பக்கம் எண் :


நமிநந்தியடிகணாயனார் புராணம்1093

 

சுந்தரமூர்த்தி நாயனார் துதி

தொகை

"ஆரூர னாரூரி லம்மானுக் காளே"

- திருத்தொண்டத்தொகை

வகை

நந்திக்கு நம்பெரு மாற்குநல் லாரூரி னாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலிற்
சிந்திப் பரியன சேவடி பெற்றவன்; சேவடியே
வந்திப்ப வன்பெயர் வன்றொண்ட னென்பரிவ் வையகத்தே.

32

- திருத்தொண்டர் திருவந்தாதி

1898.

நாட்டா ரறிய முன்னாளி னன்னா ளுலந்த வைம்படையின்
பூட்டார் மார்பிற் சிறியமறைப் புதல்வன் றன்னைப் புக்கொளியூர்த்
தாட்டா மரையின் மடுவின்கட் டனிமா முதலை வாய்நின்றும்
மீட்டார் கழல்க ணினைவாரை மீளா வழியின் மீட்பனவே.

33

துதி :- இனி நிறுத்த முறையானே, "திருநின்ற" என்ற திருத்தொண்டர் தொகைப் பாசுரத்தினுள், "நமிநந்தி யடியார்க்கு மடியேன்" என்ற சரிதத்தினை அடுத்து, "ஆரூர னாரூரி லம்மானுக் காளே" என்றதனுட் போந்தபடி ஆரூர் நம்பிகள் ஆரூர்ப்பெருமானுக்கு ஆளாயின சரிதத்தின் ஓர் பகுதியைக் கூறத்தொடங்கிய ஆசிரியர் அதனைக் துதிமுகத்தாற் கூறுகின்றார்.

தொகை :- தொகை நூலுள் "திருநின்ற" என்ற திருப்பாட்டிற் சொல்லப்பட்ட ஏழு அடியார்களுக்கும் தனித்தனி அடியேனாகிய ஆரூரன், திருவாரூர் அம்மானுக்கும் ஆள் என்று தொடர்புபடுத்தி முடிக்க. இவ்வாறு முன் உரைத்தவை பார்க்க.

வகை :- நந்தியும், நம்பெருமானும், திருவாரூர் நாயகனுமாகிய இறைவருக்கு அளவுபடாத சிறப்புடைய செந்தமிழ்த் திருப்பதிகத்தினைப் பாடி, ஓடும் நீரினையுடைய காவிரியினிடையே சிந்தித்தற் கரிதாகிய அத்திருவடியின் அருளினைப் பெற்றவர்; அத்திருவடியையே வந்திப்பவர்; அவர் பெயர் இவ்வுலகத்தில் வன்றொண்டர் என்று சொல்லுவர்.

நந்தி - சிவபெருமான் றிருப்பெயர். "நந்தி மகன்றனை" (திருமந்). படர்புனலில்...பெற்றவன் - காவிரியாற்றுப் பெருக்கில் நம்பிகளும் கழறிற்றறிவாரும் (திருவையாறு கண்டு கும்பிடக்) கடந்து செல்வதற்குப் "பரவும் பரிசு" என்ற திருப்பதிகம் பாடித் திருவருளால் ஆறு வழிவிடச் சென்று வழிபட்டு வந்த வரலாறு குறித்தது. (கழறிற்றறிவார் புராணம் 131 - 139) சேவடி - திருவருள். சேவடியே - அத்திருவடிகளையே. ஏகாரம் பிரிநிலை; பெற்றவன் - வந்திப்பவன் - பெயர் - வன்றொண்ட னென்பர் என்று முடிக்க.

1898. (இ-ள்.) நாட்டார் அறிய - நாட்டின் மக்கள் அறியும்படி; முன்நாளின் - முன்னைநாளில்; உலந்த...தன்னை - இறந்த, ஐம்படை யணிந்த மார்பையுடைய சிறிய வேதியப் புதல்வனை; புக்கொளியூர்...நின்றும் - புக்கொளியூரில் தாளையுடய தாமரைத் தடத்தில் தனித்த பெரிய முதலையின் வாயினின்றும்;