்து, அருள்
மெய் இழந்திலர் வேய்ந்து உறை நாடு அதே.
25
   
 
3362காட்டும் ஆசை களிப்பு உற, நாதன் ஆங்கு
ஈட்டும் நன்றி இசைப்பது பாலதோ?
பேட்டு, வீடு அவர் பெற்றிலர் ஆயினும்,
வீட்டு வாயில் எனா மிளிர் நாடு அதே.
26
   
 
3363அன்ன நாட்டை அன்னான் அடைந்து, ஆங்கு, மீன்
மின்ன மீன் அரசு உற்று இடை வேய்ந்து என
மன்ன, மா தவர் ஊடு வயங்கினான்,
சொன்ன மா மறை சூட்டு உளத் தூயினான்.
27
   
 
3364புக்கு அடைந்த பொலிந்த அந் நாட்டிடை
மிக்கு அடைந்த நலோர் வியப்பு உற்று எழ,
சொக்கு அடைந்த உருக் கொடு தோன்றினான்,
இக்கு அடைந்த இளந் துணர் வாகையான்.
28
   
ஆங்கிருந்த தவதோர் இன்பம்
 
3365“மண் புலம் தவிர் நாம் களி மாந்திட
கண் புலம் தவிர் தன் கவின் காட்ட, ஈங்கு
எண் புலம் தவிர் காந்தியோடு எய்தினேன்,
விண் புலம் தவிர் விண்ணவனோ?“ என்பார்.
29
   
 
3366“ஆதி ஈறு இலா நாயகன், அம் புவி
மீதில், ஈறு உயிர் ஆக, விளிந்து, ஒரு
தீது இலாக் கதி வாயில் திறந்த பின்,
ஏது இல் நாம் அடை மாட்சி இதோ?“ என்பார்.
30
   
 
3367“ஆயினான் உலகத்தை அளித்த பின்,
தாயின் ஆர் அருள் தாங்கிய தன்மையால்,
மீயின் ஆம் கதி வீட்டு எமைச் சேர்த்திடத்,
தூயினான் அடை தோற்றம் இதோ?“ என்பார்.
31
   
 
3368ஐயம் தோன்றும் மனத்து அயர்வு அற்றிட,
சையம் தோற்றிய தோள் தவழ் தாரினான்,
துய் அம் தோடு அவிழ் பூங் கொடி சுட்டுபு,
மையம் தோன்றி, இவ் வாய் உரை போக்கினான்:
32
   
‘நாதன் அனுப்பிய தூதன் நான்‘என சூசை கூறுதல்
 
3369“வையத்தார் கசடு அழித்து,
  வழு இன்றி மன் உயிர்கள்
உய்யத்தான் மனு ஆய
  உயர் கடவுள், உமக்கு இன்பம்
செய்யத்தான் இன்று இங்கண்
  செலுத்தியது ஓர் தூது அடியேன்,
ஆய்யத்தால் ஆசை அத்தால்
  அயர்வு உண்ட அறவோரே!
33
   
 
3370“தூய் ஆக, மறை வடிவு ஆயத்
  தொக்கு இணை வெல் மாட்சிமையாள்
தாய் ஆக, கன்னியும் ஆய்த்
  தாரணி மேல் அரிது ஈன்ற
சேய் ஆக எம் இறையோன் சென்று,
  ஐ ஐந்து ஓர் ஆண்டு ஆய்,
தீ ஆக வருத்தும் வினை தீர்த்திடும்
  நாள் நண்ணியதே.
34
   
 
3371“அன்னவட்கே மணத் துணை ஆய்,
  அன்னவள் ஆங்கு இனிது உயிர்த்த
மன்னவற்கே கைத் தாதை வரம் உளன்
  ஆய், ஈங்கு அடியேன்
இன்னவற்கே தூது உற்றேன்; இந் நாள்
  உம் சிறை நீங்கிப்,
பின் அவற்கே வீட்டில் துணை பெரிது
  உவப்பீர், இனி“என்றான்.
35
   
அனைவரும் சூசையை வணங்கிக் கூறியவை
 
3372தேன் பொதுளும் கனி தீம் சொல்
  தெளி பயன் கேட்டு, அவன் ஏந்தும்
கான் பொதுளும் மலர் வாகை
  கண்டு, உண்ட நயம் பெருகி,
‘ஊன் பொதுளும் குலத்து இம் மாண்பு
  உண்டோ.‘ என்று உளம் வியப்ப,
வான் பொதுளும் வரத்தோனை
  வணங்கின்றார் ஒருங்கு அன்னார்:
36
   
 
3373“ஆரணனே, ஆரணம் சேர் கொழு கொம்பே,
  அரிது உவப்பக்,
காரணனே கண்டு அணைத்த கைத் தாதையே,
  அருளால்
பூரணனே, நாம் விழைந்த பொழுது அடைந்தாய்;
  இன்பம் மலி
வாரணனே, தவத்து ஆசைக் கரை கண்டாய்,
  வரத்தவனே!
37
   
 
3374“முக் காலம் காட்டும் ஒளி
  முக விளக்கு ஆம் தவத்தொடு, நாம்
அக் காலம் காண் மறைவில்
  ஆங்கு உரைத்த நாதனை நீ
இக் காலம் காட்டினையே!
  ஏந்தினையே! வளர்த்தனையே!
மெய்க் காலம் காட்டிய வான்
  வேந்தன் இயல் விளம்பு“ என்றார்.
38
   
சூசை, அவதரித்த நாதன் இயல்பைக் கூறுதல்
 
3375“கோட்பது அருங் குணத்து இறையோன்,
  குணக்கு ஒளி போல் நிலத்து உதித்து,
வேட்பது அருந் தயை புரிந்து
  விளங்கும் நிலை யாது என்னக்,
கேட்பது அரும் வினை கேட்டீர்,
  கெழுந் தவரே!“ என்றான்; பின்,
மீட்பது அருஞ் சொல் தொடுத்தான்,
  விம்மிதக் கற்பு உளத் தூயான்.
39
   
 
3376நோய் ஒக்கும் அவர்க்கு இன்பம்
  நுனித்த உயிர் மருந்து ஒக்கும்;
தீ ஒக்கும் புரையார்க்கே சீதம்
  ஒக்கும் புயல் ஒக்கும்;
வீ ஒக்கும் வடிவத்தால்;
  வியன் தயையால் கடல் ஒக்கும்;
தாய் ஒக்கும், தாதை ஒக்கும்,
  சகத்து எங்கும், அத் திருவோன்.
40
   
