பக்கம் எண் :

112இலக்கணக் கொத்து 

5விரைவால் பார்க்கின் தெரியாது ஒன்றும்
விரையாது ஏற்கின் கருகாது என்க

கூரியராயினும் தெரியா, மந்தராயினும் கருகா என்பது அவ்விரண்டானும் தெளிக.

[வி-ரை: விரைந்து வாசித்துக்கொண்டே போனால் செய்திகள் கூரியோருக்கும் தெளிவாகப் புலனாகா. விரையாது நிதானித்து வாசித்தால் செய்திகள் மந்தருக்கும் புலனாகாமல் போகா.]

6வருவதில் கருத்தினை மட்டுப் படுத்தி
வந்ததில் சிந்தையைச் சிந்தாது இறக்குக

எல்லோருக்கும் கற்பதில் கருத்து இறங்கும், கற்றதில் இறங்காது; அது நன்மையன்று என்பது தோன்ற ‘இறக்குக’ என்றாம்.

[வி-ரை: இனிக் கற்கவேண்டியதன்கண் உள்ளத்தை மிகச் செல்லவிடாது, கற்றதன்கண் உள்ளத்தை மிகச் செலுத்திச் செய்திகளை நன்கு உளம் கொள்க.]

7நூலினை மீளவும் நோக்க வேண்டா
சூத்திரம் பலகால் பார்க்கவே துணிக

‘முக்கால் கேட்பின் முறை அறிந்து உரைக்கும்’ என்பதை மாத்திரம் உட்கொண்டு, சூத்திரப் பொருளை வரம்பு செய்யாது ஓடுவர். அங்ஙனம் ஓடியும் இளைப்பே பயன் அன்றி நூற்பயன் இல்லையே! ஒவ்வொரு சூத்திரத்தை முக்கால் பார்த்துப் பொருளை வரம்பு செய்து நடப்பாராயின் அவர்கட்கு ஒருகாலே அமையும்; இருகால் முக்கால் வேண்டுவதில்லை என்பது தோன்ற இழிவு சிறப்பு உம்மை கொடுத்தாம்; இறந்தது தழீஇய எச்சம் அன்று.்

[வி-ரை: மூன்று முறை விரைவாகப் பாடம் கேட்பதனால் பயனில்லை. நூலினை உரையோடு பலகாலும் விரைந்து கற்பதனை விட நூற்பாவினைப் பலமுறை பார்த்துப் பொருளை வரம்பு செய்தல் மிகுந்த தெளிவைத் தரும் என்பது. மீளவும் என்பது இழிவு சிறப்பு உம்மை; முன்பு பார்த்ததற்கு மேலும் என்று இறந்தது தழீஇயஎச்சஉம்மை அன்று.]