பக்கம் எண் :

 பாயிரவியல் - நூற்பா எண். 7111

தொல்காப்பியனாருக்குத் தோன்றல்விகாரம், திரிதல்விகாரம், கெடுதல் விகாரம் மூன்றும் திரிதலாய் அடங்கும். நன்னூலாருக்கு ஓரெழுத்து வேறோரெழுத்தாய்த் திரிதல் ஒன்றே திரிதலாய் அடங்கும். எனவே, தொல்காப்பியனார் திரிதல் என்று கூறுவதை நன்னூலார் தோன்றல் என்றும், திரிதல் என்றும், கெடுதல் என்றும் மூவகையாகப் பெயரிடுவர். தொல்காப்பியனாருக்குத் தோன்றலும் திரிதலே; கெடுதலும் திரிதலே.

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு - புகழ்புரிந்தில்லிலோர்க்கு; அகரம்கெட நின்ற தகர ஒற்று வருமொழி உயிரோடு சேர்ந்தது. அகரம் கெட்டது என்பதனைத் தொல்காப்பியர் மதம் பற்றித் திரிந்தது எனலாம்.

இல்லிலோர்க்கு + இல்லை - இல்லிலோர்க்கில்லை; உகரம் கெட்டதனைத் தொல்காப்பியர் மதம் பற்றித் திரிந்தது என்பர்.

கடி + கமலம் - கடிக்கமலம்; ககரம் மிக்கது. இதனைத் தொல்காப்பியர் மதம் பற்றித் திரிந்தது என்பர். நன்னூல் பயின்றவர், புகழ் புரிந்த + இல் - இல்லிலோர்க்கு + இல்லை - இவை புணரும்வழித் திரிதல் ஏற்படவில்லை; அகரமும் உகரமும் கெட்டன எனவும், கடி + கமலம் - கடிக்கமலம்; கடிக்கமலம் என்பது தோன்றல் விகாரம்; திரிந்தது அன்று எனவும் கூறுவர்.

தொல்காப்பியர் கருத்தைப் பின்பற்றிச் சொல்லியதனை நன்னூல் ஒன்றே கற்றவர் பிழைபட்டது என்பர். அங்ஙனம் கூறுதல் கூடாது; இலக்கண ஆசிரியர் மற்றொருவர் கருத்து என்றே கொள்ளல் வேண்டும் என்பது விளக்கப்பட்டது.]

4சிலநாள் பழகின் சிலவும் பலியா
பலநாள் பழகின் பலிக்கும் என்க

சிலநாள் பழகின் கூரியராயினும் பலியா; பலநாள் பழகின் மந்தராயினும்பலிக்கும் என்பது உம்மையானும் வியங்கோளானும் தெளிக.

[வி-ரை: உம்மை-சிலவும்; வியங்கோள்-என்க.]