 
3377“மீன் ஒக்கப்பாவ இருள் விலக,
  மிளிர் விழி கொண்டான்;
கான் ஒக்க மறை உமிழக்கமழ்
  கமல வாய் கொண்டான்,
தேன் ஒக்கத்துயர்க் கைப்பு சிதைப்ப,
  இனிது உரை கொண்டான்,
வான் ஒக்கக்கவின் காட்ட, மலர்
  வதன நலம் கொண்டான்.
41
   
 
3378தீது ஒருங்கும் மலிபு அறியாத்
  திளை அருள் ஆர் நெஞ்சத்தான்;
கோது ஒருங்கும் குறை ஒருங்கும்
  குறைத்து ஒழிக்கும் புயல் கரத்தான்;
நீது ஒருங்கும் தோற்றுவிக்கும்
  நெறி வழுவா அறப் பதத்தான்;
வாது ஒருங்கும் சிதைத்து அலகை
  வெல் நாம வய வேலான்.
42
   
 
3379“அருள் விஞ்சிப்பகை வெள்ளம்
  அறக் கடந்தான், மறை ஓதும்
தெருள் விஞ்சிச்செயிர்ப் புகையால்
  தேக்கிய தீது இருள் கடந்தான்,
பொருள் விஞ்சிப் பொங்கு புரைப்
  புணரி, இரந்து அவன் கடந்தான்
மருள் விஞ்சிப் பெருகும் நசை
  மடுக் கடந்தான் தவம் மிக்காள்;
43
   
 
3380“என் உரைப்பது இனி யானே?
  எந்தை மனு ஆய் உளி, நீர்
முன் உரைப்ப எடுத்த நிலை
  முற்று ஒழித்தான் கடந்து என்றால்,
பின் உரைப்பது எவன் உண்டோ,
  பெருந் தவரே?“ என்றான், சூழ்
மின் உரைப்ப ஒளி எறிக்கும்,
  மெய்ச் சுருதி விளக்கு அன்னான்.
44
   
அன்னம்மாள், தன் மகள் ஈன்ற திருமகனைப் பற்றி கேட்டல்
 
3381பேர் நல மணிக் குன்று உச்சியின் பெயர்ந்து
  பெருகி வீழ் வெள்ளம் ஒத்து, அன்னான்
சீர் நலத்து உரைத்த திவ்விய மதுர
  சீரிய தேன் உரை கேட்டு, ஆங்கு
ஆர் நல தவத்தோர் களிப்பு உறீஇ நிற்ப,
  “ அன்பு மிக்கு என் மகள் ஈன்ற
ஏர் நல புதல்வற்கு உற்றவை அறைதி“
  என்றனள், அன்னமை என்பாள்.
45
   
சூசை, திருமகன் பிறப்பு முதல் இனி அடையவிருக்கும் சிலுவை மரணம் வரையிற் கூறுதல்
 
3382நனை வருங் கொடியோன் இவ் உரை கேட்டு,
  நசை கொள் தாய் மகிழ, மற்று அங்கண்
அனைவரும் உவப்ப, கன்னிமை முகையோடு
  அம்கனி கனிந்து என, மரியே,
புனைவு அருங் கன்னி தாய் வரத்து இசைப்ப,
  புகழ்வு அருந் தேவ சூல் கொண்டு,
வினை வரும் ஐயம் உற்ற ஆறும், அதனை
  விட்ட ஆறும் ஒருங்கு எலாம் உரைத்தான்.
46
   
 
3383ஆவலர் உறவோர் அகற்றலில், வெளி மேய்ந்த
  ஆ அடை குகை இடத்து, இறைவன்,
காவலர் தன்மைத்து அமரர் சூழ் நிற்ப,
  கங்குலில் பிறந்தன வாறும்,
கோவலர் காணக் குழீயின வாறும்,
  கோக்கணம் இறைஞ்சிய வாறும்,
பாவலர் வாழ்த்திப்பலர் பழித்து, அங்கண்
  பழி பகை முற்றிய வாறும்.
47
   
 
3384கொன்விளை வெருவின் புழுங்கிய அரசன்
  கொடும் பகைக்கு அஞ்சிய பாலால்,
இன்விளை நாடும் இனமும் நீத்து இழந்தே
  எசித்திடத்து எய்திய ஆறும்,
பொன்விளை சிறப்பின் கோயிலும் உருவும்,
  பொய்விளை தேவரோடு, அங்கண்,
மின்விளை ஒளிசெய் திருமகன் முகத்தில்,
  வீழ்ந்து ஒருங்கு ஒழிந்தன ஆறும்,
48
   
 
3385ஒளி வளர் பிறை போல் வளர்ந்து, அவன், மலர்த் தாள்
  ஊன்றி முன் நடந்தன ஆறும்,
களி வளர் உவப்பில் எம் வினை தீரக்
  கனிந்த சொல் தொடங்கிய ஆறும்,
வளி வளர் ஆடி ஏழு போய், மீண்டு
  வந்து நாடு அடைந்தன ஆறும்,
தெளி வளர் உரையில், இனையவும் பலவும்,
  செழுந் தவன் செப்பி, மீண்டு உரைத்தான்:
49
   
 
3386“மணிக் கலத்து அமிர்தம் ஏந்திய நெஞ்சான்,
  வையகத்து இயற்றிய யாவும்,
பணிக் கலத்து உரைப்பது என் இனி யானே?
  பகர்வதும் செய்வதும் ஒருங்கே,
அணிக் கலத்து இரு மா மணி எனத், தயையும்
  அன்புமாய் ஒருப்படத்தானே
பிணிக் கலத்து எடுத்த உடல் ஒன்றே, எல்லாப்
  பிறர் உயிர்க்கு உயிர் எனக் கொண்டான்.
50
   
 
3387ஓர் மரக் கனியால் வந்த தீது அகற்றி,
  ஒருங்கு மன் உயிர் எலாம் உவப்ப,
பேர் மரத்து இறத்தல் வேண்டு என்று, அதுவே
  பெறற்கு அரும் நலம் தனக்கு என, நோய்
கூர் மரச் சிலுவை தனக்கு ஓர் செங்கோலே
  கொலு அதே அமளியே என்னா,
சூர் மரத்து உயர், தான் இளமையில் தொடங்கிச்
  சுகம் எனத் துயில் கொள்வான், அம்மா!
51
   
