பக்கம் எண் :


1048திருத்தொண்டர் புராணம்

 

யாரும், "அன்ப ரானவ ரளவி லாருள மகிழவே நாளு நாளு நிறைந்து வந்து நுகர" அளித்த இளையான்குடி மாறனாரும் போல இவ்வாறு எண் பெருகக் கண்டபோது உள்ளம் ஆதரவு ஓங்கிடப் பெறுதல் எந்தம் பெருமக்களுக்கே அமைவதாம் என்பது குறிக்க விதந்தோதினார்.

ஓங்கு சீகாழி ஓங்குதல் சிறப்பால் மிகுதல். ஊழி வெள்ளத்தில் அமிழாது மேல் மிதந் தோங்குதலும் குறிப்பு. சீகாழி பத்தாவது பெயர்.

வள்ளலாரை - தாமாகவந்து நாயனாரைப் பணிகொண்டமையும் இனித் திருமணத்தில் அவரையும் ஏனைத் திருக்கூட்ட முழுமையும் பணிகொண்டுமுத்தி கொடுக்க உள்ள வண்மையும் குறிப்பு. திருக்கூட்ட முழுமையும் விரும்ப அவர்களுடன் வள்ளலாரை என்க.

அமுது செய்வித்தார் - வெள்ளமாகிய திருக்கூட்டத்துடன் வள்ளலாரை அமுது செய்வித்தல் ஒரு தனிப்பெருஞ் சிறப்புடைய செயலாம் என்பது. நீலநக்கர் என்ற எழுவாய் வருவிக்க.

27

1855.

அமுது செய்தபின், பகலவன் மேல்கட லணையக்,
குமுத வாவியிற் குளிர்மதிக் கதிரணை போதில்
இமய மங்கைதண் றிருமுலை யமுதுமுண்டா ரிரவுந்
தமது சீர்மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார்.

28

(இ-ள்.) அமுது செய்தபின் - ஆளுடைய பிள்ளையாரும் அடியவர் திருக்கூட்டமும் திருவமுது செய்தபின்பு; பகலவன்மேல் கடல் அணைய - சூரியன்மேல் கடற்றிசையினை யணைந்து அத்தமிக்க; குமுத.....போதில் - ஆம்பல் மலர்களையுடைய வாவிகளில் குளிர்ந்த மதியின் கதிர்கள் சேரும் இரவுக் காலத்திலே; இமய.......உண்டார் - பார்வதியம்மையாரின் திருமுலைப்பாலுண்ட அத் திருஞான சம்பந்த நாயனார்; இரவும்......சமைத்தார் - அன்றிரவிலும் தமது சிறப்புடைய திருமனையில் தங்குதற்கு வேண்டியவற்றை அமைத்தனர் (திருநீலநக்கர்).

(வி-ரை.) அமுது செய்தபின் - முன்பாட்டில் நீலநக்கனார் வள்ளலாரைத் திருக்கூட்டத்துடன் அமுது செய்வித்தமை கூறிய ஆசிரியர், அவ்வாறு அவர்கள் அமுது செய்தமையைக் கூறுவார் செய்தபின் என்றார். அமுது செய்வித்தவர் செயல் முன்பாட்டிலும், அமுதுசெய்தவர் செயல் பின் இங்குமாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து வரும்பாட்டில் விரித்தலும் காண்க. செய்த என்றதற்கு வள்ளலார் என்ற எழுவாய் தொக்கு நின்றது. செய்வித்த என்றது செய்த எனப் பிறவினை தன்வினையாக வந்ததென்றுகொண்டு, இங்கும் நீலநக்கர் செயலாக வைத்துரைத்தலுமாம்.

பகலவன் - சூரியன். பகற்போதில் விளங்குபவன். பகல் - நாட்போதை இரண்டு கூறாகப் பகுத்ததன் முற்பகுதி என்று, பரு என்ற பகுதியிற் பிறந்த தொழிற்பெயர். பகலவன் - அவ்வாறு பகுத்தலைச் செய்கின்றவன் என்ற பொருளும் கொண்டது.

மேல் கடல் அணைய - மேல்கடல் - மேற்குத் திக்கில் உள்ள கடல்; அத்த நீக்க என்பது பொருள். நில அண்டம் உருளுதலினால் மேல்கடற்றிசைசூரியனை நோக்கிச் செல்லுதலைச் சூரியன் மேல்கடலை அணைவதாகக் கூறுவது உபசாரம். இதனால் பகற்கால எல்லை தீர்ந்தமையும் பகற்போது முழுமையும் பிள்ளையாரும் அத்திருமனையிற் றங்கியருளி யமையும் கூறப்பட்டன.