பக்கம் எண் :

266இலக்கணக் கொத்து 

4. மதிமுகம் என்புழிப் போன்ற என்ற உருபே தொக்கது.

5. பொருபடை என்புழிக் காலம் என்னும் பொருளே தொக்கது. (பொருத, பொருகின்ற, பொரும்படை)

6. படைக்கை என்புழி உருபும் பொருளும் ஒருங்கே தொக்கன. (படையை ஏந்திய கை; ஐ - உருபு. ஏந்திய - பொருள். முடிக்குஞ் சொல்லைப் பொருள் என்றும் பயன் என்றும் கூறுவர். இரண்டும் தொக்கமை காண்க.)

7. பாண்டிக்கரை என்புழிப் பாண்டியனது நாட்டுக் கடலினது கரைக்கண் இருக்கும் ஊர்,

பொன்னரசன் என்புழிப் பொன்னின்கண்ணே விருப்பத்தை உடைய அரசன்.

குழல்வாய் என்புழிக் குழலினது இசைபோல இனிமையைக் கொடுக்கும் சொல்லினை உடைய வாய் என இவை உருபும் பொருளும் ஒருங்கு பல தொக்கன.

8. வடுக்கண்ணன் என்புழி வடுக நாட்டின்கண் பிறந்த கண்ணன் என்றும்.

செந்தாமரை என்புழிச் சிவந்த பூவை உடைய தாமரை என்றும் இவை பொருளும் உருபும் பொருளும் தொக்கன.

[வி-ரை: நாடு, பிறந்தன என்பன பொருள்; கண் உருபு. பூ, உடைய என்பன பொருள்; ஐ. உருபு. இவ்வாறு பொருளும் உருபும் பொருளும் தொக்கவாறு.]

9. மலர் முகம் - தாமரைமலர் முகம் - முதல் தொக்கது.

தாமரைமுகம் - தாமரைமலர் முகம் - இடைத்தொக்கது.

பொற்றாலி - பொற்றாலி உடையாள் - கடைத்தொக்கது.