ஆங்குளோர் அனைவரும் திருமகனை நினைத்துத் துதித்தல
 
3388“தன் உயிர் தனிலும், தமர் என, மக்கள்
  தகுதியை, மேவிய அன்பால்,
மன் உயிர் உய்ந்தால் ஒழிய ஆங்கு ஒழியா
  வருத்தமே தனக்கு என, நசை கொண்டு,
இன் உயிர் மெலிய இரங்கிய தன்மைத்து
  எல்லை ஒன்று இல்லதும் அல்லால்,
உன் உயிர் வருந்த உரைப்பது ஏது?“ என்ன,
  உளத்தில் நைந்து, அருந் தவன் நொந்தான்.
52
   
 
3389என்றான், மென் தாது ஏந்திய கையான்,
  இவை எல்லாம்,
சென்று, ஆங்கு உண்டாம் மாண்பினர் கேட்பத்
  தெளிவு உண்டார்.
பின்றா அன்பால் யாரும் இரங்கப்
  பெரிது ஏங்கி
நின்றார். ஒன்றாய் ஆர் புகழ் மாலை
  நிறை சொன்னார்:
53
   
 
3390“தன் நேர் இல்லான், தன் வயன் ஆகி, தனி வல்லோன்,
முன் நேர் இல்லான், காரணன் ஆகி, முழுது ஒன்று ஆய்ப்,
பின் நேர் இல்லான், தான் மனு ஆகிப், பெரிது ஏங்க
என் நேர் ஆனானோ! அருள் நாளோ இது!“ என்பார்.
54
   
 
3391“தன் பால் எல்லா நன்று உளன் ஆகித்தகை வல்லோன்,
பின் பால் இல்லாது ஏது உளது உண்டோ? பெற அஃதை
என் பால், எல்லா நோய் உளன் ஆகி இவண் எய்த,
அன்பால் எல்லா ஒப்பு இலன் ஆய அரசு தான் என்பார்.
55
   
 
3392“வாழ நாமும் தான் அழுவானோ? வளர் நீள் நாள்
மூழ நாமும் தான் மடிவானோ? முழு முந்நீர்
ஆழ நாமும் தாழ்ந்து உறின், எந்தை அருள் ஆழி
சூழ யார் உண்டோ? இதில் உண்டோ துறை?“ என்பார்.
56
   
 
3393“எல்லை இல்லை என்று, அவன் அன்பிற்கு, இணை கூற,
வல்லை இல்லை என்றது பொய்யோ? வசை மண்ணர்,
தொல்லை இல்லை என்று, உள நாளும் தொடர் தீது ஒப்பு
இல்லை இல்லை என்றது பொய்யோ இதும்?“ என்பார்.
57
   
 
3394“அன்பிற்கு உண்டோ மாத்திரை ஆக அளவு? எம் பால்
முன்பிற்கு உண்டோ ஓர் பயன்? வான் ஆள் முதல்வற்கே
என்பிற்கு உண்டோ வெஃகும் ஓர் நன்றி? இவை ஆகிப்
பின்பிற்கு உண்டோ மானிடர் ஆசை பெற?“ என்பார்.
58
   
 
3395“அணியே, அன்பே, அன்பு அது சிந்தே, அருள் வேந்தே,
மணியே! உன் பேர் ஆர்வம் நிகர்ப்ப வல்லர் உண்டோ?
பிணியே கொண்டாய்; பேர் அரசு ஆகி மனிதர்க்கே
பணியே நின்றாய்; உன் தயை ஈதோ பரிசு?“ என்பார்.
59
   
 
3396இவ் வாய், எஞ்சா நாள்தொறும் அன்னார் இசை பாடி,
மெய் வாய் வல்லோன் சூசை உரைப்ப, விழைவு ஓங்கி,
உவ்வு ஆய், இன்னா நீங்கிய மிக்கோர், உருகு உள்ளச்
செவ் வாய் துய்த்த திவ்விய இன்பம் திதி விள்ளா.
60
   
தேவதிருக்குமரன் தன் திரு மறையைப் போதித்த முறை
 
3397இன்னவை அங்கணில் இனிதில் ஆகையில்,
உன் அவை உன்னிய உரிமைத்து ஆக்கினோன்,
பல் நவை பயத்த பேய் பகைத்த மன் உயிர்
துன் நவை யாவையும் துடைத்தல் ஓர்ந்து உளான்.
1
   
தான் தவநெறியில் நிற்றல்
 
3398நனை வருஞ் சண்பக நறு நிழற்கு இணை,
அனை வரும் குளிர் பட அருள் நிழற்றினோன்,
புனைவு அருந் துணிவொடு புவி புரந்திட
நினைவு அருந் தவம் வழா நெறி நின்றான் அரோ.
2
   
 
3399திடம் துதைந்த, அரு மறை தெளித்த நூற்படி
நடந்து, முன், அற நெறி நல்கிப், பூ மதுக்
கடந்து, பின், இனியவை கனிய ஓதுவான்,
கிடந்து மின் பிழம்பு உகக் கிளர்த்த காட்சியான்.
3
   
‘கடவுள் ஒருவரே, பலரை வணங்கற்க‘எனல்
 
3400செய் வினை உரை வினை திரிபு இலாச்செயிர்
கொய் வினை ஆகையில், குணுங்கு இங்கு உய்த்த பல்
பொய் வினை அனைத்தையும் போக்கி, யாண்டையும்
மெய் வினை உணர்த்துவான், மெய்யின் காணியான்.
4
   
 
3401“ஒப்பு இலான் ஓர் என்பான் என்று உணர்கிலா,
துப்பு இலாத் தேவரைத் தொழுதல், அந்தகற்கு,
அப்பில் ஆழ்ந்த அந்தகன், துணை அமைந்து எனத்,
தப்பு இலா வழு இவர் தவிர்க்குமோ?“ என்பான்.
5
   
 
3402“மின் உரைத்து இழைத்த பொற் கோயில் வேய்ந்தினும்,
கொன் உரைத்தன உருக் கொள்கைத் தெய்வமோ?
பொன் உரைத்து ஒளிப்படப் புனைந்த பாவைகள்,
என் உரைத்திடுவது ஓர் இயல்பு உண்டோ?“ என்பான்.
6
   
 
3403“உலகு இடத்து ஓர் என்பான் உரைத்த நூற்படி,
விலகிடப் பளகு எலாம் விலகி, ஈர் அறம்
இலகு இடத்து, இடர் அறுத்து இயலும் நற் பயன்
அலகிடு அத் தகுதியை அறிவர் யார்?“ என்பான்.
7
   
