பக்கம் எண் :

10இலக்கணக் கொத்து 

உருபு ஏற்ற சொல்லையும், உருபையும், உருபு நோக்கிய சொல்லையும் வேற்றுமை என்றபெயராலேயே குறியிட்டுரைப்பார். வேற்றுமையுள் உருபினை ஏற்ற சொல் பலபொருள்படுதலும் உண்டு. உருபு நோக்கிய சொல் பலபொருள்படுதலும் உண்டு. ஐ - கு - என்று இரண்டாம் வேற்றுமைக்கும் நான்காம் வேற்றுமைக்கும், ஒவ்வொன்றற்கு ஒவ்வோருருபே உண்டு. ஏனைய வேற்றுமைகளுக்குப் பல உருபுகள் வரும். ஓர் உருபே பலபொருள் தருதலும் உண்டு. ஒரே பொருட்கண்ணே பல வேற்றுமைகள் வருதலும் உண்டு. எட்டு உருபுகளும் - பகாப்பதம், பகுபதம், இருமொழித்தொடர், பன்மொழித்தொடர், வினைமுற்றுப் பெயர், குறிப்புமுற்றுப்பெயர், தொழிற்பெயர் இவற்றை ஒட்டிப் பயன்படும்.

எழுவாய்வேற்றுமை உருபுபற்றி ஆசிரியர்களிடையே எழுவகைக் கருத்துக்கள் நிலவுகின்றன. எழுவாய் வேற்றுமைக்க உருபே இன்று, பெயரே எழுவாய் உருபு, பயனிலை பெயரைக் கொண்டு பொருள் முடியும் தன்மையே எழுவாயுருபு, பெயர் எழுவாயாய் ஆதலே எழுவாய் உருபு, நின் - தன் - என் - முதலிய வேர்ச்சொற்கள் நீ - தான் - யான் - என வடிவு வேறுபட்டு எழுவாயாய் வருதலே எழுவாய் உருபு, இறை என்ற சொல் இறைவன் என்பதுபோலப் பெயர்ப்பின் விகுதி பெறுதல் போல்வனவே எழுவாய் உருபு, பெயருக்குப்பின் ஆயவன், ஆனவன், ஆவான், ஆகின்றவன் முதலிய ஐம்பாற் சொற்களும் வருவதே எழுவாய் உருபு என்ற கருத்துக்கள் இலக்கண ஆசிரியர்களிடையே நிலவுகின்றன.

கருத்தா - இது தேற்றத்தோடு செயப்படுபொருள் குன்றியவினை கொண்டு முடியும் செயப்படுபொருள் (கேண்மை தானே வளரும்), தேற்றமின்றிச் செயப்படுப்பொருள் குன்றாதவினை கொண்டு முடியும் செயப்படுபொருள் (திண்ணை மெழுகிற்று) காரணம், தன்வசம், தெரியாநிலை (மாடம்செய்யப்பட்டது - வினை முதல் என்று தெரியப்படாமல் வினைமுதலாயே நிற்பது), தடுமாற்றம், தொழிற்பெயர் என்ற ஏழனையும் நிலைக்களனாகக் கொண்டு தோன்றும்; கருவிக்கருத்தா, இடக்கருத்தா, கோளிக்கருத்தா என்ற கருத்தாக்களைக்கோடல் நேரிய இலக்கணமன்று.