பக்கம் எண் :

8இலக்கணக் கொத்து 

‘‘முற்காலத்தில் போதகாரியர்கள் ‘அருமையான விதிகள் வழக்கு ஒழியாது வழங்குதல் வேண்டும்’ என்பதற்காகவே பலருக்குப் பாடம் சொல்லுவர். இக்காலத்தார் தமக்கு யாதாயினும் ஒரு பயன் நோக்கிச் சில உரைப்பினும், மனம் பொருந்தி உரையார்; பிறருக்கு உரையாததோடு கல்விப் பயனைத் தாமும் அனுபவியார்; வாயுறைவாழ்த்து, செவியறிவுறூஉ முதலியவற்றான் நூல்கள் அறிவுறுத்தினும், அவ்வறிவுரை வழி நடவார். உலகியல் இவ்வாறு கீழ்மையுற்றுவருதலின், அரிய விதிகளைத் திரட்டி இவ்விலக்கணக் கொத்து அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு நூலன்று; பல நூல்களின் பல அருங்கருத்துக்களையும் உட்கொண்டதாகும். ஆதலின் பல நூல்களையும் ஆய்ந்து அவற்றின்கண்தோன்றும் ஐயம் அறுத்தலைக் கருதுவார்க்கே இந்நூல் பயன்படும். சில நூல்களை மாத்திரம் கற்றாருக்கு இது பயன்படாது’’ என்று ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார். இந்நூல் உரை நன்கு விளங்குதல் வேண்டும் என்ற கருத்தால் செய்யுள் எடுத்துக்காட்டுக்கள் சிலவாகவும், உலக வழக்கு எடுத்துக்காட்டுக்கள் பலவாகவும் தரப்பட்டுள்ளன.

இலக்கணவிளக்கம் பிரயோகவிவேகம் என்பன போல, இந்நூலும் நூலாசிரியரே வரைந்த உரையைக்கொண்டு மிளிர்வதாகும். இச் செய்திகளை பாயிரத்தால் உணரப்படுகின்றன.