ஈகை - புகழ் - பணிவு பற்றிய போதனைகள்
 
3404“மருள் வரும் நசை பிறர் பொருளில் வைத்திடாது,
அருள் வரும் முகத்தில் தன் பொருள் அளித்தலே
பொருள் வரும் வழி எனப்புயலின் வான் கொடை,
தெருள் வரும் அறிவு உளார், திருத்துவார்“ என்பான்.
8
   
 
3405“அறத்தினால் வருவதே இன்பம் அல்லது, ஓர்
மறத்தினால் வசை வரும் அன்றி, வான் நெறிப்
புறத்தின் ஆம்“ என்று, தான் புகன்ற வேத நூல்
திறத்தினால், உளத்து இருள் சிதைப்ப ஓதுவான்.
9
   
 
3406“கள்வரும், பொருள் தகாக் கடந்த சொற் புகழ்
கொள்வரும் அனையவர், கொண்ட அப் புகழ்
எள்வரும் இழிவு அதே. இயன்ற தாழ்ச்சியால்
ஒள் வரும் புகழ்“ என்பான், உலகில் ஓர் என்பான்.
10
   
 
3407இக்கு எனப் பொருள் ஒளி இன்பம் மூன்றுமே,
புக்கு எனப், புரை எலாம் புவி புகுந்தன
மிக்கு எனத், துடைத்து அவை வெல்லுவான், பொறை
சிக்கு எனத் தாங்கி, எம் செயிரைத் தாங்கினான்.
11
   
 
3408வென்றியும் குணித்தனன்; வென்றி வாளொடு
பின்றையும் உள பல பெரும் படைக்கலம்
இன்றியும், பொறுத்தலோடு இகல் வெல்ப், பொறை
ஒன்றையும் தாங்கினான், உலகம் தாங்கினான்.
12
   
 
3409தீய் வரும் இகழ்ச்சியைச் சிந்தியாப் பிரான்,
தாய் வரும் அருளினால், தரணி எங்கணும்
போய், வரும் துயர் அறப் புதுமை ஆக்கி, உள்
காய்வரும் குளிர்ப்பவே கருணை காட்டுவான்.
13
   
 
3410கண் தரும்; கரம் தரும்; செல்லக் கால் தரும்,
உண் தரும்; களி தரும்; உயிர் தரும்; தகும்
பண்டு அருந் துயர்கள் நோய் பலவை தீர் தரும்,
மண்டு அருந் தயை நலம் வழங்கத் தந்து உளான்.
14
   
பொருமை அணிகலனாக்க் கொண்டு இரட்சணிய
வேலையைத் தொடங்குதல்
 
3411தந்த நன்று எவர்க்கும் ஆய் தனக்கு யாவரும்
அந்தம் ஒன்று இலா மலி அல்லல் ஆக்கலும்,
வந்த தன் துயர் எலாம் மனத்து எண்ணாப் பொறைக்
கந்தளம் தரித்தனன், கருணை வேலையான்.
15
   
 
3412புரை செயும் தன் துயர் பொறுத்து, நொந்து இலான்;
உரை செயும் நெறி உறா உயிரைத் தீ நரகு
இரை செயும், பாவம், என்று இரங்கி விம்முவான்,
கரை செயும் கடல் இணை கடந்த அன்பினான்.
16
   
 
3413நக்கும் ஓர் சிறு சுவை நச்சி, நீங்கு அலாச்
சிக்கும் ஓர் நிறை துயர் சிந்திப்பார் இலா,
தக்கும் ஓர் அறிவு இல, தரணி கெட்டது என்று,
ஒக்கும் ஓர் இணைஇலான், உளைந்து இரங்குவான்.
17
   
 
3414“தீது அளித்து ஓச்சிய தீய கோன்மையால்,
கோது அளித்து உயிர் உணும் குணுங்கை வெல்லவும்,
நீது அளித்து எரிந்த நின் வெகுளி நீக்கவும்,
ஏது அளித்து இயற்றுவேன், என் பிதா?“ என்றான்.
18
   
 
3415“முன் பழி ஒழித்து நின் முனிவை ஆற்றிட,
தன் பழி இலாப் பலி தரணி மீது இலாது,
அற்ப அழிவு இலாத என் உயிர் அளித்து, யான்
தொல் பழி, பிதா, இதோ துடைக்குவேன்!“ என்றான்.
19
   
பிதாவின் திருவுள்ளம்
 
3416என்றனன், கடல் நீர் வெள்ளத்து
  இணை கடந்து அரிய அன்பான்
“நன்று“எனப் பிதாவும் என்றான்.
  நரதுவத்து இறைமை சேர்த்தி
நின்றன நாய்கன், செந்நீர்
  நீத்தமாய்ச் சிந்தித்தானே
சென்று, அன உலகின் மாசு
  தீர்த்து அறக் கழுவல் நேர்ந்தான்.
20
   
 
3417கலையினால் அளக்கல் ஆற்றாக்
  கசடு எலாம் ஒருங்கு தீர்ப்ப,
கொலையினால் உயிரைச் சிந்தா,
  கூறும் ஓர் உரை சால்பேனும்,
விலையினால் உயர் வான் வீட்டு
  விழுப்பமே எவர்க்கும் காட்ட,
அலையினால் உவமியாத அலக்கண்
  உற்று இறத்தல் நேர்ந்தான்.
21
   
பேய்கள் இரட்சகருக்குப் பகை உண்டாக்குதல்
 
3418இத் திறத்து, இறைவன் நேர்ந்த
  இயல்பு இது என்று அறிந்த பேய்கள்,
மைத் திறத்து உடன்ற வஞ்சம்
  மறப் பகை, இவன் மேல் தீயோர்
கைத் திறத்து இயற்றல் உள்ளி,
  காய் தழல் தூண்டினாற்போல்,
அத் திறத்தினரை ஏவி,
  அரும் பகை முற்றிற்று அன்றோ.
22
   
இரட்சகர் பகைவரால் குருதி சிந்தி மரித்தல்
 
3419கண் கிழித்து ஒழுகச் செந் தீய்க்
  கதத்தினர் அடித்த பாலால்,
விண் கிழித்து ஒழுகும் மாரி
  விதப்பு என, எந்தை யாக்கை
புண் கிழித்து ஒழுகும் செந்நீர்,
  புரை வினை மலங்கள் தீர்ப்ப,
மண் கிழித்து ஒழுகு வெள்ளம்,
  மலிவொடு ஆங்கு ஒழுகிற்று அன்றோ.
23
   
