| வேற்றுமையில் - நூற்பா எண். 10, 11 | 131 |
வேற்றுமையும் உருபும் 22 | ஒருவேற் றுமைக்குஓர் உருபே வருதலும் ஒருவேற் றுமைக்குப் பலஉருபு வருதலும் எனஇரு கூறாய் வரும்உரு புகளே; ஐ - கு ஒன்றே; அல்லன பலவே.
|
[வி-ரை: இரண்டாம் வேற்றுமை ஐ என்ற ஒரே உருபினையும் நான்காம் வேற்றுமை கு - என்ற ஒரே உருபினையும் பெற்று வரும். ஏனைய வேற்றுமைகள் ஒன்றற்கு மேற்பட்ட உருபுகளைப் பெற்றுவரும். முதல் வேற்றுமைக்கு ஆயவன், ஆனவன், ஆவான், ஆகின்றவன் முதலியன உருபு என்பது. மூன்றாம் வேற்றுமைக்கு ஆல் ஆன் ஓடு ஒடு என்பனவும், ஐந்தாவதற்கு இல்லும் இன்னும், ஆறாவதற்கு அது, ஆது அ என்பனவும், ஏழாம் வேற்றுமைக்குக் கண், கால், கடை, இடை முதலிய பலவும் உருபுகளாம். மூன்றாம் வேற்றுமைக்கு உடன், கொண்டு முதலியனவும், நான்காவதற்கு ஆக, பொருட்டு நிமித்தம் முதலியனவும், ஐந்தாவதற்கு நின்று, இருந்து, விட்டு முதலியனவும் ஆறாவதற்கு உடைய என்பதும் சொல்லுருபுகளாம். இரண்டாவதற்கு ஐ என்பது ஒன்றனைத் தவிர வேறு உருபோ சொல்லுருபோ இல்லை.] 10 உருபும் பொருளும் 23 | ஓருரு பிற்கே பலபொருள் வருதலும் ஒருபொருட் கேபல உருபுகள் வருதலும் எனஇரண் டாகும் வேற்றுமை இயல்பே; அவ்விரண் டனையும் முறையே அறைகுவன்.
|
[வி-ரை: ஓருருபிற்கே பல பொருள்கள் அமைதலும் உண்டு. ஒரு பொருளின்கண்ணேயே பல உருபுகள் வருதலும் உண்டு. ஓருருபிற்கே பலபொருள்கள் வருதலை 51-58ஆம் நூற்பாக்களிலும், ஒரே பொருளின்கண் பல உருபுகள் வருதலை 44-50ஆம் நூற்பாக்களிலும் ஆசிரியர் முறையாக விளக்கியுள்ளார்.] 11 |