பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்133

 

கார்அமணர் - கார் - முன்னர்க் கார் இருண்ட என்பது புற உருவும், இங்குக் கார் என்றது அக இருள் உருவாகிய மனத்தீமை செயற்றீமைகளையும் குறித்து நின்றன.

தேரு நிலையில்லாதார் - ஒருவகையானும் தெளியும் அறிவில்லாத அமணர் - "தெளியா தொருபொருளே பொய்யுமெய்யு மாமென்னும் புரைநெறியார்" என்றது காண்க. அவர்களது மந்திரம் உண்டு இல்லை என்று துணிவின்மையைக் காட்டுவது. வெய்ய நீற்றறையுள் ஏழுநாள் நின்ற ஒருவர் இறந்துபடுவது துணிபு என்பதிலும் ஐயம்பட்ட நிலை நின்றமை குறித்தது. இல்லாதார் - தேரும் நிலை இல்லாதவர்களாகி என்ற முற்றெச்சம் இக்கருத்துப் பற்றியது.

100

1366.

 ஆனந்த வெள்ளத்தி னிடைமூழ்கி யம்பலவர்
 தேனுந்து மலர்ப்பாதத் தமுதுண்டு தெளிவெய்தி
 யூனந்தா னிலராகி யுவந்திருந்தார் தம்மைக்கண்
"டீனந்தங் கியதிலதா மென்னவதி சய" மென்றார்.

101

(இ-ள்.) வெளிப்படை. சிவானந்தப் பெருக்கினுள்ளே முழுகி, அம்பலவாணருடைய தேன்பிலிற்றும் மலர்போன்ற பாதத்தின் அமுதத்தை உண்டு தெளிவடைந்து எவ்வகையான ஊனமும் இல்லாதவராகி மகிழ்ச்சியுடன் வீற்றிருந்த நாயனாரைக் கண்டு, "கெடுதி சிறிதும் அடைந்திலதாம்! இது என்ன அதியம்!" என்றனர்.

(வி-ரை.) ஆனந்த வெள்ளத்தினிடை முழ்குதலாவது சிவானந்த பரபோக நிலையினுள் அழுந்தி வேறொன்றும் தோற்றாது நிற்றல். "ஆனந்த வெள்ளத்தழுந்துமொ ராருயிர் - ஆனந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும்" (307) என்ற திருக்கோவையார்க் கருத்துக்கள் இங்குச் சிந்திக்கத்தக்கன. மூழ்கி என்றது சிவபோகநிலை. ஏனைய ஆனந்தங்கள்போல மறுகுதலும் மாய்தலும் பின்னர் வருத்தஞ் செய்தலுமின்றி மேன்மேற் பெருக நிகழ்வதாம் என்பார் ஆனந்த வெள்ளம் என்றார். "பூமறுகு சிவானந்தப் பெருக்காறு போத" (திருஞான - புரா - 95) என்றது காண்க.

தேன் உந்து மலர்ப்பாதத்து அமுது - தேனுந்துதல் - தேனைச் சொரிதல். இனிமை பயத்தல் என்பதும் குறித்தது. தேனுந்து மலர் - தேனுந்து பாதம் - தேனுந்து அமுது எனக்கூட்டி உரைக்க நின்றது. பாதம் - அருள் நிறைவு; அமுது - அதனாற் பெறப்படும் பேரின்பம். இறப்பும் பிறப்பும் நீக்கி யின்பமளித்தலின் அமுது என்றார். அமுது - "ஆராவமுது" 1364 பார்க்க. இணையடி நீழலே வீணையும் மதியமும் தென்றலும் இளவேனிலும் பொய்கையும் போன்றதே என்ற உறைப்பினில் அழுந்தி நின்றாராதலின் பாதத்தமுது உண்டு என்றார். அமுது என்ற தற்கேற்ப உண்டு என்றார் . உண்டு என்பது உபசாரம். தடத்தே மூழ்கி அமுதினை நிறைய உண்டு வீற்றிருக்கும் உலக நிலைக்கு எதிர்நிலையான சிவநிலை. சிவப்பேற்றினை அமுது என்று கூறுதலுமுண்டு. உபநிடதங்களில் அமிர்தம் - முத்தியின்பத்துக்கு வழங்கும்.

தெளிவு எய்தி - நீற்றறையினுட்புகுந்த நிலைக்கும், அங்கு ஓர் ஏழுநாட்கள் கழிந்தபின் அமணர் கண்ட நிலைக்கும் உள்ள வேற்றுமையாவது முன்னையினும் தெளிவு அடைந்திருந்தமையே என்பது. தெளிவு திருப்பாதத்து அமுது உண்ட காரணத்தாலாகியது என்பார் அமுதுண்டு தெளிவெய்தி என்றார். உண்டு - காரணப்பெருட்டாய் வந்த வினையெச்சம். அரனடி யடைந்தோர்களே தெளிவெய்தியவர் என்பதும், ஏனையோர் தெளியாதார் என்பதும், முன்னர் அமணர்களைத் தேரு நிலையில்லாதார் (1365) என்றதனாலு
முணர்த்தப்பட்டது.