 
3420கடு மரத்து இழிந்த நஞ்சு உள்
  கடுத்து அடும் வினையைக் காக்க,
நெடு மரத்து இழிந்த தேவ
  நிலை மருந்து உரியது என்ன,
வடு மரக் கனியால் மாக்கட்கு
  அமைந்த தொல் பழியை, எந்தை,
கொடு மரத்து அறைவுண்டு, எம்மைக்
  குணித்து, இறந்து ஒருங்கு தீர்த்தான்.
24
   
 
3421மக்கள் தம் கடன்கள் தீர்ப்ப
  வயம் இலார் என்ன, நாதன்,
திக்கு அடங்கலும் உள் கூச
  திளைத்த அக் கடன், மேல் போட்டு,
மிக்கு அடங்கு இல அன்பால் தான்
  மெய்யொடு மகனாய் இங்கண்
புக்கு, அடங்கு இல நோய் இவ் வாய்
  பொறுத்து, எமை உள்ளி மாய்ந்தான்.
25
   
 
3422எம் சிறை ஒழித்துத்தான் தன்
  இன் உயிர் தந்து, யாக்கை
அம் சிறை ஒழித்து, வாய்ந்த
  ஆவியால், முந்தையோர்கள்
தம் சிறை ஒழித்து வீட்டின் வளம்
  தர அருள் ஓர்ந்து, ஆசை
விஞ்சு இறையவன், தன் தூது
  வியம்பிய நிலையின் போனான்.
26
   
முற்பிதாக்கள் (பரிசுத்த ஆன்மாக்கள்)
வாழ்ந்த இடம் செல்லுதல்
 
3423பால் நலம் ஒழித்து அமரர் பா இசைகள் பாட,
தேன் நலம் ஒழித்த பெரும் இன்பம் முனர் செல்ல,
மீன் நலம் ஒழித்து இரவி எஞ்ச ஒளி விஞ்ச,
கால் நலம் ஒழித்த இறையோன் கடிது அடைந்தான்.
27
   
முற்பிதாக்களுக்கு மோட்சதரிசனம் தருதல்
 
3424இருள் பொதிர் இரா உண விளங்கு இரவி போன்றே,
மருள் பொதிர் அவா அமர் மனத்து ஒளி வயங்க,
தெருள் பொதிர் முகத்தில் திரு ஆசி உரை செய்தே,
அருள் பொதிர் கதிக்கு உரிய காட்சியை அளித்தான்.
28
   
முற்பிதாக்களின் பேரின்பம்
 
3425வில் திறம் மனத்தில் தரு விஞ்சை நலம் விஞ்ச,
மல் திற நல்லோனை மறைவு அற்று இனிது காண,
நல் திறம் இயற்றிய தவத்து அரிய நல்லோர்
சொல் திறம் அகன்ற நயம் உண்டு தொழுகின்றார்.
29
   
 
3426காட்சியை அடைந்துளி, களிப்பு உளம் அடங்கா
மாட்சியை அடைந்து, அரு வரத்தில், அவர், வாய்ந்த
சூட்சியை அடைந்து, அடி தொறும் தொறும் இறைஞ்ச,
ஆட்சியை அடைந்து, ஒளி அடைந்து, அருள் அடைந்தார்.
30
   
 
3427பணிந்தனர்; புகழ்ந்தனர், பதம் தனில் உயர்ந்தே
தணிந்தனர், தணிந்து இல நலங்களில் தயங்கத்
துணிந்தனர், துளங்கினர், துதைந்தன நயங்கள்
அணிந்தனர், அருந் துதி அவிழ்ந்தனர் ஒருங்கே.
31
   
சூசை முனிவர் இரட்சகரைத் துதித்து வணங்குதல்
 
3428ஓசை வரு நீத்தமொடு நீர் பிறழ்வது ஒப்ப,
சூசை, வரு நாதன் ஒளி தோன்றலில், அடங்கா
ஆசை வரும் ஆர்வம் நிலையாய், அருள் வழிந்த
பூசை வரும் மா புகழ் புரிந்து புகல் உற்றான்.
32
   
 
3429“துன் உயிரை ஓம்பும் அருள் தோன்றி எனை ஆளும்,
என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய்,
உன் உயிர் அளித்து எமை அளிப்ப, உயர் வீட்டை
மன் உயிர் எலாம் உற, வருத்தம் உறீஇ மாய்ந்தாய்!
33
   
 
3430“உரைக் கடல் கடந்த எழில் உண்டு இலக நீயே,
வரைக் கடல் கடந்த துயரோடு உனை வளர்த்தேன்
கரைக் கடல் கடந்த பயன் இன்று இனிது கண்டேன்,
புரைக் கடல் கடந்த களி உள் பொதுள!“ என்றான்.
34
   
 
3431என்று, எழும் அவாவொடு விழுந்து, இரு விழுத் தாள்
அன்று எழு முடிக்கு இணை அணிந்து தொழு சூசை
நன்று எழும் அறா நசை நயத்த சவையோடு
சென்று, எழும் மகிழ்ச்சி அலை மூழ்கி நசை தீர்ந்தான்.
35
   
இரட்ச்கர் அழைப்பால் உத்தரிக்கும்
தலத்தோற் வந்து வணங்குதல்
 
3432அளி பொதுள ஆகி இவை, அன்று தயை நாளாய்,
ஒளி பொதுளவே நிதியின் ஓவி அழல் வெந்தார்
களி பொதுள, அத் துயர் கடிந்து வர வானோர்
தெளி பொதுள ஏகி, இடர் தீர்த்த உயிர் மீட்டார்.
36
   
 
3433ஆசை தரும் அல்லல் அற, அவ் அவையும், சேர்ந்தே,
சூசை தரு திவ்விய துதித் தொடை தொடுத்த
ஓசை தரு நாமம் ஒரு ஆயிரமும் ஓதி,
பூசை தரு பூசு புகழ் பூசல் தருவார் ஆல்.
37
   
 
3434மின் புரிய மீன் அதினும் மின் ஒளி, மிளிர்ந்த
அன்பு உரிய அன்னவர், அருந் துதிகள் ஆடி,
பின்பு உரிய ஒப்பும் இல பேர் உவகை பேராத,
இன்பு உரிய தொல்லை இலை; எல்லை இலை அன்றே.
38
   
