[வி-ரை: வினையெச்சப் பொருட்டு, பெயரெச்சப் பொருட்டு எனவே, சொல்பற்றி, நான்கன் உருபு ஏற்ற சொல் பெயராம் தன்மை மாறி வினையெச்சமோ பெயரெச்சமோ ஆகாது என்பது. ஆதிகாரணம் - காரியத்தோடு தொடர்புடையது. சோறாகிய காரியத்தோடு அரிசியாகிய காரணம் தொடர்பு கொண்டமையின் சோற்றுக்கு அரிசி என்பது ஆதிகாரண காரியமாயிற்று. அரிசியே சோறானாற்போல் குற்றேவலே கூழாகாது. குற்றேவலால் கிட்டும் கூலியைக்கொண்டு கூழிற்கு வேண்டிய பண்டம் வாங்கப்படவேண்டுதலின், கூழிற்குக் குற்றேவல் என்பது நிமித்த காரணகாரியமாயிற்று. பூவிற்கு - பூ என்ற பொருட்பெயர் இன்சாரியையும் நான்கன் உருபும் ஏற்றுப் ‘பூவாங்குவதற்கு’ என்னும் பொருள் பட்டுச் செயற்கு என்ற வாய்பாட்டு வினையெச்சம் போலப் போனான் என்ற வினைகொண்டு முடிதலின், நான்கன் உருபு பொருட் பெயரின் பின் வினையெச்சப் பொருட்டாயிற்று என்றார். உணற்கு - உணல் என்ற தொழிற்பெயர் நான்கன் உருபு ஏற்று உண்ணும் பொருட்டு என்ற பொருளில் உணற்கு என்றாகிச் செயற்கு என்னும் வாய்பாட்டு வினையெச்சம் போல வந்தான் என்று வினைகொண்டு முடிதலின், நான்கன் உருபு தொழிற் பெயரின் பின் வினையெச்சப் பொருட்டாயிற்று என்றார். அங்ஙனமே பிணி என்னும் பொருட்பெயரும், உணல் என்னும் தொழிற்பெயரும், குவ்வுருபு ஏற்று, பிணிக்கு வழங்கும், உணற்குப் பயன்படும் என்ற பெயரெச்சப் பொருளில், முறையே மருந்து, கருவி என்ற சொற்களைக்கொண்டு முடிந்தவாற்றைக் குறிப்பிட்டுள்ளார்.] 43 |