(இ-ள்.) வெளிப்படை. ஆண்ட அரசுகள் அந்த நீற்றறையினுள் அணைந்த பொழுது திருவம்பலத்தில் அருட்கூத்தியற்றுகின்ற திருவடியின் நிழலையே தமது தலைமேற்கொண்டு, "ஈசனடியவர்க்கு ஈண்டுவரும் துன்பங்களும் உளவாமோ?" என்று திருப்பதிகம்பாடித் துணிவுமூண்ட மனத்தால் நேர்நோக்கி, முதல்வனையே தொழுது எழுந்தருளியிருந்தனர். (வி-ரை.) அம்பலத்து...தாள்நிழல் - "ஈச னெந்தை யிணையடி நீழலே" என்பது நாயனார் இதுபோழ்து அருளிய தேவாரம். தாளானது நிழல்செய்வது அருளாலாவதாகலின் தாண்டவம் புரியுந் தாள் என்றார். தாண்டவம் - அருட்கூத்து. முன் - உயிர்கள் தம்மை உணர்வதன் முன்னே கருணையினால் எடுத்து ஆட்கொள்வது. அருளும் என்ற கருத்தும் இது. தாள் நிழல் - நிழல் - தண்ணளி. தூக்கிய திருவடியே நிழல் செய்ய வல்லதாதலின் சிவனொருவனே உயிர்களைப் பிறவிச் சூட்டினின்றும் எடுத்தாற்ற வல்லவன். "சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னு, நிழலாவன" (ஐயாறு) என்றது திருவிருத்தம். சூடுகண்டார் நிழல்தேடுவது இயல்பாம். நிழலே தலைக்கொண்டு - என்று பிரிநிலை ஏகாரம் பிரித்துக்கூட்டுக. தலைக்கொள்ளுதல் - அடைக்கலமாகப் புகுந்து அந்நிழலுக்குள் அடங்கி நிற்றல். நீற்றறையின் நெருப்புக்கு அரணாக நிழலினுள் ஒடுங்கினார் என்ற சுவையும் காண்க. "தருவாயெனக்கு றிருவடிக் கீழோர் தலைமறைவே" என்ற (பொது) திருவிருத்தமும் காண்க. ஈண்டு....அடியார்க்கு? - இந்நிகழ்ச்சி முன்வினை காரணமாக நிகழினும், அதனால் வரும் துன்பம் அடியாரைப் பற்றாது என்பார் வருவன உளவோ? என்னாது வரும் துயர் உளவோ? என்றார். ஒப்பாரும் மிக்காருமில்லாத தலைவராதலின் பிறராலும் பிறவற்றாலும் வரும் துன்பமில்லை என்பார் ஈசனடியார்க்கு என்றார். ஈசன் - தலைவன். அடியார்க்கு - அடியாராதலின் அவர்க்குன உளவோ? என்று துயர் உளவாகாமைக்குக் காரணங் கூறியபடி. "உளமே புகுந்த வதனால் ... நல்ல நல்ல" (கோளறு பதிகம்), "ஒருவர் தமர்நாமம் அஞ்சுவதி யாதொன்று மில்லை" (அப்பர் தேவாரம்) முதலிய திருவாக்குக்கள் காண்க. மூண்ட ... நேர்நோக்கி - மூண்ட மனம் - துணிந்து நின்ற மனம் நேர்நோக்கி - என்றது மனத்தினுள் வேறொன்றும் புலப்படாது அத்தாளினையே நோக்கி அம்மயமாய் நிற்றல் குறித்தது. "ஒன்றி யிருந்து நினைமின்கள்", "உற்று நோக்கி உள்ளக் கிழியி னுருவெழுதி" முதலிய நாயனாரது திருவாக்குக்கள் காண்க. மனம் - ஈண்டு அறிவு என்ற குறித்தது. துணிந்த அறிவினால் - முதல்வனையே தொழுதிருந்தார் என்க. நோக்குதல் - கண்டுகொண்டிருத்தல். "மாறாத சிவானுபவ மருவிக் கொண்டே", "பரஞானத்தாற் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பார் ... சிவன் முத்தர் சிவமே கண்டிருப்பர்" (11- சூத் - 2) என்ற சிவஞானசித்தியார் காண்க. முதல்வனையே தொழுது - ஏகாரம் பிரிநிலை தேற்றமுமாம். முதல்வனைத் தொழுதே - என்று ஏகாரம் பிரித்துக்கூட்டி யுரைப்பினுமமையும். இருந்தார் - அந்நிலையிற் றிறம்பாது நின்றார். 97 1363. | வெய்யநீற் றறையதுதான் வீங்கினவே னிற்பருவந் தைவருதண் டென்றலணை தண்கழுநீர்த் தடம்போன்று மொய்யொளிவெண் ணிலவலர்ந்து முரன்றயா ழொலியினதாய் ஐயர்திரு வடிநீழ லருளாகிக் குளிர்ந்ததே. |
97 |