இரட்சகர் எல்லோரையும் திருக்கல்லறைக்கு அழைத்து வருதல்
 
3435அயிர் கடந்த இனிய இன்பத்து
  அங்கணின் இரு நாள் போக்கி,
உயிர் கடந்து ஒழித்த யாக்கை
  உறைந்து கல்லறைக் கண், எம் தம்
செயிர் கடந்து அளித்த நாதன்,
  செறிந்த அவ் அவையோர் நாப்பண்,
வயிர் கடந்து உடன்ற ஓதை
  வழங்க, வில் பரப்பிப் போனான்.
39
   
 
3436எல் பிழம்பு எறித்த வானோர்
  எண் இலர் முனர்ப் போய்ப் பாட,
அல் பிழம்பு அற வில் ஆர் மற்று
  அனைவரும் பினர் வந்து ஆர்ப்ப,
கல் பிழம்பு உருக இன்பம்
  கனி வளன் புடையில் செல்ல,
செல் பிழம்பு உறையின் ஆர்ந்த
  திரு அருள் நாதன் போனான்.
40
   
 
3437மெய் கிடந்து உறைந்த அங்கண்
  விரையில் ஓர் கணத்தில் சென்று,
பொய் கிடந்து அமைந்த பாவம்
  போக்கத், தன் உடலில் பாய்ந்த
நெய் கிடந்து அடைந்த காயம்,
  நின்ற அவ் அவை முன் காட்ட,
துய் கிடந்த உடலைப் போர்த்த
  துகில் படம் நீக்கினானே.
41
   
 
3438“அய நலம் போர்த்த பார் காத்து
  அருளொடு இன்று உமக்குத் தந்த
நய நலம் கொள்ள நானே
  நல்கிய விலை இதோ! என்று,
இயல் நலம் தவிர்ந்த மெய்
  போர்த்திடும் கலை நீக்கி, நீங்கா
வய நலம் பொலிந்த தூயோன்,
  வாய் மலர்ந்து அறைந்தான் மீண்டே:
42
   
இரட்சகர் தம் பாகுகளை அவர்களுக்குக் காட்டுதல்
 
3439“வானகத்து உவகை செய்யும்
  வனப்பு உடைச் சிரத்தை நோக்கீர்
கானகக் கொடிய நெஞ்சார்
  கண்டக முடியைச் சேர்த்தி,
மீன் நகத் தெளிந்து மின் என்
  விழி அகத்து உருவத் தாக்கி,
ஊன் அகத்து இரத்தம் பாய,
  உறுந் துயர் உரைப்பப் பாலோ?
43
   
 
3440“பகை அரசு ஒழித்து, ஒன்றாய் நான்
  படைத்து அளித்து அழிப்ப வல்ல
தகை அரசு ஆகி, மாக்கள்
  தம் செருக்கு ஒழிப்ப, என்னை
நகை அரசு ஆக்கி, நீசர்,
  நகைத்து, முள் மகுடம் சூட்டி,
மிகை அரசு ஆகி, ஆய
  வெருவிடும் உருவம் காணீர்!
44
   
 
3441“கண் வழி உயிரைப் போக்கி, கண்டவை வெஃகி, வெஃகும்
விண் வழி ஒழித்த தீது விலகுவான், கொடியர் கையால்
புண் வழி குருதி ஓட, பூ என வாடி, வான்மீன்
ஒண் வழி கடந்த என் கண் ஒளி ஒழிந்து இருளல் நோக்கீர்!
45
   
 
3442“தேன் உகும் உரையால், யார்க்கும்
  தெருள் உகும் மருந்து மான,
மீன் உகும் வானோர் ஏத்தும்
  வேத நூல் உலகில் தந்த
கான் உகும் கமல வாயே,
  கடிது அடி மிதிபட்டு, அந்தோ,
ஊன் உகும் உதிரம் தோய்ந்த
  உதட்டு அலர் வாடல் நோக்கீர்!
46
   
 
3443“தூய் இரக்கு ஒழித்த நீசர்
  தூணினோடு எனைச் சேர்த்து, ஓர் ஐ-
ஆயிரத்து ஒரு நூற்று ஐம் மூன்று
  அடி அடித்து, இடம் ஒன்று இன்றி,
வாய் இரக்கமும் அற்று, ஆய
  வடு அடித்து, என்பும் தோன்ற,
பாய் இரத்தமும் ஆறு ஓட,
  பழி உரு உடலை நோக்கீர்!
47
   
 
3444“படி அது ஓர் தனிக்கோல் ஓச்சி,
  பார் எலாம் தாங்கு நானே
நெடியது ஓர் சிலுவை தாங்கி,
  நீசருள் நீசன் என்ன,
கடியது ஓர் வஞ்சர் நிந்தை
  கான்று அடித்து உதைப்ப வீழ்ந்து
கொடியது ஓர் தடத்து உயர்ந்த
  குன்றுமேல் அரிதின் சென்றேன்.
48
   
 
3445“ஓர் அயில் குன்றின் கோட்டில்,
  உலகு எலாம் வெருவிக் கூசப்
பேர் அயில் ஆணி தன்னால்
  பெரு மரத்து அறையுண்டு, என் செந்-
நீர் அயில் புவி தன் தீது
  நீத்து அருள் கிளர்த்து வாழக்,
கூர் அயில் ஆணிக் காயம்
  கொண்ட கால் கரங்கள் நோக்கீர்!
49
   
 
3446“ஆட்டியால் அமைந்த தீமை
  அகற்றி, மீது உயர் வீட்டு ஆறு
காட்டி யான் உயிரை நீக்கி,
  கடும் பகை நீங்கா நெஞ்சான்
ஈட்டியால் விலாவைத் தாக்கி,
  அடைக்கலம் எவர்க்கும் செய்யப்
பேட்டு யான், திறந்த நெஞ்சில்
  பெரியது ஓர் வாயில் நோக்கீர்!
50
   
 
3447“பெய்தது ஓர் மாரி என்னப்
  பெருகி, என் இரத்தம், சிந்தி,
கொய்தது ஓர் கனியால் கொண்ட
  குறைகள் தீர்த்து உலகம் காக்கச்
செய்தது ஓர் வினை ஈது! என்னால்
  பெய்வதும் இனி யாது உண்டோ?
எய்த ஓர் பயனும் உம்மால்
  எனக்கு உண்டோ?“ என்றான் நாதன்.
51
   
சூசையின் பொருமூச்சு விட்டுக் கூறிய மொழிகள்
 
3448உருக மா வயிரக் குன்றும்
  உரைத்த சொல், எறி வேல் பாய்ந்து
திருக வாய் பிளந்த புண்ணுள்
  திரண்ட தீ ஆக ஆவி
பருக, நோய் ஆற்றாச் சூசை,
  பரிவு அளவு அழுந்தும் துன்பம்
பெருகவோ ஆற்றவோ, ஓர் பேர்
  உயிர்ப்பு உயிர்த்துச் சொன்னான்:
52
   
