பக்கம் எண் :

 பாயிரவியல் - நூற்பா எண். 789

[வி-ரை: ஒன்று, பல என்பது தமிழ் வழக்கு. ஒன்று இரண்டு பல என்று கோடல் வடமொழி வழக்கு. இவ்வழக்குத் தமிழில் பழைய இலக்கியத்துள்ளும் பயின்றுள்ளமை,

‘ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்’                             -புறநா. 101

‘மழைபெயல் மாறிய கழைதிரங்கு அத்தம்
ஒன்றுஇரண்டு அலபல கடந்து’                                     பதிற்று. 41

முதலிய அடிகளால் வலியுறும்.

முப்பத்துமூன்று என்பது தமிழ்மரபு. மூன்றைத் தலையில் பெற்ற முப்பது என்பது வடமொழி மரபு. இது காத்தியாயனர் மதம்.

ஆதிபகவன் என்பது இருமொழியும் வடமொழியாய பண்புத் தொகை.

அதிநுட்பம் - மிகுதிப்பொருள் தரும் உரிச்சொல்லாகிய முன்மொழியைப் பெற்ற அவ்வியயீபாவசமாசன்.

நாண் என்ற பொருளைக் குறிக்கும் லஜ்ஜா என்ற வடமொழிச் சொல், சொல் பற்றிப் பெண்பாலாகலான் அம்முறை பற்றி அப் பொருளில் வரும் நாண் என்ற தமிழ்ச் சொல்லையும் வடமொழிச் சொற்பாலை உட்கொண்டு ‘நாண் என்னும் நல்லாள்’ எனப் பெண்பாலாக்கினார். இவை யாவும் பிரயோகவிவேக உரையிலும் இடம் பெற்றுள்ளன.]

2ஆ.தமிழின் நியாயம் தந்தன பலவால்

‘எழுத்தெனப் படுப,
அகரமுதல னகர இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே’                           - தொ. எ.1

‘கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்’                                      - கு. 2

இவைபோல்வன எல்லாம் தமிழின் நியாயம் தந்தன.