பக்கம் எண் :

 பாயிரவியல் - நூற்பா எண். 683

விலங்கு, மாமரம், திருமகள் முதலிய பல பொருள்களைத் தருவது பொருட்கூட்டத்துக்கு எடுத்துக்காட்டு.]

15இந்நால் வகையினுள் என்னாள் இயன்றது
சிறப்பாய் உள்ளன சிலதேடினன்; அவை
மறப்புஎனும் பகைவன் வாரிக் கொண்டனன்
அவன்கையில் அகப்படாது அடங்கின வற்றுளும்

இந்நால்வகை என்று பின்னும் கூறியது அநுவாதம்; அஃது என்னெனின், வீடு ஒன்றே நீங்கலாக ஒழிந்தன எல்லாம் இங்ஙனம் கூறிய நான்கனுள் அடங்கும் என்று பொருள்படுதலின் என்க. இந்நான்கனையும் அளவிடல் அரிதேயன்றி, இவற்றினுள் ஒன்றனை மாத்திரம் அளவிடலும் அரிது என்க. ஆயின் நூல்களால் பயன் என்னெனின்,

‘ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நானாழி’                                           -மூதுரை 19

இவ்வுவமையால் பயன் உண்டு என்று தெளிக. இம்முறை பற்றியே ‘என்னால் இயன்றது’ என்றாம். நாழிபோல் உருவப் பொருள் அன்றே, அருவமாய் நித்தமாய் அறிவுமயமாய் அறியும் அறிவு இருக்கவே, முழுதும் கொள்ளாது குறையக் கொள்வது என்னெனின், பஞ்சபாசத் தடையால் என்க. தடை தீர்ந்த பின்பு கொள்க எனின், அங்ஙனமும் கொள்ளப்படாது என்க. அம்முறை இங்ஙனம் விரிக்கின் பெருகும் என்க.

ஐந்தனுள் எழுத்தினும் சொல் சிறப்பு; ஏனைமூன்றும் அச் சிறப்பின்று. மூன்றனுள் இயற்றமிழ் சிறப்பு; ஏனை இரண்டும் அச்சிறப்பின்று. திருவள்ளுவர், திருக்கோவையார், திருமுருகாற்றுப்படை முதலிய செய்யுட்கள் சிறப்பு; சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை முதலிய செய்யுட்கள் அச்சிறப்பின்று. நான்கனுள் வீட்டுநூல் சிறப்பு; அறம் முதலிய மூன்று நூலும் அச்சிறப்பின்று. வீட்டு நூலுள்ளும் அறிவுநூல் சிறப்பு; சரியை முதலிய மூன்று நூலும் அச்சிறப்பு இன்று, சிறப்பிற்கும் சிறப்பின்மைக்கும் பொதுவிற்கும் காரணம் விரிக்கின் பெருகும் என்க. இம்முறை பற்றியே ‘சிறப்பாய் உள்ளன’ என்றாம். எல்லா நூலும் இம்மூன்றனுள் அடங்கும் என்க. சிறப்பாய் உள்ளவற்றுள்ளும் சில என்க. அவற்றுள்ளும் மறந்தது பல என்பது,