 
3449இன்று நீ உலகம் கூச
  இத் துயர் படவோ, அஞ்சி
அன்று நான் எசித்து நாட்டை
  அடைந்து, நின் உயிரைக் காத்தேன்!
பொன்று நீ, மரத்தில் செந்நீர்ப்
  புணரி ஆழ்ந்திடவோ, வீட்டைச்
சென்று நான் உவப்பில் வாழ்வேன்,
  தே அருள் திருவின் நல்லோய்!
53
   
 
3450“அருள் மிக இறத்தல் வேண்டின்,
  அத் திறத் துயரோ வேண்டும்?
மருள் மிக அசடர் உன்னை
  மரத்து அறைந்து இறத்தல் வேண்டின்,
பொருள் மிக, உன் தோள் என் தோள்
  பொருந்தி, ஓர் மரத்தில் தூங்கி,
இருள் மிக முகில் சூழ் குன்றத்து,
  இருவர் வீதலும் வேண்டாது ஏன்?
54
   
 
3451“பிறந்து உயிர் பிழைத்த போது,
  பெயர்கு இலாத் துணை என்று ஆனேன்
இறந்து உயிர் அளித்த போதும்
  என்னையும் துணை வேண்டாது ஏன்?
சிறந்து உயிர் அனைத்தும் காத்த
  திரு மருந்து அன்னோய்!“ என்ன
மறந்து உயிர் அளிப்ப நொந்தான்,
  வளன், விட உடல் உண்டு ஆனால்.
55
   
முற்பிதாக்களின் அன்பு மொழிகள்
 
3452விண்டு ஆர் பைம் பூ வாகையன் இவ் ஆய் மெலிவு எய்த,
மண்டு ஆர் துன்பத்து ஆழ் உடல் கொண்ட வடு எல்லாம்
கண்டு ஆராய்ந்தார்; கண்டுளி யாரும் கலுழ்கின்றார்,
உண்டார் உன்னாப் பீழைகள்; மீட்டு ஓர் உரை உற்றார்:
56
   
 
3453“ஐயா, இவ்வாறு எங்கள்
  பொருட்டால் அயர்வு உற்றாய்!
மெய் ஆர் துன்பத்து ஒன்று என,
  உன் பால் விளைவு உண்டோ?
மை ஆர் பெட்பால் தீ வினை
  செய்த மனு எல்லாம்,
உய்யார் என்று அன்றோ,
  உயிர் சிந்த உணர்வு உற்றாய்!
57
   
 
3454“கோன் பால் நின் பால் என்று, எதிர் இன்றிக்
  குறை இன்றி,
வான் பால் நின்றோய்! எங்கணும் நின்றோய்!
  மகிழ்கின்றாய்!
ஊன் பால் நின்று ஓர் மேனி எடுத்தாய்!
  உயிர் சிந்தத்,
தேன் பால் நின்ற ஓர் இன்பம் அது என்றாய்,
  திரு வல்லோய்!
58
   
 
3455“வாராயோ எம் மேலும் இரங்கி? மனு அல்லல்
பாராயோ? வெம் பேய் இனம் வென்றே பகை எல்லாம்
தீராயோ?‘ என்றோம்; நசையின் மேல் சிறை தீர்த்தாய்!
தாராயோ இன்று உன் தயை ஏத்தத் தகவு அன்றோ?
59
   
 
3456“விண் மேல் வைத்த நன்று இவறா, நாம்
  வினை செய்ய,
மண் மேல் வைத்த காவல் நினக்கே,
  வரைவு இன்றிப்,
புண் மேல் வைத்த தீ நிகர் துன்பம்,
  புகுவித்தோம்;
எண் மேல் வைத்த எம் செயிர் ஆர் ஆர்
  இணை சொல்வார்!
60
   
 
3457“வேண்டா இன்பம் வெஃகிய தன்மை விளை தீதால்,
தாண்டா இன்மை கொண்டு பிறந்தாய், தகு தண்மை
பூண்டாய், புன்கண் பால் என உண்டாய், புரிவு ஓங்கி
மாண்டாய், ஓர் கைம்மாறு வழங்கக் கடவேமோ!
61
   
 
3458“பொய் மாறுகின்றாய்; ஆசை விளைக்கும் புரை உய்த்த
மை மாறுகின்றாய்; பேய் உரு நாக வயம் நூறிப்
பை மாறுகின்றாய்; நிற்கு என எம்மால் பயன் உண்டு ஆய்,
கைமாறு உனக்கே யாங்கள் வழங்கக் கடவேமோ?
62
   
 
3459“உன்னை, உள்ள சீர்க்கு, அறியோமே; உலகு உள்ள
முன்னை பின்னை யாம் அறியோமே; முரியாமல்
நின்னை ஏத்தி நல் நெறி நிற்ப அறியோமே;
பின்னை, ஓர் கைம்மாறு பிணிக்கக் கடவேமோ?
63
   
 
3460தாயும் நீயே, தந்தையும் நீயே, தவறா நன்று
ஈயும் நீயே என்று அறிவோமே, இது அல்லால்,
காயும் பாவத் தன்மையும், நின்தன் கனி அன்பும்
ஆயும் காலத்து, அஃது அறியோம், நாம் அறியோமே!
64
   
 
3461“பாய் ஓர் செந்நீர் கொண்டு, உனது அங்கப் படம் மீதே
நீயோ, நாமோ, இவ் வரி வைத்த நிலை, என்போம்?
மாயா வஞ்சத்து, இவ் வரி, நாம் செய் வரி என்றால்,
ஓயா அன்பால் உன் வரி என்றால், உரை பொய்யோ?
65
   
 
3462“பற்றக் கற்போர். நூல் பல கற்றால்
  பயன் என்னோ?
ஒற்றக் கற்றால், இவ் வரி ஒன்றே,
  உணர்வு எல்லாம்
முற்றக் கற்பார். ஆயினும் எம்மால்
  முழுதும்ஆகா,
கற்று, அக் கட்டா நுண் பொருள் காட்டாய்,
  கலை வல்லோய்!
66
   
 
3463“நன்றாய்க் கற்றோம் நின் தயை; நாம் செய்
  நவை கற்றோம்.
பொன்றாய், எம்மால் பொன்றினை; எம் தம்
  புரை எல்லாம்
வென்றாய், வென்றாய்; நின் அருள் மிக்காய்
  பெரிது அன்றோ!“
என்றார்; உள்ளத்து ஓவி, இறைஞ்சி
  எதிர் வீழ்ந்தார்.
67
   
