பக்கம் எண் :


152திருத்தொண்டர் புராணம்

 

"விடையுகந் தேறும் பிரானை" (1380), "தேவர்க்குந் தேவர் பிரானார்" (1381) என்ற விடத்துரைத்தவை பார்க்க. "திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் சேர்வார் தாமே தானாகச் செயுமவன்" (திருத்தாளச்சதி - வியாழக் குறிஞ்சி - கழுமலம் - 7) என்றது பிள்ளையாரது திருவாக்கு. "அவனே தானே ஆகிய அந்நெறி, யேகனாகி" (11 - சூத்)" என்ற ஞானசாத்திரமும் கருதுக. சரண் - திருவருள் நிறைவு. "கழல் தெளிவுற்றனர்" (1379) என்றதும் கருதுக.

இருந்து - பேரிடரையும் பொருட்படுத்தாது சிவன் கழலையே தெளிவுற்று அசையாதிருந்து. குலாவுதல் - விளக்க முறுதல். யாவரும் பரவுதல் என்றலுமாம். "குலாவு பாதம்" (443) முதலியவை காண்க.

அன்பு உறு கொள்கை - அன்பினாற் பொருந்திய கொள்கையாவது அன்பினாற் கொள்ளப்படுதல். வசமாதல். அன்பே உருவமாக அமைந்த என்றபடி. இத்துணையும் தீயமிறைகள் செய்து இனியும் செய்ய நின்ற அமணரையும், அவர் சார்புகொண்ட கொடு மன்னனையும், வேழத்தையும் சிறிதும் வெகுளாது திருவடியினையே சிந்தித்திருந்தமையே அவர் அன்பினால் முழுவதும் கொள்ளப்பட்டனர் என்பதனைப் புலப்படுத்தும்.

தொண்டர் - சிவனைத் தலைவராகவும் தம்மை அடியவராகவும் சிந்தித்திருந்தவர்.

வேழம் வலமாகச் சூழ்ந்து - இறைஞ்சி - எழுந்தது என்று கூட்டுக. பழக்கப்பட்ட யானைகள் இவ்வாறு செய்தல் கண்கூடு. தண்டமிழாற் சினந்தீர்ந்து பெருமை யறிந்ததாலின் இவ்வாறு வழிபட்டது என்க. உண்மையில் இவ்வேழம் பெருந்தவ முடையதேயாம். நாயனாரால் அருணோக்கம் செய்யப்பெற்று (1381), உண்மை உணர்ந்து, தனது முன்னைச் சார்புவிட்டு, ஆசானைப் பணிந்து எழுந்ததன்றோ? அறிவுடைமக்கள் வழிபடும் முறையால் அவ்வேழம் வழிபட்டமை காண்க. வலம் வருதல் - தாழ்தல் - நிலத்தில் வீழ்ந்து இறைஞ்சுதல் - எழுதல் இவையே திருவேடத்தையும் ஆலயத்தையும் வழிபடும் முறைகளாம்.

எழுந்த தவ்வேழம் - என்பதும் பாடம்.

117

1383.

ஆண்ட வரசை வணங்கி யஞ்சியவ் வேழம் பெயரத்
தூண்டிய மேன்மறப் பாகர் தொடக்கி யடர்த்துத் திரித்து
மீண்டு மதனை யவர்மேன் மிறைசெய்து காட்டிட வீசி
யீண்டவர் தங்களை யேகொன் றமணர்மே லோடிற் றெதிர்ந்தே.

118

(இ-ள்.) வெளிப்படை. ஆண்ட அரசுகளை இவ்வாறு வணங்கி அந்த யானை அங்குநின்றும் பெயர்ந்து போகவே, அதனை அரசுகளின் மேல் ஏவித் தூண்டி மேற்கொண்டிருந்த கொடிய பாகர்கள் தொடக்கியும், அடர்த்தும், திரித்தும், மீண்டும் அதனை அவர்மேல் போகும்படி கொடுமைசெய்து, காட்டிட, அவ்வாறு செய்யாது நெருங்கிய அவர்களையே வீசிக் கொன்று அமணர்கள் மேலே சாட எதிர்ந்து ஓடிற்று.

(வி-ரை.) ஆண்ட - சிவபெருமானால் ஆட்கொண்டருளப்பட்ட. அரசு - திருநாவுக்கரசுகள்.

தூண்டிய - கொல் என்று ஏவிய. "ஏவி - உய்த்திட" (1379).

மறப்பாகர் - மறஞ் செய்தவர். மறம் - கொலைவினை.

தொடக்கி - பெயராமல் பந்தித்து; அடர்த்து - அங்குசத்தால் குத்தி; திரித்து - திருப்பி. குத்திய - அங்குசத்தால் - திருகி என்றலுமாம்.

மிறை - கொடுவினை. மிறைசெய்து காட்டுதல் - முன்னிலும் கொடியதாக ஏவுதல். "செய்வித்த தீய மிறைகள் எல்லாம்" (1402). மிறை - குறிப்பு என்றலுமாம்.