‘ஆதி என்றதனால், ஆரியன் மாணாக்கனை ஊர்க்குப் போக்கினான். தாய் மகளை ஊர்க்குப் போக்கினாள். என்புழி, மாணாக்கன் மகள் என்னும் இருவரும் போதலாலே வினைமுதலாயும், ஏவப்படுதலால் செயப்படுபொருளாயும் ஆரியனும் தாயும் ஏவுவித்துக் கொள்ளுதலால் ஏவுதற்கருத்தாவாயும் மாணாக்கனும் மகளும் ஏவப்போதலால் இயற்றுதல் கருத்தாவாயும் வந்தன. ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ - தொ.பொ. 93 என்புழிக் கிழவனும் கிழத்தியும் தனித்தனி வினைமுதலாயும் செயப்படுபொருளாயும் வருதல் காண்க. [வி-ரை: எடுத்துக்காட்டுக்களில் வழியைச் சேறல், ஊரை அடைதல், கூழை உண்டல், பாலைக் குடித்தல், கத்தரிக்காயைக் கறித்தல், நெல்லைக்கோடல் என்பன கருத்துண்டாதல்; எறும்பை மிதித்தல், பசும்புல்லை மிதித்தல், துகளை உண்ணுதல், நஞ்சினைக் குடித்தல், புழுவைக் கறித்தல், பதரைக் கோடல் என்பன கருத்து இன்றாதல். ஈருருபு இணைதல் என்பதன்கண் இருவகைகள் உண்மை விளக்கப்பட்டது. எழுவாகிய செயப்படுபொருளாதல் கருத்தாவாதலாம். வந்தான் - வருதலைச்செய்தான். வருதல் வினை; செய்தல் தொழில். எந்த வினைச்சொல்லும் அகநிலைச் செயப்படுபொருள் ஒன்று காணப்படும்; கண்டான் - காணுதலைச் செய்தான் என்பதுபோல எனக்கொள்க. |