பக்கம் எண் :

130இலக்கணக் கொத்து 

உருபு ஏற்ற சொல் வேறுபடுதலால் வேற்றுமையாம்; உருபு வேறுபடுத்தலால் வேற்றுமையாம்; உருபு நோக்கிய சொல் வேற்றுமையை முடித்தலால் வேற்றுமையாம் என்று பொருள் உரைப்பர்.

[வி-ரை:

‘ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும்ஈ றாய்ப்பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை’                              - ந. 291

எனப் பொருள் வேற்றுமைப்படும் உருபு ஏற்ற பெயரையும் வேற்றுமை என்னாது, வேற்றுமை செய்யும் உருபை மாத்திரம் வேற்றுமை என்பர் நன்னூலார், தொல்காப்பியர்.

‘உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி’                 - தொ.சொ.102

என உருபு ஏற்ற பெயரையும்,

‘ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’                           -தொ.சொ.71

என உருபையும் வேற்றுமைக் கிளவி என்பர். -பி.வி.8.உரை.] 8

பொருள் பற்றிய வேற்றுமையின் இரு கூறுகள்

21உருபினை ஏற்றசொல் பலபொருள் படுதலும்
உருபுநோக் கியசொல் பலபொருள் படுதலும்
எனஇரு கூறாம் வேற்றுமை என்பர்.

எ-டு:

‘வினை செய் இடத்தின் நிலத்தின் காலத்தின்’                    -தொ. சொ. 81

எனவும்,

‘பொருண்மை சுட்டல் வியங்கோள் வருதல்’                      - தொ. சொ.66

எனவும் வரும்.

[வி-ரை: ஏழாம் வேற்றுமை உருபினை ஏற்ற சொற்கள் வினை செய் இடமாகிய சந்தர்ப்பம், நிலம், காலம் என்ற பொருள்களில் வரும். எழுவாய் வேற்றமை கொண்டு முடியும் சொற்கள் பொருண்மை சுட்டல், வியங்கோள் வருதல், வினைநிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல், பண்பு கொள வருதல், பெயர் கொள வருதல் என்ற ஆறு பொருள்களில் வரும்.] 9