பக்கம் எண் :


1052திருத்தொண்டர் புராணம்

 

1859.

கங்கு லிற்பள்ளி கொண்டபின் கவுணியர்க் கிறைவர்
அங்கு நின்றெழுந் தருளுவா ரயவந்தி யமர்ந்த
திங்கள் குடியை நீலநக் கரைச்சிறப் பித்தே
பொங்கு செந்தமிழ்த் திருப்பதி கத்தொடை புனைந்தார்.

32

(இ-ள்.) கங்குலில்......எழுந்தருளுவார் - கவுணியர் தலைவராகிய ஆளுடைய பிள்ளையார் அன்றிரவு அங்குத் திருப்பள்ளியமர்ந்தபின் எழுந்து அங்குநின்றும் புறப்படுவாராகி; நீலநக்கரைச் சிறப்பித்தே - திருநீலக்கரைச் சிறப்பாக எடுத்துக் கூறியே; அயவந்தி.....சூடியை - அயவந்தியில் விரும்பி வீற்றிருக்கும் பெருமானை; பொங்கு.......புனைந்தார் - பொங்கும் செந்தமிழாகிய திருப்பதிகத் தொடையினை அமைத்தனர்.

(வி-ரை.) கவுணியர்க்கிறைவர் பள்ளிகொண்டெழுந்தபின் என்க. "அமுதுண்டார் இரவும் தமது சீர்மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார்" (1855) என்று திருநீலக்கரது செயலளவின்மட்டிற் கூறிய ஆசிரியர், அதற்கிணங்கப் பிள்ளையார் அவ்விரவு அங்குத்தங்கி ஏனைய திருக்கூட்டத்துடன் பள்ளிகொண்ட செயலை உய்த்துணர வைத்துப் பள்ளிகொண்டபின் நிகழ்ச்சியைக் கூறி மேற் செல்லும் கவிநயம் காண்க. சாக்கிரத்தே அதீதத்தைப்புரியும் சீவன் முத்தராகிய பிள்ளையார் ஏனை உயிர்கள்போலத் துயில் முதலிய அவத்தைகளி னுட் படாராதலின் அக் குறிப்புப்பட முன்னர் "மனைத்தங்கிட" என்றனர். அவர் பள்ளிகொண்டமை கூறாமையும் இக்குறிப்பு.

அங்குநின்றும் என்க. நீக்கப்பொருள்தரும் ஐந்தனுருபு சாரியை நிற்கத் தொக்கது. அங்கு - சாத்தமங்கை.

எழுந்தருளுதல் - பெயர்ந்து பிற தலங்களிற் செல்லப் புறப்படுதல்.

எழுந்தருளுவார் - முற்றெச்சம். புனைந்தார் என்னும் வினைகொண்டு முடிந்தது.

நீலநக்கரைச் சிறப்பித்து - "நிறையினார் நீலநக்கன்" என்று அவரது சிறப்பை எடுத்துப் பாராட்டி. பதிகம் பார்க்க.

"திங்கள் சூடியைப் புனைந்தார்" என்றதனால் பதிகத்துள் சிவபெருமானைத் துதித்தலே பொருளாவது என்றும், அதனுள் "நீலநக்கரைச் சிறப்பித்தே" என்றதனால், அத்தனோடு இணைந்துவரும் அடியார் சிறப்பு என்ற அளவுமட்டில் அவர் சிறப்பு அமைவதாம் என்றும் குறித்தபடியாம்.

பொங்கு செந்தமிழ் - தமிழ்த் தன்மையும் சிவனருளின் தன்மையும் அன்று போலவே என்றும் உள்ளமைந்து மேலே பொங்கும் தமிழ்.

புனைந்தார் என்றதற்கேற்பத் தொடை என்றார். இங்குப் புனைதல்அணிதல் என்ற பொருளில் வந்தது.

திருப்பதிகம் - இஃது ஆளுடைய பிள்ளையார் அத்தலத்தினின்று புறப்பட்டருளி இறைவரிடம் விடைபெற்றுச் செல்லும்போது அருளியது. முன்னர்த் தரிசித்து வணங்கியபோது அருளியவை கிடைத்தில!

கவுணியர் தலைவர் - என்பதும் பாடம்.

32

1860.

1பதிக நாண்மலர் கொண்டுதம் பிரான்கழல் பரவி,
யதிக நண்பினை நீலநக் கருக்களித் தருளி,
எதிர்தொ ழும்பதி களிலெழுந் தருளின ரென்றும்
புதிய செந்தமிழ்ப் பழமறை மொழிந்தபூ சுரனார்.

33