பிறன் ஒருவனை மாதாபிதாவாகத் துணிந்து திதி கொடுத்தலும், மண்மரம்சிலைசெம்பு முதலானவற்றைத் தெய்வம் என்று துணிந்து பூசை செய்தலும், வீட்டை அறிவிக்கும் மகனைக் கடவுள் என்று துணிந்து அவன் கருத்தின்வழியே நிற்றலும் போன்றன இது பொருள் அன்று என்று அறிந்தும் இதுவே பொருள் எனத் துணிதலாம். சொற்களும் பொருளாதலான் அவற்றிற்கும் அத்துணிவு கொள்க. பெயர் வினை இடை உரிகளை அது அதுவாகவே துணிதல் பொருளைப் பொருள் எனல். சொக்கலிங்கம் என்பதைச் +சிவந்த கலிங்கம் என்னும் பொருள்படச் சகர ஏகார நெட்டெழுத்து மொழி முதலாகத் துணிதலும், ‘அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்’ என்பதை மூலஞானம் எனத்துணிதலும், ‘அத்துவிதம்’ என்பதனை இரண்டில்லை எனத்துணிதலும் போல்வன பொருள் அல்லவற்றைப் பொருள் எனல். [வி-ரை: சொக்கலிங்கம் என்பது அழகிய லிங்கம் என்னும் காரணப் பெயராய், மதுரைச் சொக்கநாதப் பெருமானுக்கு இடுகுறிகாரணப் பெயராயிற்று. இதனைச் சிவந்த ஆடை என்னும் பொருள்படச் சேக்கலிங்கம் என்று துணிந்து கோடல் பொருள் அல்லவற்றைப் பொருள் என்பதற்கு முதல் எடுத்துக்காட்டு. அடிஞானம் என்பது சிவபெருமானுடைய சீர்பாதஞானம் எனவும், ஆன்மாவினுடைய அநாதிஞானம் எனவும் பொருளுடையது. இதனை மூலஞானம் எனத் துணிவதும் இதற்கு எடுத்துக்காட்டு. - இ. கொ. 129 உரை. அத்துவிதம் என்பது சொற்பொருளளவில் இரண்டு அல்லாதது என்பது; ஆனால் ஒன்றன்று, தனித்துப் பிரித்துக் காண்டல் இயலாத இரண்டன் சேர்க்கையே அத்துவிதம் என்பது. இதனை இரண்டில்லை ஒன்று என்று துணிவதும் இதற்கு எடுத்துக்காட்டு.]
+ (பா-ம்) முழுதும். |