அகரமுதல எழுத்தெல்லாம்’ - குறள் 1 ‘அக்கரங்கள் இன்றாம் அகர உயிரின்றேல்’ - சி. போ. உ. த. வெ. ‘அகரம்போல நின்றனன் சிவனும் சேர்ந்தே’ ‘அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து’ - திருவருட் 1 என்பனவற்றிற்குப் பொருள் கூறுங்கால், அகர உயிரானது உருவெழுத்து - ஒலியெழுத்து - உணர்வெழுத்து - தன்மை எழுத்து -என்று பொருள் கூறின், உபமேயத்தொடு மாறுபடுதல் முதலிய பல குற்றப்படும்; அங்ஙனம் குற்றப்படாமல் பொருள் கூறுதல் அரிதே. அன்றியும், எழுத்துக்கட்குப் பிறப்பிலக்கணம் தொல்காப்பியர் எடுத்தோதினவற்றைப் புலப்பட அறிந்திருந்தும், பிறர் அவற்றிற்கு மாறுபடக் கூறினார். அன்றியும் அவர் ஏழ்உயிரீற்றுப் பதம் அன்று என்று அறிவித்தற்குப் புள்ளிமயங்கியலுள் (388-394) எடுத்தோதினார். அஃதறிந்தும் அஃது ஒற்றீற்றுப் பதம் அன்று என்று அறிவித்தற்கு உயிரீற்றுப் புணரியலுள் எடுத்தோதினார். இவ்விருவரும் அன்றி நூலாசிரியர் பலரும் அதுவே; உரையாசிரியர் பலரும் அதுவே. இவர்கள் இங்ஙனம் மாறுபட்டுழி ‘இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே’ என்பதனால் குணம் குற்றங்களைப் பலவாற்றானும் பகுத்தறிந்து உண்மை கண்டு ஒன்றனை மறுத்து ஒன்றனைத் தழுவலும், ஒற்றுமை நயம் வேற்றுமை நயம் என்பபோலச் சில கருவி கொண்டு அம்முறையால் அது நன்று-இம்முறையால் இது நன்று-என்று அவ்விரண்டனையும் தழுவலும், ‘அரியைப் படைத்தலால் அயன் கடவுள்’ என்றும் அயனைப் பெற்றுக் காத்தலால் அரி கடவுள்’ என்றும் மாறுபட்டுழி. ‘இவ்விருவரையும் அழித்தலால் இவர் கடவுள் அல்லர், அரனே கடவுள்’ என்பதுபோலச் சில கருவி கொண்டு இம்முறையால் இது வழு-அம்முறையால் அது வழு-என இரண்டனையும் மறுத்து இவ்விரண்டற்கும் வேறாகி வழுவற்றது ஒன்றனைத் தழுவலும் போல்வன என்க. எமக்கு அடங்கினவற்றுள்ளும் இவ்விரண்டனானும் பிறருக்குப் பயன் இல்லையே என்னும் துன்பம் தோன்ற ‘யாவரும் அறிவார்’ ‘அறிவார் இலை’ என்றாம். |