பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 13137

உயர்திணை இயற்பெயரும், நாய்-நரி முதலிய அஃறிணை இயற் பெயரும், அவன் - அவர் - அவள் - அது - அவை என்பனபோல, ஒருமையீறும் பன்மையீறும் காட்டாது நின்று பின் கள் ஈறு பெற்றுக் கோக்கள்-வேள்கள்-பெண்டுகள்-நாய்கள்-நரிகள் என வெகுவசனம் ஆனாற்போல என்றும் கூறுவர். இவ்வாறு ஒருமைக்கும் பன்மைக்கும் அன்றி இருமைக்கும் வேறு விபத்தி வந்து பிரதமா விபத்தியாம் என்றும் கூறுவர்’ என்று கூறியுள்ளார்.]

8ஆயவன், ஆனவன் ஆவான் ஆகின் றவன்முதல்
ஐம்பால் சொல்லும் பெயர்ப்பின் அடைதலே
உருபு என வெவ்வேறு உரைத்தார் பலரே.

இனி, ஆயவன் முதல் நாற்சொல்லும் பாலால் இருபதாம். அவையே உருபு. சாத்தன் ஆனவன் வந்தான் - இதனுள் எழுவாயும் உருபும் பயனிலையும் காண்க. பிறவும் அன்ன. இவற்றைத் தொகுத்தும் அறிக.

[வி-ரை: ஆயவன், ஆயவள், ஆயவர், ஆயது, ஆயவை என்பனபோல ஆனவன், ஆவான், ஆகின்றவன், என்றமூன்றற்கும் விரித்து எழுவாய் உருபு இருபது ஆமாறு அறிக.

சாத்தன் ஆனவன் வந்தான் - சாத்தன் எழுவாய்; ஆனவன் எழுவாய் உருபு; வந்தான் பயனிலை. ஆனவன் என்ற உருபு மறைந்து வருதலே பெரும்பான்மை.]

ஆயின், ஐ-குபோல ஒன்றே உருபு எனல் வேண்டும் எனின், மூன்று ஐந்து ஆறு ஏழன் உருபுகள் பொருத்தத்தானும் பொருளானும் பாலானும் பலவானாற் போலவும், உவம உருபுகள் பொருத்தத்தானும் பொருளானும் பலவானாற் போலவும் என்க. ஆயின், மரமானதை அறுத்தான், வாளானதால் வெட்டினான் - என ஐ முதலிய உருபுகளை ஏற்றலின் உருபு அன்று எனின், ஆறன் உருபு உருபுகளை ஏற்றாற்போல என்க. ஆயின், ஐ-கு-போல உருபு கொள்ளுதலன்றிச் சொற்கொண்டது என் எனின், கொண்டு-பொருட்டு-உடைய-உளி-மாறு-ஒடு-ஓடு-கண் முதலியனவும், உவம உருபுகளும் சொல்லே உருபானாற் போல என்க.