பக்கம் எண் :

312இலக்கணக் கொத்து 

16பலசொல் ஒருபொரு ளாகப் பட்டும்

கள்ளன், திருடன், சோரன் - எனப் பலசொல் ஒரு பொருளாகப்பட்டு வந்தன.

17பலபொருள் ஒருசொல் லாகப் பட்டும்

அரசன் என்பது அரச குலத்தில் பிறந்தவன், அரசனுக்குப் பிறந்த வேறொரு சாதியான், அரசனது தொழிலை ஏற்ற வேறொரு சாதியான், அரச குலத்தின் பிறந்து வேறொரு சாதியாய் வழுவினவன் என்றும்.

மாண்டான் என்பது பஞ்சத்தில் படையில் மாண்டான் என்றும், குணத்தில் பொறையில் கல்வியில் ஒழுக்கத்தில் மாண்டான் என்றும் பல பொருள்படுதலின் பலபொருள் ஒரு சொல்லாகப்பட்டு வந்தமை காண்க.

[வி-ரை: பகுபத எடுத்துக்காட்டுக்களுள் பல பிரயோக விவேகம் தத்திதப்படலத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. 44-ஆம் காரியையுரையுள் பகுதிப்பொருள் விகுதிகளுக்கு இவர் கூறும் எடுத்துக்காட்டுக்கள் பல இடம் பெற்றுள்ளன.

பெதும்பை முதலிய ஆறும் என்றது - பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்பன.]

 ‘இன்னும் பலவாய் இயலும் என்ப’

இன்னும் பல என்றதனால், வயிறன், பல்லன், பொய்யன், தோளன், அறிவன் - இவைபோல்வன எல்லாம் சொல்கிடந்தபடி பொருள்படாமல் எல்லார் வயிற்றைக் காட்டிலும் பெருவயிறன், எல்லார் பல்லைக் காட்டிலும் பருத்து நீண்டு உயர்ந்த பல்லன், யாவரும் பொய்யும் மெய்யும் கலந்து சொல்வர் இவன் மிகவும் பொய்யன், எல்லார் தோளினும் பலமுள்ள தோளன், உலகர் அறிவு போலன்றி மயக்கம் தீர்ந்த அறிவன் என்று பொருள்படுவனவும்.