பக்கம் எண் :

 உரை நலன்கள்37

ஒரு மொழியில் அமைந்துள்ள பல நூல்களிடையும் மாறுபாடு காணப்படுதலானும், நூலாசிரியர் கருத்தினை நோக்காது உரை யாசிரியர்கள் ஒவ்வொரு மதமாய் உரை உரைத்தலானும், நூலுரைபோதகாசிரியர் மூவரும் முக்குணவயத்தான் முறை மறந்து அறைதலானும் தம் முன் வைத்தியநாத தேசிகரும், சுப்பிரமணிய தீக்கிதரும் தத்தம் நூல்களுக்குத் தாமே உரை வரைந்தமையானும், இவ்வாசிரியரும் தாமே தம் நூலுக்குத் தம் உள்ளக் கருத்து முழுதும் வெளிப்படுத்தும் முகத்தான் தேவையான சுருக்கமான உரை வரைந்துள்ளார்.

‘எளியவிதிகளை யாவரும் அறிவார், அரிய விதிகளை அறையின் அறிவார் இலை’ (இ. கொ. 7) என்ற கருத்தோடு இந்நூலுள் பொதுவான பல செய்திகளை விடுத்து, அரிய செய்திகளையே திரட்டிக் கூறியுள்ளார். பலர் கருத்துக்கள் தொகுத்துக் கூறப் பட்டுள்ளனவேயன்றி, எக்கருத்து ஏற்றது எது ஏலாது என்ற ஆராய்ச்சி இந்நூற்கண் இன்று.

பிரயோக விவேகத்துள் கூறப்பட்ட செய்திகள் பலவும் ஏற்ற பெற்றி இவ்வுரையுள் நல்ல தமிழ்நடையில் எடுத்தாளப்பட்டுள்ளன ஆதலின் அந்நூல் பயிலுதற்கு இந்நூல் துணையாதல் தேற்றம். வடமொழி வல்லார் தமிழிலக்கணம் உணரப் பிரயோக விவேகமும் தமிழ் வல்லார் வடமொழி இலக்கணச் செய்தி உணர இந்நூலுள் துணைபுரிவனவாகும்.

இவ்வாசிரியர் பிரயோகவிவேக ஆசிரியரைப்போல, வடமொழி தமிழ்மொழி எனும் இரு மொழிக்கும் இலக்கணம் பெரும்பாலும் ஒன்றே என்னும் கருத்தினர்.

‘‘தொல்காப்பியம், திருவள்ளுவர் முதலிய நூல்களைக் குறைபடாமல் முழுதும் உணர்ந்தவர், அவைகளில் தடைபட்ட விடத்து அத்தடை தீர்க்கும் கருத்து உண்டாயின், இது பயன்படும்; ஆகையால் அவர்கட்கே இது நூல்; மற்றையோர்க்கு இது நூல் அன்று". என்று இந்நூற்பயன் குறிப்பிடப்பட்டுள்ளது.