பக்கம் எண் :


110திருத்தொண்டர் புராணம்

 

அழுங்கி என்றதனால் அவ்வாறு அழுங்கி வருவதற்குக் காரணம் என்னென்று கவலையுடன் கூறினான் என்க.

இவ்வாறு கவன்றுரைத்த அதனால் அரசன் அவர்களைப் புகுதவிடச் சொல்லும் செய்தியை வாயில்காவலா அறிந்து அவ்வாறு புகுதவிட என்று மேற்பாட்டிற் கூறுவது
காண்க.

கடிதணைவான் - உற்றது என்கொல் - அணையும்படி நேரிட்ட காரணம் என்னை? வானீற்று வினை எச்சம்.

கனன்றுரைத்தான் - என்பதும் பாடம்

86

1352.

 கடைகாவ லுடையார்கள் புகுதவிடக் காவலன்பா
 னடையாடுந் தொழிலுடையார் நண்ணித்தா மெண்ணியவா
"றுடையாரா கியதரும சேனர்பிணி யுற்றராய்ச்
 சடையானுக் காளாய்நின் சமயமழித் தா"ரென்றார்.

87

(இ-ள்.) வெளிப்படை. வாயில்காவலர்கள் உள்ளே செல்லும்படி விட, உயிருடன் நடந்து திரியும் தொழிலொன்றனையேயுடைய அச்சமணர்கள் அரசனிடம் சேர்ந்து "நமது தலைவராகிய தருமசேனர் சூலைநோய் கொண்டதாகச் சொல்லிச் சென்று சிவனுக்கு ஆளாகி உனது சமயத்தை நீத்தனர்" என்று தாம் எண்ணி வந்தபடியே சொன்னார்கள்.

(வி-ரை.) புகுதவிட - பெரியோர்களிடத்தும், அரச சமூகம் முதலிய இடத்தும் முன்னார் அறிவித்து உத்தரவு பெற்ற பின்பே உட்புகுதல் வேண்டும். அவ்வாறு அறிவித்தற்கும் உள்ளே செல்லவிடுத்தற்கும் உரியஅதிகாரமுடையோர் வாயிலில் காவலிருப்பர். அவர் செல்லவிடாது யாவரும் உட்புகுதல் கூடாது. இது பண்டை நாளிலிருந்து தமிழகத்திருந்த நமது முந்தையோர் வழக்கு. இவ் வழக்கு நவீனரிடம் நாம் அறிந்ததொன்றென்று கருதுவது தவறு. "குன்றவில்லியார் பெரியதேவரைச் சென்று கொணர்கென வவரெய்தி, வென்றி வானவர்க் கருளிப்பாடென" (வெள்ளானைச் சருக்கம் - 44), "தாங்கள் வருமுறைத் தன்மையெல்லாம் வாயல்கா வலர்க்குச் சொன்னார்" (திருஞான - புரா - 609), "நகைமுகச் செவ்வி நோக்கி நற்றவ மாந்தர் கூவத், தகவுடைமாந்தர் புக்கு" (மேற்படி 611), "அமைச்சனார் வந்த பான்மை, சிரபுரப் பிள்ளை யார்க்கு விண்ணப்பஞ் செய்வீ ரென்னப், பரிசன மாந்தர் புக்குப் பதமறிந் துணர்த்து கின்றார்" (மேற்படி - 726, "ஆண்டகை யாரு மீண்ட வழையுமென் றருளிச் செய்ய, மீண்டு போந் தழைக்கப்புக்கார்" (மேற்படி - 727) முதலியவை காண்க.

நடையாடுந் தொழிலுடையார் - நடந்து திரியும் ஒன்றனையே உடையவர்கள். பிணங்களும் மனித உருவுடையவை; அவைகட்கும் அவர்க்கும் நடையாடுதல் ஒன்றுமே வேறுபாடு என்பது. நடைப்பிணங்கள் என்றபடி. "உறுதிபயக்கும் அறம் புரிந்து அதனாற் பயனடைவதே மக்களுயிர்க்கு ஆக்கப்பாடு; அவ்வாறன்றி அறம்போற் காட்டியொழுகி அதன் பயனடையாமையின்" என்பர் ஆறுமுகத் தம்பிரானார். "அறந்துறந்து தமக்குறுதி யறியாத புல்லறிவோர்" (1360) என்றது காண்க. காவலனிடம் நடக்கும் தொழில் என்று கூட்டியுரைப் பாருமுண்டு.

தாம் எண்ணியவாறு - முன்பு 1348-ல் எண்ணித் தெளிந்தபடியே. தேற்றே காரம் தொக்கது. எண்ணியவாறே - என்றார் என்று கூட்டுக.

உடையார் - தலைவர் - ஆசிரியர். பொதுப்படக் கூறியவதனால் அச்சமணர்க்கேயன்றி, இனி, அரசனுக்கும் உலகில் யாவருக்கும் பரம ஆசாரியராந்தன்மையுடையார் என்னுமுண்மை அவர்கள் வாக்கினின்று அவர்களறியாமே புலப்படுதல் காண்க.