தொழிற்பெயர், முற்று, எச்சம் பற்றி ஒருசாரார் கருத்து. 82 | தொழிற்பெயர் வினைமுதல் செயப்படு பொருளே கருவி இடம்பெய ரெச்சம்முற்று ஆகலும், இருவகை முற்றும் ஈரெச்சம் ஆகலும் இருவகை எச்சமும் முற்றே ஆகலும் உளஎன மொழிப ஒரோவழிப் புலவர்.
| |
[வி-ரை: தொழிற்பெயரானது எழுவாய், செயப்படுபொருள், கருவி, இடம், பெயரெச்சம், முற்று என்ற ஆறு நிலையில் வரும்; தெரிநிலைமுற்றும் குறிப்புமுற்றும் ஒவ்வொன்றும் பெயரெச்சமாகவும் வினையெச்சமாகவும் வரும்; பெயரெச்சமும் வினையெச்சமும் ஒவ்வொன்றும் முற்றாகவும் வரும் என்று ஒருசாரார் கூறுவர்.] ‘ஒரோ வழி’ என்றதனால் எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததன்று. இக்கருத்து ‘எழுத்துச் சொல்திரிபு இரண்டே யன்றி’ (125) என்னும் சூத்திரத்தில் காட்டுதும். எ-டு: பறவை பறந்தது; அன்பரிடத்துக் கொடை தோன்றிற்று; ‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்’ - கு. 510 -எனத் தொழிற்பெயர் வினைமுதலாயிற்று; உடுக்கை கிழிந்தது; நடக்கை வந்தது; புழுக்கல் உண்டான்; -எனத் தொழிற்பெயர் செயப்படுபொருளாயிற்று; |