பக்கம் எண் :


166திருத்தொண்டர் புராணம்

 

(இ-ள்.) வெளிப்படை. அந்தப் பெரியகல்லும் அங்குத் திருநாவுக்கரசர் அதன் மேல் வீற்றிருந்து கொள்ளும்படி தெப்பமாக மிதத்தலின், அவரது திருமேனியை உடன்வலித்துப் பிணைத்திருந்த கயிறும் அறுந்தது; இவ்வாறு அந்தக் கல்லின்மேல் எழுந்தருளியிருந்த கெடுதலில்லாத சிறப்பினையுடைய மெய்ப்பெருந்தொண்டனாராகிய அரசுகள் விளங்கித் தோன்றினார்.

(வி-ரை.) பெருங்கல் - "ஒரு கல்" (1388) என்ற விடத்துரைத்தவை பார்க்க. எவ்வாற்றானும் பாரந்தாங்கலாற்றாது அமிழ்த்தும் பொருட்டுப் பெருங்கல்லிற் பிணித்தனர்; அவ்வாறு பெரிய கல்லேயாயினும், என உம்மை உயர்வு சிறப்பு. பெருமை என்ற அடைமொழி, அரசு மேல்கொளத் தெப்பமாகத் தாங்கும் பெருமை பெற்ற என்ற குறிப்பும் தர நின்றது. தெப்பமாய் - கல்லே தெப்பமாக ஆக்கப்பட்டு. ஆய் - அவ்வாறு ஆதல் அதன் இயல்பா னன்றித் திருவருளால் ஆக்கப்பட்டதனால் ஆயிற்று என்பதாம். தெப்பம் - நீரின்மேல் உடலைத் தாங்கும் மிதவை.

மிதத்தலில் - பாசமும் தப்பியது - ஆழும் கல் ஆழாது மிதந்தது போலவே, பிணித்துக் கட்டிய பாசமும் கட்டுந்தன்மை அழிந்து கட்டுவிட்டு அழிந்தது. இல் - உவமப்பொருளில் வந்த ஐந்தனுருபு. கல்லை ஆழாது மிதக்கச் செய்த அஞ்செழுத்தருளே, பாசத்தையும் கட்டு விடுவித்தது என்பது, மிதந்ததாதலின் பாசமுந் தப்பியது என ஏதுப் பொருள் கொள்வாருமுண்டு.

அதன்மிசை - கல்லின்மேல். கனத்த பொருளும் இலகுப் பொருளும் பிணைத்து நீரிற் பாய்ச்சினால் கனத்த பொருள் கீழும் ஏனையது அதன் மேலுமாக நின்று ஆழும். இங்கும் அவ்வாறே கடலின் உட்புகும் கல் மிதக்கவே அதன் மேல் நாயனார் இருந்து விளங்கினார் என்க.

செறிந்த பாசமும் தப்பியது - செறிந்த - நெருக்கி வலித்துக் கட்டிய. பிறவினை தன்வினையாக வந்தது. பாசம் - கயிறு, உம்மை கல் மிதந்ததுபோலக் கயிறும் என இறந்தது தழுவியது.

தாவில் சீர் மெய்ப் பெருந் தொண்டனார் - பொறாமை கொண்டு அமணர் பல வகையால் அழிக்க முயன்றும் அழிக்கலாகாமையானும், இனியும் எஞ்ஞான்றும் அழியாது நிலைநிற்பதாகலானும் தாவில் என்றும், தெய்வத்தன்மை வாய்ந்த பெருமையாதலின் சீர் என்றும், உண்மையிற் பிறழாது நிற்றலின் மெய் என்றும், தன்மை அளக்கலாகாமையின் பெரும் என்றும், "அடிபொருந்தக் கைதொழ" என்று அடிமைத் திறத்தினாலே அமணர் சூழ்ச்சியை வெற்றி கொண்டமையாலே தொண்டனார் என்றும் கூறினார்.

விளங்கித் தோன்றினார் - மேற்கூறிய அத்தன்மைகள் யாவும் உலகில் யாவரும் அறியும்படி விளங்கி வெளிப்பட்டனர். "தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார், தோன்றலிற் றோன்றாமை நன்று" (குறள்) என்றபடி நாயனார் அவதரித்தது முதல் முன்னரும் புகழொடு தோன்றினாலும், இதுபோழ்து அதன் மேலும் விளங்கித் தோன்றினார் என்பதாம்.

கல்லுமாங்கு - செறித்த - தப்பினவதன்மிசை - இருந்து - என்பனவும் பாடங்கள்.

128

1394.

இருவினைப் பாசமு மலக்க லார்த்தலின்
வருபவக் கடலில்வீழ் மாக்க ளேறிட
வருளுமெய் யஞ்செழுத் தரசை யிக்கடல்
ஒருகன்மே லேற்றிட லுரைக்க வேண்டுமோ.

129