ஐந்து காயங்கள்அடங்கிய பொலிவு
பெற்ற மேனியோடு இரட்சகர்எழுதல்
 
3464வாள் அழுந்திய வருத்தமே கண்டு, உயிர் புக, முந்-
நாள் அழுந்திய நவை வடு நீத்து எழுந்து, இறைவன்,
கோள் அழுந்திய கொள்கையின், விலாவினோடு இரு கை
தாள் அழுந்திய காயம் ஐந்து, ஒளிவிடத் தரித்தான்.
68
   
உலக முடிவு நாளில் மனிதர்களின் உத்தானத்தை
உணர்ந்த சூசையை உயிர்பெற்றெழச்செய்தல்
 
3465விண் விளக்கிய வெஞ் சுடர் எழுந்து என எழுந்து,
மண் விளக்கிய மணி ஒளிப்ப ஒளி அணி தயங்க,
கண் விளக்கிய கவின் மனம் விளக்க நின்று, எந்தை,
பண் விளக்கிய பணி மதுப் பணி மொழி பகர்ந்தான்:
69
   
 
3466“தீய் முகத்து உலகு அழிவு உறுங்கால்,
  அறம் சினந்த
பேய் முகத்து எனைப் பெயர்கு இலார்க்கு இயல்பு இது
  என்று அறிய,
நோய் முகத்து இறந்து அரிய தூது உரைப்ப
  நீ நுதலி
வீய் முகத்து, இவண் விட்ட மெய் எடுத்து
  எழுக“ என்றான்.
70
   
சூசை உயிர்த்த பரம நாதனை வணங்குதல்
 
3467அலை புறம்கொளீஇ ஆதவன் எழுந்து, ஒளி முகத்தின்
கலை புறம்கொளீஇ கவின் நிறை திங்கள் சேர்ந்தது போல்,
இலை புறம்கொளீஇ ஏடு அவிழ் கொடி நலோன் எழுந்து, எம்
நிலை புறம்கொளீஇ, நிமலனைத் தொழுது முன் நின்றான்.
71
   
 
3468போற்றினான்; இணை போக்கிய புகழ் பொழி மாரி
தூற்றினான்; மதுத் தூற்றிய பூங் கொடி அடிமேல்
ஏற்றினான், அடி ஏற்றுபு தழுவினான், ஆசை
ஆற்றினான், அரிது அமரரும் வியப்ப, அன்பு ஆற்றான்.
72
   
 
3469கான் அரும்பின கைக் கொடி அரும்பின மலர் பூத்
தேன் அரும்பின. செறிந்த மற்று அருந் தவர் சூழ,
வான் அரும்பின வடிவு மீன் ஒத்தனர். வயங்கும்
மீன் அரும்பின விண்ணவர் விழா அணி விளைத்தார்.
73
   
வானவரின் மகிழ்ச்சி ஆரவாரம்
 
3470மொடமொட என, இன முரசு ஒலி முழவு ஒலி
  மோதிய யாவும் முழங்கி அதிர
நெடநெட என உள குழல் இசை கல இசை
  நீரிய ஓதை கலந்து கனிய,
படபட என மழை இடி ஒலி கடல் ஒலி
  பாடு என நேரில் ஒழிந்து மெலிய,
விடவிட என வெளி உலகு அலை உலகிடை
  வீரிய ஓதை மயங்கி எழும் ஆல்.
74
   
 
3471விளை ஒளி உரு உறீஇ, அணி அணி அமரர்கள்
  வீரியர் ஆக மிடைந்தது ஒரு பால்;
திளை ஒளி மணி அணி அணி முடி கொணர்வன
  சேடியர் ஆக மலிந்தது ஒரு பால்;
கிளை ஒளி வடிவு அடி மலர் இணை தலைமிசை
  கேழ் அணி ஆக அணிந்தது ஒரு பால்;
இளை ஒளி உருவொடு புகழ் இசை ஒலி எழ,
  ஈர் அணி ஆக மகிழ்ந்தது ஒரு பால்.
75
   
 
3472துளி வரு மழை என, நிறை வரும் மது மழை
  தூவிய மாலை நிறைந்தது ஒரு பால்.
அளி வரும் உரை என வளி வரு கவரிகள்
  ஆடிய மாலை அமைந்தது ஒரு பால்,
ஒளி வரும் மதி என, உயர் வரு கவிகைகள்
  ஊர் ஒளி மாலை ஒசிந்தது ஒரு பால்,
களி வரும்என, கனை வரும் கனிவன
  காமர மாலை இடங்கள் தொறுமே.
76
   
 
3473ஒருவரும், உள பல உலகு உள அதிபதி
  ஊழ் உள ஊழின் அறைந்து புகழ்வார்.
ஒருவரும், இனைவன நினைவு அவன் உடலுடன்
  ஓர் மகன் ஆக இயைந்தது அறைவார்
ஒருவரும், அடி பட மிதி பட உயிர் பட
  ஓவிய காதை வியந்து மொழிவார்,
ஒருவரும், இரவியின் ஒளி மிக இவன் எழும்
  ஓரையின் ஓகை நவின்று தொழுவார்.
77
   
 
3474அனைவரும் அணுகுவர்; நயம் மிக உருகுவர்,
  ஆசையில் ஆசி வழங்கி, மெலியார்
சுனை வரும் மலர் அடி தொழுகுவர், அணைகுவர்,
  சோபனம் ஆடிர், அனந்தம் முடியார்.
நினைவு அரும் உணர்வொடு புகழுவர் புகழ் இசை
  நேர் இல வாட வருந்தி, ஒழியார்.
புனைவு அரும் அழகு உள முக முகை அயிலுவர்,
  பூகதர் பூசை புணர்ந்து, பிரியார்.
78
   
 
3475கனை விளை கதம் இல, கதம் மலி பகை இல,
  காதலில் ஆர்வம் மலிந்து பெருக,
வினை விளை நசை இல, நசை விளை செயிர் இல,
  மேவிய மேதை அனந்தம் இலக,
சினை விளை இழிவு இல, அழிவு இல, ஒழிவு இல,
  சீரிய யோகம் ஒருங்கு விளைய,
புனை விளை நலம் உறீஇ, உலகு எழ, நிகர் இல,
  பூதலம் மீதில் எழுந்தது, இறையே.
79